வேறொரு கைப்பேசி வாங்கித் தர சொல்லி அப்பாவிடம் கேட்டாள். அருகில் தாத்தாவும் இருந்தார். அரிசி ஆலையில் ஏதோ பிரச்சனை, அதனால் கோவத்தில் இருந்தவர் பொறுப்பில்லாமல் கைப்பேசியை ஏன் சார்ஜிலேயே போட்டு வைத்தாய் என கடிந்து கொண்டார்.
அவரின் மனநிலை புரியாமல், “நான் ஒன்னும் உங்ககிட்ட கேட்கல, என் அப்பாகிட்டதான் கேட்டேன்” என துடுக்காக பேசி விட்டாள் மிதுன்யா.
பசுபதிக்கே மகளின் இந்த பேச்சு ரசிக்கவில்லை. செல்வநாயகத்துக்கு கோவம் உச்சிக்கு சென்று விட்டது.
“எந்நேரம் பார்த்தாலும் ஃபோன்லேயே இருக்க, ஒரு மாசம் வீட்லதானே இருக்க போற, காலேஜ் போறப்பதான் உனக்கு ஃபோன்” என கராறாக சொல்லி விட்டு, மகனையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டார் தாத்தா.
“தாத்தாக்கு மூட் சரியில்லை, அதான் அப்படி பேசிட்டார் பாப்பா. உனக்கென்ன வேணும் ஃபோன்தானே, என் ஃபோன் வச்சிக்க, உன் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் நம்பர்லாம்தான் என் ஃபோன்லேயும் இருக்கே. பேசிக்க, நான் வெளில போயிட்டா உன் அம்மாவோட ஃபோன் இருக்கு, லாவண்யா ஃபோன் இருக்கு. அப்புறம் என்ன? காலேஜ் போறதுக்கு முன்ன விலை உசந்ததா சூப்பர் ஃபோன் வாங்கித் தாரேன்” என சமாதானம் செய்தார்.
“அப்போ நிஜமாவே ஃபோன் வாங்கி தர மாட்டீங்களா ப்பா?” என அதிர்ச்சியாக கேட்டாள்.
“தாத்தா இன்னும் கோவ படுவார், அப்பா சொன்னா கேட்டுக்கணும். ஒரு மாசம் நல்லா சாப்பிட்டு கொண்டு சந்தோஷமா இருக்கணும்” மகளின் தலை கோதி சொல்லி விட்டு சென்று விட்டார் அவர்.
ஜீவாவின் கைப்பேசி எண் அவளுக்கு மனப்பாடம்தான். ஆனால் மற்றவர்களின் கைப்பேசி வாயிலாக அவனை தொடர்பு கொள்ள பயந்தாள். எந்த வகையிலாவது லாவண்யா கண்டு பிடித்து விட்டால் பெரும் சிக்கலாகி விடுமே.
ஜீவாவை தொடர்பு கொண்டு பத்து நாட்களாகி விட்டன. இந்த விடுமுறையை அவளால் கொண்டாட்டமாகவே கழிக்க முடியவில்லை.
வாசுகியும் இன்னொரு தோழியான தீபாவும் சென்னைவாசிகள். கடந்த விடுமுறையின் போதே ஒரு வாரம் இங்கு வந்து தங்கி செல்ல திட்டமிட்டு கடைசி நொடியில் வர முடியாமல் போய் விட்டது. கிராமத்தை பார்க்க அவர்களுக்கு கொள்ளை ஆசை. இந்த முறை எப்படியும் வர வேண்டும் என திட்டமிட்டு பெற்றோரின் அனுமதியுடன் புறப்பட்டு விட்டனர்.
மிதுன்யாவுக்கு அவளது தோழிகள் வருவது ஆனந்தம் என்றால் அவர்களின் கைப்பேசி வாயிலாக ஜீவாவிடம் பேசி விடலாம் என்ற நினைவில் பேரானந்தமாக இருந்தது.
வினோதினியின் அம்மாவுக்கு ஏதோ சுகக்கேடு என அவரை பார்ப்பதற்காக மனைவியுடன் சென்றிருந்தார் பசுபதி. இரண்டு நாட்கள் அம்மாவுடன் இருந்து விட்டு வருகிறேன் என வினோதினி சொல்லவும் அவரை அங்கேயே விட்டு விட்டு அவர் மட்டும் அரிசி அலைக்கு வந்து விட்டார்.
ஆலையில் இரவில் ஏதோ புதிய மெஷின் பொருத்தப் படும் வேலை நடப்பதால் இரவில் அங்கேயேதான் இருந்தார் பசுபதி.
விடியற்காலை இரயிலில் தஞ்சை வந்திறங்குகிறார்கள் மிதுன்யாவின் தோழிகள். மகளை பார்க்க சென்னை செல்லும் சமயங்களில் இந்த பெண்களையும் நேரில் கண்டு பேசியிருக்கிறார் பசுபதி.
தானே இரயில் நிலையம் சென்று உன் தோழிகளை அழைத்து வந்து விடுவதாக மிதுன்யாவிடம் சொல்லி விட்டார்.
நன்றாக விடிந்து விட்டது. உன் தோழிகளுடன் வீட்டுக்கு அருகில்தான் வந்து கொண்டிருக்கிறேன் என மகளுக்கு தகவல் சொன்னார் பசுபதி.
கேட்டை திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தாள் மிதுன்யா.
கார் உள்ளே நுழைந்தது. காரை செலுத்தி வந்த ஜீவநந்தனை கண்டு அவளுக்கு மூச்சடைப்பது போலானது. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த பசுபதி அவனுடன் வெகு இயல்பாக பேசிக் கொண்டிருந்தார்.
கார் நின்றதும் இறங்கி வந்த தோழிகளின் கைகளை பற்றி மிரட்சியோடு வரவேற்றாள் மிதுன்யா.
“புள்ளைங்களுக்கு துணையா தம்பியும் வந்திருக்காப்ல, உடனே திரும்ப அலுப்பா இருக்கும்ல, அதனால அங்கேயே ரூம் எடுத்து தங்கிட்டு நாளைக்கு ஊருக்கு போறதா இருந்தாராம். நம்மூடு கடல் மாறி கெடக்கையில கழுத என்னத்துக்கு காசு செலவழிச்சு லாட்ஜ்ல தங்கணும் சொல்லு? அதான் கூட்டிட்டு வந்திட்டேன். தம்பிய மேமாடி ரூம்ல தங்க வை பாப்பா” என்றார் பசுபதி.
பயத்துடனே தலையாட்டிக் கொண்டாள் மிதுன்யா.
“என்ன பாப்பா ஏன் கலக்கமா இருக்க? ஃப்ரெண்ட்ஸ்லாம் வந்திருக்கப்போ அம்மா ஊருக்கு போயிட்டாளே யாரு வாய்க்கு வக்கணையா சமைச்சு போடுவான்னா? அதெல்லாம் கலங்காத பாப்பா, ரெண்டு ஆள ஒத்தாசைக்கு வச்சிக்கிட்டே உன் அப்பயி ஊருக்கே விருந்து ஆக்கி போடும்” என்றவர் அவரது அம்மாவை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றார்.
“என்னடி இதெல்லாம்?” ஜீவாவை பார்த்துக் கொண்டே வாசுகியிடம் கேட்டாள் மிதுன்யா.
“என்னை கேட்டா, உன் ஆள்கிட்டேயே கேளு” என்றாள் வாசுகி.
“ஷ்ஷ்ஷ்… சத்தமா பேசாத. அதென்ன என் ஆளு? ஒழுங்கா பேசு” கண்டித்தாள் மிதுன்யா.
“நீங்க இவ ஆளு இல்லையாம், இவ்ளோ தூரம் வந்தது வேஸ்ட்டா போச்சு” சின்ன குரலில் ஜீவாவை பார்த்து சொன்னாள் தீபா.
“ஹையோ நாங்க வெறும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தாம்மா” என அவனும் சின்ன குரலில் சொன்னான்.
“நம்பிட்டோம் நம்பிட்டோம்” என ஒரே குரலில் சொன்ன மிதுன்யாவின் தோழிகள் இருவரும் தங்கள் பைகளோடு வீட்டை நோக்கி நடந்தனர்.
அவளின் கண் பார்த்துக் கொண்டே நின்ற இடத்திலேயே நின்றிருந்தான் ஜீவா.
கையை பிசைந்து கொண்டு அவனை பார்த்தாள். பல நாட்கள் கழித்து நேரிலேயே பார்த்துக் கொள்ளும் சந்தோஷமும் வீட்டினரை நினைத்து பயமுமாக ஒருவித அலைக்கழிப்பில் இருந்தாள் அவள்.
“இவ்ளோ டென்ஷன் வேணாம், உன்னை காண்டாக்ட் பண்ணவே முடியலை. தூரமா இருந்தே உன்னை பார்த்திட்டு போகதான் நினைச்சேன். உன் ஃப்ரெண்ட்ஸ் பண்ணின வேலை இதெல்லாம்” என்றான்.
“என்னை பார்க்கவா வந்தீங்க?” என வியப்பாக கேட்டாள்.
ஆம் என்பதாக லேசாக தலையாட்டினான். அவளுக்குள் எல்லாமே தலைகீழாக புரண்டது போன்ற உணர்வு.
வீட்டுப் பக்கமாக திரும்பி பார்த்தாள். தான் வந்ததில் சங்கடம் கொள்கிறாள் என புரிந்து கொண்டவன், “நான் கிளம்புறேன்” என சொல்லி திரும்பினான்.
“ப்ளீஸ் உள்ள வாங்க!” என மெல்லிசை போல அழைத்தாள்.
“இன்னும் உள்ள வரலையா நான்?” அவன் கேட்ட கேள்வியில் இதயத் துடிப்பு எகிற அதிர்ந்து பார்த்தாள்.
“சொல்லு மிது” என்றான்.
“என்ன… என்ன கேட்குறீங்க?” திக்கி திக்கி வந்தன வார்த்தைகள்.
“இல்லை… அதான் கேட் திறந்து காம்பவுண்ட்க்குள்ள வந்திட்டேனே, அதை சொன்னேன்” என்றான்.
மறைமுகமாக ஏதாவது சொல்கிறானா என யோசித்து தடுமாறி நின்றாள்.
“இடம் இருக்கு வரலாம்னு நீ பெர்மிஸன் தந்தாதானே நான் இன்னும் உள்ள வர முடியும்?” குறும்பாக சொன்னான்.
கோவமாக பார்த்தவள், “மொதல்ல வீட்டுக்குள்ள வாங்க” என சற்றே அழுத்தமாக சொன்னாள். அவன் அப்படியே நிற்க, வீட்டை நோக்கி நடந்தவள் அவன் வருகிறானா என திரும்பி பார்த்தாள்.
அவளை பார்த்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்து சென்றான் ஜீவா.