அழந்த ஒரு மூச்செடுத்தவள், “இங்க பிரச்சனை ரேப் மட்டுமில்லை ஜோ. நாம ரொம்ப பக்குவமானவங்க, தைரியமா முடிவெடுப்போம், அப்படிங்கற மாதிரி ஒரு பிம்பம் நம்ம மனசுக்குள்ள இருக்கும் இல்லையா? செல்ஃப் ரெஸ்பெக்ட்? அது சுக்கு நூறா உடைஞ்சுபோச்சு. அடுத்து ட்ரஸ்ட். இவங்க நம்ம நலனை மட்டும்தான் யோசிப்பாங்கன்ற முழு நம்பிக்கை நம்ம அப்பா, அம்மா மேல இருக்கும். அதுவும் சுக்கு நூறா உடைஞ்சுபோச்சு.   நான் மட்டும்தான் எனக்காக இருக்க முடியும்னு தெளிவா புரிஞ்சுது. ஆனா  நான் கூட எனக்காக  நிக்கலை. எல்லா அழுத்தங்களுக்கும் வளைஞ்சுதான் போனேன். என்னை ரேப் பண்ண போதும், கம்ப்ளைண்ட் குடுத்து, அவனுக்கு தண்டனை வாங்கிக்குடுக்காம இருந்த போதும், குழந்தைக்காக ஏங்கின ப்ரீத்திக்காக, குடும்பத்துக்காகன்னு எல்லாரும் என்னை யூஸ் பண்ணிகிட்டாங்க, பண்ணிக்க விட்டேன். ஒரு சின்ன விஷயம் கூட யாரும் எனக்காக யோசிக்கலை. அதை நானும் கேட்டு போராடலை. அப்பா அம்மா கெளரவத்துக்காக நான் எவனையோ நம்பி கெட்டுபோனதா டாக்டர் கிட்ட சொல்லி என்னை கேவலப்படுத்தினது, குழந்தைக்கு என் பால் வேணாம்னு சொன்னப்போ கேட்காம விட்டதுன்னு நிறைய. எனக்கு அந்த இன்டிமெசியே கூட அருவருப்பா இருந்தது. ஆனா அதை யாரும் கேட்டுக்கவோ பொருட்படுத்தவோ இல்லை. அவங்க எல்லாரையும் விட என்மேலதான் கோவம். முதுகெலும்பே இல்லாத ஒருத்தியாதான் இருந்திருக்கேன்.” 

அவள் பேசப் பேச ஜோசஃப் தானும் எவ்வளவு மேலோட்டமாக யோசித்துவிட்டோம் என்று நினைத்திருந்தான்.  

 “நீ அப்படியேதான் இருக்க. ஆனா நீ பார்த்து விரும்பின கீத்து நான் இல்லை ஜோ. இப்ப இருக்கறவ ரொம்ப சுயனலமானவ. எந்த ஒரு விஷயத்துக்கும் என் முடிவுகளை நான் மட்டும்தான், எனக்கு சாதகமா மட்டும்தான் எடுக்கறேன். இப்படி இருக்கவளை உனக்கு பிடிக்காது ஜோ. எனக்கு தாய்மை உணர்ச்சியெல்லாம் இல்லை போல. எத்தனையோ படத்துலையும் நிஜத்திலையும் பார்க்கறோம். பிள்ளையை குடுத்தவன் துரோகின்னாலும், ரேப்பிஸ்ட்னாலும் , பிள்ளை மேல பாசம் காட்டற பொண்ணுங்க இருக்காங்க. தாய்ப்பால் தரும்போது குழந்தைமேல அன்பு வளரும், பான்டிங் அது இதுன்னு பேசறாங்க. ஆனா எனக்கு அந்த ஒன்பது மாசமும் அவன் என்னை ஆக்ரமிச்ச மாதிரிதான் இருந்தது. குழந்தை பால் குடிக்கும்போதும் கூட என்னை அவன்…”, ம்ப்ச்… கண்கள் டிஷ்யூவால் அழுந்த துடைத்தவள், “ எனக்கு …எதோ வயரிங் விட்டுபோச்சுன்னு நினைக்கறேன்.”, சோபையாக சிரித்தாள். 

கலங்கும் மனதினை அவளிடமிருந்து மறைத்தவன், “இதெல்லாம் என்னிக்காவது உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லியிருக்கியா கீத்து?” 

மூக்கை உறிஞ்சியவள், உதட்டை இழுத்து இல்லை என்பதாக தலையசைத்தாள். “சொன்னா? என்ன மாறிட போகுது? ஒரு தரம் அம்மாகிட்ட கேட்டேன்.” 

தரையில் அமர்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருந்தாள் கீர்த்தி. ஆறாம் மாதம் ஆனதும் தரையில் அமர்ந்து எழுந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தார் சரோஜினி.  

“ஏம்மா அந்தாள் என்ன இல்லாம வேற பொண்ணை கெடுத்திருந்தா, அவ வீட்டுல போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுதிருப்பாங்கல்ல?  அப்ப அதை எல்லாரும் ஃபேஸ் பண்ணிருக்கணும் இல்ல?” 

“இப்ப எதுக்குடி அதைப் பத்தி பேச்சு?” 

“சொல்லு, நான்னவே போலீஸ் போக வேணாம்னு அவனை காப்பாத்திவிட்ட இல்லையா?” 

“எந்த பிறவியில அவனுக்கு என்ன கடன் பட்டிருக்கியோ, இப்ப குழந்தையை சுமந்து அதை தீர்த்துக்கறன்னு நினை. போலீசுக்கு போறது எந்த வகையிலும் உபயோகமில்லாத போது ஏன் செய்யணும்? அவன் ஜெயிலுக்கு போயிட்டா மட்டும், உனக்கு நடந்தது இல்லாம போயிடுமா? தேவையில்லாம யோசிக்காத கீர்த்தி. உன் தலையில இப்படி எழுதியிருக்கு நடந்துடுச்சு.“, கீரையை எடுத்துக்கொண்டு இடத்தை காலி செய்திருந்தார். 

அதை நினைவு கூர்ந்தவள், “எல்லாம் உன் விதி, அனுபவின்னு எவ்வளவு ஈசியா முடிச்சிடறாங்க பார்த்தியா ஜோ? அதுக்கப்பறம்  எதுவுமே பேசலை. பேசி புண்ணியம் இல்லை.” 

அவன் உண்ணாது இருப்பது பார்த்து, “சாப்பிடு ஜோ. ஆறி போச்சு பார். இவ்வளவும் நான் சொல்றது, நீ தேடி வந்தவ நான் இல்லை. அதை ஸ்வீட் ஃபர்ஸ்ட் லவ்னு நினைச்சு ஒதுக்கிட்டு உனக்குன்னு ஒருத்தியை பார் ஜோ.”, மீண்டும் அவள் ஆரம்பித்த புள்ளிக்கே வந்தாள். 

“அப்பறம் ஏன் சப்பாத்தியும் சிக்கன் குழப்பும் எடுத்துட்டு வந்த கீத்து? எனக்கு ஞாபகம் இருக்கான்னு செக் பண்ணவா?”, ஒரு வாய் உணவை வலுக்கட்டாயமாக உண்டு முடித்து கேட்டான். 

ஒரு பெருமூச்சொன்றினை விடுத்தவள், “தப்புதான். நீ சொன்னதும் ரியலைஸ் பண்ணிட்டேன். வேணாம்னு சொன்னதும் ஒரு க்ளீன் ப்ரேக் வேணும்தான்.  இனி நான் எந்த வகையிலும் உன்னை ட்ரிக்கர் பண்ண மாட்டேன் ஜோ”, என்று சொல்பவளை பார்த்து, “நீ எதிர்ல இருக்கறதே போறுமேடி என்னை டிரிக்கர் பண்ண? ஒரு பார்வை என்னை பார்த்தாலே மனசு கிடந்து அடிச்சிக்குதே. என்ன பண்றது?”, என்று கத்த வேண்டும்போல் இருந்தது. 

பாவைக்கு அது புரிந்ததோ என்னவோ, “இந்த வருஷம் என் கான்ட்ராக்ட் முடியுது ஜோ, நான் வேற வேலை பார்த்துக்கறேன்.  அபுதாபி, ரியாத், ஜெட்டான்னு துபாய் விட்டு மாறிக்கறேன்.“ 

“ஏன், அப்படியே நீயே எனக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணை பாரேன்? அந்த 96 படத்துல வருமே?”, ஜோசஃப் கடிக்க, 

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஹ்ம்… பண்ணலாமே! உன் ஆசை கனவுன்னு எல்லாமே சொல்லியிருக்கியே”, அவள் உற்சாகம் பார்த்து சற்றே கடுப்பானான். 

அதில் புன்னகைத்தவள், “ஷீத்தலை கன்சிடர் பண்ணலாமே ஜோ? அவளும் கத்தோலிக்தான். ரொம்ப பொறுப்பான பொண்ணு.  இப்ப பெத்தவங்களுக்காக வீடு கட்டிகிட்டு இருக்கா. கல்யாணத்துக்கும் சேர்த்துட்டு இருக்கா. பாசக்காரி. உங்க அம்மாவை நல்லா பார்த்துக்குவா ஜோ. அவளுக்கும் உன் மேல கொஞ்சம் க்ரஷ்தான்”, கீர்த்தி பேசப் பேச, அவளை பார்த்துக்கொண்டிருந்தவன், மறு பேச்சு பேசாமல் எழுந்து சென்றான். நிஜமாகவே அவளை விட்டுவிட்டு போய்விட்டான் என்பது புரியவே சில நொடிகளானது. சற்று  நேரம் பார்த்துவிட்டு, வீடு வந்து சேர்ந்தாள். 

அன்று மாலை விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தவளை அவளின் கைப்பேசி அழைத்தது. அவள் அன்னைதான். வாரந்திர நலன் விசாரிப்பு. எடுக்கவில்லை என்றால் மீண்டும் அழைப்பார் என்று புரிந்து எடுத்தாள். 

“சொல்லுமா? எப்படியிருக்க?” 

“ஆங்…இங்க எல்லாரும் நல்லாயிருக்கோம்டி. நீ ? 

“ம்ம்.. சொல்லுமா?” 

“நீதான் சொல்லணும். அந்த வரன் போட்டோ, விவரம் எல்லாம் ப்ரீத்தி உனக்கு மெயில் பண்ணாளாமே? அப்பறம் எதுவும் சொல்லலையே நீ?”,சரோஜினி விஷயத்திற்கு வந்தார்.  

எத்தனை முறை சொல்லியும் அவர்கள் செய்வதைத்தான் செய்கிறார்கள். 

“வேணாம்னு சொன்னப்பறம் மெயில் பண்ணா?  நான் பார்க்கக்கூட இல்லை. அப்படியே டிலீட் பண்ணிட்டேன்”, என்றாள் விட்டேத்தியாக. 

“என்ன நினைச்சிட்டு இருக்க கீர்த்தி நீ? கொஞ்சம் கூட..”, என்று ஆரம்பித்தவரை இடைமறித்தாள். 

“ம்மா. என் நினைப்பு என்னன்னு பலதரம் சொல்லிட்டேன். அதை விடு. நேத்து டாக்டர்கிட்ட போனியே. என்ன சொன்னார்? அதுக்குத்தான்  நான் போன் அட்டென்ட் பண்ணதே.” 

“ம்க்கும்… என்னத்தை சொல்லுவான்? அந்த எக்ஸ்-ரே எடு, இந்த ஸ்கான் எடுன்னு காசை கரியாக்கிட்டு, குக்கர்ல காஸ்கெட் மாத்தணுங்கற மாதிரி, மூட்டு எலும்பு முழுசா தேஞ்சுபோச்சு, வேற மாத்தணும். ஆப்ரேஷன் பண்ணனுங்கறான். “ 

“எவ்வளவு ஆகுமாம்?” 

“அட போடி! காசு இருந்தா உன் கல்யாணத்துக்கு உதவும். இந்த பத்தாயிரமே தண்ட செலவு. எல்லாம் அந்த ஆயுர்வேத எண்ணையை போட்டு  நீவினா தேவலாமா இருக்கு. ஓடற முடிய ஓடட்டும்”,  என்ற சரோஜினியை கீர்த்திக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. 

“சரி, அப்பாக்கு பார்த்தீங்களா? அவருக்கு என்ன சொன்னாங்க?” 

“ம்ம்..ப்ரஷர் கூடியிருக்காம். வாக்கிங் போங்க. சாப்பாட்டுல உப்பை குறைங்க, யோகா பண்ணுங்கன்னாங்க. இதெல்லாம் விட அந்த மனுஷனை வேண்டாததெல்லாம் யோசிக்காதீங்க, படுத்து தூங்குங்கன்னு சொல்லியிருக்கலாம்”,அலுத்துக் கொண்டார். 

“ஏன்?  நைட் தூங்கறதில்லையா? என்ன பண்றார்?” 

“ஒன்னும் பண்றதில்லை. விட்டத்தைப் பார்த்து யோசனையா உட்கார்ந்திருக்கார். எல்லாம் உன்னை பத்தின கவலைதான். “ 

“…” 

“உனக்கொரு கல்யாணத்தை முடிச்சிட்டாலே அவர் பாரம் குறைஞ்சுடும். ஆனா நீ எங்க? பிடி குடுக்கவே மாட்டேங்கற. எங்க  நிம்மதி பத்தி உனக்கென்ன கவலை?”, சரோஜினி  நொடித்தார். 

“ம்ம்.. ப்ரீத்தி நிம்மதி, உங்க நிம்மதி, குடும்ப கெளரவம்னு பார்த்து பார்த்துதான் பாரம் தாள முடியாம தெறிச்சி ஓடி இங்க வந்திருக்கேன். இனியாவது என் நிம்மதியை பார்த்துக்க விடுங்களேன்! அது ஏன் புரிய மாட்டேங்குது?”, கடினமாகப் பேசியவள், கைப்பேசியை அணைத்து விட்டெறிந்தாள். 

அப்படி ஒரு அழுகை வந்தது. ஜோவை காயப்படுத்தியது பத்தாதென்று பெற்றவளையும் காயப்படுத்தியாயிற்று. அதில் கூடவே கிழிபடுவது அவள் மனமும்தான். அந்த ரணம் மட்டும் யாருக்கும் தெரிவதில்லை. அவள் மீதுதான் கோவப்படுகிறார்கள்.