மதிய உணவு முடிந்து தோட்டத்து வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்கள் இளையவர்கள். லாவண்யா தான் வரவில்லை என சொல்லவும் மிதுன்யா, ஜீவநந்தன், வாசுகி, தீபா ஆகிய நால்வர் மட்டும் சென்றனர்.
கார்ட்ஸ், கேரம் போர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டே சென்றிருந்தனர். கலாட்டா செய்து கொண்டே விளையாடினார்கள். மிதுன்யாவை சீண்ட மறக்கவில்லை வாசுகி. அந்த தோழிகள் இருவருக்குள்ளும் மனஸ்தாபம்.
எதற்காக அளவுக்கு மீறி போகிறாய் என மிதுன்யாவுக்கும் அப்படியென்ன உன் விருப்பத்தை என்னிடம் ஒத்துக் கொள்ள மறுக்கிறாய் என வாசுகிக்கும் அடுத்தவர் மீது கோவம். ஆகவே இருவரும் நேரடியாக பேசிக் கொள்ள கூட இல்லை. தீபாவாலும் இவர்களை சமாதானம் செய்ய முடியவில்லை.
இதென்ன விளையாட்டு பிரச்சனையாக திசை மாறுகிறதே என ஜீவாவுக்கும் கவலை. வெயில் நன்றாக தாழ்ந்ததும் சுற்றிப் பார்ப்பதற்காக நடந்தார்கள். பெரிய தென்னந்தோப்பு, தண்ணீர் பாய்ச்சப் பட்டுக் கொண்டிருந்தது.
போர் செட்டில் குளிக்க ஏதுவாக எதுவும் கொண்டு வரவில்லை. நாளை பெண்கள் மட்டும் தனியாக வந்து நீராடி மகிழலாம் என பேசி வைத்துக் கொண்டனர். கைப்பேசியில் நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
பெண்களுக்கான ஸ்பேஸ் கொடுத்து சற்று தள்ளியேதான் நடந்து வந்து கொண்டிருந்தான் ஜீவா.
வாசுகிதான் வம்பாக அவனை அவர்களுக்கு பக்கத்தில் அழைத்து நிறுத்தி, மிதுன்யாவையும் அவனருகில் நிற்க சொன்னாள். புகைப்படம் எடுத்து தருவதாக சொன்னாள்.
மிதுன்யா சம்மதிக்காமல் தள்ளிப் போய் நின்று கொண்டாள். கடுப்பான வாசுகி அவனருகில் போய் நின்று தீபாவை புகைப்படம் எடுக்க சொன்னாள். விலகப் போன ஜீவாவின் கை பிடித்து நிறுத்தி அவனது கையோடு தன் கை கோர்த்துக் கொண்டு போஸ் கொடுத்தாள்.
பார்க்க பிடிக்காமல் வேகமாக எங்கேயோ நடந்து சென்றாள் மிதுன்யா. சற்று வன்மையாகவே தன் கையை இறுக்கியிருந்த வாசுகியின் கையை பிரித்து விட்ட ஜீவா, “திஸ் இஸ் த லிமிட் வாசுகி!” என கடிந்தான்.
“எம்மேல ஏன் கோவ படுறீங்க, நான் உங்களுக்காகத்தானே…” எனக் கேட்ட வாசுகியின் குரல் கலங்கிப் போயிருந்தது.
முகத்தை அழுந்த துடைத்து நிதானித்த ஜீவா, “வேணாமே, நான் உங்கிட்ட இந்த ஹெல்ப் கேட்கவே இல்லையே. என்னால அவளை புரிஞ்சுக்க முடியுது, வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்திருக்க நான் யாருன்னு அவ பேரெண்ட்ஸ்க்கு தெரிஞ்சு போயிட்டா அவளுக்கு எப்படி இருக்கும்? அந்த பயம் அவளுக்குள்ள ஓடிட்டு இருக்கு. எங்க விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம். இங்க நான் வரவே இல்லைனு நினைச்சுக்க, உன் ஃப்ரெண்ட் வீட்ல எப்படி என்ஜாய் பண்ணிட்டு போவியோ அப்படி மட்டும் இரு” என்றான்.
“நான் விளையாட்டாதானே இப்படி நடந்தேன்?” எனக் கேட்டாள் வாசுகி.
“மத்தவங்கள ஹர்ட் பண்ற எதுவுமே தப்புதான். உன்னோட இந்த விளையாட்டுக்கு போன நிமிஷமே ஃபுல் ஸ்டாப் வச்சாச்சு, புரிஞ்சுதா?” என பொறுமையாக சொன்னான்.
தலையாட்டிக் கொண்ட வாசுகி, மிதுன்யா சென்ற திசையை பார்த்தாள்.
“அங்க என்னடி பார்வை, நாம இப்பாலக்கா போலாம். இவரே போய் அவளை சமாதானம் பண்ணிக்குவார்” என்ற தீபா, வாசுகியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மிதுன்யா சென்ற திசைக்கு எதிர் திசையில் சென்றாள்.
தொலைவில் இருந்த தென்னை மரத்தின் மீது சாய்ந்து கொண்டு இலக்கில்லாமல் எங்கேயோ பார்த்த படி நின்றிருந்தாள் மிதுன்யா.
இவனை கண்டதும் வேறு பக்கம் திரும்பி நின்றாள்.
“என்ன நீ இவ்ளோ சைல்டிஷா இருக்க? வாசுவோட மோடிவ் தெரிஞ்சும் நீயே ஏன் பெருசு படுத்துற? உன் கோவத்துக்கான காரணம் உனக்கே சில்லியா தெரியலையா?” எடுத்தவுடன் குற்றச்சாட்டில் ஆரம்பித்தான்.
“ஆமாம் என் கோவம் சில்லியாதான் இருக்கும்!” முணு முணுத்தாள்.
அவளுக்கு முன்னால் போய் நின்றவன், “அவளை கண்டிச்சிட்டேன், இனிமே இப்படி நடக்க மாட்டா. நீங்க பண்ற கலாட்டால இன்னிக்கே கிளம்பிடலாம்னு இருக்கேன் நான்” என்றான்.
“சேச்ச, நீ நல்லாருக்கியான்னு தெரிஞ்சுக்கத்தான் வந்தேன், தெரிஞ்சதுமே நான் போயிருக்கணும். அத விட்டுட்டு…” ஒரு பெருமூச்சு விட்டவன், “மனசை கட்டுப்படுத்த தெரியாம உன்னை நேர்ல பார்க்கிற ஆசைல வந்திட்டேன். ஸாரி” என்றான்.
“ஸாரியெல்லாம் வேணாம். அக்கா வேற என்னை ஒரு மாதிரி நோட்டம் விட்டுட்டே இருக்கா. என்னை புரிஞ்சுக்காம ஓவரா வெறுப்பேத்துறா இந்த வாசுகி”
“ம்ம்… என்னால உன் சிட்டிவேஷனை புரிஞ்சுக்க முடியுது மிது” என்றவன் சிறு இடைவெளிக்கு பிறகு, “இப்ப உன்கிட்ட கேட்டு சங்கட படுத்தக் கூடாதுதான். ஆனா தெரிஞ்சுக்காம போனா என்னால ரிலாக்ஸாவே இருக்க முடியாது” என்றான்.
என்ன என்பது போல பார்த்தாள் அவள்.
“நமக்குக்குள்ள என்ன இருக்கு மிது? நான் உன்னை தேடி வந்தது சரியா? நான் ஏதோ நினைக்கிறேன், நீயும் அப்படி… இல்லை நான்… நான் எந்த வகையிலாவது உன்னை தொந்தரவு செய்றேனா? ஐ மீன்…” சொல்லத் தெரியாமல் இரு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்துக் கொண்டு வானத்தை பார்த்தான்.
“வாசுகிக்கு டவுட்ஸ் இருக்கலாம், உங்களுக்குமா?” என தேய்ந்து போன குரலில் கேட்டாள்.
இன்னும் தெளிவடையாமல் நேராக நின்று, அவளை நேராக பார்த்தான்.
“வார்த்தைல சொல்லி மனசை புரிய வச்சிட முடியுமா?” எனக் கேட்டாள்.
மெலிதாக சிரித்தவன் சிறு தயக்கத்தோடு அவளது கையை பற்றிக் கொண்டான். தளர்வாக தன் கையை அவனிடமே விட்டு விட்டவள், “இன்னும் எனக்கு படிப்பு முடியலை. உங்களுக்கு வேலை இல்லை. நாம என்ன சொந்தம்னு சரியா தெரியலை. குடும்பத்துக்குள்ள என்ன உள் பூசல்ன்னு எதுவும் தெரியலை” என்றாள்.
தன் பிடிக்குள் இருந்த அவளது கையில் விரல்களின் மென்மையை உணர்ந்து கொண்டே, “எல்லாமே ஸ்மூத்தா போனா காதலுக்கு என்னதான் மரியாதை?” எனக் கேட்டான்.
“நான் போயி யாரையும் இப்படி…” என்றவள் வெட்கப்பட்டுக் கொண்டே, “யார் மேலேயும் எனக்கு இஷ்டம் வரும்னு கனவுல கூட நினைச்சதில்லை நான்” என்றாள்.
“நான் மட்டும் என்ன… இப்படி ஒருத்தி மதுரைக்கு வருவா, கண்ண வலையா விரிச்சு விரிச்சு என்னையவே பார்ப்பா, நானே போயி வாகா அந்த வலையில விழுவேன், தப்பிச்சு போகுறதுதான் நியாயம்னாலும் விரும்பியே அவகிட்ட மாட்டி தவிப்பேன்னு முன்னாடியே தெரியுமா என்ன எனக்கு?”
“அப்படியா! நீங்க என் வலையில மாட்டிகிட்டீங்களா?” கிண்டலாக கேட்டாள்.
“கையை புடிச்சு முழுசா ஒரு நிமிஷம் கூட ஆகல, உடனே விட சொன்னா எப்படி? என் ஆயுள் முழுக்க பிடிச்சிட்டே இருப்பேன்”
கலக்கமாக அவனை பார்த்தாள். என்னவென பார்வையால் கேட்டான்.
“நமக்கு நிறைய நேரம் இருக்கு, நம்மள பத்தி நம்ம வீட்ல சொல்லும் போது…” என அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, “அவங்க மறுக்கிறதுக்கு எந்த காரணத்தையும் நான் வச்சுக்க மாட்டேன் மிது. நீ நம்மள பத்தி தைரியமா பெருமையா சொல்ற சந்தர்ப்பத்தை உருவாக்கி தருவேன்” என்றான்.