செந்தாமரை தனது வீட்டிற்கு வந்ததும் அவருக்குக் கைப்பேசியில் அழைத்த அவரது மகன் செல்வம், “அம்மா, தாமரை இன்னிக்கு நைட் வீட்டுக்கு வந்தானா பாயாசம் கொடுத்துடாத! பிளான் சேஞ்ச் ஆகிடுச்சு” என்று சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவராய்,
“ஐயோ இப்ப தானடா கொடுத்துட்டு வந்தேன். நான் போய்த் திரும்ப வாங்கிட்டு வந்துடவா” படபடவெனப் பதட்டத்துடன் கேட்டிருந்தார்.
“என்னது கொடுத்துட்டியா? சரி விடு! திரும்ப வாங்கி நீயே போய்ச் சிக்கிடாத” என்றவன்,
“நாளைக்கு அவளுக்காக நானும் சர்வேஷூம் (அவளின் மேலாளர்) வேற திட்டத்தைப் பிளான் செஞ்சிருக்கோம். அவளே இன்னிக்கு தானா நம்மகிட்ட சிக்குற மாதிரியான ஆதாரத்தை விட்டுட்டு போயிருக்காமா! இதை வச்சே இது வரைக்கும் நடந்த சிலைக் கடத்தல் எல்லாத்துக்கும், அந்தச் சிவன் சிலையை மீட்க கேஸ் போட்டானே அந்தச் சக்தீஸ்வரன் தான் காரணம்னு சொல்லி, அதுக்கு இந்தத் தாமரை ஆபிசர் உடந்தைனு சொல்லி பழியைத் தூக்கிப் போட்டுட்டு நாம எஸ்கேப் ஆகிடலாம். அப்பாவோட மினிஸ்டர் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவளையும் அந்தச் சக்தீஸ்வரனையும் காலம் பூரா ஜெயிலுக்கு உள்ளே இருக்கிற மாதிரி தள்ளிடலாம்னு நினைச்சோம். வான்டட்டா (wantedஆ) வர்ற பலி ஆட ஏன் நாம கொன்னு பழி ஏத்துக்கனும்னு தான் பாயாசம் கொடுக்க வேண்டாம்னு சொன்னேன்மா” என்று தங்களது திட்டத்தை விளக்கமாய்க் கூறிய மகனின் பேச்சில் குளிர்ந்தவராய்,
“நல்ல ஐடியாவா இருக்கே மவனே! இந்தச் சக்தீஸ்வரன் பயலை ஒழிச்சிட்டா, ஆயுசுக்கும் நாம யார்கிட்டேயும் சிக்காம சுகமா வாழலாமே! இப்ப அவ பாயாசம் சாப்பிட்டா நாளைக்குக் காலைல கோவில்ல தான் மயங்கி விழுவா! அதுக்கேத்த மாதிரி ஸ்லோ பாய்சன் தான் பாயாசத்துல சேர்த்துருக்கேன். வழக்கம் போலப் பாம்புக்காரனை பிடிச்சி பாம்பை கொத்த வச்சோ இல்லை ஏதாவது கோவில் சிலையை அவ மேல விழ வச்சோ அவ செத்தா மாதிரி பிளான் செஞ்சிடுங்க. சப்போஸ் அவ மயங்கி விழாம உயிரோட இருந்தானா இந்தத் திட்டப்படி செஞ்சிடுங்க” என்றவராய் மகிழ்வுடன் அழைப்பைத் துண்டித்தார் செந்தாமரை.
அங்கே அந்தப் பாயாசத்தைக் கையில் வைத்தவாறு உண்ணலாமா வேண்டாமா என்று இவள் மனத்திற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த சமயம் கதவு தட்டும் ஓசை கேட்க, ‘இந்த நேரத்துல யாரு வந்திருப்பா?’ என்று நினைத்தவளாய், பாயாசத்தை மேஜையில் வைத்து விட்டு கதவைத் திறக்கச் சென்றாள் தாமரை.
கதவைத் திறந்தவளாய், அங்கே காவி உடையுடுத்திய சடாமுடி சாமியார் தெய்வீகச் சிரிப்புடன் நிற்பதைக் கண்டு அதிர்ந்து நின்றாள்.
‘இவர் எதுக்கு இப்ப இங்கே வந்திருக்காரு. இவரை முன்ஜென்மத்துல கூடப் பார்க்கலையே. இவர் நல்லவரா கெட்டவரானும் தெரியல’ என்று சிந்தித்தவாறு இவள் நின்றிருக்க,
“அந்தப் பாயாசத்தைக் குடிக்காதமா! அதுல விஷம் கலந்து இருக்கு” என்றார்.
“என்னது? விஷமா” என்று அதிர்ந்தவளாய், “ஆனா உங்களுக்கு எப்படி அது தெரியும்?” எனக் கேட்டாள்.
“இந்தச் செந்தாமரைக்கு எல்லாப் பிறவிலயும் இது தானே வேலை” என்று சிரித்தார்.
‘ஐயோ இந்தக் கிழவி எல்லா ஜென்மத்துலயும் என்னை விஷம் வச்சி கொல்றதையே வேலையா வச்சிருக்கு போல’ என்று மனத்தோடு பேசிக் கொண்டவளின் இதயமோ தாறுமாறாய்த் துடித்திருந்தது.
‘ஆனா இவர் எப்படி முற்பிறவில நடந்ததுலாம் சொல்றாரு? உண்மையிலேயே யாரு இவரு?’ என்று சிந்தித்தவளுக்குச் செந்தாமரை இந்தச் சாமியாரைப் பற்றிக் கூறியது நினைவிற்கு வர,
“உண்மையிலேயே நீங்க யாரு சாமி? திடீர்னு சென்னைல காட்சி கொடுத்தீங்க. இப்ப இங்கே வந்து நிக்கிறீங்க! அந்தச் செந்தாமரை அம்மா அன்னிக்கு உங்களைப் பத்தி ஏதோ குறை குறையா சொன்னாங்க?” என்று கேள்வியாய் நிறுத்தினாள்.
“என்னைப் பத்தி தெரிஞ்சிக்கனும்னா நாளைக்கு உன்னோட கண்ணனையும் கூட்டிட்டு பிரகலாதப் பெருமாள் கோயில் தாண்டி இருக்க மணி மண்டபத்துக்கு வா மா” என்றவராய் திரும்பி சென்றிருந்தார் அந்தச் சாமியார்.
அவர் சென்றப்பின் கதவைப் பூட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தவளுக்கு அந்தப் பாயாசத்தைப் பார்ப்பதே பாம்பைப் பார்ப்பது போன்று உடலெல்லாம் நடுங்கியது.
“எவ்ளோ நேக்கா பால் பாயாசம்னு சொல்லி பாய்சன் பாயாசத்தைக் கொடுத்து கொல்லப் பார்த்திருக்கு இந்தக் கிழவி” என்று வாய்விட்டே புலம்பியவளாய் அதைக் குப்பையில் கொட்ட முனைந்த நேரம் அவளின் கைப்பேசி அலறியது.
ராஜாவின் எண்ணை பார்த்ததும் உடனே அழைப்பையேற்றவளாய், “சாரி ராஜா சார்! அப்புறமா கால் பண்றேன்னு சொல்லிட்டுக் கட் பண்ணேன். அதுக்குள்ள இங்க என்னென்னமோ நடந்துடுச்சு” என்றவளாய் நடந்ததை அவனிடம் உரைத்தாள்.
“அய்யோ இதைச் சொல்லத் தான் நான் கால் செஞ்சேன் தாமரை மேடம். இதுக்கு முன்னாடி இறந்த ஆபிசர்ஸ்ஸோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்ததுல அவங்களோட ரத்தத்துல விஷம் கலந்திருக்குறதா போட்டிருக்காங்க. ஆனா அது பாம்பு விஷம்னு நினைச்சி போலீஸ் ஆக்ஷன் எடுக்காம விட்டிருக்காங்க. கோவில் தூண் விழுந்து இறந்தவங்க ரத்தத்துலயும் விஷம் கலந்திருக்குனு மென்ஷன் செஞ்சிருக்கிறதைப் பார்த்து தான் உங்களுக்கும் பாய்சன் கொடுக்க வாய்ப்பிருக்குனு நானும் என்னோட போலீஸ் ஃப்ரண்டும் கண்டுபிடிச்சோம். அதனால் கேர்ஃபுல்லா இருங்க அவங்க எது கொடுத்தாலும் சாப்பிடாதீங்கனு சொல்ல தான் கால் செஞ்சேன். நான் இன்னும் இதைப் பத்தி சக்தி சார்கிட்ட கூடச் சொல்லலை! கேள்விப்பட்டதும் உங்களை அலர்ட் செய்யனும்னு உங்களுக்குத் தான் கால் செஞ்சேன்” என்றவனாய்,
“அந்தப் பாயாசத்தை அப்படியே வச்சிருங்க மேடம். அதுல பாய்சன் இருக்கானு டெஸ்ட் செய்யலாம். அந்தம்மா தான் உங்ககிட்ட இதைக் கொடுத்தாங்கனு சொல்ற மாதிரி எவிடன்ஸ் உங்ககிட்ட எதுவும் இருந்தா போதும். அதை வச்சே அந்தம்மாவை உள்ளே தள்ளிடலாம்” என்றான் ராஜா.
“ஆனா அவங்க தான் இதை என்கிட்ட கொடுத்தாங்கனு ஃப்ரூப் எதுவும் என்கிட்ட இல்லையே ராஜா சார்” என்றாள்.
“ஓகே மேடம். நோ பிராப்ளம். பாயாசத்தைப் பத்திரமா வச்சிக்கோங்க. அவங்க பாயாசத்தைக் கொடுத்த பாத்திரத்துல பேரு எதுவும் இருக்கானு பாருங்க” என்றவன் சொன்னதும்,
“அது பாத்திரம் இல்ல பிளாஸ்டிக் டப்பா. ஏதோ ஹோட்டல்ல வாங்கிச் சாப்பிட்ட டப்பா மாதிரி இருக்கு” என்றாள்.
“ஓ ஓகே அந்த டப்பாவை டைரக்டா உங்க கையால எடுக்காதீங்க. துணி வச்சி தூக்குங்க. அவங்க கை ரேகை அதுல இருந்தாலும் அவங்க மேல ஆக்ஷன் எடுக்க முடியும். நாளைக்குக் காலைல அஞ்சு மணிக்குலாம் நான் வந்து அந்த டப்பாவை வாங்கிக்கிறேன். நான் நேத்து தான் சென்னைலருந்து இங்கே வந்தேன்” என்ற ராஜா,
“பார்த்து பத்திரமா இருங்க மேடம். இனி நீங்க அங்க தனியா தங்குறது சேஃப் இல்லை. அதுக்கு என்ன செய்யலாம்னு நாளைக்கு சக்தி சார்கிட்ட பேசிட்டு சொல்றேன்” என்றவனாய் அழைப்பைத் துண்டித்தான்.
ராஜா அழைப்பைத் துண்டித்ததும் இவளுக்கு இருந்த பயத்தில் உறக்கம் எங்கோ தூரமாய்ப் போயிருந்தது.
‘இந்தம்மா நான் தூங்கின பின்னாடி தலைல கல்லைப் போட்டு கொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. எனக்கு இன்னிக்கு ராத்திரி சிவராத்திரி தான்’ என்று மனத்திற்குள்ளேயே புலம்பியவளாய் மாதவனுக்கு அழைத்தவள் இங்கு நடந்தவற்றை அனைத்தையும் உரைத்தாள்.
“நான் வேணா அங்கே வரவா தாமரை! இந்த நிலைமைல நீ அங்கே தனியா இருக்கிறது சேப் (safe) இல்லை. உன்னைக் கொல்ல நினைச்ச அந்தம்மாவை ஏதாவது செஞ்சே ஆகனும்” என்று கோபத்துடன் கூறியிருந்தான்.
“அந்தம்மா பின்னாடி யாரோ இருக்காங்க கண்ணா. இல்லனா இந்தம்மாக்கு எப்படி இவ்ளோ தைரியம் வரும். பார்க்க தெய்வீகமா எப்படி இருக்காங்க ஆனா செய்றது அத்தனையும் சூனியக்கார கிழவி செய்ற வேலை! எனக்கு வர கோபத்துக்கு அந்தம்மாவை நாக்கை புடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்காம விட மாட்டேன்” என்றவள் கோபத்துடன் கூறியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்திருந்தான் மாதவன்.
“என்ன கண்ணா சிரிக்கிறீங்க? நான் எவ்ளோ கடுப்புல இருக்கேன் தெரியுமா?” என்றவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் கைப்பேசியில் அழைப்பொலி கேட்க, ‘கால் கட் ஆகிடுச்சா என்ன’ என்றவளாய் காதில் இருந்து கைப்பேசியை எடுத்துப் பார்த்தவளுக்கு அவன் காணொளி அழைப்பாய் அழைத்திருந்தது தெரிந்தது.
காணொளி அழைப்பையேற்று தனது முகத்தைக் காண்பித்தவளாய், “இப்ப எதுக்கு வீடியோ கால் போட்டீங்க கண்ணா?” எனக் கேட்டாள்.
“கொஞ்ச நாளா நாணி கோணிட்டு இருக்கத் தாமரையே பார்த்து எங்கே நான் ரசிச்ச அந்த ரௌடி ராக்காயி காணாம போய்ட்டாளோனு நினைச்சேன். இப்ப நீ பேசினதைக் கேட்டதும் உன்னோட அந்தக் கோப முகத்தை உடனே பார்க்கனும்னு தோணுச்சா அதான் வீடியோ கால் போட்டுட்டேன்” என்றவனாய்ச் சிரித்திருந்தான்.
“ஓஹோ இப்படிச் சொல்லி என்னோட கோபத்தைக் குறைக்கலாம்னு பிளானா?” எனக் கேட்டாள்.
“இல்ல இல்ல இப்படியே இன்னிக்கு நைட் முழுக்க உன்கிட்ட பேசலாம்னு பிளான்! சங்கீத ஸ்வரங்கள் பாட்டு மாதிரி காதலி கூடப் பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது யூஸ் செஞ்சிக்கனும்ல” கண் சிமிட்டி அவன் உரைக்கவும்,
“ஹே இது நல்ல ஐடியாவா இருக்கே! பரவாயில்லை மாதவன் சார்! கிடைக்கிற கேப்லலாம் என்னை இம்ப்ரஸ் செஞ்சிடுறீங்க. உங்களுக்கும் கொஞ்சமே கொஞ்சம் ரொமேன்ஸ் வருது! ஆளு தான் பார்க்க வயசான மாதிரி இருக்கீங்க. மனசு இளமையா தான் இருக்கு” என்று நாக்கைத் துருத்திக் காட்டிச் சிரித்தாள்.
“பார்ரா! எனக்கு வயசாகிடுச்சா! கல்யாணம் ஆகட்டும் மேடம். என் வயசு என்னனு காண்பிக்கிறேன்” என்று மீசையை முறுக்கியவாறு கண்ணடித்து கூறியதைக் கேட்டு தனக்குள் நாணத்துடன் சிரித்துக் கொண்டாள்.
“நைட் முழுக்கத் தனியா என்ன செய்யப் போறேனோனு கவலையா இருந்துச்சு கண்ணா! உங்ககிட்ட பேசின பிறகு மனசு எப்படி இருக்கு தெரியுமா! உனக்காக நான் இருக்கேன்னு சொல்லாம சொல்லிட்டீங்க! தேங்க்ஸ் கண்ணா” மனதார உரைத்திருந்தாள்.
“இனி நீ தேங்க்ஸ் சொன்னா உதைப்பேன்! எப்படி உதைப்பேன்னு நாளைக்கு நேர்ல வந்து டெமோ காண்பிக்கிறேன்” என்றவனாய்,
அவளின் மனநிலையை மாற்றும் பொருட்டு, “இன்னிக்கு நாம எடுத்த செல்பியை உனக்கு வாட்ஸ்அப்ல அனுப்பியிருக்கேன் பாரு தாமரை” என்றான்.
அவனின் முயற்சி நன்றாகவே வேலைச் செய்தது. இருவருமாக இணைந்து எடுத்த ஒளிப்படங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் கருத்துக் கூறி கேலிப் பேசியவளாய் சிரித்திருந்தாள் தாமரை.
தனது கைப்பேசி கேலரியில் இருந்த படங்களை ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே வந்தவளாய் ஒரு காணொளியைப் பார்த்தாள்.
“கண்ணா உங்களுக்கு அனுப்பியிருக்க வீடியோவைப் பாருங்களேன். இந்த ராஜாக்கிட்ட பேசுறேன்னு வீடியோ பட்டன எதுவோ டச் செஞ்சிட்டேன் போல. நான் வீட்டுக்குள்ள நுழைஞ்சி அந்தம்மா பால் பாயாசம் பாக்ஸஸை வாங்குறது. அந்தப் பாக்ஸ்ஸை பிரிக்கிறது, அந்தச் சாமியார் கதவைத் தட்டினதுலாம் இருக்கு கண்ணா. அவர்கிட்ட பேசிட்டு வந்த பிறகு ராஜா எனக்குத் திரும்பக் கால் செஞ்சதும் அந்த வீடியோ கட் ஆகிருக்கு” என்றவள் இயல்பாய் அவனிடம் கூறிக் கொண்டே வரும் பொழுது சட்டென மூளைக்குள் உதித்த சிந்தனையில் உள்ளம் பரபரத்துப் போக, குரலில் வியப்பும் பூரிப்புமாய், “கண்ணா, ராஜா கேட்ட எவிடன்ஸ்! இந்த வீடியோ.. இந்த வீடியோல இருக்கு. எப்படியோ என் கைப்பட்டுத் தானாகவே இது வீடியோவா சேவ் ஆகிருக்கு பாருங்களேன். மாதவன் நம்மளை கைவிடலை கண்ணா!” என்று நெகிழ்வான குரலில் தொண்டை கமற உரைத்தவளின் உணர்வைக் கேட்டு,
“அப்படியா! ஆச்சரியமா இருக்கு” என்றவன் அந்தக் காணொளியைப் பார்த்தான்.
அதற்குள் அந்தக் காணொளியை ராஜாவிற்கும் அனுப்பியிருந்தாள் தாமரை.
அதனைப் பார்த்த ராஜா உடனே அவளுக்கு அழைக்க, மாதவனிடம் பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே ராஜாவின் அழைப்பை கான்ஃபெரன்சில் போட்டாள்.
அழைப்பையேற்ற மறுநொடி, “வாவ் தாமரை! நான் கேட்ட எவிடென்ஸ் இதுல இருக்கு. நாளைக்கு அந்த டப்பால கை ரேகையும் எடுத்துட்டா அவங்க மேல கேஸ் போட ஈசியா இருக்கும்” என்று சில நிமிடங்கள் பேசியவனாய் அழைப்பைத் துண்டித்திருந்தான் ராஜா.
அதன் பிறகு இருவருமாக இரவு முழுவதும் பேசித் தீராக் காதல் மொழிகளைப் பேசியவாறு தங்களது காதலை வளர்த்திருந்தனர்.