விழிகளை திறப்பது அத்தனை சிரமமாயிருந்தது ஆருவிற்கு. யாரோ இமைகளின் மீது பாறங்கல்லை ஏற்றி வைத்ததை போல அத்தனை கனமாயிருந்தது. முயன்று விழிகளை திறந்தாள்.
திறந்த விழிகளின் முன் விரிந்தது அந்த வெற்று சுவர். வெண்மை நிறம் மட்டும் பளிங்கு போல ஒளிர, அது என்ன இடம் என்பதே அவளுக்கு தெரியவில்லை. தலை இடிப்பதை போல வலிக்க, எழுந்து அமர முயன்றாள்.
ஆனால் இருந்த இடத்திலிருந்து அவளால் இம்மியளவும் நகர முடியவில்லை. கைகளை வேகமாக அசைக்க முயல, அப்போது தான் அது படுக்கையோடு பிணைக்கப்பட்டிருந்ததை அறிந்தாள். நொடியில் பயம் நைல் நதியாய் ஊற்றெடுக்க, அந்த குளிரிலும் அவளுக்கு வியர்த்து கொட்டியது.
எத்தனை நேரம் அந்த போராட்டத்துடன் கழிந்ததோ, கதவு திறக்கும் ஓசையில் ஆரு தலையை மட்டும் திருப்பி வாயிலை பார்த்தாள். வாயிலை மொத்தமாய் அடைத்தபடி உள்ளே நுழைந்தது அந்த பெரிய உருவம்.
ஆரு பீதியில் உடலை முன்னும், பின்னும் நகர்த்த முயன்றபடி போராட, “ஒரு வழியா கண்ணை திறந்துட்ட.’’ என்றபடி அவளின் முன் வந்து நின்றான் லூகா.
அவன் பேசிய ஆங்கில உச்சரிப்பு அவளுக்கு அறையும் குறையுமாய் புரிந்தாலும், “யார் நீ…? உனக்கு என்ன வேணும்…? நீ எவ்ளோ பணம் ரேன்சமா கேட்டாலும் எங்க வீட்ல கொடுப்பாங்க… ப்ளீஸ் என்னை ஒன்னும் செஞ்சிடாதா…!’’ என்று கெஞ்ச துவங்கியிருந்தாள், அவனுக்கு தமிழ் புரியாது என்பதையும் மறந்து.
அவளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அரை இருளில் சந்தித்திருந்த அவன் முகத்தை ஆரு சுத்தமாக மறந்து போயிருந்தாள். ஆக அவனை கண்டதும் தயக்கமின்றி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“ஐ கான்ட் அண்டர்ஸ்டான்ட் யூ…’’ என்று அவன் நிறுத்தவும் தான், பயத்தில் அவனிடம் தான் தமிழில் புலம்பிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள், இதற்கு முன் தமிழில் சொன்னதை மீண்டும் ஒரு முறை கெஞ்சல் குரலில் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தாள்.
“எனக்கு பணம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல…’’ என சொல்லிவிட்டு, லூகா சிரிக்க, ஆரு, “எனில் உனக்கு என்ன வேண்டும்…?’’ என வருவித்த பொறுமையுடன் கேட்டாள்.
அவன் ஒற்றை விரல் நீட்டி, “நீ..’’ என கை காட்ட, அவளுள் சர்வமும் ஒடுங்கியது. “நோ..’’ என்று அவள் அலற, “எஸ்…’’ என்றான் அவள் முகத்தின் அருகில் வந்து.
“எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் உறுதியாகியுள்ளது. நானும் அவரும் விரும்புகிறோம். என்னை தயவு செய்து விட்டு விடு…’’ என்று அவனிடம் கெஞ்ச துவங்கினாள் ஆரு.
“உனக்காக இருபது வருடங்களாக காத்திருக்கிறேன். ஒரு முப்பது நாட்களாவது என்னுடன் வாழ்ந்து விடு. நான் உன்னை பத்திரமாக உன் நாட்டிற்கு அனுப்பி வைத்து விடுகிறேன்.’’ என்றான் லூ.
“தயவு செய்து என்னை விடுவித்து விடு.’’ என்று மீண்டும் கெஞ்சலில் இறங்க, “இனி உன்னிடம் பேசி பலனில்லை…’’ என்றவன், “கொஞ்சம் உனக்கு இடப்பக்கம் திரும்பி பார்…!’’ என்றான் நக்கலாக.
அங்கு சுவற்றை அடைத்தபடி இருந்த பெரிய தொலைக்காட்சி ஒன்று இருந்தது. அவள் திரும்பிய சில நொடிகளில் அது உயிர் பெற, மங்கலாய் காட்சிகள் விரிய துவங்கியது. அந்த காட்சியில் தெரிபவை தனக்கு பரிட்சயமான இடமாக தோன்ற, மனதை ஆக்ரமித்த சோர்வை விரட்டி அடித்து பார்வையை கூர்மையாக்கினாள் ஆரு.
அது அருண் மும்பையில் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு என்பதை அறையில் இருந்த பொருட்களின் மூலம் உணர்ந்தவளின் இதய துடிப்பு எகிற துவங்கியது.
அருண் படுக்கையில் படுத்திருக்க, அவனை நெருங்கியது ஒரு முகமூடி அணிந்த உருவம், தூங்கிக் கொண்டிருந்த அருணை கீழே இழுத்து போட்டு, அவன் முகத்தை போர்வையால் மூடி கண்மூடி தனமாக தாக்க, உறக்கத்தில் இருந்தவன் அப்படி ஒரு திடீர் தாக்குதலை எதிர்பார்க்காமல் தடுமாற, முகமூடி உருவம் வன்மையாய் அவனை தாக்கிக் கொண்டே இருந்தது.
“நோ…! நோ…!” தன்னை பிணைந்திருந்த கயிறுகளையும் மீறி, ஆரு துடிக்க, லூ தன் கையில் இருந்த கடிகாரத்தின் மூலம், “எனப்…’’ என்ற கட்டளையிட, அடுத்தகணம் அவனை கீழே தள்ளிவிட்டு, முகமூடி உருவம் திறந்திருந்த கண்ணாடி ஜன்னலின் வழி மறைந்து போனது.
அடுத்தடுத்து நிகழ்ந்த அதிர்ச்சியில் கதறி அழவும் முடியாமல் ஆரு மெல்ல மெல்ல மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள். அவளின் கை கட்டை விடுவித்த லூ, அங்கிருந்த குளிர்பதன பெட்டியிலிருந்து பழசாற்றை எடுத்து அவளுக்கு புகட்ட மறுக்க முடியாது ஆரு அதனை பருகி முடித்தாள்.
உள்ளே இறங்கிய பழச்சாறு கொஞ்சம் தெளிவினை கொடுக்க, கைகளை கூப்பியபடி, “தயவு செய்து என்னை விட்டுவிடு.’’ என்று மீண்டும் அவனிடம் கெஞ்ச துவங்கினாள். “அடுத்த தாக்குதலை உன் காதலன் வீட்டில் நடத்தலாமா…? இல்லை உன் இன்னொரு அண்ணனின் அறையில் நிகழ்த்தலாமா…?’’ என்று லூ வினவ, ஆரு கரங்கள் கொண்டு வாயினை இறுக மூடிக் கொண்டவள் வெடித்த விம்மலை வாயோடு அடக்கினாள்.
“குட்…! வெரி குட்…! ஓகே நவ் கிஸ் மீ இன் மை லிப்…’’ என்றான். ஆரு அதிர்ந்து விழிக்க, “இதழ்களில் என்னை முத்தமிடு.’’ என்றான் மீண்டும் ஒரு முறை வருவித்த தெளிவான ஆங்கில உச்சரிப்பில்.
அவள் திகைத்து போய் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “ஓகே… உனக்கு அடுத்த படத்தை காட்ட வேண்டியது தான்.’’ என்று தன் கையில் இருந்த வாட்சை தொடப் போக, ஆரு பாய்ந்து அவனை கட்டிக் கொண்டு அவன் இதழ்களை சிறை செய்தாள்.
லேசாக தொட்டுவிட்டு விலகும் எண்ணத்தில் தான் அவள் இருந்தாள். ஆனால் அவளின் எண்ணம் உணர்ந்தவன் போல, அவள் விலக முற்படும் போதே, தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டவன், அவள் இதழ்களை தன் இதழ்களால் சிறை செய்து பருவ ரசம் பருக துவங்கினான் அவள் இதழ்களில்.
போராடி அது பலனற்று போக, ஆரு மெல்ல மெல்ல அவன் கரங்களில் அடங்கிப் போனாள். அவள் முற்றிலும் நெகிழ்ந்த தருணத்தை உணர்ந்தவன், அவளை தன் மீதிருந்து வன்மையாக பிரித்து, இடது கன்னத்தில் பலமாய் அறைந்தான்.
உலகமே தட்டாமாலை சுற்ற கண்களில் பூச்சி பறக்க, இப்போது நிகழ்ந்தது என்ன என்பதே புரியாது, ஆரு திகைத்து விழித்தாள். சில நிமிடங்கள் கழித்தே அவன் தன்னை அறைந்தான் என்பது விளங்க, உடல் மொத்தமும் அவமானத்தில் சிறுத்து போனது.
அவளை அழுத்தமாய் கூட யாரும் தொட்டது கிடையாது. அவமானத்தின் வலி கண்களில் நீராய் இறங்க, சிலையாய் சமைந்து போய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரு.
“வலிக்குதா பேபி. எனக்கும் கூட ரொம்ப வலிச்சது. சரியா அறுபத்திரண்டு நாளுக்கு முன்னாடி உன்னை ப்ரோபோஸ் செய்யும் போது கிஸ் செஞ்சப்ப நீயும் என்னை இப்படித்தான் அடிச்ச. உனக்கு நான் தொட்டது பிடிக்கலைனா அதை சொல்லிட்டு விலகி இருக்கலாம். ஆனா நீ அடிச்சதை விடவும் என்னை அருகருப்பா பார்த்தது ரொம்ப வலிச்சது. லூகா எது வாங்கினாலும் ஒன்னுக்கு ரெண்டா திரும்பி கொடுத்து தான் பழக்கம்.’’ என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்றான்.
அந்த பசிய விழிகளில் தெரிந்த பளபளப்பில் ஆரு உயிரின் அடி வரை மிரண்டாள். அப்போது தான் தன் பிறந்த நாளின் போது அயல்நாட்டவன் ஒருவனை தான் அறைந்ததே மீண்டும் அவளுக்கு நினைவிற்கு வந்தது. அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், பணிப் பெண் ஒருத்தி உள்ளே வந்தாள்.
குனிந்த தலை நிமிராமல், ஆருவின் கால் கட்டுகளை விடுவித்தவள், “நீங்கள் ஓய்வறையை உபயோகித்துவிட்டு வரலாம்.’’ என்று நகர்ந்து நின்றாள். ஆரு பயத்துடன் எழுந்து தன்னை தூய்மை செய்து கொண்டு வர, உணவினை ட்ரேயில் அடுக்கி அவளுக்காக காத்திருந்தாள் அப்பெண்.
“உங்களுக்கு எது விருப்பம் என்று எனக்கு தெரியாது. அவசரத்திற்கு இந்திய வகை உணவுகள் என்று இணையத்தில் தேடி சமைத்து இருக்கிறேன். நாளை முதல் உங்களுக்கு விருப்பமான உணவு வகைகளை சமைத்து தருகிறேன்.’’ என்றாள்.
ட்ரேயில் இருந்த வேக வைத்த முட்டையையும், காய் கறிகளையும், துண்டு செய்யப்பட்டிருந்த பழங்களையும் கண்டவள், “எனக்கு இதுவே அதிகம்…’’ என்றாள் உள்ளே போய்விட்ட குரலில்.
நிமிர்ந்து பார்த்த பணிப்பெண் தன் நீல நிற விழிகளால் அவளை பாவமாக பார்க்க, “இது எந்த இடம்.’’ என்றாள் ஆங்கிலத்தில். “உங்களின் எந்த கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லக் கூடாது என்பது கட்டளை.’’ என்றாள் குனிந்த தலையை நிமிர்த்தாமல்.
பசியில் மயக்கம் வரும் போலிருக்க, தனக்கு எதிரே இருந்த உணவினை வேக வேகமாய் உண்டாள். அவள் உண்டு முடித்ததும், பணிப்பெண் அவளின் கால்களை கட்டிலோடு அவள் திமிர திமிர பிணைத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினாள்.
சற்று நேரம் அந்த கட்டை விடுவிக்க போராடி, அது முடியாமல் உள்ளமும் உடலும் தளர ஆரு அப்படியே உறங்கிப் போனாள். தன் அலுவலக அறையில் இருந்த திரையில் ஆருவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்த லூ, “ஐயம் சாரி மை டியர் ஏஞ்சல்…’’ என்று அவளிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தான்.
அடுத்த நாள் காலை, பணிப் பெண் வந்து அவளை விடுவித்து விட்டு, குளித்து வர சொன்னாள்.தற்சமயம் ஆர்ப்பாட்டம் எதையும் செய்யாது தப்பிக்கும் மார்க்கத்தை கண்டறிய வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்து கொண்ட ஆரு குளித்து வர, அழகான உடை அவளுக்காக காத்திருந்தது. அதை அணிந்து கொண்டு தயாரானதும், “உங்களுக்கான உணவு காத்திருக்கிறது.’’ என்றாள்.
ஆரு அந்த பணிப் பெண்ணை பார்த்து, “உன் பெயரையாவது சொல்லலாம் இல்லையா…?’’ என்றாள். “பெல்லா…’’ என்றாள் அந்த பெண் தலையை குனிந்து கொண்டு.
பெல்லா வழிகாட்ட ஆரு உணவுக் கூடத்தினை அடைந்தாள். லூ, ரொட்டித் துண்டுகளில் ஜாமை தடவிக் கொண்டிருக்க, அவனுக்கு அருகில் புதியவன் ஒருவன் அமர்ந்திருந்தான்.
ஆரு இருக்கையை நெருங்கவும், லூ எழுந்து நின்று அவளுக்கான இருக்கையை நகர்த்தியவன், தலை குனிந்து அவள் வலக்கரம் பற்றி முத்தமிட்டான். “எங்களுடன் உணவருந்த விரும்பி அழைக்கிறேன்.’’ என்றதும் அமைதியாக அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.
அவளுக்கான உணவாக, அவள் விரும்பி உண்ணும் தேங்காய்பாலும் இடியாப்பமும் பரிமாறப்பட, கண்களில் ஆச்சர்யம் மின்ன, நிமிர்ந்து லூவை பார்த்தாள். அவள் பார்வையின் பொருள் புரிந்தவன், “உங்கள் இந்திய உணவகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன. உனக்காக ஒரு இந்திய சமையல் கலைஞரை தருவித்தேன்.’’ என்றான்.
இடியாப்பத்தை அவள் ருசித்து உண்ண, லூவின் அருகில் இருந்த புதியவன், “அந்த இந்திய நூடுல்சை எனக்கும் கொஞ்சம் பரிமாறு பெல்லா.’’ என்றான். அவள் பரிமாறியதும் ருசித்து பார்த்தவன், அதன் இனிப்பு சுவையில் மயங்கி, “ஆஹா… இந்த இந்திய நூடுல்ஸ் மிகவும் அருமையாக இருக்கிறது. இனி இதையும் நம் காலை மெனுவில் சேர்த்து விடலாம்.’’ என்று பிரெஞ்சில் லூவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவர்கள் பேசும் மொழி புரியாத காரணத்தினால் ஆரு இருவரின் முகத்தையே பார்த்திருந்தாள். “ஜேம்ஸ் பேசுவது பிரெஞ்ச். எங்களின் தாய் மொழி. இந்த உணவு நன்றாக இருப்பதாக சொல்கிறான்.’’ என்று லூ ஜேம்ஸின் வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தான்.
ஜேம்ஸ் அவளைப் பார்த்து மையமாய் தலையாட்ட, ஆரு, “ஹெலோ…’’ என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். இவர்கள் உண்டு முடித்ததும், “நீ கல்லூரி செல்ல தேவையானவற்றை எடுத்து கொள். நீ கொண்டு வந்த உடைமைகளை உன் அறையில் வைக்க சொல்லி இருக்கிறேன். மாலை நானே வந்து கல்லூரியிலிருந்து உன்னை அழைத்து கொள்கிறேன்.’’ என்றதும் தப்பிக்க கிடைத்த வாய்ப்பாக எண்ணி தன் அறை நோக்கி ஓடினாள்.
நம்பிக்கையுடன் ஓடும் அவளை கண்டு லூ மனதிற்குள் சிரித்துக் கொண்டான். அறைக்குள் நுழைந்த ஆரு அங்கு தன் பெட்டிகளை கண்டவள், வேக வேகமாக தன் அலைபேசியை அதில் தேடினாள்.
அவளின் மற்ற உடைமைகள் மடிப்பு கலையாது இருக்க, அலைபேசி மட்டும் காணாமல் போயிருந்தது. மனதை சூழ்ந்த ஏக்கத்தை முகத்தில் காட்டாமல் கல்லூரிக்கு தேவைப்படும் தோள் பையை எடுத்துக் கொண்டு ஆரு வெளியே வந்தாள்.
“நீ தேடியது இதையா…?’’ என்று லூ அலைபேசியை அவளின் கண் முன் நீட்டினான். ஆயிரம் சூரியன் ஒன்றாக உதயமானதை போல அவள் முகம் பிரகாசம் அடைய, ஆவலாய் அந்த அலைபேசிக்காய் கை நீட்டினாள்.
அதை அவளிடம் கொடுப்பதை போல நீட்டி, மீண்டும் தன்னிடமே வைத்து கொண்டவன், வில்லத்தனமாய் சிரித்துவிட்டு, “பேபி… மை பேபி. நேத்து நான் காட்டினது ட்ரைலர். நீ எதாச்சும் தப்பா செஞ்சா உனக்கு நான் படமே காட்ட வேண்டி வரும். நான் மனசையும் உளவு பாக்குற ஆளு. நேத்தே பத்திரமா நீ வந்து சேர்ந்துட்டதா உங்க வீட்டுக்கு ஆடியோ மெசேஜ் உன் வாய்ஸ்ல பேசி அனுப்பியாச்சு. இன்னைக்கு காலேஜ் போனது ப்ரேக் கிடைக்கும் போது உங்க வீட்ல எல்லாருக்கும் விடீயோ கால் பேசிடு. நீ ஒரு வார்த்தை இல்ல… ஒரு அடி தப்பா எடுத்து வச்சா கூட உனக்கு முக்கியமானவங்க உயிர் உடம்புல தங்காது.’’ என்றவன் அலைபேசியை அவளிடம் நீட்டினான்.
‘இனி எதற்கு அது எனக்கு…?’ என்ற எண்ணத்துடனே அதை வாங்கிக் கொண்டாள். இவர்கள் வெளியே வரவும் போர்சி டைகான் வாகனம் அவர்களுக்காய் காத்திருந்தது. ஜேம்ஸ் ஓட்டுனரின் அருகில் அமர, லூ, ஆருவின் அருகில் அமர்ந்தான்.
அவளின் உள்ளங்கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டவன், “இன்றைக்கு முதல் நாள் கல்லூரியில் அறிமுகப் படலம் மட்டுமே இருக்கும். நீ வடிவமைக்கும் உடைகள் வெற்று அலங்காரதையன்றி உன் உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. அதோடு உன் கலாச்சாரத்தையும் சேர்த்து நெய்து விடு. நிச்சயம் உன் ஆடைகள் கவனம் ஈர்க்கும். வெளிநாட்டவர்கள் இந்தியர்களை அறிந்து கொள்ள அதிக முயற்சி எடுப்பார்கள். அதனால் உனக்கு பொழுது சுவாரசியமாகவே கழியும்.’’ என்று முதல் நாள் பள்ளி செல்லும் சிறுமியை தந்தை மடியில் அமர்த்தி அறிவுரை சொல்வதை போல சொல்லிக் கொண்டு வந்தான்.
‘இவன் நான் வடிவமைக்கும் உடைகள் குறித்து எப்படி அறிவான்.’ என்ற எரிச்சல் எழுந்தாலும், அவனின் ஆறுதல் வார்த்தைகள் உள்ளுக்குள் தோன்றியிருந்த பதட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாய் சமன் செய்திருந்தன.
‘இன்டர்நேசனல் பேசன் அக்காடமி’ என்ற வார்த்தைகள் கம்பீரமாய் முகப்பை அலங்கரித்திருக்க, அந்த ஆடை வடிவமைப்பு கல்லூரி வந்து விட்டிருந்தது. அவளுக்கு முன் வாகனத்தில் இருந்து இறங்கியவன், அவளுக்காய் கார் கதவினை திறந்துவிட்டான்.
அவள் வெளியே வந்ததும், “டேக் கேர் மை ஏஞ்சல். மாலை உன்னை அழைத்து செல்ல நான் வருவேன். இந்த நாள் உனக்கு இனிய நாளாக அமையட்டும்.’’ என்றவன் அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து அவளை வழி அனுப்பி வைத்தான்.
‘இவன் யார்..? எதற்கு என் மேல் இப்படி அக்கறை காட்டுகிறான்…?’ என்ற கேள்விகள் வண்டாக குடைய, அவன் முத்தமிட்ட இடமோ பனியும், வெம்மையுமாய் தகிக்க ஆரு குழப்பத்தோடு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்திருந்தாள்.
அதே நொடி, ‘டார்லிங் காலிங்’ என்று அலைபேசி அலற, பதிவு செய்து வைத்திருந்த புகைப்படத்தில் ப்ரித்வீ ஆருவை நோக்கி புன்னகைத்து கொண்டிருந்தான்.