அத்தியாயம் 28

அன்று அந்நாட்டின் அனைத்து திக்கு திசைகளிலும் கோதையின் வீரச் செயலே செவி வழிச் செய்தியாய்ப் பரவியிருக்க, அவளின் புகழே அன்று அனைவரின் பேசு பொருளாய் இருந்தது.

இரவு நெருங்கிக் கொண்டிருக்க, மருத்துவக் குடிலில் தீப்பந்த ஒளியில் மயக்கத்தில் படுத்திருந்தாள் கோதை. அவளின் கரத்தைப் பற்றியவனாய் பதைபதைத்த நெஞ்சத்துடன், “வந்து விடு கோதை! மீண்டு வந்து விடு கோதை” என்று உச்சரித்தவாறு அமர்ந்திருந்தவனின் உள்ளத்தைப் பெருந்துயரம் ஆட்கொண்டிருந்தது. அவளில்லாத வாழ்வை நினைத்தே பார்க்க முடியவில்லை அவனுக்கு.

‘என்னை விட்டு போய் விடாதே கோதை! நீயில்லாத வாழ்வு நரகமாய்த் தான் இருக்கும் எனக்கு’ என்ற கருப்பண்ணனின் இடைவிடாத வேதனையான புலம்பலையும், அன்பின் வாதையினையும், மனத்தின் பதைபதைப்பையும் இங்குக் காட்சியாய்ப் பார்த்திருந்த மாதவனும் அந்த உணர்வுகளை உணர்ந்தவனாய் அவனையும் மீறி, “வந்து விடு கோதை! மீண்டு வந்து விடு கோதை” என்று முணுமுணுத்தான்.

அவனது முனகல் ஒலி அருகிலிருந்த தாமரையின் செவியினில் தெளிவாக விழவும், அவனது கரத்தின் மீது தனது கரத்தை வைத்து அழுத்திக் கொடுத்தாள்.

கருப்பண்ணனின் உணர்வைத் தாங்கியவனாய் ரத்தத்தின் உயர் அழுத்தத்தில் படபடக்கும் மனத்துடன் முனகியிருந்த மாதவனின் கரத்தை அவள் பற்றியதும் மெல்ல மெல்ல இயல்பான இதயத்துடிப்புக்கு வந்திருந்தான்.

கருப்பண்ணனின் வேண்டுதலைக் கேட்டவளாய் மெல்ல கண் விழித்தாள் கோதை. அவள் விழித்ததைக் கண்டு இன்ப அதிர்வுக்குள்ளானவனாய் ஓடோடிச் சென்று மருத்துவச்சியை அழைத்து வந்தான்.

அவளின் நாடியைப் பரிசோதித்தவராய், “உன் பெண்டாட்டிக்கு ஆயுசு கெட்டி கருப்பா” என்று சிரித்தார்.

இதனைக் கேட்டப் பிறகே சீராய் இயங்கியிருந்தது கருப்பண்ணனின் இதயம். பெருமூச்சு விட்டவனாய் அவளருகில் செல்ல, மூச்சு விடச் சிரமப்பட்டவளாய் பேச முயற்சித்தவளைப் பார்த்து, “வாந்தி எடுக்க வைத்து குடலைச் சுத்தம் செய்திருக்கிறோம் ஆத்தா. தொண்டையும் சுவாசக்குழாயும் ரணமாகியிருக்கிறது. சீராய் மூச்சு விடவும், சத்தமாய்ப் பேசவும் சில நாட்கள் ஆகும்” என்றவராய் மருத்துவச்சி எழுந்து வெளியே செல்ல, அவளருகில் வந்தமர்ந்தான் கருப்பண்ணன்.

அவனைப் பார்த்து, மாதவா என்று சத்தமிடாது மெல்லமாய் அவள் வாயசைக்க, அவளின் செவியின் அருகே தனது இதழை கொண்டு சென்றவனாய், “நம் பிள்ளை மாதவன் பாதுகாப்பாய் அவனது தாத்தா பாட்டியுடன் இருக்கிறான். நீ அமைதிக் கொள் கோதை” என்றவன் சொன்னதும்,

இல்லையெனத் தலையசைத்தவளாய், இரண்டு கைகளையும் அணைவாய் தனது நெஞ்சோடு இறுக்கி வைத்தவாறு சைகை செய்து, “மாதவன் எங்கே?” எனக் கேட்டாள்.

மாதவப் பெருமாளை அவள் நெஞ்சோடு இறுக்கி வைத்திருந்ததைக் கூறுகிறாள் என்று புரிந்தவனாய், “நம் மாதவன் என்னுடைய பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார் கோதை” என்றவன்,

“உன்னுடைய பக்தியையும் கடமை உணர்ச்சியையும் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன் கோதை. இன்று நம் நாடு முழுவதும் உன்னுடைய வீரப்பராக்கிரமச் செயலைப் பற்றிய பேச்சு தான் உலவுகிறது. அரசரே நேரில் வந்து உனது நலனை விசாரித்து விட்டுப் போனார். இன்று நடந்த நிகழ்வை நரசிம்மர் கோவிலில் கல்வெட்டாய் பொறிக்கச் சொல்லி உத்தரவிட்டவர், உனக்கு வீரத்திருமகள் கோதை எனும் அடைமொழியையும் கொடுத்திருக்கிறார். உனது இல்லாளனாய் எனக்கு எத்தனை பெருமையாக இருந்தது தெரியுமா? நீ விழிக்காமல் இருக்கிறாயே என்பது மட்டுமே மனக்கவலையை அளித்தது எனக்கு. மற்றப்படி உன் செயலால் உன் மேல் பித்தாகி உன்மத்தமாகி கிடக்கிறேன் கோதை” என்றவனாய் அவளது கன்னத்தில் தனது மீசை முடி உராய அழுந்த முத்தமிட்டு கணவனாய் தனது மகிழ்வை வெளிப்படுத்தினான்.

நாணத்தால் சிவந்து போனது அவள் கன்னம். அவளின் கன்னங்களை வருடியவனாய், “உன்னைப் போன்று வீரமுள்ள ஒரு பெண் குழந்தை மகளாய் வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது கோதை” என்றவன் அவளின் நெற்றியில் முட்டினான்.

தன்னுடைய சுவாசக்காற்று மனைவி முகத்தில் வீசுமளவு நெருக்கமாய் அவளது முகத்தோடு ஒட்டியிருந்தவனின் மீசையைப் பிடித்திழுத்து நடப்புக்குக் கொண்டு வந்தவளாய், “எனக்கு என்னாயிற்று? நான் எவ்வாறு மயங்கிப் போனேன்?” என வாயசைத்தாள் கோதை.

அவள் அவ்வாறு கேட்டதும் அவனின் முகம் கோபத்தில் செம்மையுற, “இத்தனை நாட்களாய் பாம்பிற்குப் பால் வார்த்துக் கொண்டு இருந்திருக்கிறோம் கோதை” என்றான்.

புரியாது அவள் புருவத்தை நெறிக்க, “மேகலா அத்தை உனக்கு உண்ணுவதற்கு ஏதேனும் அளித்தாரா?” எனக் கேட்டான்.

ஆமெனத் தலையசைத்தவளாய் அப்பொழுது நடந்ததை மெல்லமாய் உரைத்தாள்.

“அம்மா சொல்லி ஒன்றும் அவர் உனக்கு நீராகாரத்தை அளிக்கவில்லை. நீ அம்மாவிடம் நரசிம்மர் கோவிலுக்குச் செல்வதாக உரைத்ததைக் கேட்டிருக்கிறார் அத்தை. அவருக்கு ஏற்கனவே தனது மகன் செங்கோடன் அங்கே வர போவது தெரிந்திருக்கிறது. அதனால் உன்னைத் தடுக்க வேறு வழித் தெரியாமல் நீராகாரத்தில் விஷம் கலந்த மயக்க மூலிகையைக் கலந்து உனக்கு அளித்திருக்கிறார்” என்றவன் சொன்னதும் அதிர்ச்சியில் எழுந்தமர்ந்தவளாய், “என்னது அவரும் செங்கோடனின் பாவச் செயல்களுக்குத் துணை புரிந்தாரா?” நம்ப முடியாத பாவனையுடன் சற்று ஆவேசமாய் வாயசைத்தவளுக்கு இருமல் வர, அவளுக்குக் குடிக்க நீரளித்தவனாய்,

“அமைதிக் கொள் கோதை! நீ இப்படி உணர்ச்சி வசப்பட்டால் நான் எதுவும் கூற மாட்டேன்!” என்று அதட்டலாய் உரைக்கவும், அமைதியாய் படுத்தவளின் மனமோ, எத்தனை பெரிய துரோகச் செயலைச் செய்திருக்கிறார் என்று குமுறியது.

“அரசரின் உத்தரவின் பேரில் காவல் படையினர் உடனே நமது வீட்டிலிருந்து நரசிம்மர் கோவில் வரையில் அந்நேரம் என்ன நடந்ததென விசாரணையைத் தொடங்கினர். ஏற்கனவே மகனின் இறப்புச் செய்தியைக் கேட்டுத் துவண்டிருந்தவரிடம் வீரபத்திரன் சற்று அதட்டி விசாரிக்கவுமே குற்றத்தை ஒப்புக் கொண்டார் அத்தை. இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட அரசர், நம் நாட்டில் இருந்து கொண்டே அரசுக்கு விரோதமாய்ச் செயல்பட்ட செங்கோடனின் அன்னையை ஆயுளுக்கும் சிறையில் அடைத்து வையுங்கள் என்று தண்டனையை அறிவித்து விட்டார்” என்றவனாய் அவளை நோக்கிச் சாய்ந்தவன்,

“அரசர் இன்று நடவடிக்கை எடுக்காது தண்டனை அளிக்காது இருந்திருந்தால், என்னவளை கொல்லத் துணிந்தவரை நானே கொன்றிருப்பேன்” அத்தனை கோபாவேசமாய் உரைத்திருந்தான் கருப்பண்ணன்.

அதே ஆக்ரோஷம் இங்கே இக்காட்சியைப் பார்த்திருந்த மாதவனுக்குள்ளும் உருவாக, பட்டெனக் கண்களைத் திறந்து தியானத்தை விட்டு வெளி வந்தவனாய், அருகிலிருந்த தாமரையின் கையைப் பிடித்து உலுக்கி அவளை நிகழ்வுக்குக் கொண்டு வந்தான்.

தாமரையின் மனத்தில் மாதவப் பெருமாள் சிலை குறித்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்த பொழுது அவளை உலுக்கி நிகழ்விற்குக் கொண்டு வந்திருந்தான் மாதவன்.

நிகழ்விற்கு வந்தவள், “கண்ணா, நான் உடனே மாதவப் பெருமாள் சிலையைப் பார்க்கனும்” என்று படபடப்புடன் சொல்ல, அவளின் கையைப் பற்றி எழுப்பியவன், “போகலாம் ஆனா இப்ப என் கூட வா தாமரை” என்றான்.

‘எங்கே கூட்டிட்டுப் போகக் கூப்பிடுறாரு?’ என்று சிந்தித்தவளாய் தனது கையைப் பற்றி அழைத்துச் செல்லும் அவனது பாதையைத் தொடர்ந்தவாறு சென்றிருந்தாள். நரசிம்மர் கோவிலைத் தாண்டி வெளியே நடந்து சென்றவனைப் பின்தொடர்ந்தவளுக்கு, எங்கே இவன் தன்னை அழைத்துச் செல்கிறான் என்று புரியவே இல்லை.

இவர்கள் இருவரும் கோவிலை விட்டு வெளியே செல்வதற்காகவே காத்திருந்தவன் போல் அவர்களைக் காண்காணித்தவனாய் கருவறைக்கு அருகே அமர்ந்திருந்த அந்தக் கோவிலின் பூசாரி குரூரப் பார்வையுடன் கைப்பேசியில் தனது அன்னைக்கு அழைத்தவனாய், “ஆபிசரம்மாவும் அவரோட காதலனும் வூட்டுக்கு வந்ததும் அவங்களுக்குப் பாயாசத்தைப் போட்டுடுமா” என்றான்.

நரசிம்மர் கோவிலைத் தாண்டி அவளை வெளியே அழைத்து வந்த மாதவன், கருப்பண்ணசாமியின் சிலையின் முன்னே அவளை நிறுத்தி விட்டு கையை விட்டதும், கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.

கருப்பண்ணசாமி சிலையின் கழுத்திலிருந்து இரண்டு மாலைகளை எடுத்தவனாய் அவளருகில் சென்றான்.

கண்கள் விரிய அதிர்வுடன் அவனை நோக்கி இருந்தவளின் முன் மாலையை விரித்து நின்றவனாய், “இந்தப் பிறவி மட்டுமல்ல இனி நான் இந்தப் பூமியில எடுக்கும் அத்தனை பிறவியிலும் நீ மட்டுமே என்னோட மனைவியாகுற வரம் வேணும் தாமரை! உன் மாதவனுக்கு அந்த வரத்தைத் தருவாயா?”

கருப்பண்ணனைப் போன்றே மாதவனும் கூறியதை கேட்ட நொடி அவளின் உடல் புல்லரித்துக் கண்களில் கண்ணீர் பொழிய, அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

எத்தனை நாள் ஏக்கம் இது! தனக்காகவெனத் தன்னவனென ஒருவனைக் கணவராய் பெற்று உயிருருக வாழும் பாக்கியம் தனக்கு இல்லவே இல்லையா என்று எத்தனை நாள்கள் ஏங்கி அழுதிருப்பாள். தனது வாழ்வில் இனி ஒருவனின் அரவணைப்பில் வாழ்வது என்பதெல்லாம் கானல் நீரென்று எண்ணி எத்தனை நாள்கள் கலங்கியிருக்கிறாள். இன்று அத்தனைக்கும் தீர்வாய் நானிருக்கிறேன் உனக்காகவெனத் தனது கரம் பற்ற ஒப்புதல் கேட்டு நிற்கும் அவன் கரத்தை இறுகப் பற்றியவளாய் அழுகையும் சிரிப்புமாய் ஆமெனத் தலையசைத்திருந்தாள் தாமரை.

ஆனந்த கண்ணீருடன் அவளது கழுத்தில் அவன் மாலை அணிவிக்க, அவளும் அவனது கழுத்தில் மாலை அணிவித்தாள். தனது விரலிலிருந்த மோதிரத்தைக் கழற்றி அவளுக்கு அணிவித்தவனாய், “இந்த நொடியில் இருந்து தாமரையாள் கேள்வன் (கணவன்) நான்” என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

முகம் செவ்வானமாய் மின்ன நாணத்துடன் சிரித்தவளின் கைப்பற்றி அழைத்துச் சென்று கருப்பண்ணசாமியின் முன் நின்றவனாய், “எங்க காதலுக்கு என்னிக்குமே நீங்க தான் சாட்சி சாமி! நாங்க எடுக்கும் அத்தனை ஜென்மத்துலயும் எங்களை எப்படியாவது சேர்த்து வச்சிடுங்க” என்று சத்தமாகவே கூறி வேண்டிக் கொள்ள, அவளும் ஆமோதித்தவளாய் தலையசைத்து வேண்டிக் கொண்டு அவனோடு இணைந்து விழுந்து வணங்கினாள்.

அடுத்து என்ன என்பது போல் அவனை அவள் பார்க்க, ஜீப்பை நோக்கி நடந்தவனைப் பின் தொடர்ந்திருந்தாள் தாமரை.

அவனின் நடவடிக்கை அவளுக்கு விசித்திரமாகத் தோன்றியது.

இருவருமாய் மாலையும் கழுத்துமாய் மௌனமாய் நடந்து வந்து ஜீப் வண்டியில் ஏறியதும், “ஏனிந்த திடீர் கல்யாணம் கண்ணா?” எனக் கேட்டாள்.

மாலையை அவளிடம் கழட்டிக் கொடுத்து விட்டு வண்டியை இயக்கியவனாய், “வாழ்வோ சாவோ இனி உன்னோட தான்னு முடிவு செஞ்சிட்டேன் தாமரை! அதான் ஏன் தள்ளிப் போடனும்னு உடனே கல்யாணம் செஞ்சிட்டேன்” என்றான்.

“ஆனா அதுக்காக ஏன் தியானத்தைப் பாதிலயே கலைச்சி கூட்டிட்டி வந்தீங்க?” எனக் கேட்டாள்.

“அது போகப் போகத் தெரியும்” கலக்கமான முகப் பாவனையுடன் தீவிரமான குரலில் சொன்னவனின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை இவளால்.

ஜீப்பின் இருக்கையில் தலையைப் பின்னே சாய்த்துப் படுத்தவளுக்கு, ‘கருப்பண்ணன் கோதை வாழ்க்கைல அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும்’ என்ற எண்ணமே சுழன்றடித்தது. இது வரை கண்ட காட்சிகளை எல்லாம் மறுமுறை நினைத்துப் பார்த்தவளாய் கண் மூடிக் கிடந்தவள் சட்டென மாதவன் புறம் திரும்பியவளாய், “மாதவப் பெருமாள் கோவில்ல இருக்கச் சிலைல ஏதோ குளறுபடி இருக்கு கண்ணா! இங்கே இருக்கச் சிவன் கோவில்ல அம்மன் சிலையும் இல்ல! முத்தரசிமா சிவநேசன் ஐயா சிலையும் இல்லை. இதெல்லாம் எங்கே போச்சுனு தேடனும். இதெல்லாம் பாதுகாக்குறது தானே நம்ம கடமை கண்ணா! நாம அதுக்காகவே நாம பிறந்திருக்கிறோமோனு தோணுது” என்றவளை புன்சிரிப்புடன் பார்த்தவனாய் வண்டியை நிறுத்தினான்.

மருத்துவமனையில் வண்டியை நிறுத்தியவனைப் பார்த்து கேள்வியுடன் அவள் பார்க்க, “வா தாமரை!” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றவன்,

“என் மனைவிக்கு ஃபுல் பாடி செக்அப் செய்யனும்” என்றவனாய் பணத்தைக் கட்டிக் கொண்டிருந்தவனைப் புரியாது பார்த்தாள் தாமரை.