என்று ப்ளூடூத் ஸ்பீக்கரில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது .அதை கேட்டுக்கொண்டு இருந்தான் மாறன். தலையணை மீது தலையை வைத்து தன்னவளை எண்ணி கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தான்.
“ஏன் அம்மு என்னை விட்டுப் போன ….. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் கொஞ்சமாச்சும் நினைச்சியா… நீ இல்லாத வாழ்க்கையை எனக்கு வாழவே பிடிக்கல அம்மு… நீ போகும்போது என்னையும் கூட்டிட்டு போய் இருக்கலாம் இல்ல ஏன் இப்படி என்ன தனியா புலம்ப வச்சுட்டு போயிட்ட….” என்று தன் கையில் உள்ள தொலைபேசியில் அவளின் புகைப்படத்தை பார்த்து அழுந்து புலம்பினான்.
கதவு தட்டும் சத்தம் கேட்டது”மாற… மாற…எழுந்திரு கதவ தொற…”என்று அவன் அம்மா புவனா அழைத்தார். தன் எண்ண போக்கில் படுத்திருந்த மாறன் அம்மாவின் அழைப்பில் சுய நினைவிற்கு வந்தவன் கதவை திறந்தான்.
கலைந்த முடி, முகத்தில் அடர்ந்த தாடி ,உடல் எலும்பை ஒட்டிய சதை,இரவு முழுவதும் அழுததால் கன்னங்கள் வீங்கி கண்கள் சுருங்கி தன் மாறனா இது என்று வருந்தினார் புவனா. அவனைப் பார்க்க பார்க்க மனம் இன்னும் வேதனை கொண்டது.
“டீ குடிக்க வாடா” என்று அழைத்தார் அவனை ” ம்… போங்கம்மா வரேன்” என்றான். எப்பொழுதும் புன்னகையுடன் பேசும் மகனா இது என்று வருந்தினார். தன்மகன் தனக்கு பழையபடி வேண்டும் என்று விரும்பினார் ,ஆனால் அது எப்படி என்று தான் தெரியாமல் குழம்பினார்.
அவருக்கும் தெரியும் மாறன் அமுதினியின் மீது எவ்வளவு காதல் கொண்டிருந்தான் என்று அமுதினியின் இழப்பை அவராலேயே ஏற்க முடியவில்லை அப்படி இருக்கையில் மாறன் எப்படி இருப்பான்.
ஆனால் இழந்ததை எண்ணி தன் மகன் இப்படி இருப்பது அவருக்கு வருத்தத்தை கொடுத்தது. அவனை பழைய மாறனாக பார்க்க மனம் ஆசை கொண்டது.
முகம் கழுவி வந்தவனிடம் டீயை கொடுத்தவர், அவனிடம் இன்று பேசிவிட வேண்டும் என்று எண்ணினார். “மாறா நான் கொஞ்சம் உன் கிட்ட பேசணும் “என்றார். அவனுக்கும் தெரியும் அம்மா எதை பேச வருகிறார் என்று, ஆனால் அதைக் கேட்க விருப்பமில்லாமல் “அம்மா ஒரு சின்ன கிளைன்ட் மீட்டிங் இருக்குமா அப்புறம் பேசலாமே “என்று அதனை தவிர்த்தான். ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை புரிகிறான். தினமும் வேலைக்கு செல்பவன் தான் ஆனால் ஒரு வருடம் காலமாக ஒர்க் ப்ரம் ஹோம் வேண்டி வீட்டிலேயே வேலை செய்கிறான்.
வெளியிலேயே சுற்றி திரிந்தவன் இப்பொழுது வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்வதில்லை அறையை அடைத்துக் கொண்டு அதிலேயே இருப்பான் சனி ஞாயிறு மட்டும் வெளியில் செல்வான் ஆனால் அங்கேயும் தனிமையிலேயே அவளிடம் இருந்த நினைவுகளுடனும் அவளை சந்தித்த இடங்களுக்குச் சென்று அலைவான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை அவன் நண்பன் ரமேஷ் வீட்டிற்கு வந்தான். “அம்மா எங்க மாறன் ?” என்று கேட்டான் “உள்ளதாம்பா இருக்கான் போய் பாரு உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்றார் புவனா.
” சரிம்மா “என்று மாறனை பார்க்க அவன் அறைக்கு சென்றான்.
படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டு அவளை நினைத்தபடி கண்ணீர் விட்டுக்கொண்டு பாடலை கேட்டுக் கொண்டிருந்தான். ஆள் வரும் அரவம் கேட்டு எழுந்தான் மாறன்.
“வாடா என்னடா இந்த பக்கம்” இன்று கேட்டான்.”ஒன்னும் இல்லடா சும்மா தான் வந்தேன்”என்று அவன் அருகில் அமர்ந்தான்.
எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் மாறனை பார்க்கையில் வருந்தினான். ஏனென்றால் மாறன் சிறிது நேரம் கூட அமைதியாக இருக்க மாட்டான் ரமேஷ் அவனின் நெருங்கிய நண்பன் எப்பொழுதும் அவனை கிண்டல் செய்தும் பேசிக்கொண்டே இருப்பவன். ஆனால் இப்பொழுது அமைதியாக இருக்கும் தன் நண்பனை பார்க்கையில் அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனை எங்காவது வெளியே கூட்டிச் செல்லலாம் என்று எண்ணினான்.
“வாடா மச்சான் இங்க வெளியே போயிட்டு வரலாம் ஏன்டா இப்படி வீட்டிலேயே இருக்க “என்று தன் நண்பனின் நிலையை பார்த்து வருந்தினான்.
“இல்லடா நான் வரல நீ போயிட்டு வா எனக்கு வேலை இருக்கு”என்றும் மறுத்தான்.”ஏன்டா இன்னும் அவளை நினைச்சுட்டு இப்படி உன்னை வருத்திக்கிற புரிஞ்சுக்க மாறா உனக்காக நான் அம்மா எல்லோரும் இருக்கோம் நீ இப்படி இருக்கிறத பார்த்து இன்னும் அம்மா கஷ்டம் தான் படுறாங்க”என்றான். பதில் எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தான் மாறன்.
“என்னதான்டா உனக்கு பிரச்சனை ஏண்டா இப்படி உன்னையும் கஷ்டப்படுத்திட்டு அவங்களையும் கஷ்டப்படுத்துற ஏன் மாறா இப்படி இருக்க என்னால உன்ன பாக்க முடியல டா”என்று மனம் கலங்கினான்.
“என்னடா பண்ண சொல்ற என்னால அதுல இருந்து வெளியே வரவே முடியல ஒவ்வொரு நிமிஷமும் நான் அவள தான் நினைச்சுட்டு இருக்கேன் அவ என்ன விட்டு போயிட்டாங்கறத என்னால நம்ப கூட முடியல டா எங்க பாத்தாலும் அவள் மட்டும்தான் என் கண்ணுக்கு தெரிகிறா”என்று உடைந்து அழுதான்.
“ஒரு சில நேரம் எல்லாம் எங்கேயாவது போய் செத்துரலாம்னு தோணும்டா ஆனா அவளுக்கு அது பிடிக்காது டா தற்கொலை என்னைக்குமே ஒரு முடிவு இல்லன்னு என்கிட்ட பல தடவை சொல்லி இருக்கா “
“மத்த பசங்க மாதிரி நான் குடிக்கு கூட அடிமை ஆகல டா ஏன் தெரியுமா அவளுக்கு குடிக்கிறவங்கள பிடிக்காது அதனால தாண்டா ஒருவேளை நான் குடிச்சா என்னையும் அவளுக்கு புடிக்காது இல்ல அதுதாண்டா.. அவ இல்லாம என்னால நிம்மதியா கூட இருக்க முடியலடா என்ன சுத்தி அவளோட வாய்ஸ் தான் கேட்டுக்கிட்டே இருக்கு அவ என் கூடவே இருக்கிற மாதிரி தான் இருக்கு அவ ஏன்டா என்ன விட்டு போகணும் அப்படி என்னடா நான் பாவம் பண்ண என்னால அவளை மறக்க முடியல டா”என்று கதறி அழுதான்.
நண்பனை தேற்றிய ரமேஷ்”மச்சான் நீ இதுல இருந்து வெளியே வரணும் டா ப்ளீஸ் டா எனக்கு நீ பழைய மாறனா வேணும் டா”என்று கட்டி அணைத்து அவனிடம் ஆறுதல் கூறினான்.
அறையின் வெளியே இதனை பார்த்துக் கொண்டிருந்த புவனா விற்கும் அழுகை வந்தது தன் மகன் படும் வேதனை அவரை களங்க செய்தது. அவனை எப்படி சரி செய்வது என்று புரியாமல் நின்றார்.
சிறிது நேரம் கழித்து சாப்பாடை எடுத்துக்கொண்டு மேஜையில் வைத்தவர் புவனா “சாப்பிட வாங்கப்பா”என்றார் .இருவரும் சாப்பாடு மேஜிக்கு சென்றனர். சாப்பிட்டு முடித்தவுடன்
“மாறா வா கொஞ்ச நேரம் நம்ம வெளியே போயிட்டு வரலாம் எந்த சாக்கும் சொல்லாத வா “என்று வலு கட்டாயமாக மாறனை இழுத்து சென்றான் ரமேஷ்.
ரமேஷ் தான் வண்டியை ஓட்டினான் மாறன்பின்னாடி அமர்ந்தான். மாறனின் என்ன ஓட்டங்கள் அமுதினி இடமே சென்றது. அவளிடம் பேசி சிரித்துக்கொண்டிருந்த நினைவுகளே அவனை ஆட்கொண்டது.
மாறன் வண்டி ஓட்ட அமுதினி பின்னாடி அமர்ந்து கொண்டு அவனை அணைத்துக் கொண்டு வந்தாள் அமுதினி.
அமுதினியின் தலைமுடி காத்தில் பறந்து கொண்டு மாறனின் கன்னத்தில் தடவியது. சுத்தி இருக்கிற மரங்களும் வயல்களும் வேகமாக பின் நகர்ந்தது அந்த இடம் ரொம்ப அழகாக இருந்தது அதனை இருவரும் ரசித்துக்கொண்டே வந்தனர்.
மாறன் “அம்மு பயமா இருக்கா.?”என்று கேட்டான் .”கொஞ்சம் பயமா தான் இருக்கு ஆனா ரொம்ப ஜாலியா இருக்கு”என்றாள்.”பயப்படாத நான் உன்னை பத்திரமா பாத்துக்குவேன்” என்றான்.
” எனக்கு தெரியும் நீ எப்பவும் என்னை நல்லா பாத்துக்குவனு” என்று சொல்லி சிரித்தாள் அமுதினி.
“அம்மு பாத்தியா இந்த இடம் எவ்வளவு அழகா இருக்குன்னு” என்றான்.” ஆமா மாறா ரொம்ப அழகா இருக்கு இந்த மாதிரி இடத்துல உன்னோட ஒரு பைக் ரைட் ரொம்ப புதுசா இருக்கு”என்றாள்.”உனக்கு இது புடிச்சிருக்கா”என்றான்.” ரொம்ப புடிச்சிருக்கு மாறா இது ஒரு கனவு மாதிரி இருக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன்” என்றாள்.
“இந்த காற்று இந்த வெளிச்சம் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு நீ என்கூட இருக்கும்போது எல்லாமே அழகா தெரியுது இதே மாதிரி சந்தோஷத்தோட எப்பவும் நீ என் கூடவே இருக்கணும் அம்மு”என்றான் மாறன்.
“நான் எப்பவும் உன் கூட தான் இருப்பேன் மாறா எனக்கு தெரியும் நீ இல்லாம என் வாழ்க்கை எப்பவும் முழுமை அடையாதுன்னு”என்றாள்.
கண்ணாடியின் வழியில் அம்முவின் முகத்தின் உள்ள சிரிப்பினை ரசித்து கொண்டு வந்தான் மாறன் இவளின் இந்த சிரிப்பு எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணினான்.
பழைய நினைவுகளில் இருந்த மாறனை ரமேஷ் அழைத்தான் “எங்கடா போலாம்”என்று. நிகழ் உலகத்திற்கு வந்த மாறன் “என்னடா கேட்ட.?” என்றான்.”இல்ல மச்சான் எங்க போலாம்னு கேட்டேன்”என்றான். அவர்கள் அடிக்கடி போகும் ஒரு இடத்தை சொன்னவன்” அங்கே போடா ” என்றான்.”ம்..சரிடா “என்று ஒரு வளைவில் வண்டியை திருப்பினான் . மறுபுறம் இருந்து கார் ஒன்று இவர்கள் வண்டியை மோதியது எதிர்பாராமல் கார் வண்டி மீது மோதியதும் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.