அழகிய மாதவப் பெருமாள் கோவிலில் உற்சவச் சிலையாய் போலிச் சிலை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போயினர் இருவரும்.
மாதவப் பெருமாளின் போலிச் சிலையைக் கையில் ஏந்தியவனாய் வேதனைப் படர்ந்த முகத்துடன் மாதவன் அதிர்ந்து நின்றிருந்த பொழுது, தூரத்தில் யாரோ வரும் ஆளரவம் கேட்க,
‘அய்யோ யாரோ வராங்க போலருக்கே’ என மனத்தோடு நினைத்தவளாய் விறுவிறுவெனத் துரிதக் கெதியில் மாதவன் கையிலிருந்த சிலையை வாங்கிப் பெட்டியில் வைத்து விட்டு அவனை வெளியே இழுத்து வந்தாள் தாமரை.
அவன் இன்னுமே அதிர்வில் இருக்க, இவளின் இழுப்பில் கலைந்தவனாய் அவளின் பின்னோடேயே வந்தவன், “என்னாச்சு தாமரை?” எனக் கேட்டான்.
அவனிடம் ஏதும் உரைக்காது அந்த அறைக்குள் இருந்து வெளியே வந்தவளாய், அலுவலகக் கோப்புகளைக் கைகளில் எடுத்துக் கொண்டு மாதவனுடன் அக்கோவிலை விட்டு வெளியே வந்த தாமரையைப் பின்தொடர்ந்திருந்தன இரு ஜோடி கண்கள்.
கோவிலை விட்டு வெளியே வந்து ஜீப்பில் அமர்ந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டவளாய், “ஹப்பாடா இப்ப தான் கொஞ்சம் நெஞ்சு படபடப்பு அடங்கியிருக்கு” என்றாள்.
“ஏன் தாமரை? என்னாச்சு? எதுக்கு இப்படி இழுத்துட்டு வந்த?” எனக் கேட்டான் மாதவன்.
“நீங்க வண்டியை முதல்ல எடுங்க” என்றவள் சொன்னதும், வண்டியை இயக்கி முன்னேறிச் சென்றான்.
இதயத்துடிப்பு சற்று சமன்பட்டதும், “அங்கே யாரோ வர்ற மாதிரி இருந்துச்சு கண்ணா! அந்த ரூம்குள்ள ஆபிசர்ஸ் தவிர வேற யாரும் போகக் கூடாது. நான் கேமராலாம் ஆஃப் செஞ்சிட்டு தான் உங்களைக் கூட்டிட்டுப் போனேன். யாராவது பார்த்திருந்தாங்கனா என் வேலையே போய்டும். என் மேல கேஸ் போட்டு அரெஸ்ட் கூடச் செய்யலாம்” என்றவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுற்றுக் கோபம் கொண்டவனாய்,
“அறிவிருக்கா உனக்கு! அப்படி ரிஸ்க் எடுத்து என்னை எதுக்கு அங்கே கூட்டிட்டு போன?” எனக் கேட்டான்.
அவனது கோப முகத்தைப் பார்த்து சிரித்தவளாய், “நம்ம மாதவன் சிலையைப் பார்த்ததும் நீங்க பூரிச்சி சந்தோஷப்படுறதைப் பார்க்கனும்னு ஆசை ஆசையா இருந்துச்சு. அதனால எனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் பரவாயில்லைனு நினைச்சேன்” என்றவள் சொன்னதும் அவனது கோபம் மாயமாய் மறைந்து போக, மென்னகைப் புரிந்தவனாய், “காதல் வந்தா இப்படித் தான் காதலிக்கிறவங்களுக்காகக் கிறுக்குத்தனமா ஏதாவது செய்யத் தோணுமோ” எனக் கேட்டான். தனக்கான அவளின் செயலில் மகிழ்ந்த அதே நேரம் அவளுக்கு ஏதும் நேரிடுமோ என்கின்ற ஐயமும் உண்டானது அவனுக்கு.
“இப்ப என்ன செய்றது கண்ணா? ஒரிஜினல் சிலை எங்கே போயிருக்கும்? எப்பலருந்து காணாம போயிருக்கும்? அதை எப்படித் தேடுறது?” எனக் கேட்டாள்.
“கவர்மென்ட் ஆபிசரா உன்னால இதுக்கு எதுவும் ஆக்ஷன் எடுக்க முடியாதா தாமரை?” எனக் கேட்டான்.
“என்னோட மேலதிகாரியே இதுக்கு உடந்தையா இருக்கும் போது அவர்கிட்ட கம்ப்ளைண்ட் செய்ய முடியாது. அவருக்கும் மேல உள்ள அதிகாரிட்ட கம்ப்ளைண்ட் செய்யலாம். அப்படிச் செஞ்சேன்னா முன்னாடி ஆபிசர்ங்க இறந்த மாதிரி என்னையும் கொன்னு போட வாய்ப்பிருக்கு” என்று சிரித்தாள்.
“ம்ப்ச் நல்லதா பேசு தாமரை! நான் உன்னை அப்படி ஒன்னும் விட்டுட மாட்டேன்! அதே சமயம் மாதவனையும் மீட்டு எடுப்பேன்” சற்று ஆவேசமாகவே உரைத்தான்.
“இங்கே நான் என்ன செஞ்சாலும் அது எனக்குத் தான் ரிவெர்ட் ஆகும் கண்ணா! ஏன்னா இங்கே நடக்கிற அக்கிரமத்துக்கு எல்லா ஆபிசர்ஸூம் உடந்தையா இருக்காங்க” என்றாள்.
அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தவாறே வண்டியை ஓட்டியவனாய் மாதவன் இருக்க, “கண்ணா இங்கே வண்டியை நிறுத்துங்களேன்” என்றவளாய் கோதை ஆற்றங்கரையில் வண்டியை நிறுத்த கூறியிருந்தாள் தாமரை.
அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்தவனாய், “இது நாம ஒன்னா சேர்ந்து இருந்த இடம் தானே! நீ கூடப் பாம்பை வாளால கொன்னியே! அந்த இடம் தானே” கண்கள் மின்ன கேட்டிருந்தான்.
ஆமெனத் தலையசைத்தவளாய், “வாங்க கொஞ்சம் நேரம் இங்கே உட்கார்ந்துட்டு போவோம்” என்றவள் முன்னே செல்ல தனது கைப்பேசியிலிருந்து ஒருவருக்கு அழைப்பு விடுத்தவனாய் அவளுடன் நடந்தான்.
தாமரை மணற்திட்டில் அமர, அவளெதிரில் அமர்ந்தவனாய், மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டதும், “ஹலோ சக்தி சார்! நீங்க சொன்ன மாதிரி நானும் தாமரையும் பிரகலாதப் பெருமாள் கோவிலுக்குப் போய்ட்டுத் தியானம் செஞ்சிட்டு வந்துட்டோம். உங்களை உடனே பார்க்கனும் சார். முக்கியமான விஷயம் பேசனும். எங்கே மீட் பண்ணலாம்?” எனக் கேட்டான்.
மாதவன் இருக்கும் இடத்தைப் பற்றிக் கேட்டவனாய் தானும் அங்கேயே வருவதாய் உரைத்த சக்தீஸ்வரன், அடுத்த அரை மணி நேரத்தில் வந்து நின்றான்.
சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் கோதை ஆற்றங்கரையைப் பார்த்து தங்களது முன்ஜென்ம நினைவுகளைப் பற்றிப் பேசியவாறு அவர்களை நோக்கி வந்திருந்த போது, இவர்களைப் பார்த்த தாமரைக்குத் தான் வணங்கும் தெய்வங்களை நேரில் கண்ட நெகிழ்ச்சி உண்டாக, தன்னை மீறி ஓடோடிச் சென்றவளாய் அவர்களின் முன் மண்டியிட்டு விழுந்து வணங்கியிருந்தாள்.
‘அய்யோ எழுந்திரிங்க’ என்று பதறியவர்களாய் இருவரும் அவளை எழுப்ப, தாமரையின் செயலைப் புரியாத பாவனையில் குழப்பத்துடன் பார்த்திருந்தான் மாதவன்.
“ஐயாவும் அரசிமாவும் என்னை ஆசிர்வதிக்கனும்” என்றவளாய் திரும்பி மாதவனைப் பார்த்தவள், “என்ன நிக்கிறீங்க? இங்கே வாங்க!” என்று அவனையும் கூப்பிட்டு தம்பதியராய் அவர்களது காலில் விழுந்தனர்.
‘அய்யோ இந்தப் பொண்ணு ஏன் இப்படிப் பண்ணுது’ என்று சங்கோஜப் பாவனையுடன் சக்தியைப் பார்த்த இளவஞ்சி, புருவத்தை உயர்த்தியவாறு, ‘இப்ப என்ன செய்றது?’ என்று சைகையிலேயே சக்தீஸ்வரனைக் கேட்டிருந்தாள்.
அவர்களின் முன் காலில் விழுந்திருந்த மாதவன் எழும்பப் போக, “அவங்க ஆசிர்வாதம் செய்ற வரைக்கும் எழும்பாதீங்க” என்று முணுமுணுத்தவளாய் அவன் கரங்களைப் பற்றி நிறுத்தினாள் தாமரை.
“இரண்டு பேரும் இப்படியே ஜோடியா சந்தோஷமா இருங்க!” என்று சக்தீஸ்வரன் சிரித்தவாறு கூற,
“ஆமா ஆமா நல்லா இருங்க! எழுந்திரிங்க” என்று தாமரையின் கைப்பிடித்து எழுப்பினாள் இளவஞ்சி.
“ஏன் தாமரை எங்களைப் பார்க்கும் போதெல்லாம் இப்படித் தொபுகடீர்னு கால்ல விழுந்துடுறீங்க?” எனக் கேட்டாள் இளவஞ்சி.
“சொல்றேன் அரசிமா! நீங்க மொதல்ல உட்காருங்க” என்ற தாமரை, அவர்கள் இருவருடன் மாதவனும் அமருவதைப் பார்த்து, அவன் கைப்பிடித்து இழுத்து அமர விடாது தன்னருகே நிற்க வைத்தாள்.
தாமரையின் செயலைப் புரியாத பாவனையில் மாதவன் பார்த்திருக்க, “உட்காருங்க இரண்டு பேரும்!” என்று சக்தீஸ்வரன் சொன்னதும், “இப்ப உட்காருங்க” என்றவளாய் சக்தீஸ்வரன் இளவஞ்சி அமர்ந்திருந்த மணற்திட்டிற்குக் கீழே அவர்களின் காலடியில் மாதவனை அமர வைத்து அவனருகில் அமர்ந்தாள்.
“அய்யோ இங்கே ஏன் உட்காருறீங்க? பக்கத்துல வந்து உட்காருங்க” என்று இளவஞ்சி சொன்னதையும் கேளாது அப்படியே அமர்ந்திருந்தவள் அனைவரும் தன்னை வினோதமாய்ப் பார்ப்பதைக் கண்டதும் தான், தனது செயல் அவர்களுக்கு வினோதமாய்த் தெரிகிறது என்று புரிந்தது அவளுக்கு. ஆயினும் அதனை மாற்ற விரும்பாதவளாய்,
“ஐயா நான் சொல்றதை கேளுங்க” என்று தொடங்கவும்,
“யாரை இவ ஐயானு சொல்றா?” என்று மூவரும் அவளை நோக்க, பிறகு சுதாரித்துத் திருத்தியவளாய்,
“சக்தி அண்ணா! நீங்க சொன்ன மாதிரி, அங்கே தியானத்துல உட்கார்ந்து எங்க முன்ஜென்மத்தைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டோம்” என்றவள் தான் கண்டவை அனைத்தையும் ஒன்று விடாமல் உரைத்தாள்.
அவள் கூறியதைக் கேட்ட மாதவனுக்கு, “இவங்க தான் கோதை வணங்கிய சிவநேசன் முத்தரசியா?” என்று இன்ப அதிர்ச்சி உண்டானது.
“உங்களுக்கும் எங்களை மாதிரி உங்க முன்ஜென்மம் பத்தி அதாவது நீங்க சிவநேசன் முத்தரசியா வாழ்ந்தது பத்தி தெரியுமா?” என இன்ப ஆச்சரியத்துடன் கேட்டிருந்தான் மாதவன்.
அவர்கள் ஆமென தலையசைக்க,
இப்பொழுது இவனும் தாமரைப் போன்று அவர்களைப் பணிவுடனும் மரியாதையுடனும் பார்த்திருந்தான்.
சக்தீஸ்வரனுக்கும் இளவஞ்சிக்கும் இதனை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
“நீங்க சொல்றதையெல்லாம் கேட்கும் போது ஆச்சரியமா இருக்கு தாமரை” என்று இளவஞ்சி கூறவும் ஆமோதித்தவனாய் சக்தீஸ்வரன், “ஆமா தாமரை! ஆனாலும் நீங்க வணங்கியது சிவநேசன் முத்தரசியைத் தானே. நாங்க இப்ப சக்தீஸ்வரன் இளவஞ்சியா இருக்கோம். அது வேற! இது வேற!
நாங்களே குழந்தை பாக்கியத்துக்காக இறைவன்கிட்ட மன்றாடிக்கிட்டு இருக்கோம். எங்க வாழ்க்கையே இங்கே அக்கப்போரா இருக்கும் போது நாங்க எப்படி மத்தவங்களுக்கு அருள் புரியுற கடவுள் ஆக முடியும்.
அதனால எங்களை இப்பிடி அதிசயப் பிறவியா பார்க்காம நார்மலா பழகுங்க” என்றவனாய் அவர்கள் இருவரையும் எழுப்பித் தங்களின் அருகில் திட்டில் அமர வைத்தான் சக்தீஸ்வரன்.
“சின்னதா இறைவன் அருள் புரிஞ்சிட்டாலே, நான் தான் சாமினு சொல்லி பல லட்சங்கள் சம்பாதிக்கிற போலிச் சாமியார்கள் உலவுற நாட்டுல, தாமரை அப்படி உங்களைச் சொல்லியும் நாங்க சாமி இல்லைனு சொல்றீங்க பாருங்க! உங்க கூட சேர்ந்து இறைப்பணி செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைச்சது நினைச்சு சந்தோஷமா இருக்கு” என்றான் மாதவன்.
சக்தீஸ்வரன் மென்னகைப் புரிந்தவனாய், “நாம எல்லாருமே நல்ல காரியத்துக்காகப் பிறப்பெடுத்து வந்து இப்படி ஒன்னா சேர்ந்து இருக்கிறதுல மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு” என்றவன், “இப்ப எப்படி நாம அந்தச் சிலையை மீட்கப் போறோம்னு பேசுவோம்” என்றான்.
——
அதே பொழுது அங்கே மாதவனின் அன்னை வினோதினி பெருத்த யோசனையுடன் சமையலறையில் இரவுணவைச் சமைத்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு எதிர்பதமாய் மிகுந்த மகிழ்வுடன் மகனின் திருமணம் குறித்த சிந்தனையுடன் முகப்பறையில் அமர்ந்திருந்தார் மாதவனின் தந்தை ரங்கராஜன்.
“ஞாபகம் இருக்கு வினோ! ஏன் கேக்குற?” என்றார் ரங்கராஜன்.
“அவளுக்கு இப்ப நேரம் சரியில்ல ஏதோ கண்டம் இருக்குனு ஜோசியர் சொன்னாரே! அதுக்கு ஏதாவது பரிகாரம் செஞ்சிட்டுக் கல்யாணம் செய்யலாமானு ஜோசியர்கிட்ட கேட்கலாமாங்க! எனக்கு என்னமோ மனசு ஒரு மாதிரியாவே இருக்கு” என்றார் வினோதினி.
“அதான் அப்பவே அந்த ஜோசியர், நம்ம பையன் அவக்கூட இருக்கிறதுனால ஒன்னும் ஆகாதுனு சொன்னாரே! மறந்துட்டியா?” எனக் கேட்டார்.
“ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே பிறந்தவங்க மாதிரி அவங்க ஜாதகம் பொருந்துதுனு ஜோசியர் சொன்னாரே! அதனால் அவங்க சந்தோஷமா வாழுவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு வினோ! நல்லதையே நினை நல்லதே நடக்கும்” என்றார்.
அதே நேரம் இங்கே கோவிலில் மாதவனையும் தாமரையையும் பார்த்திருந்த இரு ஜோடிக் கண்களான அவளின் மேலாளர் சர்வேஸ்வரனும் செந்தாமரையின் மகன் செல்வமும் இவளுக்கான கண்டத்தை ஏற்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.