நிகழ்ச்சியின் முடிவில் தொகுப்பாளர் பேசியதை காண்பித்தார்கள். இது நிகழ்ச்சியின் போது பேசியது அல்ல, சமீபத்தில் பேசி இணைக்கப் பட்ட காணொளி. 

‘கடந்த வாரமே எடுத்து முடிக்கப் பட்ட நிகழ்ச்சியின் போது ஜீவாவுக்கு விபத்து நிகழ்ந்தது, குணமாகி வருவார் என காத்திருந்தோம், ஆனால் வலது கையில் எலும்பு முறிவு, எனவே இனி ஜீவநந்தன்  இந்த நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேறக மாட்டார். ஜீவா விரைவிலேயே பூரண நலமடைய எங்களின் பிரார்த்தனைகள்’ என அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர். 

மிதுவுக்கும் விஷயம் தெரிய வந்தது. உடனடியாக ஜீவாவை நேரில் காண வேண்டும் என்பதை தவிர அவளிடம் வேறு சிந்தனையே இல்லை. இந்த நேரத்தில் விடுதியிலிருந்து வெளியில் செல்லவும் அனுமதி கிடையாது. 

நிறைய நாட்களுக்கு பின் ஜீவாவின் கைப்பேசிக்கு அழைத்தாள். இவளது எண்ணற்ற அழைப்புகள் நிராகரிக்கப் பட்டன. அவளுக்கு ஒரே அழுகையாக வந்தது. 

இரவை எப்படியோ கடந்தவள் காலையிலேயே கல்லூரி புறப்படுவது போல அவனை காண கிளம்பி விட்டாள். வழியில் வாசுகி அவளோடு இணைந்து கொண்டாள். 

ஜீவாவின் வீடிருக்கும் பகுதி தெரியுமே தவிர எந்த வீடு என்றெல்லாம் தெரியாது. அப்படியே கண்டறிந்து சென்றாலும் அவனது அம்மாவும் உடனிருப்பாரே, என்னவென சொல்லிக் கொண்டு பார்ப்பது. ஒரு வேகத்தில் கிளம்பி விட்டவர்கள் இப்போது விழித்தார்கள். 

ஜீவாவிடமிருந்து மிதுவுக்கு அழைப்பு வந்தது. இரவில் வலி அதிகமான காரணத்தால் ஏதோ மருந்து சாப்பிட்டிருக்க உறங்கி விட்டானாம், இப்போது எழுந்த பிறகுதான் இவளின் அழைப்பை பார்த்ததாக கூறினான். 

அழுகையை அடக்கிக் கொண்டே, “எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டாள் மிது. 

“எனக்கென்ன நல்லாருக்கேன்” என்றான். 

அவனை பார்க்க விரும்புவதாக கூறினாள்.  மாலையில் தானே பார்க்க வருவதாக சொன்னான். அவள் ஒத்துக் கொள்ளவில்லை, அவன் வீடிருக்கும் பகுதியில்தான் இருக்கிறோம் என்றாள். 

“என்கிட்ட சொல்லாம ஏன் வந்த நீ? அம்மா இருக்காங்க வீட்ல” என கடிந்து கொண்டான். 

“என் கால்ஸ் அட்டெண்ட் பண்ணினாத்தானே என்னால உங்ககிட்ட பேச முடியும் ஜீவா? ஈவ்னிங் வரை என்னால வெயிட் பண்ண முடியாது. உங்க வீட்டுக்கு பக்கத்துல ஏதாவது இடம் நாம மீட் பண்ற மாதிரி இருந்தா வாங்க, ப்ளீஸ்” என்றாள். 

சில நிமிட யோசனைக்கு பின் மாசிலாமணியின் வீட்டில்  சந்தித்துக் கொள்ளலாம் என முடிவானது. வீட்டில் போர் அடிப்பதாக அம்மாவிடம் சொல்லி விட்டு மாசிலாமணியின் வீட்டிற்கு புறப்பட்டான் ஜீவா. அவனது அம்மா அவனை காரில் போக சொல்ல அவனால் மறுக்க முடியவில்லை. 

டிரைவர் ரங்கசாமி கோபிகாவுக்கு நல்ல விசுவாசி, அதைவிட ஜீவாவின் மீது மிகுந்த பாசம் கொண்டவர். வேறு வகையில் மிதுவை மணியின் வீட்டிற்கு அனுப்பி வைக்கலாமா என இவன் யோசித்தான். தன்னை தேடி வந்திருப்பவளை அறிமுகம் இல்லாத ஒருவன் வீட்டிற்கு அனுப்ப சங்கடமாக இருக்கவும் அந்த யோசனையை கைவிட்டான். 

“சாமி அங்கிள் அங்க தூரமா ரெண்டு கேர்ள்ஸ் நிக்கிறாங்க பாருங்க, காரை அங்க நிறுத்துங்க. அவங்களும் கார்ல வருவாங்க” என அவன் சொல்லவும் அவர் குழப்பமாக அவனை பார்த்தார். 

“நானே அம்மாகிட்ட சொல்வேன், இப்போ நீங்களா ஏதும் சொல்ல வேணாம் அங்கிள்” என்றான். 

அவருக்கு என்ன சொல்லவென தெரியாமல் அப்போதைக்கு தலையை ஆட்டி வைத்தார். 

கார் நிற்கவும் ஜீவா இறங்கினான். கையில் கட்டுடன் அவனை பார்த்த மாத்திரமே மிதுவுக்கு என்னவோ போலானது. அவனருகில் வந்து நின்றவள், “கவனமா இருக்க மாட்டீங்களா?” எனக் கேட்டாள். 

புன்னகை செய்தவன், “கார்ல ஏறுங்க” என்றான். 

வழியிலேயே தங்களின் வருகையை மாசிலாமணிக்கு தெரியப் படுத்தியிருந்தான் ஜீவா. பிரம்மச்சாரி வீடு போலில்லாமல் அத்தனை  சுத்தமாக இருந்தது அந்த வீடு. 

ஜீவா சம்பிரதாயமாக அறிமுகம் செய்து வைத்தான். தேநீர் போடுகிறேன் என மணி அகல,  அவனுக்கு உதவுகிறேன் என வாசுகியும் சென்று விட்டாள். 

தனித்து விடப் பட்ட ஜீவாவும் மிதுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

“இனிமே  மீட் பண்ணவே வேணாம்னு உறுதியா சொன்ன மிது எதுக்காக என்னை தேடி ஓடி வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என அவன்தான் பேச்சை ஆரம்பித்தான். 

பதில் சொல்லத் தெரியாதவளின் முகம் ரோஷத்தில் கன்றி சிவந்தது. 

“ஓகே ஓகே, அந்த பேச்சை நான் எடுக்கல. நார்மலா இரு. எனக்கு ஒன்னும் இல்லை. ஆபரேஷன் கூட தேவையில்லைனு சொல்லிட்டாங்க, நாலு வாரம் அப்புறம்  இந்தக் கட்டை கூட எடுத்திடுவாங்க. சீரியஸா எனக்கு எதுவும் இல்லை. உன் ஆசைப்படி இனி அந்த ப்ரொக்ராம்ல நான் இல்லை, என் லைஃப்ல டான்ஸ் இல்லவே இல்லை” என்றான். 

“வேணும்ன்னு கையை உடைச்சுகிட்டீங்களா?” 

“எக்ஸாட்டா அப்படி இல்லை, ஆனா கொஞ்சம் அப்படித்தான்” 

“புரியலை ஜீவா”

“எனக்கு நீயா இந்த டான்ஸான்னா சூஸ் பண்றது கஷ்டமா இருக்கும்னுதான் ஆரம்பத்துல தோணிச்சு,ப்ச், அப்படிலாம் இல்லை.  நீ எனக்கு… என்கூட  இல்லைங்கிறதை கற்பனை பண்ணி பார்த்தேன், எது  இல்லாம வாழவே முடியாதோ அதை இழக்கிற தைரியம் என்கிட்ட இல்லை மிது. பங்கஜ் ஸாரோட ரெகமென்டஷன்லதான் இந்த சான்ஸ் கிடைச்சது. ப்ரொக்ராம்லேருந்து வெளில வர அவர்கிட்ட பேசினேன், பாதியில விட்டுட்டு போக கூடாதுன்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டார், அவர் வார்த்தையை மீற முடியாது, என்ன செய்யலாம்னு ரொம்ப யோசனை. டான்ஸ் ஆடப் போற வரைக்கும் என்கிட்ட எந்த பிளான்ஸும்  இல்லை. ஆடிட்டு இருக்கும் போதே என் மைண்ட் முழுக்க நீதான், ரோப் கட்டிட்டு ஏர்ல இருக்கும் போது டக்குனு தோணிச்சு, விழுந்திட்டேன்” என்றான். 

“ஜீவா!”

“அப்புறம் தோணிச்சு இவ்ளோ ரிஸ்க் வேணுமான்னு, மனசு மாறி திரும்ப டான்ஸ் பக்கம் போகாம இருக்கணும், பங்கஜ் ஸார் அவர்கிட்ட கூப்பிட்டா கூட வரலைன்னு சொல்ல நல்ல காரணம் வேணும். இதோ நீயே என்னை தேடி வந்திட்ட, ஸோ…” என்றவன், கட்டு போடப் பட்டிருந்த கையை கண்களால் காண்பித்து, “ஒர்த்தான்”என்றான். 

அனிச்சையாக அவனிடம் சென்ற மிது, அவனது இடது தோளை அணைத்து தோள் பட்டையில் முகம் பதித்துக் கொண்டாள். 

“ரெகவர் ஆனதும் வேலை தேட ஸ்டார்ட் பண்ண போறேன் மிது. நான் சொன்ன மாதிரியே, உன் விருப்பப்படியே உன் வீட்ல என்னை வேணாம்னு சொல்ல எந்த காரணமும் என்கிட்ட இருக்க போறது இல்லை. அம்மா, நீ, நான், நம்ம பசங்கன்னு ஹேப்பியா ஒரு லைஃப், நாம தனியா இருக்கும் போது நாமளே டான்ஸ் ஆடிப்போம், நான் கத்து தர்றேன் உனக்கு. என்ன… நெருக்கமா ஆடாதேன்னு அப்ப நீ கண்டிஷன் போட முடியாது…” அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே  வாய் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள் மிது. 

தேநீர் கொண்டு வந்த வாசுகி, மணி இருவரும் பயந்து போய் மிதுவை பார்த்தனர். தன்னை விட்டு விலகும் முடிவு எடுத்ததற்காக அழுகிறாள் போலும் என நினைத்துக்கொண்ட ஜீவா அவளை சமாதானம் செய்தான். 

அவளின் அழுகை நிற்கவே இல்லை. 

“என்னன்னு சொல்லாம அழுதா என்ன புரியும் எனக்கு? வேற எதுவும் பிரச்சனையா?” என அவன் பொறுமையாக கேட்டும் அவள் எதுவும் சொல்லவில்லை. 

“அழறத நிறுத்து” என அதட்டினான். 

“எங்க வீட்ல ஒத்துக்கவே மாட்டாங்க ஜீவா” என மிதுவும் சத்தமாக சொன்னாள். 

என்னவென புரியாமல் ஜீவா பார்க்க, தெளிவாக சொல் என வாசுகி சொல்ல,  முடியாது என மறுத்தாள் மிது. 

வேறு வழியின்றி வாசுகியே உண்மையை சொன்னாள். 

சந்தேகம், குழப்பம், கோவம், பயம் என எல்லாம் கலந்த உணர்வில் அசைய முடியாமல் நின்றிருந்தான் ஜீவநந்தன்.