“அம்மா..நிஜமா நடக்குமாம்மா? “, என்றவள் ஒரு நொடியில் வாடி, “ஆனா கீர்த்திக்கு அது கஷ்டம் இல்லையாம்மா? வேணாம்மா அவ சம்மதிக்காம எதுவும் வேணாம். நான் அவருக்கு விவாகரத்து குடு..”, என்று சொல்லும்போதே திக்கியது.
“சாமியை வேண்டிகிட்டு அமைதியா இரு ப்ரீத்தி. இது நல்லதோ கெட்டதோ, எல்லாம் என்னோட போகட்டும்.”
கோவில் நடை சாத்தியிருக்க, வெளிப் பிரகாரத்தில் தாயும் மகளும் அமர்ந்திருந்தனர். வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவில் என்பதால் மூடுவதற்கு பத்து நிமிடம் முன் வந்து அம்மனை வணங்கிவிட்டு ஓரமாக அமர்ந்தனர். வெகு சிலரே இருந்தனர். ஐயர் நடை சாற்றவும் அவர்களும் கிளம்பிக் கொண்டிருந்தனர். கடவுள் பக்தியெல்லாம் இந்த சில வாரங்களாகக் காணாமல் போய்விட்டது கீர்த்திக்கு. ஆனாலும் அன்னை அழைத்ததால் வந்திருந்தாள்.
“கீர்த்திமா. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேட்கறியா?”
“…”
“நேத்து அப்பாகிட்ட பேசினேன். நம்மால ஒரு ஆறு லட்சம்கிட்டதான் புரட்ட முடியும். இருக்கற பத்து பவுனையும் சேர்த்தாக்கூட வாடகை தாய்க்கு ஏற்பாடு பண்ண பத்தாதுடி. விக்க, வெச்சு வாங்கன்னு நம்மகிட்ட ஒன்னும் இல்லை.”
கீர்த்திக்கும் இது ஓரளவு தெரியும்தான். அக்காவிடமும் அவ்வளவு பணம் கிடையாது. இரு முறைக்கான செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கே ஒரு முறை அவர்களும் ஒரு முறை தந்தையும் பணம் தந்ததும் அவளுக்குத் தெரிந்ததுதான். அதற்கு முன்னரும் ஏகப்பட்ட செக்கப், டெஸ்ட் என்று பல செலவு, அவள் புருஷன் ஒருவனின் வருமானத்தில். இதில் ஊரில் இருக்கும் அம்மாவிற்கும் பணம் அனுப்புகிறான்.
“அவ இப்படி ஒரு நிலைமையில வீட்டுல வந்து இருக்கும்போது, அவ எதிர்க்கவே எப்படி கண்ணு அவ வீட்டு வாரிசை அழிக்க கிளம்பறது?“ கீர்த்தி நிமிர்ந்து அன்னயைப் பார்க்க,
“முறை தவறி வந்த குழந்தைன்னாலும் அவ புருஷனோடது கீர்த்தி. அவனை பழிவாங்கறேன்னு உன் அக்கா வாழ்க்கையும் சேர்ந்து பலியாகிடப்போகுதுடி. கொஞ்சம் யோசிம்மா”, என்று கைபிடித்து சரோஜினி கேட்க, நேற்று இரவு ப்ரீத்தி வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசியது நினைவில் வந்தது.
“உயிர் போற பசியோட இருக்கவன் எதிர்லையே, சாப்பாடு பிடிக்கலைன்னு கொண்டு போய் சாக்கடையில போடறது மாதிரிடி நாம குழந்தை அழிக்கறோம்னு சொல்றது . உனக்கு பிடிக்காத சாப்பாடுதான் அதை அவகிட்ட குடுத்துட்டா அவ பிழைச்சுக்குவா. உயிரைக் காப்பாத்தின புண்ணியம் உனக்கு வந்து சேரும். நீ படிச்ச பொண்ணு கீர்த்தி. கொஞ்சம் அவ நிலைமையையும் யோசிச்சு முடிவு சொல்லுடா. யாரைன்னு நான் பார்க்க. ஆனாலும் நடந்ததெல்லாம் எதோ ஒரு காரணத்தோடத்தான் இருக்குன்னு நம்பறேன் கீர்த்தி.”
மகள் உடனே மறுப்பு சொல்லாது யோசிப்பதே போதும் என்று தோன்ற, வீட்டிற்கு அழைத்து வந்தார் சரோஜினி.
அடுத்த இரண்டு நாட்களும் மேலும் மேலும் பேசியே ஓய்ந்து போனார்கள். ஒரு சின்னப் பெண்ணை உணர்வு ரீதியாக இப்படி நெருக்கடி தருகிறோமே என்ற குற்ற உணர்ச்சி பெற்றவர்களுக்கும் இருந்தது. சிக்கலில் இருந்து தற்காலிகமாகவாவது மீள வேறு வழியில்லை. கீர்த்தியின் வாழ்க்கையை பிறகு யோசிப்போம் என்றே முடிவாகிப்போனதில் கீர்த்தியும் வேறு வழியின்றி சம்மதித்தாள்.
அடுத்து மளமளவென்று காரியங்கள் நடந்தேறின. செங்கல்பட்டில் ஒரு வீடு பார்த்து குடியேறுவது. இங்கே அக்கம் பக்கம் கீர்த்திக்கு பெங்களூருவில் வேலை கிடைத்திருப்பதால் அங்கே அவளோடு சென்று விடுவதாய் கூறிவிடலாம். வேணுகோபால் வேலையை விடப்போவதாக கூறிக்கொள்ளலாம். செங்கப்பட்டிலிருந்து அவர் தினமும் வேலைக்கு தாம்பரம் வந்து செல்வது என்று முடிவுகள் எடுக்கப்பட்டதில் எதிலும் கீர்த்தியின் தலையீடு இல்லை. இரகுராமன் அன்னைக்கு அழைத்து வாடகைத் தாய் மூலம் குழந்தைக்கு ஏற்பாடாகியிருக்கிறது என்ற தகவலைப் பகிர்ந்துகொண்டான்.
கீர்த்தி ப்ரீத்தியின் வீட்டிற்கு செல்ல நேர்ந்ததே அவளது காதல் தெரியவந்ததால்தான். இவர்கள் எல்லோரும் மறந்துவிட்டாலும், கீர்த்தியின் மனதை அதுவே நிறைத்திருந்தது. அதுவரையிலும் ஜோவிடம் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று தவித்திருந்த கீர்த்தி, குழந்தையை பெற்றடுக்க முடிவானதும் காதலை விட முடிவுசெய்துவிட்டாள். ஜோசஃப்ஃபிற்கு தான் தகுதியானவளே இல்லை என்ற எண்ணம் உறுதிப்பட்டது. தனக்கு நிகழ்ந்த கொடுமையைத் தாண்டி மீண்டும் நெருக்கம் என்பதே நினைத்துப்பார்க்க முடியவில்லை. இதில் அவன் குழந்தையை ஒன்பது மாதம் சுமந்து பெற்று வேறு கொடுத்துவிட்டு எந்த முகத்துடன் ஜோவிடம் சென்று நிற்பது?
பெற்றவர்கள் என்னவோ நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சில வருடம் கழித்து கல்யாணமாம். சிரித்துக்கொண்டாள். ஜோவிடம் கொடுத்த மனதையாவது புனிதமாக வைத்துக்கொள்ள வேண்டும். அது அவனுக்கு மட்டும்தான், எப்போதும். அந்த நினைப்புடனே காதலை முறித்துக்கொள்ள குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு சிம் கார்ட்டை உடைத்துப் போட்டுவிட்டாள்.
அடுத்த வந்த மாதங்கள் நத்தை வேகத்தில் சென்றது. செங்கல்பட்டு வீட்டருகில், பெண் பிரசவத்துக்கு மாமியார் வீட்டிலிருந்து வந்திருக்கிறாள் என்று சொல்லி வைத்தார்கள். சீர் வரிசையில் துண்டு விழவும் மாமியார் வீட்டு மக்கள் என்று யாரும் வரவில்லை . கணவனையும் பார்க்க விடவில்லை என்று இல்லாத மாமியாரை வசவு பாடினார் சரோஜினி. வேணுகோபாலனுக்கு அலுவலகப் பயணமே சரியாக இருக்க பெரிதாக யாருடனும் பழகவில்லை.
சரோஜினியே கீர்த்தி விட்டத்தைப் பார்த்தே வெறித்திருப்பது பொறுக்க முடியாது, அக்கம் பக்கம் பிள்ளைகள் சிலருக்கு ட்யூஷன் சொல்லித் தர ஏற்பாடு செய்துவிட்டார். மாதம் ஒரு முறை ப்ரீத்தி வந்து சென்றாள்.
பேறுகால உபாதைகள் மெல்ல தலை தூக்க, நடந்தது இரவில் கனவாக வருவது குறைந்தது. சில நேரம் வயிற்றை ஓங்கி அடிக்க வேண்டும் போல ஆத்திரம் பொங்கும். தன் விருப்பம் மீறி தன்னில் இத்தனை மாதங்கள் அவன் குடியிருக்கிறான், அதை வேறு பேணிப் பாதுகாக்கிறேன் என்று கழிவிரக்கம் பொங்கும். எதையுமே சொல்லவில்லை கீர்த்தி. பேச்சு அளவோடுதான் வந்தது. சுவாமி பாடல்களை போட்டுவிடுவார் சரோஜினி.
“நீ கேட்கவேண்டாம். வயித்துல இருக்க பிள்ளை கேட்கட்டும். என்னேரமும் இப்படி இருந்தா குழந்தைக்கும் பாதிக்கும். உன்னை கலகலப்பா சந்தோஷமா இருன்னு என்னால சொல்ல முடியாது கீர்த்தி. நீ நெருப்புல நிக்கறன்னா, அதைப் பார்த்து வேதனையில நிக்கறேன் நான். உன்னை அந்த நெருப்புல நிக்க சொன்னவங்கறதுல இன்னுமே குற்ற உணர்ச்சியில இருக்கேன். ஆனா சில நேரம் சில முடிவுகள் எடுத்தாகணும். இந்தா ஹார்லிக்ஸ் குடி”, என்று கொடுத்துவிட்டு செல்லும் அன்னையை எந்த வகையில் சேர்க்க என்று புரியாது அவர் சொன்னதை செய்வாள் கீர்த்தி.
கண்டிப்பாக சிசேரியன் செய்யக்கூடாது என்று திடமாக இருந்தார் சரோஜினி. அதற்கேற்ப, ஐந்தாம் மாதம் முதலே குனிந்து நிமிர்ந்து பெருக்க, துணி துவைக்க என்று கீர்த்திக்கு வேலைகள் தந்துகொண்டிருந்தார். காலை ஏழு மணிக்கெல்லாம் தந்தை அலுவலகம் கிளம்பிவிட்டால், பின்னோடே கீர்த்தியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று வருவார். அது சற்று பழைய கோவில் என்பதால் பிரகாரம் விசாலமாக இருந்தது. துர்கைக்கு விளக்கிட்டு மூன்று முறை கோவிலை சுற்றி வந்து இளைபாறிவிட்டு வருவதே காலை நடைபயிற்சி.
அவர் அம்மனுக்கு போட்ட விளக்கினாலோ இல்லை செய்த உடற்பயிற்சியின் விளைவோ, ஒரு ஞாயிறு இரவு எட்டு மணி நேர வலியின் முடிவில் ஹர்ஷிதாவின் ஜனனம் நடந்தேறியது. குழந்தையைக் கையில் வாங்கியதே ப்ரீத்திதான்.
குழந்தை பிறந்ததில் ஒரு பெரும் பாரம் நீங்கியதாகத்தான் உணர்ந்தாள் கீர்த்தி. குழந்தையைப் பார்க்கக் கூட தோணவில்லை. அடுத்து குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்று கொண்டுவந்த போது மறுத்துவிட்டாள்.
“ஏய் கீர்த்தி…கொஞ்ச நாள் பால் குடுக்கணும்டி. இல்லைன்னா உனக்கும் பிரச்சனைதான்”, சரோஜினி சொல்ல,
“இங்க பாருமா. பெத்துகுடுத்துட்டேன். இனி எங்கிட்ட எதுக்கும் வரக்கூடாது. குழந்தைக்கு பவுடர் பால் குடுக்கச் சொல்லு. எத்தனையோ வலி பார்த்தாச்சு. பால் கட்டினா பார்த்துக்கறேன்”, என்னவோ அன்றோடு உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்பது போல ஒரு ஆத்திரம்.
விவரம் புரியாது மருத்துவரும், நர்ஸ்களும் பாலை தர வற்புறுத்த, கத்தித் தீர்த்துவிட்டாள் கீர்த்தி.
சரோஜினிதான் “குழந்தையைப் பார்க்க கணவன் வரவில்லை, மாமியார் வீட்டிலுருந்தும் யாரும் வரவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறாள்”, என்று சமாளித்தார்.
அதற்கும், “அவங்க பண்றதுக்கு பிஞ்சு குழந்தை என்ன பண்ணுச்சு? உன் இரத்தம்தான இதுவும்? இப்படி தாய்ப்பால் தரமாட்டேன்னு அடம் பிடிக்கறியே?”, என்று திட்டி அவளை நெருக்கி, குழந்தைக்கு பால் புகட்ட வைத்தனர் மருத்துவமனையில்.
அங்கிருந்த ஐந்து நாட்களும் யாருடனும் பேசவில்லை கீர்த்தி. ஒவ்வொரு முடிவும் தகர்க்கப்பட்டு மற்றவர்களுக்காக அவள் மீண்டும் மீண்டும் பலியாக்கப்பட்டது மனதில் இறுக்கத்தை தந்ததோ அல்லது பிரசவ நேரத்து ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தினால் வந்த இறுக்கமோ அவளுக்கே தெரியவில்லை. ஒரு இயந்திரத்தனம் வந்து ஒட்டிக்கொண்டது. எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. குழந்தையை பசிக்கும் நேரம் கொண்டு வருவார்கள். புகட்டுவாள். அந்த நேரம் முழுதுமே அனலில் நிற்பது போல இருக்கும். மற்றபடி குழந்தை முழுதுமே ப்ரீத்தியிடம்தான் இருந்தது.
இரகுராமன் வந்திருந்தானா, குழந்தையைப் பார்த்தானா என்று கூட கேட்கத் தோணவில்லை. அவர்களும் அப்போது கூறவில்லை. பின்னொரு நாளில் வந்ததாகவும், குழந்தையைப் பார்த்து கண்ணீர் விட்டதாகவும் பேச்சுக்கிடையில் அவள் அம்மா கூறியிருந்தார். சலனமின்றி கேட்டுக்கொண்டிருந்தாள்.
வீட்டிற்கு வந்ததுமே ப்ரீத்தியிடம், “குழந்தையை எடுத்துட்டு கிளம்பிடு ப்ரீத்தி. எனக்கு இதுக்கு மேல முடியாது”, என்று கூறி முடிக்கவில்லை, பக்கத்து வீட்டு மாமி ஆரத்தி தட்டோடு வந்துவிட்டார்.
ப்ரீத்தியிடம் குழந்தை இருக்க, கீர்த்தியையும் நிற்க வைத்து ஆலம் சுற்றி வீட்டுக்குள் அழைத்துக்கொள்ள “உனக்குத்தான் சீமந்தம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்ட, குழந்தைக்காவது தொட்டில் போடு கீர்த்தி.” என்று கூற சங்கடமாக சிரித்து வைத்தார் சரோஜினி.
“கொஞ்சம் பொறுத்துக்க கீர்த்தி, பதினோறாம் நாள் குழந்தைக்கு தலைக்கு ஊத்தி வீட்டுக்கு அழைச்சிக்கலாம். இப்ப குழந்தையை ப்ரீத்தி எடுத்துட்டு போயிட்டா இங்க இருக்கவங்ககிட்ட என்ன சொல்றது?“ , சரோஜினி கேட்க கீர்த்தி முழித்தாள்.
“ஒரு மாசம் ஆனதும், உன் உடம்பு கொஞ்சம் தேறினதும் …”, என்று எதோ சொல்ல கீர்த்தி காதில் எதுவும் விழவே இல்லை.
அடுத்த ஒரு வாரம் வேலை தேடுவதில் மும்மரமாக இருந்தாள். பத்தே நாட்களில் திருநெல்வேலியில் ஒரு தனியார் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது.