காதல் – 8 

வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த இளம் மாணவர்கள் அந்த அரங்கம் முழுக்க நிறைந்திருந்தனர். கிணறை விட்டு வெளியேறி மகா சமுத்திர தரிசனம் கண்ட மீனின் மன நிலையில் இருந்தாள் ஆரு. 

இயல்பான தயக்கத்தில் அவள் ஒதுங்கி நிற்க, “ஹாய் ஐயம் ரென். ப்ரம் ஜப்பான் .’’ என்று ஒரு இளம் பெண் ஆருவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவளை தொடர்ந்து, “ஹாய் ஐயம் எரிக். ப்ரம் நார்வே.’’ என்று ஒரு இளைனனும் தன்னை சுய அறிமுகம் செய்து கொள்ள மூவராக சேர்த்து அந்த அரங்கத்தை சுற்றி வந்தனர். 

   

அரங்கம் மிக பெரிதாக இருந்தது. அது பகல் பொழுதாக இருந்த போதும் பெரிய பெரிய வர்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. எப்படியும் ஒரு நூறு நாடுகளிலிருந்தாவது போட்டியாளர்கள் வந்திருக்க வேண்டும் என்று குவிந்திருந்த கூட்டத்தை வைத்து ஆரு மனதிற்குள் கணக்கிட்டாள்.  

ரென் பேசிய ஆங்கிலத்தில் மழலையின் சாயலிருக்க, எரிக் பேசும் ஆங்கில உச்சரிப்பு புரிந்து கொள்ள சற்றே சிரமமாக இருந்தது. ஒருவருக்கு ஒருவர் தட்டு தடுமாறி தங்களின் அடிப்படை விவரங்களை பகிர்ந்து கொண்ட போது, அரங்கம் பரபரப்பானது. 

தோரணையாக உடை அணிந்திருந்த நால்வர் மேடையில் தோன்றினர். கீழே சல சலப்பு எழ, முதலாவதாய் நின்று கொண்டிருத்த பெண்ணின் கையில் ஒலிப்பெருக்கி வழங்கப்பட்டதும் அரங்கம் அமைதியில் ஆழ்ந்தது.  

“குட் மார்னிங் ஸ்டூடன்ஸ். ஐயம் ஸ்டெல்லா மெக்கார்ட்னி.கிளாட் டூ மீட் யூ ஆல்.’’ என்று அறிவித்ததும் கீழே எழுந்த ஆரவார பேரொலி  அடங்க வெகு நேரமானது. அவர் யார் என அறியாத ஆரு லேசாக ரெனின் காதருகில் குனிந்து, “யார் இவர்…?’’ என கேட்டாள் ஆங்கிலத்தில். 

‘இவரை தெரியாதா…’ என்பதை போல ஆருவை ஆச்சர்யமாக பார்த்த ரென், “இவர் உலகின் தலை சிறந்த ஆடை வடிவமைப்பாளர். உலக அளவில் ஆடை வடிவமைப்பிற்கு என பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். நம்முடைய போட்டிக்கு நடுவராக வந்திருக்கிறார்.’’ என்று தன் குழந்தை குரலில் ஆருவிடம் மொழிந்தாள். 

மண்டையை ஆட்டி அவளிடம் கதை கேட்ட ஆரு நேராக அமர, “இவர் ஒரு சிறந்த பெண்மணி. அதோடு மனிதாபிமானி. விலங்குகளின் தோலில் தயாரிக்கப்படும் ஆடைகளை வன்மையாக எதிர்த்தவர். அதோடு  ஏழை மக்களின் புற்றுநோய் சிகிச்சைக்கு தன் நிறுவனத்தின் மூலம் நிதி சேகரித்து கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.’’ என்றான் எரிக் மெல்லிய குரலில். 

இவர்களிலிருந்து தான் எப்படி வேறுபடுகிறோம் என்பதை ஆரு உணர ஆரம்பித்தாள். தன் துறை சார்ந்த உலக நிகழ்வுகளையும், முக்கிய மனிதர்களையும் இனி தேடித்தேடி அறிந்து கொள்ள வேண்டும் என மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டவள், நிகழ்வை கவனிக்க துவங்கினாள். 

“ஆடை என்பது நம் அழகை விட நம் உணர்வுகளை வெளிக்காட்டும் கண்ணாடி. ஆடையின் வேர்களில் தான் நம் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவையும் நெய்யப்பட்டிருக்கிறது. ஆடை வடிவமைப்பு வெறும் கல்வியல்ல கற்பிக்க. வாழ்வியல் கலை. அதை அவரவர் இதயத்திலிருந்து உணர்ந்து வெளிக்கொணர வேண்டும்.’’  

ஸ்டெல்லா பேச பேச அவரின் உடையாடல் பிரெஞ்சிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது. அவர் உரையாற்றி முடித்ததும் அரங்கில் எழுந்த கரவோசை அடங்க நெடு நேரமானது. 

அதன் பிறகு மற்ற மூன்று நடுவர்களும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு உரையற்ற, ரென் மற்றும் எரிக் அவர்கள் குறித்த அடிப்படை தகவல்களை ஆருவிடம் பகிர்ந்து கொண்டனர். நடுவர்களின் உரை முடிந்ததும் கல்லூரியின் முதல்வர் தன் ஏற்புரையை வழங்க, கல்லூரியின் பேராசிரியர்கள் சிலரும் மாணவர்களிடம் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 

பேராசிரியர்கள் உரைக்கு பின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்த மாணவர்களை சுய அறிமுகம் செய்து கொள்ள அழைத்தனர். ஆங்கிலம் அறியாதவர்கள் தங்கள் தாய் மொழியில் பேச, அதை மொழி பெயர்ப்பு செய்யவும் அங்கு ஆட்கள் இருந்தனர். 

ஆருவிற்கு தன் முறை வந்த போது பயத்தில் மூச்சடைத்தாலும், ஒருவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டு, “ஐயம் ஆர்கலி. தட் மீன்ஸ் ஓசன். அண்ட் ஐயம் ப்ரம் இந்தியா. வெரி கிளாட் டூ மீட் யூ ஆல்.’’ என்று விட்டு சிரித்த முகத்தோடு அரங்கில் இருந்து இறங்கினாள். 

ரென் திக்கி திணற, கீழே இருந்து ஆருவும், ரிக்கும் கைகளை உயர்த்தி, “யூ கேன்… யூ கேன்…’’ என கத்த ரென் தன் சுய அறிமுகத்தை வழங்கிவிட்டு கீழே இறங்கினாள். இப்படி நூற்றி மூன்று மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதும், மதிய உணவு இடைவேளையை அறிவித்தனர். 

 அப்போதும் ரெனின், மற்றும் ரிக் ஒன்றாகவே உணவு கூடத்திற்கும் சென்றனர். aஅந்தந்த நாட்டின் கலாச்சார உணவுகள் அங்கே வரிசை முறையில் அடுக்கப்பட்டிருக்க, இவர்களுக்கு வழிகாட்ட அந்த கல்லூரியின் உள் உறை மாணவர்கள் புன்னகை முகத்தோடு நின்று கொண்டிருந்தனர். 

ஆரு இந்திய உணவு வகைகளை தேட துவங்க, “எப்போதும் நம் நாட்டின் உணவுகளையே உண்டு கொண்டிருப்பதற்கு இந்த பயணம் எதற்கு. என் கண்ணை கவரும் உணவினை எல்லாம் ருசி பார்க்க போகிறேன்.’’ என்ற அறிவிப்போடு உணவு கூடத்திற்குள் உற்சாகமாக நடந்தாள் ரென். 

“உன் கண்ணை கவரும் உணவு… வயிற்றை கண்டம் செய்துவிடப் போகிறது.’’ என்று அவளின் ஆர்வத்திற்கு அணை போடா முயன்றான் ரிக். அவனின் அறிவுரைக்கு முகத்தில் கேலியான பாவத்தை காட்டிவிட்டு, தன் கண்ணை கவரும் உணவுகளை தன் தட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்ப துவங்கினாள் ரென். 

அவள் ஒவ்வொரு முறையும் சிறிதளவு உணவினை வாயிலிட்டு சுவை பார்க்க, அவள் முகம் வெளிப்படுத்தும் பாவங்களில் வெடித்து சிரித்தனர் ஆர்கலியும், ரிக்கும். அவள் ருசி பார்த்ததில் மனம் நிறைத்த உணவினை தன் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள, இருவரும் கொஞ்சம் கொஞ்சம் என ஆரம்பித்து, அந்த உணவு இடைவேளை முடியும் போது கிட்ட தட்ட வயிறு முட்ட உண்டிருந்தனர். 

ஆர்கலி தன் இந்திய நாட்டின் இனிப்பு வகைகளை அவர்களோடு பகிர்ந்து கொள்ள, ரென்னும், ரிக்கும் தங்கள் நாட்டின் சிறந்த உணவுகளை ஆர்கலியை ருசி பார்க்க வைத்தனர். 

மதிய உணவு இடைவேளை முடிந்ததும். போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த நூற்றி மூன்று மாணவர்களையும் பத்து குழுக்களாய் பிரித்தனர். ஆருவும், ரென்னும் மூன்றாம் எண் கொண்ட குழுவில் இணைந்து விட, ரிக் ஐந்தாம் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டான். 

குழுவிற்கு தலைவர்களை துரிதமாக குழுக்கல் முறையில் தேர்வு செய்தவர்கள், குழு தலைவர்களை, உடைகளும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் இரண்டு நிமிடங்கள் மட்டும் உரையாட அழைத்தனர். 

     

மூன்றாம் எண் கொண்ட குழு தலைவர் அழைக்கப்படும் போது ஆர்கலி கம்பீரமாக நடந்து மேடையை நெருங்கினாள். ரென்னும், ரிக்கும் அவளை சுவாரசியமாக கவனித்து கொண்டிருக்கும் போதே மேடை ஏறியவள், தன் அலைபேசியின் மூலம் அங்கிருந்த பெரிய தொடு உணர் திரையை இணைத்தாள். 

அடுத்த நொடி திரையில் வித விதமான முறையில் சேலை அணிந்த இந்திய பெண்கள் வலம் வர, “எங்கள் இந்தியாவின் மொத்த பாரம்பர்யத்தையும் இந்த ஒற்றை ஆடை தனக்குள் ஒளித்து வைத்து கொண்டிருகிறது. இது வெறும் உடை அல்ல. எங்கள் அம்மாக்களின் கத கதப்பு. பிறந்த போது வாரி சுருட்ட, தொட்டில் கட்டி தாலாட்ட, பயம் வந்தால் ஒளிந்து கொள்ள, அழுதால் முகம் துடைக்க, குளிர்ந்தால் போர்த்தி கொள்ள, குளித்தால் துவட்டி கொள்ள, எங்கள் அம்மாவின் உடைகள் தான் உடன் வரும். இது வெறும் உடை அல்ல. எங்களின் உணர்வு.’’ ஆர்கலி தன் கம்பீர குரலில் பேசி முடிக்க, அரங்கம் கை தட்டலில் குலுங்கியது. 

அவள் சேலையின் ஒவ்வொரு பயன்களையும் சொல்ல சொல்ல, அதற்கு ஏற்றார் போல காட்சிகள் அந்த பெரிய வண்ண திரையில் மாறிக் கொண்டே இருந்தது. பேச வரும் முன்பே வேக வேகமாக காட்சி கோர்வை தயாரித்து வந்திருந்தாள். 

     

ஆரு உரையை முடித்ததும், ஸ்டெல்லா முதலில் எழுந்து நின்று கை தட்ட, அவரை தொடர்ந்து மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களை பின்பற்றி கீழே அமர்ந்திருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கைகளை தட்ட ஆரு கூச்சமாய் உணர்ந்தாள். 

அவள் ஒரு பெரிய புன்னகையோடு முகம் சிவந்து கீழே இறங்கி வர, அவளை யார் என்றே அறியாத பல மாணவர்கள் கை குலுக்கியும், தோளில் தட்டியும் அவளை கொண்டாடினர். 

அவளிடத்தில் வந்து அமர்ந்த போது ரென், “அரங்கத்தை இரண்டாக உடைத்து விட்டாய்…’’ என சிரித்து கொண்டே பாராட்ட, ரிக் தான் அமர்ந்த இடத்தில் இருந்தே, “அருமை…வெகு அருமை.’’ என்று கைகளின் மூலம் சாடை காட்டினான். 

மற்ற மாணவ தலைவர்களும் அந்த தலைப்பின் கீழ் உரையாற்றி முடித்திருக்க, ஆர்கலியின் குழுவிற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசை சீன மாணவன் ஒருவனை தலைமையாய் கொண்டிருந்த எட்டாம் எண் குழு தட்டி சென்றிருந்தது. 

நாளைய பணிக்கான திட்டமிடல் முடிந்ததும், அன்றைய பணி நாள் முடிந்தது என தலைமை நிர்வாக குழு அறிவிக்க, மாணவர்கள் அரங்கை விட்டு கலைந்து சென்றனர். 

வெளிநாட்டு மாணவர்களுக்கு அங்கேயே தங்கும் விடுதிகள் ஏற்பாடாகியிருக்க, “உன் அறையின் எண் என்ன…?’’ என ஆருவிடம் விசாரித்து கொண்டிருந்தாள் ரென். அப்போது தான் காலையில் இருந்து தான் ஒரு பணயக் கைதி என்பதையே மறந்திருந்த ஆருவிற்கு, தோழியின் கேள்வி சட்டென நடப்பை நினைவூட்ட, அவள் முகம் காலை நேரத்து ஆம்பலாய் சுருங்கியது. 

ரிக் அவளின் மாறிவிட்ட முக பாவத்தை கவனித்து, “என்ன பிரச்சனை…?’’ என்றான் நேரடியாக. தான் தற்சமயம் எதையேனும் உளறி  வைத்தாள் அது அவர்களுக்கும் ஆபத்தாய் முடியலாம் என்பதை உணர்ந்திருந்த, ஆரு, “என் தந்தையின் நண்பர் வீடு இங்கு தான் இருக்கிறது. நான் தினம் அங்கிருந்து தான் கல்லூரிக்கு வந்து செல்ல போகிறேன்.’’ என்றாள் முகத்தை மலர்ந்தார் போல வைத்து கொண்டு. 

“அப்படியா…?’’ என கேட்ட ரென்னின் முகம் சுருங்கி விட, ரிக்கும் சற்றே ஏமாற்றமாக உணர்ந்தான்.  வாடிவிட்ட அவர்களின் முகங்களை கண்டவள், “ஆனாலும் நான் உங்களோடு தான் அதிகமான நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறேன்.’’ என்றதும் இருவரின் முகமும் ஒரு சேர மலர்ந்தது. 

“நீ தங்கியிருக்கும் இடம் எங்கு இருக்கிறது?’’ என ரிக் விசாரிக்க துவங்கும் போதே, “என் அப்பாவின் நண்பர் எனக்காக காத்திருப்பார். நாளை நாம் விரிவாக பேசுவோம்.’’ என்றவள் அவர்களின் பதிலுக்காக கூட காத்திருக்காது வேக வேகமாக கல்லூரி வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். 

கல்லூரி வாயில் தனக்காக ஒருத்தி காத்திருப்பாள் என்ற எந்த பிரக்ஞையும் இன்றி, தன் ரகசிய கீழ் தளத்தில் பிணைத்து வைக்கப்பட்டிருந்தவனின் உடலில் கூர் கத்தியை கொண்டு நேர் கோடு இழுத்துக் கொண்டிருந்தான் லூகா. 

அவன் வருவான்.