அவளின் கிண்டலில் ஆருவின் கை விரல் பற்றி கிள்ளிய சாரு, “அப்போ நீ மட்டும் ஜே வா…?’’ என்றாள் முகத்தை சுருக்கி. “ஹே…! பசிக்குது வா. சாப்பிட்டு படுக்கலாம்.” என்று தோழியின் எண்ணத்தை மாற்றி தன்னோடு அழைத்து கொண்டு சென்றாள்.

நான்கு நாட்கள் சடுதியில் பறந்தோட, ஆருவை வழி அனுப்பி வைக்க அவள் மொத்த குடும்பமும் விமான நிலையத்திற்கு வந்திருந்தது. அருண் அவளின் பாதுகாப்பு ஏற்பாடு, உறைவிடம் என்ற பேச்சை எடுத்த போதே, “ப்ளீஸ் அண்ணா…! எல்லா ஏற்பாடும் அவங்களே செஞ்சி இருப்பாங்க. மொத்தம் 107 கண்ட்ரீஸ்ல இருந்து பார்டிசிபன்ட் வராங்க. யாருக்கு தெரியும். அதுல என்னை விட வி.வி.ஐ.பி வீட்டு பசங்க கூட இருக்கலாம். இந்த முப்பது நாளும் என்னை சாதாரண மனுசியா வாழ விடுங்க ப்ளீஸ்…!’’ என்று வேண்டுகோள் வைத்திருந்தாள். 

     

முருகு கூட இந்த முப்பது நாளை மகள் விருப்பப்படி வாழ்ந்து வரட்டும் என சொல்லி விட, வாழ்வில் முதல் முறையாக அவளை நிழல் போல தொடரும் பாதுகாவலர்கள் யாருமின்றி தனியே தன் பயணத்தை துவங்கவிருந்தாள் ஆரு. 

பிரித்வீராஜும் தன் எதிர்கால மனையாளை வழி அனுப்ப வந்திருந்தான். ஆள் ஆளுக்கு அவளோடான நேரத்தை களவாட, சாரு அமைதியாக ஓரத்தில் இருந்த இருக்கையொன்றில் அமர்ந்தாள். 

விமான சரிபார்ப்பு அறிவிப்பு வந்ததும், ஆரு மற்றவர்களை விட்டு விட்டு சாருவை தேடி வந்தாள். தன் முன் நிழலாட சாரு முகம் நிமிர்த்தி பார்த்தாள். இப்போது ஆருவின் விழிகள் லேசாக கலங்கி இருக்க, “உன்னை விட்டுட்டு இருக்க முடியுமான்னு தெரியல சாரு…’’ என்றவள் தோழியை கட்டிக் கொள்ள, அவளை இறுகி அணைத்துக் கொண்டவள், “என்னாலையே முடியும் போது… உன்னால முடியாதா…? எல்லாம் முடியும். இந்தியான்னு சொல்லும் போதெல்லாம் ஸ்டேஜ் அதிரணும்.’’ என்றாள் லேசாக கமறிய தொண்டையை சரி செய்துகொண்டு. 

“ம்…! அப்போ சீஸ் சாக்லேட் வேண்டாமா…?’’ என ஆரு தோழியை பார்த்து கண் சிமிட்ட, “வாங்கிட்டு வராம வந்த நீ ஹனிமூன் போகும் போது உன் கூட ஒட்டிகிட்டு வந்து பழி வாங்குவேன்.’’ என்று சாரு மௌனமாய் முணுமுணுக்க, “அடிப்பாவி…’’ என்று ஆரு சிரிக்கும் போதே, மீண்டும் ஒரு முறை, விமான பயணிகள் உள் சோதனைக்கு அழைக்கப்பட்டனர். 

அனைவருக்கும் பொதுவான கை அசைப்பில் விடை கொடுத்தவள், தன்னால் இனி ஒருநாளும் மாற்றி அமைக்க முடியாத எதிர்காலத்தை நோக்கி நடந்தாள். அனைவரும் அங்கிருந்து கிளம்ப, அன்றைக்கு மதியமே கல்லூரி விடுதிக்கு செல்லும் முடிவிலிருந்த சாரு விக்ரமின் பின் நடந்தாள். 

“சாரும்மா…!’’ என்று அபிராமி அழைக்க, “சொல்லுங்க ஆன்ட்டி…’’ என்று அவரின் முன் வந்து நின்றாள் சாரு. “நீயென்ன ஹாஸ்டல் போறேன்னு சொன்னியாம். ஆரு சொல்லிட்டு இருந்தா. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ நம்ம வீட்லயே இரு. ஹாஸ்டல் சாப்பாடு எல்லாம் உனக்கு ஒத்துகுமோ என்னவோ…? முப்பது நாள் கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள முடிஞ்சி போயிடும். இதுக்கு எதுக்கு நீ அங்கயும் இங்கயும் அலையணும்.’’ என்று விளக்கம் கேட்க அவளோ அமைதியாக நின்றிருந்தாள். 

முருகு விக்ரம் டீமிற்கு ஒரு மாதம் ஊதியத்தோடு கூடிய விடுப்பை அறிவிக்க, அவர்கள் முகம் மின்ன நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பினர். 

அபி அவளின் முகத்தையே பார்த்திருக்க, சங்கடமான ஆனால் உறுதியான குரலில், “இல்ல ஆன்ட்டி. எனக்கு தனியா இருந்து பழக்கமே இல்ல. காலேஜ் ஹாஸ்டல்னா மத்த கேர்ள்ஸ் இருப்பாங்க. சமாளிச்சுப்பேன்.’’ என்றாள். 

“அதை நான் யோசிக்கவே இல்ல பாரேன். சரி அப்போ பார்வதிக்கும் ஒரு மாசம் லீவ் கொடுத்து அனுப்பிடலாம். எங்களுக்கு சாயங்காலம் தானே பிளைட். உங்க அப்பார்ட்மென்ட்க்கு வறோம். உங்களை காலேஜ் சேர்க்கும் போது வந்தது. சாயங்காலம் உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு அதுக்கு அப்புறம் நாங்க ஊருக்கு கிளம்புறோம் .’’ என்றவள் அவள் கையை பிடித்துக் கொண்டே நடக்க, சாருவும் அவரோடு சேர்ந்து நடந்தாள். 

அருண் இருவரையும் ஓரக் கண்ணில் கவனித்தபடி தன் அலைபேசியில் மூழ்கியிருந்தான். அனைவரும் அவர்களின் குடியிருப்பை அடைய, வீட்டுப் பெண்ணாய் அனைவரையும் கவனித்துக் கொண்டாள். 

ஆளுக்கு தகுந்தபடி, ஜூஸ், டீ, காபி, பால் என கொண்டு வந்து பரிமாறினாள். இவர்கள் வீட்டில் வேலை செய்யும் பார்வதி காலை, மாலை என இருவேளை மட்டுமே சமைக்க வருவார். “காபி அருமையா இருக்குமா…”’ என முருகு பாராட்ட, “டீயும் சூப்பாரா போட்டு இருக்க சாரு…’’ என்று அபி புகழ்ந்தார். 

அருணிடம் பழ சாறை நீட்ட, அவளை நிமிர்ந்து கூட பாராது தன் பானத்தை எடுத்துக் கொண்டான். தாரிகா தன் தந்தை ஊதிக் கொடுத்த பலூனை கொண்டு அவனோடு விளையாடிக் கொண்டிருக்க, வசு சாருவிடம் அவளின் எதிர்கால திட்டம் குறித்து பொதுவாக உரையாடிக் கொண்டிருந்தாள். 

மாலை அருண் உணவுக்கு சொல்லியிருந்த பெரிய உணவகத்திலிருந்து சிற்றுண்டி வந்து விட, அனைவருக்கும் தட்டு வைத்து பரிமாறினாள். “நீயும் உட்கார்ந்து சாப்பிடு சாரு. செல்ப் சர்வ் செஞ்சிக்கலாம்.’’ என்று வசு அழைக்க, “இருக்கட்டும் அக்கா… நீங்க பாப்பாவுக்கு இட்லி ஊட்டுங்க.’’ என்று மற்றவர்களை கவனித்து கொண்டாள். 

அவர்கள் உண்டு முடித்ததும், வீட்டை சுத்தம் செய்தவள், சமையல் அறையையும் ஒதுங்க வைத்திருந்தாள்.  “சமத்து பொண்ணுடி நீ.’’ என்று அபி அவள் தாடையை பிடித்து செல்லம் கொஞ்ச, “மா…! பிளைட்டுக்கு டைம் ஆச்சு. நீங்க கிளம்புங்க. எனக்கு இன்னும் ரெண்டு நாள் மும்பைல வேலை இருக்கு. நான் வெளிய கிளம்பும் போது சாருவை ஹாஸ்டல்ல விட்டுடுறேன்.’’ என்றான். 

ஆள் ஆளுக்கு அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர். வாகன நிறுத்துமிடம் வரை சென்று அவர்களுக்கு விடை கொடுத்த பின்பே சாரு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள். 

தற்சமயம் அருண் மட்டுமே வரவேற்பறையில் இருக்க, வேகமாக தன் அறைக்குள் நுழைந்தவள், விடுதிக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்க துவங்கினாள். 

அரை மணி நேரம் கழிந்திருக்கும். இவள் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு நிமிர,அதே நேரம் இவளின் அறைக் கதவு தட்டப்பட்டது. லேசாக சாத்தி வைத்திருந்த கதவை இவள் விரிய திறக்க, கதவை அடைத்தபடி அருண் நின்று கொண்டிருந்தான். 

சாரு கேள்வியாய் பார்க்க, “எத்தனை மணி வரைக்கும் ஹாஸ்டல் போகலாம்.’’ என்று கேட்டான். “நைட் எய்ட் வரை அலோ பண்ணுவாங்க.’’ என்று விடை கொடுக்க, “ஓ…! சரி. எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு. ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டுக் கொண்டு வா.’’ என்றவன் மீண்டும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்து கொள்ள, சாரு அமைதியாக அவன் கேட்ட பானத்தை தயாரித்து கொண்டு வந்து கொடுத்தாள். 

அவள் மீண்டும் அறைக்குள் நுழைய முயல, “ஆரு யூஸ் பண்ற நீலகிரி தைலம் இருக்கும் இல்ல. அதை கொஞ்சம் எடுத்துட்டு வா.’’ என்றான். அவள் அதை எடுத்து கொண்டு வந்து கொடுக்கவும். “ஆருவுக்கு ஒரு ஹெட் மசாஜ் கொடுப்பியே அதே போல தேய்ச்சி விடு.’’ என்றவன் தலையை மேல் நோக்கி சாய்த்து, கண்களை மூடிக் கொண்டான். 

அவள் தயங்கி நிற்க, “எனக்கு நிறைய வேலை இருக்கு.’’ என்று அவன் கர்ஜனை செய்ததில், அவனின் இருக்கைக்கு பின் சென்று நின்று ஆள்காட்டி விரலால் மெதுவாக அவள் தைலத்தை தேய்த்து விட துவங்கினாள். 

கண்களை மூடிக் கொண்டே, “இது தமிழ்நாடு இல்ல. மும்பை. பிரண்ட்ஸ் கூட சேர்ந்து வெளிய போற வேலை எல்லாம் வச்சிக்காத. கேன்டீன் ஹைஜீனிக்கா தான் இருக்கு. உனக்கு ஏதாச்சும் பிடிச்சது சாப்பிடணும்னு தோணினா ஆன்லைன்ல ஆர்டர் போட்டுக்கோ. என்னோட கஸ்டமர் ஐ.டி கொடுத்துட்டு போறேன். அதை யூஸ் பண்ணிக்கோ. தேர்ட்டி டேஸ் சீக்கிரம் போயிடும்.’’ என்றவன் தன் நெற்றியில் விளையாடிக் கொண்டிருந்த அவள் தளிர் விரல்களை பற்றி, விழி திறந்து அவளை ஆழ்ந்து நோக்கி,  “தனியா இருந்துடுவ இல்ல…” என்றான் மென்மையாய். 

‘இந்த வேம்பயர் கத்தி பேசுறதே பரவாயில்ல போலையே. எதுக்கு இப்ப என்ன உத்து உத்து பார்த்துட்டு இருக்கான்.’ என்று எண்ணிக் கொண்டவள் அவன் பார்வை கொடுத்த உதறலில் மென்மையாக தலையை ஆட்டி வைத்தாள். 

சற்று நேரம் இருவரின் பார்வையும் பிண்ணிப் பிணைந்தது. எதுவோ சரியில்லை என்று உணர்ந்த சாரு முதலில் தன் பார்வையை விலக்கிக் கொள்ள, “எங்க பாதுகாப்புல இருக்க பொண்ணு. நாளைக்கு உனக்கு ஒண்ணுன்னா நாங்க தானே உங்க அப்பாவுக்கு பதில் சொல்லணும். அதுக்கு தான் இந்த ஏற்பாடு எல்லாம்.’’ என்றவன் எழுந்து நின்று, “உன் பேகை எல்லாம் கார் டிக்கில கொண்டு போய் அடுக்கி வை. நான் குளிச்சிட்டு வந்ததும் கிளம்பலாம்.’’ என்றவன் எதிர் வீட்டை நோக்கி நடந்துவிட்டான். 

‘இவன் ரெமோவா…? அந்நியனா…?’ என்று அவன் சென்ற திசையையே புரியாத குழப்பப் பார்வை பார்த்திருந்தாள் சாரு. 

அவன் வருவான்.