மாலை நான்காகியும் எழவில்லை மிதுன்யா. பங்கஜின் ஆள் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து, அவனை கொண்டு சாப்பாடு வாங்கி வைத்திருந்தான் ஜீவா. அவளுக்கும் நல்ல பசி.
உடல் நலமில்லாதவனுக்கு துணையாக இருந்து கொண்டு இப்படி உறங்கினோமே என வெட்கிப் போனவளாக, “ஸாரி, நைட் நிறைய வேலை, லேட்டாதான் தூங்கினேன். அதான்…” என இழுத்தாள்.
“உன்கிட்ட கேட்கவே இல்லை, முதல்ல சாப்பிடு” என்றான்.
அவள் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தவன், “நீ கிளம்பு” என்றான்.
“நானும் போயிட்டா தனியா இருப்பீங்களா?” எனக் கேட்டாள்.
“அந்த கவலை உனக்கு வேணாம். சாமி அங்கிள் வருவாங்க, என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்றான்.
“உன்கிட்ட ஆர்க்யூ பண்ற அளவுக்கு என்கிட்ட எனர்ஜி இல்லை, முடிஞ்சது எல்லாம் முடிஞ்சதாவே இருக்கட்டும். நீ போயிட்டே இரு”
“நீங்க என்ன சொன்னாலும் உங்கள விட்டு போறதா இல்லை” என தீர்மானமாக சொன்னாள்.
எதுவோ கோவமாக அவன் சொல்ல வருவதற்குள் மணி வந்தான். இவளை எதற்கு வரச் செய்தாய் என அவனிடமும் கோவப்பட்டான் ஜீவா.
நண்பனுக்கு எந்த பதிலும் தராமல் மிதுவை கிளம்ப சொன்னான் மணி. அவள் மறுக்க, “ஆஃபிஸ்லேருந்து அப்படியே வந்திட்டதானே, இன்னிக்கு நைட் நான் ஸ்டே பண்ணிக்கிறேன், இவனும் கொஞ்சம் யோசிக்கட்டும். நீ நாளைக்கு வா” என நிதானமாக சொன்னான் மணி.
சரியென ஒத்துக் கொண்ட மிதுவும் கிளம்பி விட்டாள். அவள் சென்ற பிறகு நண்பர்கள் இருவருக்கும் சிறு வாக்குவாதம். மிது தன் வாழ்க்கையில் வேண்டாம் என்பதற்கு ஜீவா அடுக்கிய காரணங்களை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை மணி.
“மிதுவை மறந்திட்டு நீ நல்லா இருந்திருந்தா நான் ஏன் அவளை திரும்பவும் வரவச்சிருக்க போறேன்? அம்மா போனதுக்கு அப்புறம் நீ எப்படி ஆகிட்டேன்னு உனக்கு தெரியுதா ஜீவா? அவங்க ஆத்மா உன்னை நினைச்சு நினைச்சு அழுதிட்டே இருக்கும்டா, இறந்து போயும் அவங்களுக்கு நிம்மதியே கிடையாதா?”எனக் கோவப்பட்டான் மணி.
அம்மாவின் நினைவில் சிறிது நேரம் அமைதியாக வருந்திய ஜீவா, “இனிமே நான் சரியா இருக்கேன், வெளியூருக்கெல்லாம் போக மாட்டேன், என்னை நல்லா பார்த்துக்கிறேன். மிதுவை மட்டும் என்கிட்ட வர சொல்லாத” என்றான்.
“நல்லா வாய்ல வந்திடும்!” என சீறிய மணி, “இனி நான் இல்லை யார் சொன்னாலும் மிது போக மாட்டா. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, செவனேனு படு” என சொல்லி ஜீவாவுக்கு முன் அவன் போய் படுத்து விட்டான்.
ரங்கசாமிக்கு அழைத்து இன்று மருத்துவமனை வரவேண்டாம் என சொல்லி விட்டு படுத்த ஜீவாவுக்கு மிது பற்றிய சிந்தனைகளே.
டாக்டர் ரவுண்ட்ஸ் வந்து சென்றார்.
மாசிலாமணிக்கும் சேர்த்து இரவு உணவு கொண்டு வரும்படி சொல்லியிருந்தான் ஜீவா. சாப்பாடு வந்த பின் மணியை எழுப்பி விட்டான். வேகமாக சாப்பிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான் மணி.
“இங்க நான் பேஷண்ட்டா, இல்லை நீயா?” என கிண்டலாக கேட்டான் ஜீவா.
“மூனு நாளாச்சுடா நான் நல்லா தூங்கி, என் உயிரையும் சேர்த்து வாங்குற நீ, பங்கஜ் ஸார்… அவரும் பாவம். என்னமோ ஆகித் தொலைனு உன்னை விடவும் முடியலை. தயவு பண்ணி மிதுவை கட்டிகிட்டு எங்களை நிம்மதியா வாழ வுடுடா, உனக்கு புண்ணியமா போகும்” என்றான் மணி.
மணியின் பேச்சு விளையாட்டு போல தெரிந்தாலும் அவனது கூற்று முழுக்க முழுக்க உண்மை. ஜீவாவால் அவன் மீது அக்கறை கொண்ட அனைவருக்குமே சிரமம்தான்.
“தூங்கு, இனி கரெக்ட்டா இருப்பேன்” என ஜீவா சொல்லவும், “பழைய படி மாறுடா, ப்ளீஸ்…” என கெஞ்சலாக சொல்லி படுத்துக் கொண்டான் மணி.
அடுத்த நாள் காலையிலேயே வந்து விட்டாள் மிது. ‘இன்று இரவு வருவது கடினம், சமாளித்துக் கொள்’ என சொல்லி கிளம்பி விட்டான் மணி.
நீ கிளம்பு என ஜீவா சொல்வதும், ஒத்துக் கொள்ளாமல் அவள் மறுத்து பேசுவதாகவுமே பொழுது ஓடியது. இரவு வரைதான் உனக்கான நேரம், பின் நீ சென்றுதான் ஆக வேண்டும் என உறுதியாக சொல்லியிருந்தான் ஜீவா.
முன்மாலையில் ரங்கசாமி வந்தார், உடன் ஜீவாவின் மாமா இளங்கோவும் வந்தார்.
மிதுவை கண்ட இளங்கோ யார் இவள் என்பது போல ஜீவாவை பார்த்தார்.
“மணியோட ஃபிரெண்ட், அவனுக்கு ஏதோ வேலைன்னு போனான், எனக்கு துணையா இருக்கட்டும்னு கொஞ்ச நேரம் இந்த பொண்ண விட்டுட்டு போயிருக்கான், இப்ப கிளம்பிடுவாங்க மாமா” என்ற ஜீவாவை முறைத்தாள் மிது.
“கூடவே இருந்து பார்த்துக்கிறேன்னு அவ்ளோ சொன்னான், அவனுக்கு முடியலைன்னா எனக்கு சொல்லணுமா இல்லையா?” என்றார் இளங்கோ.
“நீ எனக்காவது சொல்லியிருக்கலாம்ல ஜீவா?” எனக் கேட்டார் ரங்கசாமி.
“நான் இப்போ நல்லாதான் இருக்கேன், யார் துணையுமே எனக்கு தேவையில்லை” என்றான் ஜீவா.
“ஆமாம் தனியா இருந்து ஏதாவது இழுத்து வச்சுக்க. என்னை வாழ வச்ச என் அக்கா மகனை ஒழுங்கா பார்க்கல கவனிக்கலங்கிற குத்த உணர்ச்சியிலேயே நானும் போய் சேர்ந்திடுறேன்” என்றார் இளங்கோ.
“இப்ப இந்த பேச்சு ரொம்ப முக்கியமா மாமா?” என கடுப்பாக கேட்ட ஜீவா, ரங்கசாமியிடம், “இவங்க எங்க போகணுமோ கேட்டுட்டு கொண்டு போய் விட்ருங்க அங்கிள்” என்றான்.
மிதுவை உற்று பார்த்த ரங்கசாமிக்கு அவளை முன் எப்போதோ பார்த்த நினைவு வந்தது. சில நிமிடங்களில் இவள்தான் ஜீவாவின் முன்னாள் காதலி என்பதை அறிந்து கொண்டார். ‘திரும்பி வந்து விட்டதா இந்த பெண், ஜீவா இனி சரியாகி விடுவான்’ என உள்ளுக்குள் மகிழ்ந்தவர் இளங்கோவின் முன்னிலையில் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தார்.
“நான் மணி அண்ணனுக்கு கால் பண்றேன், அவரே வந்து கூட்டிட்டு போவார்” என்ற மிது ஓரமாக போய் அமர்ந்து விட்டாள்.
மருத்துவமனையில் என்ன சொன்னார்கள், எப்போது டிஸ்சார்ஜ் என விசாரித்த இளங்கோ, “டிஸ்சார்ஜ் ஆனதும் மதுரைக்கு போயிடலாம். உன் அத்தைகிட்ட பேசிட்டேன். அவளுக்கு சம்மதம். அடுத்த மாசம் அஞ்சாம் தேதி உனக்கும் ஹரிணிக்கும் கல்யாணம்” என அறிவித்தார்.
ஹரிணி இளங்கோவின் மகள்தான், இப்போதுதான் கல்லூரி முதல் வருடம் படிக்கிறாள். சென்ற மாதம்தான் பதினெட்டு வயதை தொட்ட சின்ன பெண். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என பெரியவர்களும் விரும்பியதில்லை, அவர்களுக்கும் அந்த ஆசையில்லை.
அக்காவின் மகனை வாழ வைக்க திருமணம் அவசியம் என நம்பிய இளங்கோ, இவனிருக்கும் இந்த நிலையில் வெளியில் பெண் பார்ப்பதும் கடினம், அப்படியே பார்த்தாலும் வரப் போகும் பெண் இவனை புரிந்து கொண்டு அனுசரித்து நடக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு, எதற்கு சிக்கல், என் மகளையே மணம் செய்து கொடுத்து விடுகிறேன் என முடிவு செய்து விட்டார்.
ஜீவாவை விட மிதுவுக்குத்தான் பெரிய அதிர்ச்சி. ரங்கசாமி இதென்ன புதுக்குழப்பம் என்பது போல பார்த்தார்.
“ஹரிணி சின்ன பொண்ணு மாமா, அவளுக்கு போய் கல்யாணமா?” எனக் கோவப்பட்டான் ஜீவா.
“நீ மட்டும் என்னடா கிழவனா? ஏழு வயசு வித்தியாசம்லாம் ஒன்னும் அதிகம் கிடையாது. உன் அத்தை, ஹரிணி ரெண்டு பேருக்கும் முழு சம்மதம். இதுக்கு மேலயும் நான் சொல்றத கேட்கலைனா உன் கையை கால கட்டி வச்சு தூக்கிட்டு போவேன் டா. என் அக்கா இல்லைங்கிறப்போ உன் மேல முழு உரிமையும் எனக்கு இருக்கு, தர்க்கம் பண்ணாம நான் சொல்றதுக்கு ஒத்துக்க” என்றார் இளங்கோ.
வேலைப்பளு என்ற போதும் மனம் கேட்காமல் நண்பனை பார்க்க வந்துவிட்டான் மாசிலாமணி. அவனிடமும் விஷயத்தை சொல்லி, “உன் ஃப்ரெண்ட்க்கு எடுத்து சொல்லு” என்றார் இளங்கோ.
ஜீவாவையும் மிதுவையும் மாறி மாறி பார்த்தான் மணி. பங்கஜிடம் சொல்லி சம்மதிக்க வைக்கலாம் என்ற நினைப்போடு அவருக்கு கைப்பேசியில் அழைத்து கொண்டே வெளியில் சென்று விட்டார் இளங்கோ.
“என்னடா இது?” என கோவமாக கேட்டான் மணி.
“இவருக்கு எதுவும் தெரியாது ண்ணா, இவரோட மாமாவா முடிவு பண்ணியிருக்கார். நான் யாரு என்னன்னு சொல்லிடலாமா?” எனக் கேட்டாள் மிது.
“அப்ப திரும்ப எங்க தம்பி கூட சேர போறியாம்மா?” ஆவலாக கேட்டார் ரங்கசாமி.
மாமா சொன்ன விஷயத்தால் தலைவலியை உணர்ந்த ஜீவாவுக்கு சாமியின் கேள்வியில் வலி இன்னும் கூடிப் போனது. நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டுக் கொண்டே, “சும்மா இருங்க அங்கிள்” என்றான்.
ஜீவாவை கண்டு கொள்ளாமல் தன் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து மிதுவையே பார்த்திருந்தார் ரங்கசாமி.
“ஆமாம் அங்கிள், இனி உங்க தம்பியே விரட்டினாலும் போறதா இல்லை நான்” என்றாள் மிது.
“அழைச்சிட்டு போடா முதல்ல இவளை” என மணியிடம் இரைந்தான் ஜீவா.
“அமைதியா இருங்க ஜீவா, ஏதாவது ஆகிட போகுது” என பதறினாள் மிது.
“நீ இங்க இருக்கிறத பார்க்க பார்க்கத்தான் எனக்கு டென்ஷன் ஆகுது, நீ கிளம்பினா சரியாகிடும், போ!” என்றான் ஜீவா.
வெடித்துக் கொண்டு வந்த அழுகையை அடக்கிய படி, “என் கழுத்த பிடிச்சு வெளில தள்ளினா கூட உங்களை விட்டு போக மாட்டேன்” என்றாள் மிது.
பேசும் சக்தியற்று படுக்கையில் அமர்ந்த ஜீவா, சில நொடிகளில் அமரவும் முடியாமல் படுத்து விட்டான்.
“என்னாச்சு ஜீவா?” என பதறிக் கொண்டு அவனிடம் சென்றாள் மிது.
“அவளை போக சொல்லுடா மணி” சோர்ந்த குரலில் சொன்னான் ஜீவா.
மிது செய்வதறியாது நிற்க, “மிது ப்ளீஸ் நீ இப்போ கிளம்பு, நான் அப்புறமா கால் பண்றேன்” என்றான் மணி.
தான் காரில் கொண்டு போய் விடுவதாக ரங்கசாமி சொல்லவும் ஜீவாவை ஆதங்கமாக ஒரு பார்வை பார்த்த மிது கிளம்ப எத்தனித்தாள்.
பங்கஜ் மூலமாக மிது யார், என்ன, எதற்கு இங்கு வந்திருக்கிறாள் போன்ற விவரங்களை அறிந்து கொண்டு வந்த இளங்கோ, அவளை பார்த்து “எதுக்கு வந்திருக்க இப்போ? என் அக்கா வாழ்க்கை கெட்டது போதாதுன்னு இவன் வாழ்க்கையும் கெடணும்னு வந்திருக்கியா?” என கோவமாக கேட்டார்.
அடுத்து என்ன பிரச்சனையை கிளப்புகிறார் என்பது போல பார்த்த ஜீவா, “தேவையில்லாம எதுவும் பேசாதீங்க மாமா, இனிமே என்னை பார்க்க வர மாட்டா, அவளை போக விடுங்க மாமா” என தளர்ந்து போன குரலில் சொன்னான்.
“நீயும் இந்த பொண்ணு முன்னாடியே சொல்லு” என்றார் இளங்கோ.