நடந்து முடிந்த முழு வரலாறும் ஜோவிடம் மட்டும்தான் இதுவரை கூறியிருக்கிறாள். ஞாபகங்கள் கிளறிவிடப்பட்டதில் அன்று வெகு நேரம் உறங்கவில்லை. எங்கே மீண்டும் கனவு வருமோ என்ற பயமும் ஒரு காரணம்.  யோசிக்காமல் இருக்க படுத்தபடியே யூட்டியூபில் காமெடி பார்த்துக்கொண்டிருந்தாள். ஜோவின் பிறந்த நாள் பரிசாக அவனுடன் தனியாக சினிமாவிற்கு சென்றது ஞாபகம் வந்தது. 

கிளாஸ் கட்டடித்து, பகல் வேளையில், படம் ஆரம்பித்தபின் உள்ளே பயந்துகொண்டே சென்றது, முடிவதற்கு சில நிமிடங்கள் முன்னரே கிளம்பி வெளியில் வர,  

“இத்தனை பயம் இருக்கறவ எதுக்கு படத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்ன கீர்த்தி?”, என்றான் கேலியாக. 

அவள் புஜத்தில் அடித்தவள், “அத்தனை பயந்தாலும், உன்னோட வரணும்னு ஆசையிலதான வந்தேன். அதை பாராட்ட மாட்டியா?”, என்று நிமிர, 

“உன்னை கஷ்டப்படுத்திகிட்டு எனக்காக செஞ்சா மட்டும் நான் சந்தோஷப்படுவனா கீர்த்தி? சுதந்திரமா போகறதுக்கான காலம் வரும் . அப்ப போயிக்கலாம். இனி இப்படி ஒரு ஐடியா வேணாம்மா”, புரிதலும், நம்பிக்கையுமாக கூறுபவனைக் கண்டு இன்னும் இன்னும் பிடித்தது. 

மீண்டும் அவர்கள் சேர்ந்து படம் பார்க்கவேயில்லை. இப்போது யோசித்துப்பார்தால், அதன் பின் இன்னும் அவள் திரையரங்கம் சென்று படம் பார்க்கவே இல்லை. தோணவும் இல்லை. 

நல்ல நட்பு என்பது தாண்டி சில மாதங்களிலேயே இது விருப்பம் என்றதையும் தாண்டியது என்று புரிந்தது இருவருக்குமே. அவர்களைத் தெரிந்தவர்கள் இருவரையும் ஜோடி சேர்த்து அப்படித்தான் என்றாலும், மறுக்கவில்லை இருவரும். அதற்காக அப்படித்தானா என்று பேசிக்கொள்ளவும் இல்லை.  

ஒரு பெரு மழையில் சென்னை சிக்க, அவன் இருக்கும் இடம் வெள்ள நீரில் சூழ்ந்திருந்தது. “போன் சார்ஜும் தீரப்போகுது, அம்மாக்கு பேசிட்டு உனக்கு பேசறேன். ஹோட்டல் எதுவும் இல்லை கீர்த்தி வாங்கி வெச்ச பிரெட், பழம் இருக்கு. பார்த்துக்கறேன். அடுத்து எப்ப சார்ஜ் போட்டு, டவர் கிடைச்சு, பேச முடியும்னு தெரியலை. நீ பத்திரமா இரு. முடியும்போது பண்றேன்”, என்று சொல்ல அன்று அவள் பட்ட தவிப்புதான் காதலை அவளுக்கு உணர்த்தியது.  

அம்மா செய்த சூடான சாதமும், மொச்சை காரக்குழம்பும் தொண்டைக்குள் இறங்கவேயில்லை. ஐயோ, அவனுக்கு ஒரு வாய் தரமுடியலையே என்று மனது கிடந்து அடித்துக்கொண்டது. ஏனென்றே தெரியாது அழுகை வந்தது. அவனுக்கு தர முடியாதது பற்றி வருந்தி ஆயிரம் பத்திரம் சொல்லி மெசேஜ்கள் தட்டிவிட்டாள். எதுவும் டெலிவர் ஆகவில்லை. 

முழுதாய் இரண்டு நாட்களாகியிருந்தது அவன் மீண்டும் பேசியபோது. இடையில் வந்த இரண்டு குறுஞ்செய்தி மட்டும்தான் அவளை பித்துப்பிடிக்காமல் வைத்திருந்தது. 

ஒருவாரம் கழித்து அம்மாவிடம் அடம் செய்து அதே மொச்சை காரக் குழம்பை செய்யச் சொல்லி அவனுக்காக எடுத்துச் சென்றிருந்தாள். அன்றுதான் முதல்முதலாக அவள் கைவிரல்கள் பிடித்து குவித்து அதன் நுனியில் மிக மிக மெலிதான முத்தம் வைத்திருந்தான். அதற்கே அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. 

கையை இழுத்து பின்னுக்கு கொண்டு சென்றவள் தலை நிமிர்வேனா என்று நிலத்தை ஆராய, “கீத்து… நமக்குள்ள என்ன நடக்குதுன்னு உனக்கு புரியுதில்ல? இது வெறும் நட்பு இல்லை. அதையெல்லாம் தாண்டிட்டோம். தெரியுதா?”, ஜோவிடமிருந்து மென்மையாக வந்தது கேள்வி. 

மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் தயக்கம், கலக்கம் எல்லாம் மீறி  வெட்கமும் ஆசையும் நிரம்பியிருந்தது. 

காண்டீன் செல்லும் வழியில் இருந்த அந்த அடர்ந்த ஆலமரம்தான் அவர்களின் உணர்வுகளுக்கான சாட்சியாக நின்றிருந்தது. 

“புரிஞ்சுது. உங்கிட்டருந்து போன் வர வரைக்கும் தவிச்சபோதே எனக்கும் புரிஞ்சுது ஜோ. “ 

“ம்ம்.. அம்மா போனை வெக்காம பத்திரம் சொல்ல, உங்கிட்ட பேச முடியாம போயிடப்போதோங்கற பதட்டத்துல அவங்களை அப்படியே பாதியில கட் பண்ணி உங்கிட்ட பேசிட்டு வெக்கும்போதுதான் எனக்கும் வெளங்குச்சு. அடுத்த இரண்டு நாளும் உனக்கும் அப்படித்தானான்னு யோசனை. போன் சார்ஜ் கிடைச்சு உன் மெசேஜ் பார்த்ததுலையே உன் தவிப்பு புரிஞ்சுது. கூப்பிட்டா உன் போன் ஸ்விட்ச் ஆஃப். ஒரு வழியா பேசி குரலைக் கேட்டதே போதும்னு தோணுச்சு.  நீ கொண்டு வந்த சாப்பாட்டை பார்த்ததுமே கன்ஃபர்ம் ஆகிடுச்சு.”, கண்சிமிட்டி முகம் முழுதும் புன்னகை மிளர ஜோ சொல்ல அவனையே ரசித்துப் பார்த்திருந்தாள். 

அந்த இனிமையோடு உறங்கச் சென்றவளின் உறக்கம் நெடு  நேரம் நீடிக்கவில்லை.  கனவில் கரிய உருவம் துரத்த துரத்த இவள் ஓட முடியாது சிக்கித் தவிக்க, அந்த உருவம் அவள் மேல் படர, துள்ளி எழுந்து அமர்ந்தாள். உடல் முழுதும் வியர்த்திருந்தது. வேகமாக ஓடியது போல மூச்சிரைத்தது. இதயம் தடதடத்தது.  

“இல்ல…இல்ல… ஒன்னும் இல்லை. இங்க யாரும் எதுவும் பண்ணமுடியாது. உன் லைஃப், உன் முடிவு”, ஆழ்ந்த மூச்சுகள் எடுத்து அவள் தாரக மந்திரத்தை உருப்போட்டு தன்னை சமன் படுத்திக்கொள்ள முயன்றாள். 

தண்ணீரைக் குடித்தவள் மணி பார்க்க மூன்றைக் காட்டியது. அதற்கு மேல் தூங்க முனையவில்லை. அடுத்த  சில இரவுகள் பக்குவமாய் கடக்கவேண்டியதிருந்தது. வார நாட்கள் துவங்கிடவும், வேலை பளு, அன்றைய நிகழ்வுகள் என்று அசை போட்டு படுக்க, மீண்டு கொண்டாள். 

திங்கள் அவளைப் பார்த்த ஜோ, “பார்க்க டயர்டா இருக்க? தூங்க முடியலையா?”, என்று விசாரிக்க, “பழக்கம்தான், எப்படி சரிபண்ணிக்கணும்னு தெரியும் ஜோ.”,  என்று பதிலளிக்க விலகிச் சென்றுவிட்டான். 

மீண்டும் அவனாக வந்து பேசாததில், ‘எதுவும் தப்பா பேசிட்டமா? இல்லை இதுக்கா இவ்வளவு தூரம் இவளை தேடிகிட்டு வந்தோம்ங்கற கடுப்பா?’, ஒவ்வொரு நேரம் ஒன்று நினைத்தது மனது. 

ஜோசஃப் இவள் சொன்னதையெல்லாம் கேட்டு ஆடிப்போயிருந்தான் என்பதுதான் உண்மை. இப்படிக் கூடவா நடக்கும்? எத்தனை இனிமையானவள் அவன் கீத்து. இப்போது இறுக்கம் சூழ்ந்து, கண்களில் இருந்த அந்த வெகுளித்தனமும், விளையாட்டும் தொலைந்து போய், எச்சரிக்கை நிரம்பியிருந்தது. மனதில் நினைப்பது எதுவும் தெரியாத படி மறைக்கவும் கற்றுக்கொண்டிருந்தாள். 

இத்தனைக்கும் காரணமானவனை நினைக்க மனதில் அத்தனை கோவம். அவள் வீட்டிலிருந்து வந்த அரை மணி நேரம் தன் அறையை  நடந்து அளந்தவன், கைப் பேசியில் அழைத்துவிட்டான். எத்தனை மரியாதையாக நினைத்தான். நடத்தினான். கீர்த்தி மீது நிஜமான அக்கறையில் பேசினான் என்று எண்ணி மகிழ்ந்திருந்தான். 

“ஹலோ? சொல்லுங்க ஜோசஃப். செட்டிலாகிட்டீங்களா?” 

“ம்ம். எப்படிய்யா எதுவுமே நடக்காத மாதிரி பேச முடியுது? என் கீர்த்தி…என்..கீர்த்தியைப்போய்… டாமிட். எல்லாத்தையும் பண்ணிட்டு..” 

“பிராயசித்தம் தேடித்தான் ப்ரோ உங்களை பார்க்க வந்தேன். இவ்வளவு சீக்கிரம் பேசிட்டீங்களா கீர்த்திகிட்ட? எல்லாத்தையும் சொல்லிட்டாளா?”, ஆச்சரியமாக வந்தது இரகுராமனின் குரல். 

“பேசினேன். இப்பதான் கேட்டுட்டு வரேன். எதிர்ல இருந்தா மூஞ்சி முகரையெல்லாம் பெயர்த்திருப்பேன்”, பல்லைக்கடித்து உறுமினான் ஜோ. 

“உங்க கோவம் எல்லாமே நியாயம்தான் ஜோ. ப்ளீஸ் சொல்லுங்க, அவ நல்லாயிருக்காளா?” 

“ஏன்? அது எதுக்கு உனக்கு?” 

“என் வாழ்க்கையை மீட்டு குடுத்துட்டா. ஆனா அவ தனியா இருக்காங்கறா குற்ற உணர்ச்சி நிறைய இருக்கு. அது என் பொண்டாட்டிகிட்ட கூட என்னால ஒரு அளவுக்கு மேல காட்டிக்க முடியாது ப்ரோ. “ 

“போறும் நிறுத்து. இனி அவளைப் பத்தி பேச, நினைக்க ஒன்னும் இல்லை உனக்கு.” 

“அதுதான் எனக்கும் வேணும் ஜோசஃப். நானே உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லியிருப்பேன். ஆனா ஒரு சின்ன பயம், ஒரு வேளை நீங்க வேணாம்னு சொல்லிட்டா?” 

கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்தான் ஜோ. “அவளைப் பார்த்து, இப்ப அவ சொன்னதுக்கு அப்பறம் நான் வேணாம்னு சொன்னா, அவ இன்னும் நொந்து போக மாட்டாளா? இல்லை சொல்லலாமா வேணாமான்னு தவிச்சிகிட்டு இருந்தா?” 

“…” 

“என்ன?” 

“இதுல அவ தப்பு எதுவுமே இல்லை ப்ரோ. இதுக்காக அவளை ஒதுக்கி வெச்சிடாதீங்க. நான் வந்து உங்களை பார்த்தது ப்ரீத்திக்கூட தெரியாது. கீர்த்திக்கும் சொல்லாதீங்க. ஆனா அவளை விட்டுடாதீங்க ஜோசஃப். “, இரகுராமனின் குரலில் ஒரு மன்றாடலும், தவிப்பு இருந்தது. ஆனாலும் அதில் ஜோவிற்கு எரிச்சல் அதிகமானது. 

“இனியொரு தரம் சொல்லமாட்டேன். உன் குடும்பத்தை மட்டும் பாரு. இனி கீர்த்திங்கற பேரு கூட உன் வாயால சொல்லக்கூடாது நீ.”, மீண்டும் ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்தவன், கைபேசியை அணைத்து படுக்கையில் விழுந்தான். 

திடீரென்று ஒரு நாள் மாலை தெரியாத எண்ணிலிருந்து வந்த போதும் அழைப்பை ஏற்றுப் பேசினான் ஜோசஃப். 

எதிர்புறம் “ப்ரோ நான் கீர்த்தியோட அக்கா ஹஸ்பண்ட் இரகுராமன் பேசறேன்”, என்றதுமே எழுந்து நின்றுவிட்டான் ஜோ. 

“…” 

“ஜோசஃப்? ஹலோ” 

“ஹான் இருக்கேன்… கீர்த்தி எங்க சர்?”, சற்றே படபடப்பாய் கேட்டான். 

“நல்லா இருக்கா. துபாய்ல வேலை செய்யறா. உங்ககிட்ட பேசணும். எங்க பார்க்கலாம்”, என்று பேசியவன் சந்தித்த பொழுதும் இனிமையாகப் பழகினான். 

“கீர்த்தி கூட படிச்ச பொண்ணு ராகினி எங்க வீட்டு பக்கத்துலதான் கல்யாணமாகி வந்திருக்கா. என் வைஃப் சொன்னாங்க. பேச்சு வாக்குல உங்களைப் பத்தி கேட்டேன்.” 

“என்னைப் பத்தி உங்களுக்கு தெரியுமா இரகு?” 

“உங்க காதல், உங்க மதம், அப்பறம் உங்க படிப்பு  மட்டும்தான் தெரியும். பேர் கூட தெரியாது ப்ரோ. ராகினி சொல்லித்தான் தெரியும்.” 

“கீர்த்தி… வீட்டுல ஒத்துக்கலையா? ஏன் எல்லாரோட தொடர்பும் கட் பண்ணிட்டு போயிட்டா இரகு?” 

“ம்ம்.. ஒருவகையில அப்படித்தான். அதுதான் கோச்சிகிட்டு கிளம்பிட்டா. வீட்டுல வரன் பார்த்தாலும் வேணாங்கறா. வரவும் இல்லை. ராகினி உங்களுக்கும் கல்யாணம் ஆகலைன்னு சொல்லவும் பேசிப்பார்க்கலாம்னு வந்தேன். நீங்க இன்னும் கீர்த்தியை..” 

“யெஸ். அவ எங்க இருக்கறான்னு தெரியாமத்தான் தேடிட்டு இருந்தேன். நீங்க அவ நம்பர் குடுங்க. நான் பேசறேன்.” பரபரப்பாகக் கேட்டான். 

“ப்ரோ..அது, வீட்டு மனுஷங்களோட கோவம்னாலும், அவங்களை மீறி எதுவும் பண்ண மாட்டா. இல்லைன்னா கிளம்பி உங்ககிட்ட வராம ஏன் துபாய் போகப்போறா”, என்று கேட்டவன் பேச்சை முழுதாக நம்பினான். 

துபாயிலிருக்கும் எதாவது ஒரு பள்ளி, கல்லூரியில் வேலை தேடலாம் என்று நினைத்திருக்க, எதிர்பாராத விதமாக அவள் வேலை செய்யும் பள்ளியே கணிதத் துறை தலைவருக்கு விண்ணப்பம் கேட்டிருந்தது. கடவுள் இரட்சிக்கறார் என்றே தோன்றியது ஜோசஃபிற்கு. 

அம்மாவிடம், பணம் சம்பாதித்தால் கடன் முடித்து, வீட்டை இடித்துக் கட்டி, அடுத்து கல்யாணத்திற்கு பார்க்கத் தொடங்கலாம் என்று காரணம் சொல்லி, தம்பியின் பொறுப்பில் அனைத்தையும் விட்டு ஓடி வந்திருந்தான்.