சம்பாதிக்கிற மருமகள் வந்துவிட்டால் போதும்…. அவள் சம்பாத்தியம் வேணும் ஆனால் பொறுப்புகள் வேண்டாம். நிஜத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து வெளிவந்த குறுநாவல் இது. அந்தக் காலத்து சுமங்கலி பத்திரிகையில் வந்தது. முடிவின் ஆரம்பம். சுமதியின் தைரியம் அவளுக்கு ஒரு விடிவை தந்தது. மௌனம் ஒரு தீர்வாகாது. போராடமால் நியாயம் கிடைக்காது. குட்டக் குட்டக் குனிய.. புதைத்து விடுவார்கள்.
முடிவின் ஆரம்பம்.
சுமதி நிறைய சிந்தித்தாள். இந்தக் கஷ்டங்களும் வேதனைகளும் தீர்ந்து தெளிவு பிறக்குமா.?
ஜன்னல் வழியே பார்த்தபோது வானம் மௌனக் கவிதை படித்துக் கொண்டிருந்தது. இரவின் நிசப்தம், குழுமையான காற்று. சூழ்நிலையில் ஒரு நிம்மதி—இந்த நிம்மதி அவள் வாழ்க்கையிலும் வருமா.? படப்படப்பாக இருந்தது. பெருமூச்சு விட்டாள்.
புதுப் பெண்ணாக வீட்டில் காலடி எடுத்து வைத்த போது எவ்வளவு சந்தோஷப்பட்டாள்.! எல்லாம் கொஞ்ச நாளிலேயே புரிந்து விட்டது. புதுச் சேலை சாயம் போகும் ரகமாயிருந்தால், நனைந்தவுடன் எப்படி இருக்கும்.? அவள் வந்து சேர்ந்த வீடு அப்படித்தான் இருந்தது.
வெள்ளிக் குத்து விளக்கு நாலு இன்ச் தான் இருக்கு. வெள்ளிக் கூஜா சிறுசா இருக்கு. வெள்ளித் தட்டா இது? இல்லே டிபன் பிளேட்டா.? நல்ல ஏமாத்திட்டாங்க….வெள்ளிப் பாத்திரங்களுக்கு இந்த விமர்சனம் வந்தது. இது தான் என் புகுந்த வீட்டார் லட்சணமா.?
அடுத்து நகைகள் பற்றி….நகைகள் எல்லாம் புல்லு போல இருக்கு. எடுப்பாக இல்லையே? மாமியாரின் குறை நீண்டு கொண்டே போயிற்று. சுமதி கண்களில் நீர் நின்றது.
அத்தை எல்லாவற்றுக்கும் ஈடாக நான் தான் குணவதியா அழகா இருக்கேனே. வேலைக்குப் போறேனே, இந்த நல்ல அம்சங்கள் எல்லாம் ஏன் உங்க கண்ணில் படவே இல்லை? சுமதி மனதோட சொல்லிக் கொண்டாள்.
கருக்கல் அழியாத இனிய வைகறை பொழுதில் எழுந்து கோலமிட்டாள். தலைக்கு குளித்து, ஒரு துண்டைத் தலையில் சுற்றிக் கொண்டு சமயலறைக்குள் அவள் நுழைந்தால் என்றால், சுமதிக்கு அலுவலகம் கிளம்பும் வரை, வேலை சரியாக இருக்கும். ஒரு நாத்தி, இரு மைத்துனர். கணவர், மாமனார், எல்லோரும் சாப்பிட்டு எழுந்தவுடன் அவசர அவசரமாய் அவள் அள்ளிப் போட்டுக் கொண்டிருருக்கையிலே, கணவன் உடையணிந்து வந்து விடுவான். பொறுமையின்மை முகம் பூராவாக எழுதியிருக்கும்.
“சுமதி….சீக்கிரம் வா. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கே.? உன்னை இறக்கி விட்டிட்டு நான் ஆபீசுக்கு போக வேண்டாமா.?” என்று கத்துவான்.
“இதோ….” என்று குரல் கொடுத்து சுமதி வருவதற்குள், மாமனார் கொடுத்த பைக்கை வீதி அதிர ஸ்டாரட் செய்வான். அவள் ஏறியவுடன் சீறிக் கொண்டு கிளம்புவதில். அவன் கோபம் தெரியும்.
“மாதம் தவறாமல் சம்பளத்தை என்கிட்டே கொடுத்திடனும். உன் சிலவுக்கு அப்பப்ப நானே தருவேன். எது வாங்கணும்னாலும் என்கிட்ட முன்கூட்டியே சொல்லிடனும்.” ஜானகி அம்மாள் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள் சுமதி. சம்பளத்தைக் கொடுத்தாள். ஈட்டிகாரி மாதிரி கேட்கும்போது என்ன செய்வது.?
“என்ன நூறு ரூபாய் குறையுது.?”
“ஒண்ணுமில்லே அத்தை. வந்து என் தோழி மைதிலி கடனா கேட்டு வாங்கிட்டா. தட்ட முடியலை. அடுத்த மாசம் கொடுத்திடுவா.”
“என்னடி பொய்யா சொல்றே.? எல்லாம் அவன் கொடுக்கிற இடம். அவன் வரட்டும் பேசிக்கிறேன். இஷ்டப்படி செலவு செஞ்சிட்டு அதை மறைக்க எத்தனை நெஞ்சழுத்தம் உனக்கு.? உண்மையை சொல்லு.”
சுமதி பதில் ஏதும் சொல்லாமல் நின்றாள்.
அந்த “அவன்” வந்ததும் நிலைமை இன்னும் மோசமாயிற்று. அம்மாவும் மகனும் மாற்றி மாற்றி சுடு சொற்களை அவள் நெஞ்சு எரிய வீசி வீசி எறிந்தார்கள். அவள் பதிலே பேசவில்லை. மனசு மட்டும் வீசும்பிக் கொண்டே இருந்தது. நூறு ரூபாய் குறைந்ததுக்கு இவ்வளவு ஏச்சா.?
“அடுத்த மாத சம்பளத்தில் ஒரு பைசாக் கூட குறையக் கூடாது. அந்த கடனா குடுத்த நூறு ரூபாயும் வரணும்.”
இப்படி ஒரு முத்தாய்ப்போடு ஒரு வழியா ஒயிந்தார்கள்.
அன்றிரவு அவன் தொட்ட போது அவளுக்கு குமட்டியது.
பிரபு பிறந்தவுடன் சுமதி ரொம்ப சந்தோஷப்பட்டாள். கொஞ்சம் சிரிக்க கூட முடிந்தது. பார்த்து பார்த்து எல்லா வேலையும் முடித்து விட்டு அலுவலகம் புறப்படும் நேரம் குழந்தையை பிரியணுமே, என்று கண்ணில் நீர் கட்டி நின்றது.
“ஜானகி தேவலையே….உன் மருமக எல்லா வேலையும் முடிச்சிட்டு தான் ஆபீஸ் போறா போலிருக்கு. உனக்கு குழந்தையோட நல்லாப் பொழுது போகும் இல்லே.?”
அவலுக்கு வந்து வாயை கிண்டி எடுக்கும் அடுத்த வீட்டு மாமிகள். இப்படி கேட்டால், ஜானகி அம்மாளுக்கு உற்சாகம் பிடிபடாது. இலை மறைவு காய் மறையாக சுமதியை ஏசுவதற்கு, இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா.?
“நல்லா சொன்னே போ. பாதி வேலையை நான் செய்துடறேன். அவ போனதும் சும்மா இருக்க முடியுமா.? ஏதாவது வேலை இருந்திட்டே இருக்கும். போதாதற்கு இவன் வேறு சதா அழுகை.”
“ரொம்பக் கஷ்டம் தான்….” ஒத்து ஊதும் ஆட்கள்….
“வயசு காலத்திலே இப்படி அல்லாடறேன் என்ன இருந்தாலும் உன் நாட்டுப் பெண் மாதிரி வருமா.? வீட்டோடு இருக்கா., சொன்னதைக் கேட்டிட்டு பம்பரமா வேலை பார்க்கிறா. ம்ம்ம்….எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும்.”
ஆசை தீர ஜானகி அம்மாள் பேசி முடிக்கிற போது சுமதியின் நெஞ்சு கொதித்து விடும். இவள் காதில் விழ வேண்டும் என்றே பலமாக பேசுவார்கள். சுமதி வெந்து போனாள். எவ்வளவு பொய்! ஒரு துரும்பை எடுத்துப் போடாதவள், அவள் ஆபீசிலிருந்து திரும்பி வரும்வரை மாவரைக்காமல் வைத்திருப்பாள். அவள் வந்தவுடன் இந்தாடியம்மா உன் பிள்ளையை பிடி என்று குழந்தையை மடியில் வீசுபவள்—அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசுகிறாள்.! அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை சுமதிக்கு.
பாராட்ட வேண்டாம். இப்படித் தன்னை வசை பாடாமலாவது இருக்கக் கூடாதா.? என்று தான் அவள் அடிக்கடி மறுகுவாள்.
அன்றிரவு சுமதி பயந்து கொண்டே தன் கணவனிடம் சொன்னாள்.
“நான் என் வேலையை விட்டுடட்டுமா?”
“என்ன சொன்னே.? அதுக்குத்தானா உன்னை நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்?. ஏதாவது ஏறுமாறாக செஞ்சே நீ இங்கே இருக்க முடியாது. புரிஞ்சுக்க.”
“அத்தை குழந்தையைப் பார்த்துக்க கஷ்டப்படறா மாதிரி தெரியுது அதான் சொன்னேன்.”
“எங்கம்மாயைப் பத்தி என்கிட்டயே குறை சொல்லணும்னா, உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்.?”
அத்தோடு பேச்சை முடித்தான். விளக்கை அணைத்தான். அவளை முரட்டுத்தனமாய் இழுத்தான். அவள் கசந்து போனாள். சீ இவன் மனுஷன் தானா?
அவன் விலக்கின பிறகு ஏதோ வில்லனால் கற்பழிக்கப் பட்டதுபோல் உணர்ந்தாள். ஓடிச் சென்று குளிக்கத் தோன்றியது. அவன் கைப்பட்ட இடமெல்லாம் தீயாய் எரிந்தது. ரொம்ப நேரம் சத்தமில்லாமல் அழுதாள்.
அம்மா….இது என்ன இம்சை! எத்தனை நாள் இதைப் பொறுப்பது.?
வானத்து நட்சத்திரங்கள் ஆறுதலாய் கண் சிமிட்டின. அவன் மூச்சுக் காற்று கூட தன் மேல் படாமல் ஜன்னலோரம் கம்பியை பிடித்துக் கொண்டெ உறங்கிப் போனாள்.
“நான் குழந்தையை பார்த்துக்க மாட்டேன்னா சொன்னேன்.? அடிப்பாவி….மகனையும் அம்மாவையும் பிரிக்கிற வேலையை ஆரம்பிச்சிட்டியா.?
வயிற்றில் அடித்துக் கொண்டாள்.
“அத்தை….நான் அப்படி தப்பான அர்த்ததில் சொல்லவில்லை. நீங்க நேத்து ராகினி அம்மா கிட்ட பேசினதை வச்சு, ஒரு வேளை, குழந்தையை பார்த்துக்கறது உங்களுக்கு சிரம்மமா இருக்குமோன்னு நினச்சு அப்படி சொன்னேன். வேலையை விட்டிட்டு, உங்களை கஷ்டப்படுத்தாம, நானே எல்லாத்தையும் கவனிச்சுக்வான்னு தான் கேட்டேன்.. உங்களைப் பிரிக்கிற எண்ணமெல்லாம் எனக்கில்லை.”
“பசப்புக்காரி! நல்லாவே பேசற, நல்ல வேளை என் மகன் உன் மோக வலையிலே விழாம பெத்த தாயை மதிக்கிறவனா இருக்கானோ, நான் பொழச்சேன்.”
கண்ணீர் வெள்ளம் ஓடியது. ஜானகி அம்மாள் ஒப்பாரி அடங்க வெகு நேரம் ஆயிற்று.
சதா நச்சரிப்பு செய்யும் நாத்தியும், கிண்டல் என்ற பெயரில் நெஞ்சை ரணமாக்கும் மைத்துனர்களின் போக்கும், சுமதிக்கு மேலும் இம்சையாய் வந்து சேர்ந்தது. என்ன பேசினாலும் கடைசியில் “எல்லாம் வேலைக்குப் போகிற திமிர்” என்ற முத்தாய்ப்புடன் தான் பேச்சு முடியும்.
வீட்டிலும் அலுவலகத்திலும் மாடாய் உழைத்தும், அவளிடம் அனுதாபம் காட்ட யாருமில்லை! ஊசியாய் குத்தினார்கள். அவள் சாது என்று புரிந்ததும் குட்டக் குட்ட குனிக்கிறாள் என்று தெரிந்ததும், மேலும் மேலும் அவளை துன்புறுத்தினார்கள்.
சுமதி தலைவிதியை நொந்தபடி இப்படியே இருந்திருப்பாள். ஆனால் போன வாரம் நடந்த சமபவம் தான் அவளை விழிப்படைய செய்தது. சிந்திக்க வைத்தது. கோபம் வராத அவளுக்கும், பயங்கர கோபத்தை வரவழைத்தது. கதி கலங்கச் செய்தது.