அத்தியாயம் – 6 

“ஹலோ, லன்ச் உங்களோட சேர்ந்து சாப்பிடலாமா? இல்லை உங்க பர்சனல் டைம்னா…” 

“அட அதெல்லாம் ஒன்னும் இல்லை ஜோஸ்ஃப் சர். வாங்க தாராளமா உட்காருங்க.”, வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள் ஷீத்தல். 

ஜோசஃப் கீர்த்தியை நோக்க, அவள் தலை சம்மதமாக அசைய, இரு பெண்களின் எதிரில் அமர்ந்தான். 

“நாள் முழுக்க இங்கலீஷ்லயே பேசி போரடிக்குது. அதைவிட்டா ஹிந்தியில பேசிக்கறாங்க. தமிழ்ல பேச முடியாம ஒரு மாதிரியிருந்துச்சா? அதான் சாப்பாட்டு நேரமாவது உங்களோட பேசலாமேன்னு நினைச்சேன்”, இயல்பாகப் பேசியபடி அவன் வாங்கிவந்திருந்த ஷவார்மாவை திறந்தான். 

இருவரும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வந்திருக்க, “சாப்பிட ஆரம்பிச்சிட்டோமே சார். இல்லைன்னா ஷேர் பண்ணிருக்கலாம். நாளைக்கு எடுத்து வெக்கறோம்.”, ஷீத்தல் பேச, கீர்த்திக்கு அடுத்த வாய் உண்ணமுடியவில்லை. 

“எதற்கு திடீரென்று உடன் வந்து அமர்கிறான்? இப்போது தெரிந்தது போல பேசவேண்டுமா இல்லை பேசக்கூடாதா?”, குழப்பத்தில் அமர்ந்திருந்தவளை, 

“என்ன கீர்த்தி மேடம்?  பாட்டில்ல இருக்கறது குழம்பு தானே? அது கொஞ்சம் தந்தா, ஷ்வார்மா கூட தொட்டு சாப்பிடுவேனே?”, அவன் புன்னகையில் கீர்த்தி குழம்ப, ஷீத்தல் சற்று கிறங்கினாள். 

அவன் புறம் குழம்பு பாட்டிலை வேகமாகத் தள்ளியவள், “ம்ம்.. எடுத்துக்கங்க. மீன் குழம்பு, ஆனா பீஸ் எதுவும் இல்லை, ஷீத்தல் எடுத்துகிட்டா.”, என்று சொல்லி அவளிடமிருந்து முறைப்பை பெற்றுக்கொண்டாள். 

அதில் சிரித்தவன், எளிதாக மேற்கொண்டு பேச்சை வளர்க்க, ஷீத்தல்தான் நிறைய பேசினாள். 

அவன் சென்ற பின் அன்று மாலையும் பேசினாள். “சாதாரணமா வந்து பேசினதுக்கு ஏன் ஷீத்தல் ஓவர் எக்சைட் ஆகற?” 

“வந்ததுலர்ந்து கண்டுக்கவேயில்லை. இப்ப திடீர்னு வந்து பேசறாரே?” 

“வந்து இரண்டு வாரம்தான ஆச்சு. எல்லாம் செட் ஆகி பழக ஆரம்பிக்கறாங்க.“ ஷீத்தலிடம் பேசினாலும் அவளுள் குழப்பம்தான். ஆனால் மறு நாள் அவனுக்குப் பிடிக்கும் என்று சிக்கன் குழம்பும் சப்பாத்தியும் செய்தாள். 

மதியம் அவன் வந்து அமரவும், அவன் வாங்கியிருந்த உணவுத் தட்டில்  நான், டால், கீரை என்றிருக்க, சப்பாத்தியும் சிக்கன் குழம்பு இருந்த டப்பாவையும்  நகர்த்தி வைத்தாள். 

ஷீத்தல் அவளுக்கு தெரிந்த முட்டை புலாவை தர, பெரியதொரு புன்னகை. 

“நீங்க இப்படி வெரைட்டியா குடுத்தா, நான் என்ன பதிலுக்கு செய்ய?” 

“ஏதோ ஒரு நாளைக்கு வகையா இரண்டு பேருமே செஞ்சிட்டு வந்துட்டோம். ஒரு வரவேற்பு விருந்துன்னு வைங்களேன். இல்லைன்னா இவ லெமன் ரைஸ், தயிர் சாதம் கேஸ். எப்பவாவது ஒரு மீன் குழம்பு வரும்.”, ஷீத்தல் கீர்த்தி விலாவில் இடித்து, “நீ காலையில சப்பாத்தி எல்லாம் போட மாட்டியே? என்ன அதிசயம்?” என்று புருவம் ஏற்றினாள். 

“அது… இட்லி மாவு இல்லைன்னு நேத்து சப்பாத்தி போட மாவு பிசையவும், காலைக்கும் சேர்த்து பினைஞ்சேன். வேற ஒன்னுமில்லை.“, ஷீத்தல் உணவில் கவனமாக, “அப்படியா?”, என்று கீர்த்தியை ஒரு பார்வை பார்த்தவன் அவள் சப்பாத்தியும் சிக்கன் குழம்பையும் ஒரு வாய் உண்டான். 

தனக்காக செய்திருக்கிறாள் என்று தெரிந்தது. மென்று முழுங்க உணவோடு உணர்வும் இனித்தது. அவளே செய்து கொண்டு வந்த முதல் உணவும் இதுதான்.  

அரக்க பரக்க ஓடி வந்தாள் அன்று. தலை லேசாக கலைந்திருக்க, நெற்றியில் வியர்வை பளபளத்திருந்தது. 

மூச்சு வாங்குபவளை பார்த்து, “இரு எதுக்கு இப்படி வேகமாக வர? அதுதான் நான் வெயிட் பண்றேன்னு சொல்லிட்டேனே?”, சிரிப்புடன் அவள் நீட்டிய உணவு டப்பாவை வாங்கிக் கொண்டான். 

“நல்லா இருக்கும்னுதான் நினைக்கறேன். சாப்பிட்டு பார்த்துட்டு டேஸ்ட் எப்படியிருக்குன்னு சொல்லு ஜோ”, அவள் முதன்முதலாக அவனுக்காக தானே சமைத்திருந்தாள். சப்பாத்தி சற்று கடினப்பட்டு இருந்தது. சிக்கன் குழம்பு சற்று நீர்த்து இருந்தாலும், உப்பும் உரைப்புமாக சுவையாகவே இருந்தது. 

“டேஸ்ட் நல்லா வந்திருக்கு கீர்த்தி. இன்னும் கொஞ்சம் கூட ப்ராக்டீஸ் பண்ணா உங்க அம்மா பண்ற அளவுக்கு வந்துடும்.” ஜோ உண்மையை சொல்லவும் பெண் முறைத்தாள். 

“…” 

“என்ன? நல்லாதான இருக்கு?” 

“ஆனாலும் உன் மாமியார் செய்த மாதிரி வரலை. அதானே? உன் அம்மா செய்யற மாதிரி இல்லைன்னு சொன்னாக்கூட பொறுத்துக்கலாம். நீ ..”, என்று ஆரம்பித்தவளைக் கேட்டு சத்தமாகவே சிரித்துவிட்டான். 

“அவங்க இரண்டு பேருக்கும் எத்தனை வருஷ அனுபவம்? நீயும் ஆயிரம் முறை இந்த குழம்பை பண்ணா அவங்களை விட டேஸ்டா பண்ணுவ. நீ டேஸ்ட் எப்படி இருக்குன்னு கேட்கவும் அதை சொன்னேன். நிஜமா நீ கேட்டிருக்கவேண்டியது ஃபீல் எப்படியிருக்குன்னு? 

“??” 

“எனக்காக நீயே சமைச்சு எடுத்துட்டு ஓடி வந்த அந்த ஃபீல் ஜ்ஸ்ட் வாவ். அம்மா பிள்ளைக்கு செய்யறதும், கல்யாணம் முடிச்சு மனைவி புருஷனுக்கு செய்யறதும் விட, இப்ப, இது, இந்த நேரம் மட்டும்தான் கிடைக்கும் கீத்து. ரொம்ப அழகானது. இத்தனை அன்பை எனக்குக் காட்ட நான் என்ன செய்துட்டேன்? காரணமோ, எதிர்பார்ப்போ இல்லாத அந்த அன்பை  நீ காட்டும்போது மனசு நிறைஞ்சு மிதக்கற மாதிரி தான் ஃபீல் பண்றேன் கீத்து.” 

“என்ன சர்? ஒரு வாய் சாப்பிட்டீங்க அப்பறம்  நிறுத்திட்டு என்ன யோசனை?”, ஷீத்தலில் கேள்வில் நிகழ்வுக்கு வந்தவன், “ரொம்ப அருமையா இருந்தது, வேற மெமரீஸ் ஞாபகம் வந்துடுச்சு. அதுதான்.” என்றவன், 

“டேஸ்ட், ஃபீல் எல்லாமே நல்லா இருக்கு கீர்த்தி”, என்று உணர்ந்து சொல்ல, கீர்த்திக்கு மனது இடறியது. “என்ன பண்ணிட்டு இருக்க கீர்த்தி? அவனுக்கு இப்படி ஹோப் குடுத்தா மறுபடி ஆசைப் படுவானே? திரும்பவும் ஆசை காட்டி மோசம் செய்து அவனை உடைக்கப் போறியா?” மனசாட்சி குத்திக் காட்ட சுதாரித்தாள். 

ஷீத்தல் அதற்குள் அவள் செய்திருந்த உணவை உண்ணச் சொல்ல ஜோவும் கவனம் திருப்பியிருந்தான். 

அந்த வார விடுமுறையின் போது மீண்டும் கராமாவில் சந்திக்க கேட்டிருந்தான் ஜோ. அவளும் சம்மதித்திருந்தாள். 

அவனுக்கு தேவையான சில பொருள்கள் வாங்கிக்கொண்டு ஒரு துரித உணவுவிடுதியில் அமர்ந்தார்கள். சற்று நேரம் கழித்து வந்திருந்ததால் கூட்டம் குறைந்திருந்தது. 

“ஜோ…நான் ஏன் விலகினேன்னு எல்லாமே சொல்லிட்டேன்.  நாம இப்படி மீட் பண்றது இதுவே கடைசியா இருக்கட்டும். நீங்க உங்க வாழ்க்கையை பாருங்க. நான் திரும்ப எதையும் ஆரம்பிக்க விரும்பலை. ப்ளீஸ்.”  நேரடியாக அவளை அரித்துக்கொண்டிருந்த விஷயத்திற்கு வந்தாள். 

“ஏன் கீத்து? இந்த ஒரு விஷயத்தால நான் விலகிடுவேன்னு நினைச்சியா?”, எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்து இலகுவாகவே கேட்டு ஒரு வாய் உண்டான். 

“நீ செய்ய மாட்டன்னு தெரியும். அதுதான் நான் செய்யறேன். யூ டிசர்வ் பெட்டர் ஜோ”, அவள் கண்களில் புரிந்துகொள்ளேன் என்று ஒரு மன்றாடல் இருந்தது. 

“அதை நான்தானே சொல்லணும்? “ 

“என்னால ஒரு சராசரி மனைவியா இருக்க முடியும்னு தோணலை ஜோ.  அந்த இண்டிமெசி, குழந்தை, இது எதுக்குமே நான் தயாரா இல்லை. வருஷம் போனாலும் சரியாகும்னு கூட நினைக்க முடியலை. நான் என்ன பிறவின்னு கூட எனக்கு டவுட் இருக்கு. என்னை கட்டிகிட்டு இந்த பாரமெல்லாம் நீ சுமக்கணும்னு அவசியமே இல்லை. அதைத்தான் சொல்றேன் ஜோ” 

“அதை பாரமா இன்னும் நீ ஏன் சுமக்கற கீத்து? அதை கீழே போட நேரம் வந்திருக்குன்னு எடுத்துக்கோயேன்? கீழ தள்ளிவிட நான் ஹெல்ப் பண்றேனே?”, ஜோ சொல்லவும் எரிச்சலுற்றாள் கீர்த்தி. 

“ஜோ… சும்மா எல்லார் மாதிரியும் சொல்லாத. இதை தூக்கி சுமக்க எனக்கென்ன வேண்டுதலா?  என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினவங்க சுகமா இருக்க, நான் மட்டும் இப்படி கழிவிரக்கத்துலயே இருக்கணும்னு நினைக்கறேன்னு  நீ நினைச்சியா? இப்படியெல்லாம் வியாக்கியானம் சொல்றது ஈசி ஜோ”. கண்ணீல் நீர் படலம் சேர, முகம் திருப்பினாள் கீர்த்தி. 

அவளது வலியைப் பார்த்தவன் மனம் அடைத்துப்போனது. “சரி. விடு. பழசு எதுவும் பேசி திரும்ப கிளறவேண்டாம்.”, வேகமாக பின் வாங்கினான் ஜோ.