தங்களது முன்ஜென்ம கதையைக் கூறியிருந்த தாமரை, கூடவே சக்தியின் அனுமதிப் பெற்று அவர்களின் முன்ஜென்மக் கதையையும் மாதவனிடம் உரைத்திருந்தாள்.
அவர்களின் கதையைக் கேட்ட மாதவன், “இன்னிக்கு தியானத்துல என்னோட முன்ஜென்மத்தை பார்த்தப்ப, எனக்கு ஏன் முன்னாடியே என்னோட முன்ஜென்ம நினைவுகள் வரவே இல்லைனு கேள்வி மனசுல வந்துட்டே இருந்துச்சு சக்தி சார். தாமரைக்காவது தொடர்ந்து ஒரு கனவு வந்துச்சு. ஆனா எனக்கு, நான் தாமரையைப் பார்க்குற வரைக்கும், அப்படி எதுவும் தோணினதே இல்ல. இப்ப உங்களைப் பத்தி தெரிஞ்ச பிறகு, எனக்கும் தாமரைக்கும் உங்களை மாதிரி கடவுள் பக்தி இருந்திருந்தா இன்னும் சீக்கிரமாவே எங்க முன்ஜென்மத்தைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு நாங்க ஒன்னு சேர்ந்திருப்போமோனு தோணுது” என்றான்.
“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை மாதவன். கடவுள் பக்தி இல்லாம அவரவரோட பிறவிக்கான காரணக் காரியத்தைத் தெரிஞ்சிக்கவே முடியாது. அதிலும் நம்மளை மாதிரி இறைவனுக்குத் தொண்டு செய்யப் பிறவி எடுத்தவங்கலாம் இறைவனை வணங்காம ஒதுங்கி இருந்தா, மீண்டும் பிறவா நிலை எல்லாம் அடையவே முடியாது. பிறவிக்கான செயலை செய்ற வரைக்கும் திரும்பத் திரும்பப் பிறந்துட்டே இருக்குற மாதிரி ஆகிடும்” என்றாள் இளவஞ்சி.
ஆமென ஆமோதித்த சக்தீஸ்வரன், “எல்லா ஆத்மாக்களும் கடவுளோட அம்சம் தான் மாதவன். ஆனா இந்த மாய உலகத்துல ஆத்மாக்கள் பிறவி எடுத்ததுமே ஆத்மாவுக்கும் இறைவனுக்குமிடையே மாயை வந்துடும். அந்த மாயைய வெற்றியடையாம அந்த ஆத்மாவால இறைவனோட சேர முடியாது. மாயைய ஜெயிக்கனும்னா தவமும் பக்தியும் ஞானமும் தான் உதவும். அதனால கடவுள் தன்னோட பக்தர்களுக்குத் தவம், பக்தி, ஞானம் அடையறதுக்கான வழியைக் காட்டுவாரு. அப்ப தான் பக்தர்களால மாயைய ஜெயிச்சி அவங்க திரும்பி கடவுளோட சேர தகுதியானவர்களா மாற முடியும்.
முன்ன நாம வாழ்ந்த அந்த முன்ஜென்ம காலக்கட்டத்துல இயல்பாவே எல்லார்கிட்டயும் பக்தி இருந்துச்சு அதனால தனக்குள்ள இருக்கும் இறைத்தன்மையைக் கண்டுபிடிக்கிறது சுலபமா இருந்துச்சு. இப்ப நாம வாழும் மாய உலகத்துல எல்லாருமே ஒரு பாதி வாழ்க்கையைக் கடவுள் நம்பிக்கையே இல்லாம வாழ்ந்து அதுக்கப்புறம் வாழ்க்கைல கிடைக்கிற அடியை அனுபவமாக்கி இறைவனை வணங்க தொடங்குறாங்க. அதுக்குள்ள அவங்க ஆயுளே முடிஞ்சி போய்டுது. அதனால திரும்பவும் பிறவி எடுக்கிறாங்க” என்று நீண்ட விளக்கமளித்திருந்தான்.
“அற்புதமான விளக்கம் அண்ணா” என்றாள் தாமரை.
“எல்லாமே வாழ்க்கை அனுபவத்துல கத்துக்கிறது தான்மா” என்ற சக்தீஸ்வரன், இளவஞ்சியிடம் திரும்பியவனாய், “நம்ம ஆத்மநல்லூர் ஈசனோட மனக்குறை என்னனு தெரிஞ்சிடுச்சு வஞ்சி. சங்கரநாராயணராய் தன்னோட இருக்கும் நாராயணரே இங்கே பிரச்சினைல இருக்கும் போது ஈசன் எப்படி நிம்மதியா இருப்பாரு. இந்த மாதவப் பெருமாள் சிலைத் தான் அவரோட மனக்குறையா இருந்திருக்கு. இதைச் சரி செய்யனும் முதல்ல!” என்றான்.
“ஆமாங்க அதே மாதிரி நான் மாதவப் பெருமாளை மூலஸ்தானத்தில் தரிசிக்கும் போதெல்லாம், ‘என்னைக் கை விட்டு விட்டாயே மாதவா! உன் பிரியத்திற்குரிய பக்தை இல்லையா நான்னு’ என் மனசுக்குள்ள என்னை மீறி கேட்டதுக்குக் காரணம், அவரை நாம காப்பாத்தாம கைவிட்டுட்டோம்னு புரிய வைக்கிறதுக்குத் தான் போலங்க” என்றவளாய்,
“இப்ப எப்படி மாதவப் பெருமாள் சிலையை நாம மீட்கப் போறோம்” எனக் கேட்டாள் இளவஞ்சி.
சிவலிங்கம் காணாமல் போன போது, தான் எடுத்த நடவடிக்கைகள் பற்றி மாதவனிடமும் தாமரையிடமும் விளக்கிய சக்தீஸ்வரன், “இங்கே போலிச் சிலை இருக்குனு தமிழகச் சிலைத் தடுப்புப் பிரிவு ஆபிசர்ஸ்க்கு ராஜா மூலமா ரகசிய தகவல் கொடுக்க வைக்கலாம் மாதவன். ஆனா அதுக்கு எவிடன்ஸ் வேணும். நீங்க சொன்ன மாதிரி முன்னாடி கழுத்துல கல்லோட இருந்த சிலைப் பத்தி யாருக்காவது தெரிஞ்சிருக்கனும். இங்கே இருக்க மக்களோ இல்ல அர்ச்சகரோ அறங்காலரோ அப்படியொரு சிலையை நாங்க பார்த்ததே இல்லைனு சொல்லிட்டா யாராலயும் ஆக்ஷன் எடுக்க முடியாது. அதனால தாமரை, நாளைக்கே நீங்க கவர்மெண்ட் சைட்லயே இதுக்குத் தேவையான எவிடன்ஸ் எதுவும் இருக்கானு பார்த்துக் கலெக்ட் செய்யுங்க. ஆனா நீங்க ரொம்பவுமே ஜாக்கிரதையா இருக்க வேண்டிய நேரம் இது தாமரை. உங்களுக்கு முன்னாடி வந்த ஆபிசர்ஸ்லாம் இறந்ததுக்குக் காரணம் இங்கே காணாம போன சிலைகள் பத்தி அவங்க இன்வெஸ்டிகேட் செஞ்சது தான்னு ராஜா இரண்டு நாள் முன்னாடி தான் கன்ஃபர்ம் செஞ்சி சொன்னாரு. அதுவும் நீங்க தங்கியிருக்க வீட்டு பக்கத்துல இருக்கச் செந்தாமரைக்கும் அவங்க பையனுக்கும் இதுல சம்பந்தம் இருக்குமோனு டவுட் இருக்கு எங்களுக்கு. அதைக் கன்ஃபர்ம் செய்றதுக்கு இதுக்கு முன்னாடி இறந்த ஆபிசர்ஸ்ஸோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கேட்டிருக்கோம். நாளைக்கு வந்துடும்னு ராஜா சொல்லிருக்காரு. அதனால் நீங்க எது செஞ்சாலும் பார்த்து பத்திரமா இருந்துட்டு செய்யுங்க” என்றான் சக்தீஸ்வரன்.
சக்தீஸ்வரன் கூறியதைக் கேட்டு மாதவன் அச்சமும் தவிப்புமாய் அவளைப் பார்த்தவனாய், “நான் அவளைப் பத்திரமா பார்த்துப்பேன் சக்தி சார்” என்றான்.
அவனின் பதிலில் மென்னகைப் புரிந்தவளாய், “சிலையை மீட்டெடுக்காம எனக்கு எதுவும் ஆகாதுனு ஒரு மாதிரி குருட்டு நம்பிக்கை இருக்கு” என்ற தாமரை மேலும் தொடர்ந்தவளாய்,
“ஏற்கனவே சோலைமலை சிவன் கோவில்ல இருக்க வேண்டிய அம்மன் சிலை, சிவநேசன் முத்தரசி சிலை எல்லாம் கவர்மெண்ட் லிஸ்ட்ல இருந்தும் அங்கே இல்லை. அங்கே அந்தச் சிலைகள்லாம் இருந்ததுக்கான எவிடன்ஸ் அவங்க என்கிட்ட கொடுத்த கவர்மெண்ட் ஃபைல்லயே இருக்கு. அதுக்குலாம் அதை வச்சே கேஸ் போடலாம். ஆனால் மாதவப் பெருமாள் சிலை போலிச்சிலைனு நிரூபிக்கத் தான் இப்ப ஆதாரம் வேணும். ஆபிஸ்ல லாஸ்ட் ஐம்பது வருஷ ரிப்போர்ட் பார்த்தேனா இதுக்கான எவிடன்ஸ் கிடைச்சிடும்னு நம்பிக்கை இருக்கு” என்றாள்.
“அந்த ஆதாரம் கிடைச்சதுனா போதும் தாமரை. உடனே அடுத்த ஆக்ஷன் எடுத்துடலாம். நான் இன்னிக்கு ராஜாகிட்ட இதைப் பத்தி பேசுறேன்” என்றான் சக்தீஸ்வரன்.
அதன் பிறகு நால்வரும் சில மணி நேரம் பேசிவிட்டு கிளம்பினர்.
சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் தாங்கள் வந்த ஜீப்பில் கிளம்பியிருக்க, மாதவனும் தாமரையும் அவர்கள் வந்த ஜீப்பில் ஏறினர்.
வண்டியை எடுக்காமல் அவளை நோக்கித் திரும்பிப் பார்த்தவாறு அமர்ந்தவனாய், “அப்புறம் பொண்டாட்டி இன்னிக்கு நைட் எங்கே தங்குறதா பிளான்?” கண்ணில் மின்னலுடன் சிரித்தவனாய்க் கேட்டிருந்தான்.
அவனின் பொண்டாட்டி என்ற அழைப்பே அவளுக்குள் சிலிர்ப்பூட்ட, “வழக்கம் போலக் கவர்மெண்ட் குவார்ட்ஸ்ல தான் தங்குவேன். என்ன புதுசா கேட்குறீங்க?” அவனின் கன்னக்குழியை ரசித்தவளாய் கூறியிருந்தாள்.
“சும்மா பேச்சுக்காச்சும் உங்க கூட இருக்கேன்னு சொல்ல வாய் வருதா? கல் நெஞ்சுக்காரி” என்று அவன் வாய்விட்டே புலம்ப, வாய்விட்டுச் சிரித்திருந்தாள் அவள்.
“ஊர் கூடி கல்யாணம் நடக்கட்டும் கண்ணா! அதுக்குப் பிறகு நீங்களே வராதனு சொன்னா கூடக் கேட்காம உங்ககூடவே தான் நான் இருப்பேன்! கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க” கண்களைச் சுருக்கியவாறு கெஞ்சும் பாவனையுடன் அவனது கையினைப் பற்றியவளாய் அவள் கூற,
“ஹே சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்மா! உனக்கு எப்ப என் கூட இருக்கனும்னு தோணுதோ அப்ப நாம ஒன்னா இருக்கலாம் சரியா” என்றவன் சொன்னதும் மகிழ்ந்தவளாய், “தேங்க்ஸ் கண்ணா” என்றவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவளது தோளைச் சுற்றி கையினைப் போட்டவனாய் தன்னோடு அவளைச் சாய்த்துக் கொண்டான். சிறிது நேரம் இருவரும் அமைதியாக அந்நொடியை ரசித்தவர்களாய் மோன நிலையில் இருந்தனர்.
“சரி நைட் ஒன்னா சாப்பிடலாமா கண்ணா? அதுக்குப் பிறகு என்னைக் குவார்ட்ஸ்ல டிராப் செஞ்சிடுங்க” அந்த அமைதியைக் கலைத்தாள் தாமரை.
“நாம போகுறதுக்கு நைட் ஒன்பது மணி மேல ஆகிடும் போலயே! என்னைச் செக் போஸ்ட் தாண்டி உள்ளே விடுவாங்களா?” எனக் கேட்டான் மாதவன்.
“நான் இன்னிக்கு காலைலயே ஃபாரஸ்ட் செக் போஸ்ட் ஆபிசருக்கு நீங்க என்னோட உறவினர்னு சொல்லி என்னோட பாதுகாப்புக்காக உங்களை எந்நேரமானாலும் உள்ளே வரதுக்கு அனுமதி தரனும்னு சொல்லி கேட்டு அனுமதி வாங்கிட்டேன்! அதனால உங்க ஐடியை காண்பிச்சு நீங்க எப்பனாலும் உள்ளே வந்துட்டுப் போகலாம்” என்றாள் தாமரை.
இருவருமாய் இரவு எட்டு மணி வரை ஒன்றாக நேரத்தைச் செலவழித்தவர்களாய், சோலைவனம் நோக்கிச் சென்றனர்.
சோலைவனத்தில் அவளுடைய அரசாங்க வீட்டில் இறக்கி விட்டவனாய், “பார்த்து பத்திரமா இருந்துக்கோ தாமரை. எனக்கு இந்தம்மா மேல சுத்தமா நம்பிக்கை இல்லை. எதுனாலும் உடனே எனக்குக் கால் பண்ணு” என்றவன் அங்கிருந்து செல்லவே மனமில்லாது அவளைப் பார்த்தவாறு நின்றிருந்த பொழுது,
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழும் இந்தச் சொந்தம்
நான் இனி நீ
நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே!
நிலவு தூங்கும் நேரம் பாடலின் இந்த வரிகளை ஒலித்தவாறு தாமரையின் கைப்பேசி ஒளிர, எப்பொழுது அவளின் கைப்பேசியில் கேட்கும் ஒரு பாதிக் கதவு பாடல் அல்லாமல் வேறொரு பாடலைக் கேட்கவும் மாதவனின் கண்களும் இன்ப அதிர்ச்சியில் ஒளிர்ந்தன.
“மொபைல் ரிங்டோன் மாத்திட்டியா தாமரை? எனக்காக மாத்துனியா? இந்த வரி அப்படியே நமக்குப் பொருந்துதுல! சூப்பரா செலக்ட் செஞ்சிருக்கத் தாமரை” என்று கூறியவனைச் சிரிப்புடன் அவள் பார்த்திருந்த போது மீண்டுமாய் அவளின் கைப்பேசி அலறவும்,
“சரி நீ பேசு. நான் கிளம்புறேன்” என்றவனாய் அங்கிருந்து கிளம்பியிருந்தான் மாதவன்.
அவன் செல்லும் பாதையைப் பார்த்து அவனுக்குக் கை அசைத்தவளாய் கைப்பேசியின் அழைப்பையேற்று, “சொல்லுங்க ராஜா” என்றவள் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்ததுமே, வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டுக் திரும்பி பார்த்தாள் தாமரை.
வாசலில் செந்தாமரை சிரித்த முகத்துடன் நின்றிருப்பதைக் கண்டு இவளுக்கு உள்ளுக்குள் பகீரென்றது, இருந்தாலும் சிரித்த முகமாக, “வாங்கம்மா” என்றவளாய் உள்ளே அழைத்தவளின் செவியில் ராஜா கைப்பேசியில் கூறியிருந்தது எதுவும் சரியாகக் கேட்காது போக,
“ஒரு நிமிஷம் இருங்க சார்! நான் திரும்பக் கால் செய்றேன்” என்று கைப்பேசி அழைப்பைத் துண்டித்தவளிடம்,
“சாப்பிட்டியாமா?” என்று கேட்டார் செந்தாமரை.
“சாப்பிட்டேன்மா” என்றவளின் கையில் ஒரு டப்பாவை கொடுத்தவராய், “இன்னிக்குப் பாயாசம் செஞ்சி சாமி கும்பிட்டேன்! அதான் கொடுக்கலாம்னு வந்தேன்மா. நைட்டே சாப்பிட்டுடுமா! பால்ல செஞ்சிருக்கனால காலைல வரைக்கும் வச்சா கெட்டுப் போய்டும்” என்றவராய் அவளின் கையினில் கொடுத்து விட்டுக் கிளம்பியிருந்தார் செந்தாமரை.
அந்த டப்பாவைத் திறந்ததும் பால் பாயாசத்தின் வெண்மை நிறம் கண்களைப் பறிக்க, ‘ஃப்ரஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுவோம்’ என்று எண்ணியவாறு டப்பாவை மேஜையில் வைத்தவளாய் குளியலறைக்குள் நுழைந்தாள் தாமரை.