அத்தியாயம் – 3 

கீர்த்தியின் சிறிய அப்பார்ட்மென்ட் வரவேற்பறை அவன் ஒருவன் இருப்பதால் நிறைந்து காணப்பட்டது.  இங்கே ஷீத்தல் தவிர்த்து வேறு யாரும் வந்ததில்லை. அதுவும் ஆடவர் வாசனையே இல்லாதிருந்தது இந்த ஒன்றரை வருடமாய். 

இத்தனைக்கும் அமைதியாக அமர்ந்திருந்தான் ஜோ. அவன் கண் வழி எப்படியிருக்கிறது என்று கீர்த்தியும் ஒரு முறை கண்களை சுழற்றினாள். வீட்டோடு வந்த ஃப்ர்னிச்சர், டீ.வி. என்பதால் அளவாகத்தான் இருந்தது. அவளால் முடிந்தது எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருந்தாள். ஜன்னல் திரைசீலை முதல் சுவற்றில் அலங்காரமாக மாட்டியிருந்த மார்டர்ன் ஓவியப் புகைப்படம் வரை வீட்டோடு வந்தது. இவளுடையது என்று ஒரு புகைப்படம் கூட மாட்டவில்லை. 

மூலையில் இருந்த மேசை மீது ஒரு விநாயகர் படமும் அதன் முன்னே ஒரு ஊதுவத்தி ஸ்டான்ட், விபூதி குங்குமம் உள்ள சிறிய டப்பா. 

கதை அதோடு முடியவில்லை என்று கூறியதும் அவன் பதைபதைக்க பிறகுதான் தவறு புரிந்து அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாதானப்படுத்தினாள்.  

“இன்னும் என்ன? நீ முழுசா சொல்லு. என்ன ஆச்சு?”, என்று விடாமல் கேட்கவும், “இங்க வெச்சு வேண்டாம் ஜோ. கண்டிப்பா உனக்கு கோவம் வரும்”, என்று ஆரம்பித்தது, வேறு எங்கும் போக இடமில்லாது இதோ வீட்டிற்கு அழைத்து வந்துள்ளாள். 

தனியாக ஒரு ஆணோடு ஒரே அறையில் அந்த சம்பவத்திற்கு பிறகு இப்போதுதான் இருக்கிறாள். வாயில் திறந்துதான் இருந்தது. ஆனாலும் பயப்பந்து உருளுமோ என்று நினைத்திருந்தவளுக்கே ஆச்சரியம், பானிக் அட்டாக் என்ற பேரச்சத் தாகுதலுக்கான முதல் அறிகுறி கூட தோன்றவில்லை. 

“சொல்லு கீர்த்தி. எதை யோசிக்கன்னு கூடத் தெரியாம பயமா இருக்கு. என்ன ஆச்சு?” 

ஒரு பெருமூச்சோடு தொடர்ந்தாள். “இரண்டு செசஷன் கவுன்சலிங் முடிஞ்சிருந்தது.  மாத்திரை எடுக்காம தூங்க முடியலைன்னாலும் அளவை குறைச்சிருந்தாங்க. தனியா இருக்க பயம். அம்மா கூடவே இருந்தாங்க. இராத்திரியும் துணைக்கு பக்கத்துலயேதான் இருப்பாங்க. ஒரு மாதிரி போயிட்டிருந்தது. ப்ரீத்திகிட்ட அப்பாம்மா போன்ல பேசிட்டிருந்தாங்களா தெரியாது. ஆனா அவ அதுக்கப்பறம் வரவும் இல்லை என்னோட பேசவும் இல்லை.” 

அன்று என்னவோபோல் இருக்க, குளிக்கச் சென்றவள், ஷவரை திறந்துவிட்டு தலைக்குக் குளித்தாள். எத்தனை முறை குளித்தாலும் அருவருப்பு போகவில்லை. சோப் போடக்கூட உடலை தொட, ஏன் பார்க்கக் கூட பிடிக்கவில்லை. ஆனாலும் விட்டுவிடாதே. அம்மா கைபிடிக்க, தலை கோத என்று சின்னச் சின்ன தொடுதலாவது இருக்க வேண்டும். உடலும் மனமும் பழகிக்கொள்ளும் என்று கவுன்சலிங் தந்து கொண்டிருந்த டாக்டர் தொடுகையின் அவசியத்தை சொல்லியிருந்தார். 

ஒரு வழியாக ஈரத் தலைக்கு துண்டை கட்டிக்கொண்டு சல்வார் போட்டு வெளியில் வந்தவளைப் பார்த்த சரோஜினி, “என்ன கீர்த்திமா வீட்டுக்கு தூரமா?”, என்றார். 

“இல்லம்மா. தலைக்கு குளிக்கணும்போல இருக்கவும் குளிச்சேன்.” 

அவள் பதிலில் சரோஜினியின் முகம் இருண்டது. “நீ தலைக்கு ட்ரையர் போட்டு ரெடியாகு கீர்த்தி. கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம்.” 

வெளியவா என்று நினைத்தவள், “எங்கம்மா?” 

“எனக்கு கொஞ்சம் டெஸ்ட் எடுக்கணும். நீ வீட்டுல தனியா இருக்க வேணாம். வா ஆட்டோல போயிட்டு அதுலயே வந்துடலாம்.” 

அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் பரிசோதனைக் கூடங்களை எல்லாம் விட்டு தி. நகர் அருகே இருந்த ஒன்றிற்கு வந்திறங்கினர். 

உள்ளே சென்று பேசி வந்தவர், “இந்தா யூரின் சாம்பிள் எடுத்து குடு கீர்த்தி”, என்று அதற்கான குப்பியை தந்தார். அதில் ப்ரீத்தி என்று பெயர், அவள் பிறந்த தேதி போட்டிருந்தது. 

“ம்மா? ஏன் ப்ரீத்தி பேர் போட்டிருக்கு?”, என்று கேட்டவுடந்தான் கீர்த்திக்கு உறைத்தது. 

“ம்மா?” என்றவள் குரல் நடுங்கியது. அன்னையை பயத்தோடு பார்த்தாள். அன்று தேதி என்னவென்று கூட அவளுக்குத் தெரியவில்லை. 

“போய் எடுத்துட்டு வாடாம்மா”, என்று அனுப்பிய அன்னையின் முகத்திலும் லேசான பீதி தெரிந்தது. 

அடுத்த அரை மணி  நேரத்தில் உடலை மட்டுமல்லாது, அவள் கருவறையும் களவாடப்பட்டிருந்தது கீர்த்திக்கு தெரிய வந்தது. 

சரோஜினி தளர்ந்துபோய் வீட்டில் அமர்ந்திருந்தார். குழந்தை தரித்துவிடாதா என்று பெரியவளுக்கு வேண்டாத தெய்வமில்லை. இப்போது சின்னவளுக்கு நாள் தப்ப, மாதவிலக்கு வந்துவிடாதா என்று வேண்டாத தெய்வமில்லை. இரண்டு வேண்டுதலுமே பலிக்கவில்லை. எல்லா தெய்வமும் கைவிட்டுவிட்டது. கடவுளை வேண்டும் முன்னர் மெடிக்கலில் நிகழ்விற்கு பின்னும் கரு தங்காமல் இருக்க மாத்திரைகள் உண்டு அதை மகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும்  என்று தெரியவில்லை.  

கீர்த்தி பிரம்மைபிடித்தது போல அமர்ந்திருந்தாள். கருமுட்டை கருதரித்து  நேராக கருப்பையில் இட்டபோதும் ப்ரீத்திக்கு கரு நிற்கவில்லை. இங்கே குடிபோதையில் ஒரு முறை தன்னை சிதைத்தவன் கரு எனக்குள் வளர்கிறதா என்று நினைக்கும்போதே உமட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. 

அவள் தந்தை வரவும் அவருக்கும் செய்தி தெரிவிக்கப்பட மனிதர் அவளைப் பார்த்து கண்ணீர் வடித்தார். தரையில் அமர்ந்து சுவரோரம் சாய்த்திருந்தவளின் தலையை பட்டும்படாது அவர் தடவிக்கொடுக்க,  நிமிர்ந்து அவரைப் பார்த்தவள், 

“அப்பா, எனக்கு இது வேணாம்பா”, என்று கண்ணீர்விட்டாள். 

ஆமோதிப்பாய் தலையசைத்தவர், ”ஆகட்டும்மா”, என்று அவர் மனைவியைப் பார்த்தார். 

“கண்ட மாத்திரை மருந்துன்னு  நம்மளா எடுக்காம டாக்டரைப் பார்த்து சரியா செய்யணும். பின்னாடி வேணும்னு நினைக்கறபோது பிரச்சனை வரக்கூடாது சரோ”, என்றார் வேணுகோபால். 

முந்தானையில் வாய் பொத்தி அழுதார் சரோஜினி. “யாராவது தெரியாத லேடி டாக்டரை பார்த்து கேட்கணுங்க.” 

இரண்டு நாட்கள் மிகவும் மெதுவாக நகர்ந்தது. சென்னையின் வேறு மூலையில் இருந்த ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மகப்பேறு மருத்துவர் தகவல் கிடைக்க, அன்று மாலை சென்று பார்ப்பதாக இருந்தனர். 

அன்று மதியம் ப்ரீத்தி வீட்டிற்கு வந்தாள்.  

“இரண்டு நாளா நீ போனும் எடுக்கலை, அப்பாவும் வேலையா இருக்கேன்னு மட்டும் சொல்லி வெச்சிட்டார். அதுதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்மா. அவர் வந்தா அன்னிக்கு மாதிரி இவளுக்கு என்னவும் ஆகிடும்னு தனியா வந்தேன்”, விளக்கமளித்துக்கொண்டே கீர்த்தியின் அறை வாசலுக்கு வந்தவள், “கீர்த்திமா… எப்படி இருக்கடா?” என்று கேட்டாள் சங்கடமாக. 

காலையில் உண்டதெல்லாம் வெளியே வந்திருக்க தொய்ந்துபோய் படுத்திருந்தாள் கீர்த்தி. 

கீர்த்தியிடமிருந்து பதிலில்லாமல் போகவும், ஒரு பெருமூச்சோடு வெளியே வந்தவள் அன்னையிடம் பேசுவது கேட்டது. 

“அங்கயும் கஷ்டமாதான் இருக்குதுமா. அவருமே ரொம்ப டிப்ரஷன்ல இருக்காரு.  நானா இப்படி நடத்துகிட்டேன்னு  ரொம்ப வேதனைபடறார். கீர்த்தி பத்திதான் ஒரே நினைப்பா இருக்கு. அவ பாட்டு சுத்தி வந்திட்டிருந்தா. இப்படி பாழடிச்சிட்டேனேன்னு ..”, என்று ப்ரீத்தி அழுவது கேட்டும் சலனமின்றி படுத்திருந்தாள் கீர்த்தி. 

“நேத்து உன் மாமியார் போன் பண்ணிருந்தாங்க ப்ரீத்தி”, சரோஜினி சொல்லவும், “அவங்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது. நீ ஒன்னும் சொல்லலைல்ல?” பதறினாள் ப்ரீத்தி. 

“இல்லை. ஆனா என்னவோ உன்னை ஏமாத்தி கட்டிகுடுத்திட்டா மாதிரி கொஞ்சம் பேசிட்டாங்க. செயற்கையா கூட பிள்ளை தங்கலைன்னா விவாகரத்தாவது குடுத்துட்டா என் பிள்ளைக்கு வேற பொண்ணை பார்த்து கட்டி வெப்பேன். எனக்கிருக்கறது ஓரே பிள்ளை அவனுக்கு வாரிசில்லைன்னா எப்படி? வயசிருக்கும்போதே வேற கல்யாணம் பண்ணாத்தான முடியும்னு அவங்க பாட்டு பேசிட்டே போறாங்க.”, வருந்திக்கொண்டிருந்தார் சரோஜினி. 

“ம்ப்ச்… என்னையும்தான் பேசினாங்க. எப்படின்னாலும் என்னை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ண மாட்டார்ன்னு இதுவரைக்கும் உறுதியா இருந்தேன், ஆனா இப்ப எனக்கே கொஞ்சம் பயமா இருக்குமா”, ப்ரீத்தியின் குரல் தழுதழுத்து வந்தது. 

“என்னடி…என்ன சொல்ற? உன் புருஷன் எதுவும் சொன்னாரா?” 

“இப்படியானதுக்கப்பறம் என்ன நிமிர்ந்து பார்க்கவே மாட்டேங்கறார். வீட்டுக்கு வந்தாலே நடந்த விஷயம்தான் சுத்தி சுத்தி ஞாபகம் வருதுன்னு ஆஃபீசே கதியா இருக்கார். என்ன ஒரே நல்ல விஷயம், குடிய தொடுறது இல்லை.” 

தலையில் அடித்துக்கொண்ட சரோஜினி, “வேணுங்கறவளுக்கு தங்கலை, வேணாங்கறவளுக்கு தங்கிடுச்சே முருகா எதுக்கு இப்படி சோதிக்கற?” என்று அழுக, புரியாமல் பார்த்தாள் ப்ரீத்தி. 

“என்னம்மா? யாரு வேணாங்கறா?” என்று கேட்கவும், அதற்கு மேல் மறைக்காது உண்மை நிலவரத்தை கூற, கதறிவிட்டாள் ப்ரீத்தி. 

கீர்த்தியிடம் ஓடி வந்தவள், “கீர்த்தி…கீர்த்திமா? “, என்று கட்டிக்கொண்டு அழுதாள். அந்தத் தொடுகை கூட கீர்த்திக்கு தாளவில்லை. 

விலகி படுக்கையின் உட்புறம் நகர்ந்து குத்துக்காலிட்டு அமர்ந்து கைகளை முட்டியை சுற்றி கட்டிக்கொண்டாள். 

“ஷ்… உடம்பை குறுக்காத கீர்த்தி.. காலை நீட்டி சாஞ்சுக்கோ”, ப்ரீத்தி சொல்லவும், அவளை வினோதமாகப் பார்த்தாள் கீர்த்தி. 

சரோஜினியும் அறைக்குள் வர, “அம்மா. அவர் வாரிசு மா. அதை அழிக்க வேணாம்மா. பெத்து குடுத்தா நான் பொன்னா வளர்த்துக்கறேன்மா. குழந்தையை அழிக்கறது பாவம்மா”, என்று கெஞ்ச ஆரம்பித்தாள். 

திகைத்துப்போய் கீர்த்தி அன்னையை பார்க்க, சரோஜினியுமே அதிர்ச்சியில்தான் இருந்தார். 

“என்ன ப்ரீத்தி பேசற? அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைய வேணாமா?” 

“அம்மா… எனக்கும் புரியுது. ஆனா கொஞ்சம் அவசரப்படாதமா. கீர்த்தி வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு முன்னாடிவிட இப்ப இன்னும் அக்கறை இருக்குமா.  அதே நேரம் என் வாழ்க்கையும் காப்பாத்திக்க ஒரு வாய்ப்புமா.  எதுக்கு கடவுள் இப்படி ஒரு பழியை சுமக்க வெச்சாருன்னு இன்னிக்குக் கூட புலம்பிகிட்டு இருந்தாரு என் புருஷன். இதுக்குதான் இப்படில்லாம் நடந்துச்சோ என்னவோ. இது தெரிஞ்சா அவருமே கொஞ்சம் தெளியலாம்”, அவள் பாட்டு பேசிக்கொண்டே போக, 

“நிறுத்திடி!”,என்று கத்தினாள் கீர்த்தி. “போயிடு…. எதையாவது நான் செய்யறதுக்கு முன்னாடி வெளிய போ. உனக்கு பிள்ளை வேணும், வாழ்க்கை வேணும்னா போய் அவனை வேற யார்கூடவாவது படுக்க அனுப்பி வை”, என்று சினந்து பேச, “கீர்த்தி!”, அலறினாள் ப்ரீத்தி. 

அதற்கு மேல் அங்கே இருவரையும் ஒன்றாக இருக்கவைப்பது சரியில்லை என்று புரிந்த சரோஜினி ப்ரீத்தியை வெளியே இழுத்துக்கொண்டு போனார்.