“இது நல்லா இருக்குடி. நான் பேசாம இருந்தேன். நீதான் தொழில் பண்ணுங்க, அப்ரூவல் வாங்குங்கன்னு என்னை தூண்டிவிட்டுட்டு, இப்போ என்னையே திட்டுற இல்லை. ஒருவேளை என் பொண்டாட்டிக்கு நான் சும்மா இருக்கிறதுல இஷ்டம் இல்லை போலன்னு ஆரம்பிச்சா”
“நான் அப்படி சொன்னேனா? சும்மா எப்போ இருந்தீங்க நீங்க? பேசணும்ன்னு பேச கூடாது” என்று தன்வி அவன் தலை முடி பற்றி ஆட்டிவிட்டாள்.
தேசிகனுக்கு மனைவியின் கோவத்தை அடக்குவதிலே அதிக நேரம் கழிய, “இப்படியே போனா வெற்றி விழா கொண்டாட முடியாதுடி” என்றான்.
“ரொம்ப முக்கியம்” என்று தன்வி நொடித்து கொண்டாலும், அவள் கைகள் கணவனை இறுக்கமாக தான் அணைத்திருந்தது.
தேசிகன் கனவின் ஓர் பகுதி நிறைவேறிய நாள்!
ஆம் இன்று தான் அவன் ஹோட்டலை திறந்தனர்.
சாவித்திரியை முன்னிறுத்த, “என்னடா பண்ற. நீயும் தன்வியும் பண்ணுங்க” என்று அன்னை மறுக்க,
“முதலாளி தான் செய்யணும்” என்றான் மகன்.
“தேசிகா” என்று அன்னை அதிர,
“நீங்க தான் இதுக்கு முதலாளி. இதுமட்டுமில்லை இனி நான் ஆரம்பிக்க போற எல்லாத்துக்கும் நீங்க தான் முதலாளி” என்றான் மகன் முடிவாக.
“டேய். என்னடா இது” என்று சாவித்திரி கண்கள் கலங்க,
“ம்மா. உட்காருங்க” என்று அவரை அமர வைத்து தான் பூஜை முதல்கொண்டு எல்லாம் செய்தான்.
தன்விக்கு கணவன் இப்படி என்று முன்னமே சொல்லியிருக்க, அன்று தன்வி கணவனை அதிகமே கொண்டாடி விட்டாள்.
இன்னும், இன்னும் அவனை பிடித்து தொலைத்தது!
சாவித்திரிக்கு மாலை, மரியாதை செய்ய வைத்தவன், ராணிக்கான இருக்கையை அம்மாவிற்காக வர வைத்திருந்தான்.
“உட்காருங்கம்மா” என்று அவரின் கை பற்றி அமர வைத்தான்.
ராஜேந்திரன் நெகிழ்ந்து போய் தேசிகனை அணைத்து கொண்டார். சதாசிவம் முதல் முறையாக மருமகன் தோள் தட்டி கொடுத்தார்.
அதற்காக அவர்களுக்குள் எல்லாம் சரியாகிவிட்டதா என்றால், இல்லை தான். இப்போதும் சதாசிவம் மருமகனை கேளாமல், ஹோட்டலுக்காக விலையுர்ந்த பொருட்களை இறக்கி, அவனை டென்சன் செய்திருந்தார்.
“என்னோட கிப்ட் தன்வி. உன் வீட்டுக்காரரால் வேணாம் சொல்ல முடியாது” என்று மகளிடம் சொன்னார் தந்தை.
“கெஸ்ட்டை கவனிக்கணும். இவரை அப்புறம் பார்த்துகிறேன்” என்று தேசிகன் அப்போதைக்கு அவரை விட, தன்வி ஆயாசத்துடன் தலையசைத்து கொண்டாள்.
விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட, தன்வி மேற்பார்வை பார்த்தாள்.
தேசிகன் இல்லா இடங்களில், அவன் மனைவி தானே நின்றாள்.
“ண்ணா” என்று எங்கோ இருந்து அரவிந்தன் ஓடிவந்து அண்ணனை அணைத்து கொண்டான்.
சுற்றி ஆட்கள் இருக்க, “என்னடா?” என்று தம்பியை தனியே அழைத்து வந்தான்.
வீட்டினரும் என்னவோ என்று அவர்களுடன் வர, “பார்த்தேன். எனக்கு போதும்” என்றான் தம்பி பரவசத்துடன்.
“என்ன பார்த்த?” என்று எல்லாம் கேட்க, ஜன்னல் வழி காட்டினான்.
தேசிகனின் தந்தை, அவரின் வீட்டு ஆட்களும் அங்கிருந்தனர்.
இத்தனை நாட்களில் மிச்சமிருந்த சொத்துக்களையும் பறித்து, அம்மாவிற்கு கீழ் அவரை கொண்டு வந்திருந்தான்.
வாழ்நாள் முழுவதற்குமான அக்ரீமெண்ட் போட்டு, ஹோட்டலில் வேலைக்கு வைத்துவிட்டான்.
“அம்மா கையால சம்பளம் வாங்குவாங்க இல்லை, எனக்கு அது போதும்ண்ணா” என்றான் தம்பி.
“ஊரை விட்டு அனுப்புறதுல என்ன இருக்கு அரவிந்த்? நம்ம கண் முன்னாடி இருக்கணும். நம்ம முடிவுப்படி அவங்க இருக்கணும்” என்றான் தேசிகன்.
“புரியுதுண்ணா. அம்மா அப்படித்தானே அவங்ககிட்ட இருந்தாங்க” என்று அரவிந்த் சொல்ல,
“எனக்கு இது பிடிக்கலை” என்றார் சாவித்திரி.
“உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்மா. ஆகாதவங்க உங்களை விட்டு தள்ளி இருக்கணும்ன்னு நீங்க நினைப்பீங்க. நான் கூடவே வைச்சுக்கணும் நினைப்பேன்” என்றவன், சாவித்திரியின் முறைப்பில்,
“ம்மா. நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. சுதந்திரம் அவங்களை குறுக்கு வழியில போக சொல்லி தூண்டிவிடும். அப்படி அவங்க போக கூடாதுங்கிற நல்ல எண்ணம் தான்” என்று மகன் தோள்களை குலுக்கினான்.
“உன்னை எனக்கு தெரியும்டா” என்று அன்னை சொன்ன நேரம் அவர் கண்கள் கலங்கி போனது.
“ம்மா!” என்ற தேசிகன் அம்மாவை அணைத்து கொண்டான்.
மகன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவருக்கு, அவ்வளவு கண்ணீர். ஏன், எதற்கு என்ற காரணமே இல்லாமல், அழுகை.
வீட்டினரும் மிகவும் உணர்ச்சிவசப்பட, “எல்லாம் இங்க நின்னா, கெஸ்ட்டை யார் கவனிக்கிறது?” என்று ராஜேந்திரன் தான் அவர்களை வந்து அழைத்து சென்றார்.
பாட்டி கையால் முதல் பணம் வாங்கி கஜானாவில் வைத்த சாவித்திரி, மருமகளை பில் போட சொன்னார்.
விருந்தினர்கள் எல்லாம் கிளம்பவே மாலை ஆகிவிட்டது, அதன்பின்னே வீட்டினர் கிளம்ப, சாவித்திரி காரில் ஏறும் நேரம் அந்த மனிதரை பார்த்தார்.
என் இடம் இது, உன் இடம் அது! என்று கண்டு கொள்ளாமல் கிளம்பிவிட, அம்மாவிற்கு கார் கதவை மூடிய தேசிகன், அந்த மனிதரை நேர்பார்வை பார்க்க, ஆள் ஓடிவிட்டார்.
வாங்கிய அடி கொஞ்சமா? எங்கு சென்றாலும் அவருக்கு முன் மகன் நின்று, மேலும் நகர முடியாமல், பல விதங்களில் அவரை லாக் செய்து தான் இங்கு கொண்டு வந்துள்ளான்.
“நான் பார்த்துகிறேன்ண்ணா” என்று முரளி சொல்ல,
“உன் கண் பார்வையிலே வைச்சுக்கோ முரளி. வேற வழியில்லாமல் அடங்கி இருப்பார். பின்னாடி திரும்ப வேலையை காட்டுவாங்க. மொத்த குடும்பமும் உன் கட்டுப்பாட்டுல தான் இருக்கணும்” என்றான் தேசிகன்.
தன்வி கணவனுக்காக காத்திருக்க, அவளை கூட்டிக்கொண்டு ஆள் தலைமறைவாகி விட்டான்.
“எங்கடா என் பொண்ணு?” என்று சதாசிவம் கேட்க.
“ஏன் கேட்கிறீங்க?” என்று கேட்டான் முரளி.
“ஊருக்கு கிளம்ப, சொல்லிட்டு போகத்தான்”
“என்கிட்ட சொன்னா, அண்ணிகிட்ட சொன்ன மாதிரி தான்” என, அவனின் தலையிலே கொட்டிவிட்டவர்,
“உன் அண்ணா வேலையா தான் இருக்கும், பார்த்துகிறேன் உங்களை” என்று கிளம்பிவிட்டார்.
“எங்க போறோம்?” என்று தேசிகனிடம் தன்வி கேட்க,
“எனக்கே தெரியாது” என்றான் கணவன்.
“வாட்”
“ஆரம்பிச்சுட்டியா? எனக்கு உண்மையாவே தெரியாதுடி. உன்னோட இருக்கணும் அவ்வளவு தான்” என்றவன்,”நீயே ஏதோ ஓர் இடத்தை சொல்லு” என்று கேட்டு, அவள் சொன்ன மூணாறுக்கு அழைத்து சென்றான்.
“வீட்ல சொல்லணும்”
“யாரும் நம்மளை தேட மாட்டாங்க” என்றான் தேசிகன்.
“செம டையார்ட்” என்று தன்வி ஹோட்டல் அறைக்கு வரவும் கட்டிலில் விழுந்தாள்.
“டையார்ட் பேச்செல்லாம் இருக்க கூடாதுடி. நாம ஹனிமூனுக்கு வந்திருக்கோம்” என்று தேசிகன் அவள் மேலே விழுக,
“ஆஹ்” என்று கத்திவிட்ட பெண், “உங்களை” என்று அவனை கீழே தள்ளிவிட்டாள்.
“வாடி” என்று அவளை தனக்குள் கொண்டு வந்தான் தேசிகன்.
தன்வி இதமாக கணவன் மார்பில் சாய்ந்தவள், “மிஸ் பண்ணேன்” என்றாள்.
“என்னை தானே”
“ம்ஹூம். என் இடத்தை”
“அப்போ நானும் என் இடத்தை மிஸ் பண்ணேன்” என்று அவளுக்கு மேல் வந்து, மனைவியின் இடையில் முகம் புதைத்தான்.
“கொஞ்ச நேரம் சாய்ஞ்சுக்க விடுறீங்களா?” என்று தன்வி கடுப்பாக,
“எதுக்கு உடனே கோவம்?” என்று அவளின் விருப்பத்தை உடனே நிறைவேற்றினான்.
“ஹேய்” என்று தேசிகன் அவளை முகம் பார்க்க வைத்து, “என்னை மிஸ் பண்ணியா?” என்று கேட்டான்.
“ஆமா பண்ணேன். இப்போ என்ன அதுக்கு?” என்று மனைவி உதட்டை சுளித்தாள்.
“உன் கோவம் எல்லாம் அதனால தானா?” என்றவன், தன்வியின் உதட்டில் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான்.
“நீங்க ஏன் அன்னைக்கு மண்டபத்துல என்கிட்ட அவ்வளவு கோவப்பட்டிங்கன்னு புரிஞ்சது” என்றாள் தன்வி.
“தன்வி. தன்வி” என்று அவளை இன்னும் இறுக்கி கொண்டான் தேசிகன்.
“நீ என்னை வேணாம் சொல்லியும், எனக்கு நீ வேணும்ன்னு ஏன் வந்தேன் தெரியுமா? ஒரு நாளாவது ஏன்னு யோசிச்சிருப்பியான்னு கேட்டீங்க தானே? இப்போ யோசிக்கிறேன், அதிகமே யோசிக்கிறேன்”
“உங்க பேர், தொழில், பணம் எல்லாம் போனப்போ கூட உங்களுக்கு என்மேல கோவம் வரலை. நான் உங்களை நினைக்காதது தான், உங்களை அதிகமே கோவப்பட வைச்சதுன்னு புரிஞ்சது” என்று அவனை முழுதும் உணர்ந்து கொள்ள, தேசிகனின் ஆனந்த ஆர்ப்பரிப்பு எல்லாம் முத்தங்களாக பதிவானது.
“நான் சொல்லாமலே என்னை புரிஞ்சுக்கிட்டியாடி” என்று அவள் கண்களோடு கண்கள் கலக்க,
அவளின் வார்த்தைகளை என்னெவென்று சொல்ல! ப்ரொபோஸ் பண்றாளா? உன்னை போல நானும்ன்னு சொல்றாளா? நமக்குள்ள இருக்க உணர்வு ஒண்ணுதான்னு சொல்றாளா? இல்லை எல்லாம் சேர்ந்தா?
தன்வி அவன் உதட்டில் பதித்த அழுத்தமான முத்தம் எல்லாம் சேர்ந்து தான் என்று நிரூபிக்க , தேசிகனும் அவளுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தான்.
முன்பிருந்த வேகம் இல்லாமல், மிக மென்மையாய் ஓர் முத்தம்.
மனைவியிடம் அவனை கவர்ந்த இடங்கள் சுக அவஸ்தையில் நடுங்க, அவளை கவர்ந்த கணவனின் நெஞ்சத்தின் துடிப்பு வேகமாகி போனது.
இருவருக்கும் மற்றவரிடம் ரசிக்க ஆயிரம் இருந்தது. முத்தங்கள் தீர்ந்து போகாமல் நீண்டது.
வலி என்ற ஒன்றும் உணராமல், ஓய்வென்ற ஒன்றை கேட்காமல் மற்றவரிடம் மூழ்கி போனார்கள்.
தேசிகனின் நெஞ்சத்தில் தன்வியும், தன்வியின் இடையில் தேசிகனும் தங்களை அடக்கி கொள்ள மிகவும் முயன்றனர்.
பேச்சுக்கள் குறைத்து, வருடல்கள் அவர்களின் உணர்வை மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல, உதடுகள் அதை பதிவு செய்தது.