கந்தன் பிரம்மாண்டமாக ஜொலித்து கொண்டிருக்க, பூஜைகள் மிகவும் அமர்க்களமாக நடந்தது.
வானவேடிக்கை, செண்டுமேளம், உள்ளூர் வாத்தியம் என்று கொண்டாட்டமான நாளில், தேசிகனின் கனவு மொத்தமும், நடைமுறைக்கு வந்திருந்தது.
தொழில் மையத்தை ஓர் சாம்ராஜ்யமாக கட்டமைத்துவிட்டான். வருடங்கள் கடந்து, அவன் கனவு பலித்துதான் விட்டது.
“பிரசாதம் வாங்கிக்கோமா” என்று தன்வி கையில் கொடுக்க, தேசிகன் நெற்றியில் வைத்துவிட்டாள் மனைவி.
அவன் தொழில் மையத்தில் சிறிய கோவிலை கட்டியிருக்க, இன்று புதிதாக ஆரம்பித்திருந்த தொழிலை முன்னிட்டு விஷேஷ பூஜை.
மாலை கொடுக்க, மனைவி கழுத்தில் அதை அணிவித்தான் தேசிகன்.
“ஏங்க?” என்று தன்வி முறைக்க,
“அதான் போட்டுட்டானே? பேத்தி கையிலும் ஒன்னு கொடுங்கப்பா. அவளும் போடட்டும்” என்று பெரியவர் சொல்ல, தயாராக இருந்த மாலையை கொடுத்தனர்.
“அவன் ரெடியா தான் வந்திருக்கான்” என்று தேசிகனின் மாமா சொல்ல, தன்வி முறைப்பான புன்னகையுடனே கணவனுக்கு மாலை அணிவித்தாள்.
எல்லாம் முடிந்து உணவுக்கு செல்ல, “அடங்க மாட்டிங்களா?” என்று தன்வி மென்குரலில் கணவனை அதட்டினாள்.
“நைட்டுக்கு அடங்கிடுறேன்” என்றான் தேசிகன் அவளை போலவே ரகசியமாக.
“காட் உங்களோட” என்று தன்வி வேகமாக முன்னே நடந்துவிட, தேசிகன் சாதாரணமாக அவளை அடைந்து கைகளை கோர்த்துக்கொண்டான்.
“பொண்டாட்டியை பிடிச்சு வைச்சது போதும். இந்தா உன் மகளை பிடி. ஆட்டமா ஆடுறா” என்று அத்தை அதட்டி, தேசிகன் கையில் அவனின் மகளை திணித்தார்.
“என்னடா” என்று தேசிகன் மகளை ஒற்றை கையால் வாங்கி தோளில் சுமக்க,
“பலூன் தான் பிடிக்க ஓடினேன்” என்றாள் மகள் உதடு பிதுக்கி.
“நீ கேட்டுக்கு வெளியே ஓடியிருப்ப” என்று தன்வி மகளை கணித்து சொல்ல,
“ப்பா. எனக்கு பலூன் வேணும்” என்றாள் மகள் தந்தை கழுத்தை கட்டிக்கொண்டு.
“நீங்க எப்படியோ போங்க” என்று தன்வி விருந்தினர்களை கவனிக்க சென்றாள்.
சதாசிவம் வாசலிலே நின்று எல்லாரையும் வரவேற்று கொண்டிருக்க, “சார் சாப்பிடணும்” என்று வந்தான் கணேஷ். சதாசிவத்தின் எல்லாம் இவன் தான். முரளியின் தம்பி.
“வரேன் கணேஷ்” என்று உணவுண்ண செல்ல, பெரியவர்களுக்கு உணவை வைத்து கொண்டிருந்தாள் தன்வி.
பாட்டி தளர்ந்திருக்க, தேசிகனின் அத்தை அவருக்கு ஊட்டி கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம் அமர, “அவருக்கு ஸ்வீட் வைக்காத” என்று வந்தான் முரளி.
“ஒருநாள் சாப்பிட்டா என்னடா உனக்கு” என்று சதாசிவம் கடுப்பாக,
“வடையும் வைக்காத” என்றான் முரளி.
“டேய்”
“பூரியை போய் வைக்கிற” என்றும் சொல்ல, சதாசிவம் அதற்குமேல் வாயே திறக்கவில்லை.
“ண்ணா சிரிக்காதீங்க. எல்லாம் எனக்குன்னே வராங்க” என்று ராஜேந்திரனிடம் சதாசிவம் நொந்து போக,
“பாசத்துல தானே தம்பி” என்றார் அவர்.
“உங்களுக்கு தெரியாதுங்கண்ணா, நீங்க கூடத்தான் பூரி எல்லாம் சாப்பிட கூடாது. ஆனா உங்களுக்கு சின்னதா வைச்சாங்க இல்லை. எனக்கு மட்டும் அப்படி ஏதும் செய்ய மாட்டாங்க” என்று முரளியை முறைக்க,
“என்ன சார் பொங்கலும் வேணாமா?” என்று கேட்டான் அவன்.
“உன்னை கொன்னுடுவேன்டா. ஓடிடு” என்றார் சதாசிவம்.
“ப்பா. நீங்க சாப்பிடுங்க” என்று மகள் அவருக்கு சிறிது, சிறிதாக எல்லாம் வைக்க, அண்ணியிடம் ஏதும் பேச முடியாமல் முரளி நின்றான்.
சதாசிவம் அவனை கெத்தாக பார்த்தபடி உண்ண, “அண்ணி உங்களை அண்ணா கூப்பிட்டாங்க” என்று ஆள் வந்தது.
“என் மகளை கொஞ்ச நேரம் விட மாட்டாரா உன் அண்ணா” என்று சதாசிவம் நொடிக்க,
‘அவரோட நான் ஜோடியா அய்யே!’ சதாசிவம் முகம் சுருக்கியவர், “இந்த சம்மந்தியை விடமாட்டீங்களா?” என்று கேட்டார்.
இவரை சம்மந்தி என்று அழைக்க கூடாது என்று எப்போதோ சொன்னதுக்கு இன்னமும் அப்படித்தான் எல்லாம் அழைத்து கொண்டிருக்கிறார்கள்.
“சம்மந்தியை சம்மந்தின்னு தான் கூப்பிடுவோம் சம்மந்தி. உறவு முறைக்கு மரியாதை கொடுக்கணும் சம்மந்தி.” என்றார் அவர்.
“உங்களை நான் எதுவும் கேட்கலை” என்று சதாசிவம் பின்வாங்கிவிட்டார்.
சதாசிவம் மகளுக்கு சீர் கொடுக்க முடியா குறையை மருமகனுக்கு பொருட்களை வாங்கி கொடுத்தே தீர்த்து கொள்கிறார்.
இன்று மனிதர் இன்னும் கூடுதலாக இறக்கி, மொத்த அலுவலகத்தையும் அவர்தான் நிரப்பினார்.
மருமகன் சுதாரிக்கவே நேரம் கொடுக்க மாட்டார். தேசிகம் கடுப்பானால், “அப்போ என் பொண்ணுக்கு சீர் கொடுக்க விட சொல்லுங்க” என்று நிற்பார்.
அவர் சீர் கொடுத்திருந்தாலும், இந்தளவு கொடுத்திருக்க மாட்டார்!
ஆனாலும் மகளுக்கான சீர் என்பது சிறப்பு தானே. அதையும் பேரன், பேத்தி பிறந்த நேரம் அவர்களுக்காக என்று வீட்டை நிரப்பி சரிகட்டிவிட்டார்.
மகள், பேரன் பேத்திகள் பேரில் சொத்து வரைக்கும் கொடுத்தாகிவிட்டது. இருந்தும் என்னை சீர் கொடுக்க விடலை என்று மருமகனை முறைத்து கொண்டு திரிகிறார்.
தன்வி கணவனை தேடி செல்ல, “தன்வி” என்று சுஜாதா அவளின் கை பற்றிக்கொண்டாள்.
“வாங்க. எல்லாம் வாங்க” என்று அவள் புகுந்த வீட்டினரை வரவேற்றாள் தன்வி.
சுஜாதாவின் மாமனாரும் அரசியல் பின்னணியை சேர்ந்தவர் என்பதால், விழாவிற்கு வந்திருந்த அத்தனை அரசியல்கட்சி ஆட்களுடன் பேசினார்.
ராஜேந்திரன் அவருடன் நல்ல முறையில் பேச, சுஜாதாவிற்கு கண்கள் கலங்கி போனது.
கடந்த ஆண்டுகளில் இந்த அங்கீகாரம் கிடைக்காமல் அவள் மிகவும் மனவுளைச்சலை அனுபவித்துவிட்டாள்.
அவளின் பிறந்த வீட்டினருக்கு கணவன் குடும்பத்தாரிடம் பெரிதாக மரியாதை இல்லை. இன்னும் சொல்ல போனால் அவளை, அங்கு அனுப்பவே அவர்கள் விரும்பவில்லை.
பணம், வசதி, பாரம்பரியம் என்று எல்லாம் நிறைந்த கணவன் குடும்பம், சுஜாதாவிற்கு முதலில் பெருமையை கொடுத்தாலும், பின்னாளில் அதுவே அவளை உறுத்த ஆரம்பித்துவிட்டது.
கல்யாண வாழ்க்கையில் அதெல்லாம் எப்படி விளையாடும் என்ற எதார்த்தத்தை கசப்பாக உள்வாங்கி கொண்டவள் வந்து நின்றது தன்வியிடம் தான்.
அவளின் கைப்பற்றி அவ்வளவு அழுகை. நட்பு என்ற பந்தத்தை தன்வி தொடர விரும்பவில்லை.
ஆனால் தேசிகன் வீட்டு பெண் என்ற உரிமையை கொடுக்க நினைத்து, பாட்டியிடம் பேசினாள்.
தன்வி தான் அவர்கள் பேத்தி என்ற பார்வையில், பாசத்தை அள்ளிக்கொட்டியவர் பாட்டி. உண்மையான பேத்திக்கும் அந்த பாசம் கிடைக்கட்டுமே!
பாட்டிக்கும் அந்த ஏக்கம் உண்டு என்பது, சுஜாதாவை பற்றி விசாரிப்பதில் தன்விக்கு தெரியும்.
அவரின் மூலமே தேசிகனிடமும், அவன் வீட்டினரிடமும் பேசினாள் தன்வி.
“நீ தேவையில்லாத வேலை பார்க்கிற?” என்று தேசிகன் குதிக்க,
“சுஜாதா வந்து போறதுல உனக்கென்ன பிரச்சனை. நீ செய்ய நினைச்சதை அவளோட அப்பாகிட்ட இருந்து செஞ்சுக்கிட்ட இல்லை. அப்பறமென்ன” என்று சாவித்திரி தான் மருமகளுக்கு முன் நின்றார்.
“அண்ணா பொண்ணு பாசமா? அந்தாள் பண்ணதுல பாதிக்கப்பட்டது நீங்க. அதை மறந்திடாதீங்க” என்று அம்மாவிடம் கொதிக்க.
“அதுக்கும், சுஜாதாவுக்கும் சம்மதம் இல்லை. என்னை போல அவளும் இந்த வீட்டு பொண்ணு. அவ வருவா” என்று முடித்துக்கொண்டார்.
தேசிகன் அதற்காக மனைவியிடம் சில நாட்கள் முறுக்கி கொண்டு திரிந்தான் என்பது வேறு விஷயம்.
ஆனால் இப்போது சுஜாதா, “அத்தை, பாட்டி, சித்தப்பா” என்று எல்லோரையும் தேடி சென்று பேசும் போது, அவளின் ஏக்கத்தை உணர்ந்து கொண்டான்.
எப்படியும் சுஜாதாவை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்பதால், பெரியவர்களும் சுஜாதாவிடம் நல்ல முறையிலே உறவு கொண்டாடினர்.
“தன்வி” என்று சுஜாதா அடிக்கடி அவளின் முகம் பார்க்க.
“சொல்லு சுஜாதா” என்பதிலே அவளின் எல்லையை அவளுக்கு உணர்த்திவிடுவாள் தன்வி.
சொந்தம் என்பதை விட நட்பு வெகு நெருக்கமானது. அது இனி அவளுக்கு இல்லை என்பதை வருத்ததுடனே உள்வாங்கினாள்.