அத்தியாயம் – 4 

ப்ரீத்தியை வீட்டிற்கு அழைத்து வந்தபின் நடந்ததைக் கூறவும் சரோஜினியும் கலங்கிவிட்டார். அவள் மாமியாரை வண்ண வண்ணமாகத் திட்டி முடித்தார். 

“இருக்காளா அவ? நான் போய் நாக்கை புடுங்கற மாதிரி கேட்டுட்டு வரேன்”, என்று கிளம்ப, “இல்லைமா. தெரிஞ்ச ஆட்டோவ பிடிச்சு பஸ் ஏத்திவிட சொல்லி  அனுப்பிட்டுதான் அப்பாவை கூப்பிட்டாரு. பேசாம நானே விவாகரத்து குடுத்துடறேன். ஆனா இங்க உங்களுக்கு பாரமா வந்துடக்கூடாதுன்னு பார்க்கறேன். ஒரு வேலையை தேடிக்கணும்.“ 

அவள் பாட்டு பேசிக்கொண்டே போக, “ப்ரீத்தி! கண்டதையும் யோசிக்காம அமைதியா இரு. உன் மாமியா என்ன பேசினாலும், உன் புருஷன் உன்னை விட்டுக்குடுக்காமத்தான இருக்கார்? அப்பறமென்ன?” 

சரோஜினியின் கேள்வியில் அவரைப் பாவமாகப் பார்த்தவள், “அதுனாலயே இன்னும் கஷ்டமா இருக்குமா எனக்கு. அவரை என் எதிர்க்கவே எப்படி பேசினாங்கத் தெரியுமா?”, என்று கேவியவளை அணைத்துக்கொண்டு அமர்ந்தார் சரோஜினி. 

“யாரு கண்ணு பட்டதோ தெரியலையே. என் பொண்ணுங்க இரண்டு பேரு வாழ்க்கையுமே இப்படி கேள்விக்குறியா நிக்குதே தெய்வமே”, என்று அவர் பங்குக்கு அரற்றினார். 

இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் அமர்ந்திருந்த கீர்த்திக்கு மனதைப் பிசைந்தது. இரவு கீர்த்திக்கு துணையாகப் படுப்பார் சரோஜினி. இப்போது பெரிய மகளுக்கும் காவல் காக்க வேண்டும்.  தனியாக விட பயமாக இருந்தது. 

கீர்த்தியே, ப்ரீத்தி என்னுடன் படுத்துக்கொள்ளட்டும் என்றுவிட்டாள். ப்ரீத்தியின் திருமணம் முடிந்து, ஓரிரு முறை மட்டுமே இருவருமாக இந்த அறையில் இருந்தது. கணவனோடு வந்தால், பெற்றவர்கள் அவர்களது அறையை கொடுத்துவிடுவார்கள். 

அன்று மடிப்பிச்சை கேட்டு மன்றாடிச் சென்ற பின்னர் இன்றுதான் வருகிறாள். அதுவும் இப்படி ஒரு நிலையில். ஆனாலும் இருவருக்கும் பேச்சு தேவைக்கு மட்டுமே இருந்தது. 

“மேலே படுத்துக்கவா, இல்லை இங்க கீழ படுக்கவா கீர்த்தி?” 

“இல்லக்கா, மேலையே படு. அம்மாவும் மேல என் கூடத்தான் படுப்பாங்க. தூக்கத்துல அழுதா, உடம்ப முறுக்கினா உடனே எழுப்பிவிட்டுரு”, என்று சொல்ல ப்ரீத்தி முகம் வாடிப் போனது. 

“இன்னும் தூக்கத்துல பயந்து எழுந்துக்கறியாடி?”, என்ற கேள்வியில், “ம்ம்… ஐம்பது நாள் ஆனாலும் விட்டொழிய மாட்டேங்குது என்றாள் கீர்த்தி வேதனையாக. 

அதில் மூச்சை இழுத்த ப்ரீத்தி, “ஏய்… நாளை எண்ணிகிட்டு இருக்காதே. முடிஞ்சவரை கொஞ்ச கொஞ்சமா நினைக்காம இரு. நாளாக..” என்று பேசிக்கொண்டே போனவளை இடைமறித்து, 

“நாளை எண்ணி சொன்னது டாக்டர். இன்னும் மூணு நாள்ல திரும்ப போகணும். எவனையோ நம்பி புள்ளையை வாங்கிட்டு வந்து ஏமாந்து நிக்கறேன்னு வேஷம் போடணும். அந்த டாக்டர் குடுக்கற லெக்சரெல்லாம் வாயை மூடிட்டு கேட்டுக்கணும். இதுல என்னத்த மறக்கச் சொல்ற என்னை? “ 

அதில் அமைதியான ப்ரீத்தி, தயக்கமாக, “திரும்ப எதுக்கு வர சொன்னாங்க?” என்று கேட்க, “ டி அன்ட் சி பண்ணத்தான். செக் பண்ணிட்டு டேட் ஃபிக்ஸ் பண்ணுவாங்க. அப்பறம் அன்னிக்கு காலையில போனா, சாயந்திரம் வந்துடலாமாம்”, கீர்த்தி பேசப் பேச ப்ரீத்தி கண்கள் நீர் கோர்த்தது.  

“சரி…படு கீர்த்தி”, என்று சொல்லி விடி விளக்கை போட்டுவிட்டு வந்து படுத்தாள். 

தூக்கம் இழுத்துச் செல்லும் நேரம், லேசாக கீர்த்தியின் வயிற்றின்  மீது கை பட, “ஏன் தங்கம் என் வயித்துல வந்திருக்கக் கூடாதா நீ? பொக்கிஷமா பொத்தி வெச்சிகிட்டு இருப்பேனே. அங்க உன் அப்பா உன்னை அழிச்சிடப் போறாங்கன்னு துடிக்கறாரே பாப்பா. வேணாம்னு சொல்லக்கூட உரிமை இல்லையேன்னு அழறாங்க. உன்னை யார் மறந்தாலும் நாங்க ஞாபகம் வெச்சிருப்போம் கண்ணு”, என்று மெதுவான குரலில் கிசுகிசுப்பாய் பேசியவள் ஒரு கேவலுடன் எழுந்து குளியலறை நோக்கி சென்றாள். 

கேட்டுக்கொண்டிருந்த கீர்த்தியின் கண்களில் நீர் பொங்கி வழிந்தது. குழந்தைக்காக இப்படி தவிக்கும் இவர்களை ஒதுக்கி குழந்தையை அழிப்பதா? நியாயமா? என்று மனது வாதிட்டது. இப்படி ஒரு சூழலில் தன்னை நிறுத்திய விதியை என்ன சொல்வது. 

எழுந்து அமர்ந்திருந்தாள் கீர்த்தி. சற்று நேரத்தில் உள்ளே வந்த ப்ரீத்தி, “என்ன கீர்த்தி? தூங்கிட்டுதான இருந்த, என்னாச்சு?”, என்று உள்ளே வந்தாள். 

“‘இல்லை, நீ எழுந்து போகவும் முழிச்சிட்டேன். நீ தூங்காம என்ன செய்யற?” 

“பாத்ரூம் போயிட்டு என் புருஷனுக்கு பேசிட்டு வரேன். அவரும் தூங்கலை. தூங்க சொல்லிட்டு வந்தேன்” 

பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள் கீர்த்தி. “கீர்த்தி, உன் வலியும் வேதனையும் ரொம்ப பெரிசு. ஆனா அவரும் கஷ்டப்பட்டுகிட்டுதான் இருக்கார். எத்தனை அவமானமா ஃபீல் பண்றாரு தெரியுமா? நானா அப்படிங்கற அதிர்ச்சியிலர்ந்தே மீளலை. எங்கிட்ட கூட வரதிலை. எதேச்சையா தொட்டாலும் சாரி கேட்கறார். நீ தப்பா நினைக்கலைல்லன்னு ஒரு நாளைக்கு பத்து தடவையாவது என்னை கேட்டுக்கறார். அன்னிக்கு அவரைப் பார்த்து உனக்கு அப்படி பானிக் அட்டாக் வந்ததைப் பார்த்துட்டு அப்படியே நொந்துபோய் ஒடுங்கிட்டார். எப்படி சிரிச்சு வளைய வந்த பிள்ளை எங்கூட உனக்காக ஏந்திக்கிட்டு வந்து ஆர்க்யூ பண்ற பிள்ளையை இப்படி பயப்படற அளவுக்கு கொண்டுவந்துட்டேனேன்னு ரொம்ப ரொம்ப வேதனைபட்டார் கீர்த்தி. இப்படி ஒரு பழி என் மேல வந்துடுச்சேன்னு குற்ற உணர்ச்சியில ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுறார்.”  

மடங்கியிருந்த முட்டிகளின் மத்தியில் தலையை கவிழ்ந்திருந்தாள் கீர்த்தி.  ஒரு வகையில் உண்மைதான், இரகுராமன் இந்த விடயம் நடக்கும் முன்னர் வரை நல்ல மனிதன்தான். ஒரு  முறை கூட அவனிடம் மாறுபட்ட பார்வையை கீர்த்தி பார்த்ததில்லை. சகஜமாக அவனிடம் பழகுவாள்தான். அவனது தவறு தன்னிலை மறந்து குடித்ததோடு, போதை மாத்திரையையும் எடுத்துக்கொண்டு வீடு வந்தது. யாரோ அவன் குழந்தையின்மையை குத்திக்காட்டி கேலி செய்ததில் தண்ணியடித்து துக்கத்தை தணிக்கச் சென்றானாம். தனியாகப் பார்த்தால் தவறில்லைதான். ஒரு வேளை அன்று கீர்த்தி வீட்டில் இல்லாதிருந்தாலும் பெரிதாக ஒன்றும்  நடந்திருக்காமல் போயிருக்கலாம். அட குறைந்த பட்சம் ப்ரீத்தி தூக்க மாத்திரை எடுக்காதிருந்தால் கூட இதை தடுத்திருக்கலாம். என்னவோ அவள் கெட்ட  நேரமும் அவனது கெட்ட நேரமும் நேர்கோட்டில் வந்துவிட்டது. தவறே செய்யாது தான் பழியை அனுபவிக்கும்போது,  செய்த தவறுக்கான பழியை அவன் அனுபவிக்கிறான். அந்த வகையில் கீர்த்திக்கு இரக்கம் தோன்றவில்லை. 

அங்கே அவளைப் பெற்றவர்களும் தூக்கமின்றித்தான் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். 

“என்னங்க? நீங்க சொன்னா சின்னவ கேட்டுக்குவாங்க. ப்ரீத்தி இப்படி கஷ்டப்படறாளே, அவளை வெச்சிகிட்டே குழந்தையை அதுவும் அவ புருஷன் குழந்தையை அழிக்க எப்படிங்க போறது?” 

“என்ன பேசற சரோ? கீர்த்தி வாழ்க்கையை யோசிடி! நடந்தது தெரிஞ்சு கல்யாணம் பண்ணிக்க ஒருத்தன் கிடைக்கறதே கஷ்டம். இதுல பிள்ளை வேற பெத்து..”, தலையை மறுப்பாக ஆட்டினார். 

“இரண்டாம் தாரமாத்தான் பார்க்கணும்.  ஏற்கனவே கட்டிக் குடுத்தவ வாழ்க்கையை முதல்ல பார்க்கணுமேங்க. இல்லை பேசாம கீர்த்தியை மாப்பிள்ளைக்கே கட்டி குடுத்துடலாமா?”, சரோஜினி கேட்க, 

“சீ… என்ன பேச்சு பேசற? இதுக்குத்தான் சீரியல் எல்லாம் பார்த்து தொலையாதேன்னு சொல்றேன்!”, வேணுகோபாலன் கடிந்தார். 

“இன்னிக்கு பேப்பர் படிக்கலையா? வடக்க உ.பி.ல ஒரு ஜட்ஜ் நீ கெடுத்த பொண்ணையே கட்டிக்கணும்னு தீர்ப்பு சொல்லித்தான் குற்றவாளியை ஜெயில்லர்ந்து பரோல்ல அனுப்பியிருக்காராம். வந்துட்டார் என்னை குத்தம் சொல்ல”, சரோஜினி  நொடித்தார். 

அதைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்ட வேணுகோபாலன், “இந்த நினைப்பை விட்டொழி சரோஜினி. நீ சொல்றது சரி வராது” என்றார் முடிவாக. 

“சரி வேற என்ன பண்ணப்போறீங்க? கீர்த்திக்கு அபார்ஷன் பண்ணிட்டா மட்டும், பின்னாடி தெரிய வந்தா? இல்லை தெரியலைன்னே வெச்சிக்குவோம். ப்ரீத்தி வாழாம இங்க வந்து இருந்தா, கீர்த்திக்கு எப்படிங்க சம்மந்தம் அமையும்? ஒரு குறையும் இல்லாதப்பவே ஆயிரம் கேள்வி வரும். “  

சரோஜினி நிதர்சனத்தை கூறினார். 

“ப்ரீத்தி சொன்ன மாதிரி எங்கேயாவது போய் குழந்தையை பெத்து அவகிட்ட குடுத்துடலாம். ஆனா நாளபின்ன கீர்த்திக்கு அவ குழந்தைன்னு தோணாம இருக்குமா? “ வேணுகோபாலன் கேட்க, 

“கீர்த்திக்கும் கல்யாணம் ஆகி குழந்தைன்னு பொறந்துட்டா அவ ஏங்க வேற யோசிக்கப் போறா. அப்படியே இருந்தாலும், அக்கா குழந்தை மேல பாசம்னு  நினைச்சிப்பாங்க.” என்றார் சரோஜினி. 

வேதனையோடு மனைவியைப் பார்த்தவர், “சரோ…என்னால கீர்த்திகிட்ட குழந்தையை பெத்துக்குடுன்னு சொல்ல முடியாதுடி. அந்தப்பொண்ணு அன்னிக்கு பயந்துகிட்டே அழிச்சிடலாம்தானேப்பான்னு கேட்டது கண்ணுலயே நிக்குது.  என் கருப்பை என்ன குப்பைதொட்டியான்னு அவ கேட்டது என்னை உயிரோட கொன்னுடுச்சுடி. 

முந்தானையில் வாயைப்பொத்தி அழுகையை அடக்கிக்கொண்டிருந்த சரோஜினி, ”பெரியவ அவ கால்ல விழுந்து மடிபிச்சை கேட்டதும் என் கண்ணுலயே நிக்குதேங்க? என் குடும்பம் என்னை கைவிட்டுருச்சுன்னு ப்ரீத்தி மனசொடிஞ்சு போயிடமாட்டாளா? குழந்தை வேற எவனோடதோவா இருந்தாக்கூட அழிச்சிடலாம்தான். இங்க அப்படியும் இல்லையே?”   

“அப்ப அவ குடும்பம் அவளை கைவிட்டிடுச்சுன்னு கீர்த்தி நினைக்கமாட்டாளா?”, வேதனையோடு கேட்டார் வேணுகோபாலன். 

சரோஜினிக்கு அழுகைதான் பொங்கியது. என்ன பதில் கூற முடியும்? 

“ப்ரீத்தி வேற குழந்தை பெத்துக்க பதினைஞ்சு லட்சம் புரட்ட முடியுமாங்க?” 

அதில் நிமிர்ந்தவர், “பி.ஃப், ஆஃபீஸ் லோன் அது இதுன்னு ஒரு அஞ்சு ஆறு லட்சம் புரட்டலாம். இருந்த நிலத்தையும் ப்ரீத்தி கல்யாணத்துக்கு வித்தாச்சு. வெச்சு வாங்க வீடு கூட இல்லைடி நமக்கு. இருக்கற பத்து பவுன் நகையும், கீர்த்தி ஒரு நல்ல வேலையில உட்கார்ந்தா, அதையும் சொல்லித்தான் அவளுக்கு கல்யாணம் முடிக்கணும்னு நினைச்சிருந்தேன்.” வருத்தமாக முடித்தார். 

“இன்னும் பத்து லட்சத்துக்கு ப்ரீத்தி எங்க போவா? இல்லை எல்லாத்தையும்  தொடைச்சு குடுத்துட்டாலும் இன்னும் அஞ்சாறு லட்சம் வேணும். அப்பறம் அவசரத்துக்குக் கூட எதுவும் இருக்காது. அதுதான் சொல்றேங்க, நமக்கு எல்லாம் சரி பண்ண கடவுளா பார்த்து குடுத்த வழியாத்தான் இதை பார்க்கணும். கீர்த்திக்கு நான் எடுத்து சொல்றேன். அவ உங்ககிட்ட வரும்போது நீங்க வேணாம்னு சொல்லிடாதீங்க. அது போறும். ப்ரீத்திக்கு ஒரு வழியைக் காட்டின கடவுள் கீர்த்தி வாழ்க்கைக்கும் வழியை காட்டுவார்”,முடிவெடுத்தவராகக் கூறினார் சரோஜினி.  

அடுத்த நாள் ப்ரீத்தியை தனியே அழைத்த சரோஜினி, “ப்ரீத்தி, நீ கொஞ்சம் பொறுமையா இரு. நான் அப்பாகிட்ட கீர்த்தி குழந்தையை பெத்து உங்கிட்ட குடுத்துடட்டும்னு பேசி வெச்சிருக்கேன். மனசே இல்லைன்னாலும், வேற வழி எனக்குத் தெரியலை. கட்டிக்குடுத்த உன் வாழ்க்கையை முதல்ல சரி பண்ணுவோம். கீர்த்தியை கோவிலுக்கு அழைச்சிட்டு போய் பேசிப் பார்க்கறேன். நீ தப்பா எதுவும் முடிவெடுக்காம இரு. அது போதும்.” என்றதில் ப்ரீத்தியின் முகமே ஒரு நொடி பிரகாசமானது.