அவன் சொன்னது நிஜம்தான், இன்றுதான் படம் வெளியாகியிருக்க, எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ளாமலே வந்துவிட்டனர்.
படம் தனக்கு பிடிக்கவில்லை, வெளியில் காத்திருக்கிறேன் என சொல்லி கிளம்பி விட்டாள் மிதுன்யா. ஜீவாவுக்கு அழைத்து சொல்ல, “நான் அங்கேருந்து கிளம்பிட்டேன், காச வேஸ்ட் பண்ணாத மிது, போ போ திரும்ப சினிமா ஹால்குள்ளேயே போ” என்றான்.
“ரொம்ப தூரம் போயிருக்க மாட்டீங்கதானே, திரும்ப வாங்க” என அழைத்தாள்.
“இந்த டிராஃபிக்ல… சான்ஸே இல்ல மிது. நான் யூ டர்ன் போட்டு அங்க வந்து சேரவே முக்கா மணி நேரம் ஆகிடும். வேறஒருமுக்கியவேலைசெய்ய பிளான் பண்ணிட்டேன்…” என அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அழைப்பை துண்டித்து விட்டாள்.
அவன் மீண்டும் அழைக்க, மூன்றாவது அழைப்பைத்தான் ஏற்று பேசினாள்.
“யம்மாடி! இவ்ளோ கோவம் வருமா உனக்கு?” எனக் கேட்டான்.
“பின்ன, வர முடியாட்டா கூட இதமா பதமா சொல்லணும். இப்படியா மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்வாங்க. லவ் பண்ண ஆரம்பிச்சு மூணு மாசத்துக்குள்ளவே இப்படி”
“இப்ப என்ன செய்யணும்னு நீயே சொல்லு”
“எப்படியும் என்னை பார்க்கிறதுதானே உங்களோட ஃபர்ஸ்ட் பிளான்? அப்ப இப்போ பார்க்க போற வேலையை அப்புறம் கூட பார்த்துக்கலாம். டென் மினிட்ஸ் டைம் தர்றேன், அப்புறம் நான் ஹாஸ்டல் கிளம்பிடுவேன்” என உறுதியாக சொல்லி விட்டாள்.
கால் மணி நேரத்தை கடந்தும் அவன் வரவில்லை. வாகன நெரிசலில் நேரம் எடுக்கும்தானே என கருதி அவளும் பொறுமையாக, மாலின் ஐந்தாவது தளத்தில் காத்திருந்தாள்.
அரை மணி நேரத்தில் அந்த இடம் வந்த ஏதோ நண்பர்கள் கூட்டத்தினர் எதுவோ சோகமாக பேசிக் கொண்டனர். அவர்கள் பேசிக் கொண்டதை வைத்து மாலிற்கு வெளியில் ஏதோ விபத்து நடந்ததை தெரிந்து கொண்டாள்.
“அப்படி என்னதான் அவசரமோ, உயிர் பொழைக்கிறது கஷ்டம்தான் இல்லை?” என்றாள் ஒரு பெண்.
மிதுன்யாவிற்கு ஏற்பட்ட பயத்தில் கை கால் எல்லாம் வெள வெளத்து விட்டது. பதட்டத்தில் கைப்பேசியை எடுத்து ஜீவாவின் எண்ணிற்கு அழைக்கவே அத்தனை சிரமப்பட்டாள்.
எப்படியோ அவனுக்கு அழைக்க, ரிங் செல்லவே இல்லை. கீழே சென்று பார்க்கலாம் என நினைத்து எழுந்தவள் விரைந்து நடக்க, அவளின் கை யாராலேயோ பிடிக்கப் பட்டது.
திரும்பிப் பார்க்க ஜீவாதான் என தெரிந்தது. அவளுக்கு அழுகை வெடித்து வர, வாயை மூடி அழுகையை அடக்கினாள்.
“என்னாச்சு மிது?” என அவன் கேட்கவும், ஒரு கையால் அவனது கன்னத்தை பிடித்துப் பார்த்து, நிஜமாகவே ஜீவாதான் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டவள் அவனை நெருங்கி அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
சூடாக காபி வாங்கிக் கொடுத்து அவளை நிதானமாக்க முயன்றான். எதனால் தனக்கு இந்த பயம் என்பதை சொன்னாள்.
“அதான் உன் கண்ணு முன்னாடியே கல்லு மாதிரி நான் இருக்கேனே” என்றான்.
“நான் அப்படி டென் மினிட்ஸ்னு டைம் லிமிட்லாம் உங்களுக்கு கொடுத்திருக்க கூடாதுதானே, ஏதும் ஆகாதது ஓகே, ஆகியிருந்தா?” எனக் கேட்டு தலை குனிந்து கொண்டாள். மீண்டும் அவளுக்கு அழுகை வந்தது.
ஒன்றும் சொல்லாமல் அவளது கையை மட்டும் ஆறுதலாக பிடித்துக் கொண்டான்.
அவளாகவே தெளிந்து நிமிர்ந்தவள், “ அப்படி என்ன அவசர வேலையா போனீங்க?” எனக் கேட்டாள்.
நடன இயக்குநர் பங்கஜ்தான் வர சொல்லியிருந்தாராம். பிரபலமான தொலைக்காட்சியில் நடன போட்டியின் புதிய சீசன் தொடங்க இருக்கிறதாம், அதில் போட்டியாளராக பங்கேற்ப போகிறானாம் ஜீவா, அதற்காகத்தான் சென்றதாக சொன்னான்.
வியப்பு மேலிட பார்த்தவள், “நிஜமா அதுல பார்ட்டிஸிபேட் பண்ண போறீங்களா?” எனக் கேட்டாள்.
“பொய்யா வேற பார்ட்டிஸிபேட் பண்ணுவாங்களா? அடுத்த வாரக் கடைசில சென்னைல ஆடிஷன் நடக்க போகுது, நேம் ரெஜிஸ்டர் பண்ண போயிதான் போகாமபாதிவழியிலேயே உன்னை பார்க்க திரும்ப வந்திட்டேன். நாளைக்கு பண்ணனும்” என்றான்.
“அப்ப ஜாப் போறது? இந்த காம்படீஷன் முடியவும் போவீங்களா? இல்லை ஜாப் போயிட்டே இத செய்ய போறீங்களா? எனக்கு குழப்பமா இருக்கு”
“என்ன ஜாப்? என்னால நாள் முழுக்க கம்ப்யூட்டரை கட்டிகிட்டு அழ முடியாது மிது, எப்பவுமே என் கனவா இன்ஜினியரிங் இருந்தது இல்லை. வாரம் முழுக்க ஸ்ட்ரெஸோட வேலை பார்த்திட்டு வீக் எண்ட்ல ஜாலி பண்றதுனு… அது இல்லை என் ஆசை” என்றவனை மிரட்சியாக பார்த்தாள்.
“அப்புறம் ஏன்டா படிச்சேன்னு கேட்குறியா? ஆச்சுவலி ஸ்கூல் முடியவுமே அம்மாட்ட தெளிவா சொல்லிட்டேன், டான்ஸதான் என் ப்ரொஃபஷனா எடுக்க போறேன்னு. படிப்புதான் முக்கியம்னு அம்மா நினைச்சாங்க. அம்மா சொன்ன எதையும் கேட்காம இருந்ததே இல்லை நான். அவங்களுக்கு அவங்க பையன் இன்ஜினியரிங் படிக்கணும், அதனால படிச்சேன்.. எத செஞ்சாலும் ஏனோ தானோன்னு செய்றது என் பழக்கம் இல்லை, ஸோ… கையில இப்போ இன்ஜினியரிங் டிகிரி இருக்கு” என சாதாரணமாக பேசினான்.
“காம்படீஷன் முடிஞ்சதும் அடுத்து என்ன பண்றதா இருக்கீங்க?” உள்ளே பயம் பரவக் கேட்டாள்.
“பங்கஜ் மாஸ்டர் அவர்கிட்டேயே ஜாயின் பண்ணிக்க சொன்னார், அத பத்தி நான் இன்னும் யோசிக்கல”
“அதாவது சினிமால ட்ரை பண்ண போறீங்க?”
ஆமாம் என தலையசைத்தான்.
“என்கிட்ட நீங்க சொல்லவே இல்லை” என சின்ன கோவத்தோடு சொன்னாள்.
“டான்ஸ் என்னோட பேஷன்னு உனக்கு தெரியாதா?”
தலையை பிடித்துக்கொண்டாள். அவளை குழப்பமாக பார்த்தவன், “என்ன மிது?” எனக் கேட்டான்.
“எப்படி ஜீவா சரியா வரும்? என் வீட்ல எப்படி ஒத்துப்பாங்க? சினிமால சம்பந்த பட்டவங்களோட மகனுக்கு பொண்ணு கொடுப்பாங்களான்னு ஏற்கனவே பயந்திட்டு இருக்கேன், இப்போ நீங்களே… ஜீவா ப்ளீஸ், நம்ம ஃப்யூச்சருக்காக சொல்றேன், நல்ல வேலை தேடிக்கோங்க, நல்ல பொசிஷனுக்கு வாங்க. இல்லைனா…”என மேற்கொண்டு பேசாமல் நிறுத்தினாள்.
“இல்லைனா… இல்லைனா என்ன மிது?” அவனுக்கும் லேசாக கோவம் வந்தது.
“நானா, டான்ஸான்னா என்ன சொல்வீங்க ஜீவா?”
“சென்ஸிபிலான கேள்வியா கேளு”
“நான் இவ்ளோ எடுத்து சொல்றேன், அப்போவும் யோசிக்கிறேன்னு கூட சொல்ல மாட்டீங்களா?”
“எதுக்கு யோசிக்கணும்? என்னால நான் ஆசை பட்ட மாதிரி வேலை செய்யவும் முடியும், ஆசை பட்ட பொண்ணு வீட்ல சம்மதம் வாங்கவும் முடியும்” என்றான்.
“என் வீட்ல உள்ளவங்கள பத்தி எனக்குதான் தெரியும் ஜீவா, அவங்க உங்கள வேணாம்னு சொல்ல நீங்களே காரணத்தை கொடுக்க போறீங்களா?”
“மிது… அவங்க அப்புறம், நீ சொல்லு, நீயே என் கனவுக்கு குறுக்க நிப்பியா?”
“உங்க கனவு இதான்னு எனக்கு முன்னாடியே தெரியாது ஜீவா?”
இருவரும் பேசிக் கொள்ள ஆரம்பித்த சமயத்தில் என்ன உறவு தங்களுக்குள் என்பது பற்றியே நிறைய அலசினார்கள், பின் பெரும்பாலும் இணைய வழி டியூசன் வகுப்பாகத்தான் இருந்தது.
நன்றாக படிப்பவன் அதே துறையில்தான் வேலை பார்க்க போகிறான் என்பதே அவளின் நினைவு, அவனும் அவ்வப்போது நடனம் பற்றி சிலாகித்து பேசயிருக்கிறான்தான். ஆனால் படிப்பை முடித்த பின்தான் என்ன செய்ய வேண்டுமென இவனுக்கே தெளிவு வந்திருக்க, இதுதான் திட்டம் என முன்னரே எப்படி இவளிடம் சொல்லியிருக்க முடியும்?
“புரியலை மிது, முன்னாடியே தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்ப?” எனக் கேட்டான்.
“ஒத்து வராதுன்னு தெரிஞ்சு நான் என் கண்ட்ரோல்ல இருந்திருப்பேன்” என்றவளின் கண்களில் கண்ணீர் கோர்த்திருக்க, இவனது முகமோ சிவந்து போயிருந்தது.
“ஒத்து வராதுன்னு இப்போ சொல்ற, என் ஆட்டத்த பார்த்துதானே என்னை பார்த்த?”
“ஜீவா ப்ளீஸ், இப்ப நாம பேச பேச தப்பா போகும்” என்றவள் கைக்குட்டை எடுத்து கண்களை ஒற்றி எடுத்தாள்.
மிதுன்யாவுக்கு அழைத்தாள் வாசுகி, படத்திற்கு இடைவேளை விட்டிருப்பதாக சொன்னவள் இவளை எங்கே என விசாரித்தாள். இவள் இடம் சொல்லவும், “இதுக்கு மேல படத்த பார்க்கிற பொறுமை எங்களுக்கும் இல்லை, தலைவலி வேற வந்திடுச்சு, கிளம்பலாமா?” எனக் கேட்டாள் வாசுகி.
சரி என்றவள் ஜீவாவிடம் விவரம் சொன்னாள். அவன் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான்.
“நான் கிளம்பறேன் ஜீவா, நீங்களும் கிளம்புங்க” என சொல்லி எழுந்து கொண்டாள்.
செல்வதற்கு முன், “எங்க வீட்ல மறுப்பு சொல்ற மாதிரி எந்த காரணத்தையும் கொடுக்க மாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணியிருக்கீங்க ஜீவா. வீட்ல உள்ளவங்க சம்மதம் இல்லாம நம்ம கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லை. என்னை கஷ்ட படுத்தித்தான் பார்க்க போறேன்னு தீர்மானிச்சிட்டீங்கன்னா…” என சொல்லி நிறுத்தினாள்.
அவள் முகத்தை பாராமல் மேசையை பார்த்துக் கொண்டே, தாடை இறுக அமர்ந்திருந்தான் ஜீவா.
“என்ன செய்யணுமோ செய்யுங்க ஜீவா” என்றவள் அங்கிருந்து வேகமாக நடந்து சென்று விட்டாள்.