தன்வி வீட்டில் நடந்ததை முழுவதும் அண்ணனுக்கு சொன்ன சதாசிவம், “இதுக்கு நாம எதாவது செய்யணும்ண்ணா” என்றார்.
ராஜேந்திரன், “என்ன செய்யணும்ன்னு நினைக்கிற? தன்வி பாதுகாப்புக்கு ஆள் போடலாமா?” என்று கேட்க,
“அவளுக்கு அவளோட வீட்டுக்காரரே போதுமாம். நான் கேட்டது சாவித்திரிக்கு எதாவது செய்யணும்” என்று சொன்னார்.
“சாவித்திரிக்கா?” ராஜேந்திரன் ஆச்சர்யம் கொள்ள,
“நம்மளை அண்ணா சொல்லித்தானே கூப்பிடுறாங்க. உங்களுக்கு நானோ, எனக்கு நீங்களோ இப்படி நடக்க விட்டுடுவோமா? இனி சாவித்திரியும் அப்படித்தான்” என்றார் சதாசிவம்.
“சரி. சரி. என்ன செய்யலாம் சொல்லு” என்று அண்ணன் கேட்க.
“அந்தாள்கிட்ட ஏதோ பணம் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதை முடிச்சு விட்டுடலாம்” என்றார்.
“செய்யலாம்” என்றவர், முரளியை அழைத்து விசாரித்தார்.
“அவர் பைனான்ஸ் பண்றார். அதுல அதிகமே வரும்” என்று முரளி சொல்ல,
“அதென்ன அவர், அவனுக்கென்ன மரியாதை வேண்டிக்கிடக்கு” சதாசிவம் கோவம் கொண்டார்.
“டேய் தம்பி”
“உங்களுக்கு தெரியாதுண்ணா. சாவித்திரி காலை பார்த்திருந்தா, அவனை மட்டுமில்லை அந்த குடும்பத்தையும் முடிச்சுட்டு தான் நீங்க வந்திருப்பீங்க”
“ம்ம்ம். வலுக்கட்டாயமா கட்டிக்கிட்டு போய் கஷ்டப்படுத்தினாங்க தெரியும். ஆனா இந்தளவு தெரியாது”
“ஓடிப்போன அவங்க வீட்டு பொண்ணை விட்டு, கூட்டிட்டு ஓடின சாவித்திரியோட அண்ணனையும் விட்டுட்டு, சாவித்திரிகிட்ட தான் வீரத்தை காட்டுவானுங்களா? இப்போ நம்மகிட்ட காட்ட சொல்லுங்க. பார்ப்போம்”
“தம்பி. நீ சொல்லிட்ட இல்லை. நான் பார்த்துகிறேன் விடு” என்ற ராஜேந்திரன், “முரளி அந்த பைனான்ஸ் பத்தி என் ஆளுகிட்ட சொல்லு. முடிச்சிடுவான்” என்றார்.
“சார். அண்ணாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்” என,
“ண்ணா இவன் இப்படித்தான் சொல்வான்னு எனக்கு நல்லா தெரியும். இந்தாங்க நீங்க கேட்டது” என்று அண்ணனுக்கு அந்த தகவல்களை கொடுத்தவர், “போய் உன் அண்ணன்கிட்ட சொல்லிக்கோ போ” என்றார் முரளியிடம்.
“சார். அண்ணா இதை விரும்பமாட்டார். நீங்க ஏன் இதுக்குள்ள எல்லாம்?” என்று முரளி சொல்ல,
“நான் ஏன் வரக்கூடாது? அப்படித்தான் வருவேன்” என்றார் சதாசிவம்.
“நீங்க செய்வீங்களா மாட்டிங்களான்னு மட்டும் சொல்லுங்க”
“செய்றேன்டா” என்று ராஜேந்திரன் அப்போதே அதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார்.
சதாசிவம் அதன்பின்னே அமைதியாக, முரளி உடனே தேசிகனுக்கு அழைத்து இப்படி என்று சொன்னான்.
“இவரோட எனக்கு எப்போவும் வில்லங்கம் தாண்டா” மருமகன் கடுப்பாகி போனான்.
“ஏன்ண்ணா செய்யட்டும் விடுங்க. நல்லது யார் செஞ்சா என்ன?” என்றான் முரளி.
“ஓஹோ. கதை அப்படி போகுதா? உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்டா” என்று தேசிகன் வைத்துவிட்டான்.
ராஜேந்திரன் என்ன செய்தாரோ, தேசிகனின் தந்தை பைனான்ஸ் நிரந்தரமாக மூடப்பட்டதுடன், அவர்கள் மேல் சிலர் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர்.
“வட்டி அதிகம், வீட்டுக்கு வந்து மிரட்டினாங்க, அடிச்சாங்க, வீட்டை அபகரிச்சுட்டாங்க” என்று பல குற்றங்கள் அவர்கள் மேல் பதிவாக, தேசிகன் தந்தை மட்டுமில்லை, அவர்கள் வீட்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
“முக்கியமான ஆளா பார்த்து, உள்ள வைச்சிட்டாங்க எப்படி?” என்று தேசிகனின் மாமா கேட்டார்.
“அதான்ப்பா எனக்கும் புரியலை. அந்த வீட்ல வலுவான ஆளுங்க எல்லாம் உள்ள போயிட்டா யார்தான் அந்த குடும்பத்தை இனி காப்பாத்தறது?” என்று பெரியவர் சொல்ல,
“தாத்தா. போதும்” என்றான் பேரன்.
“என்ன தேசிகா”
“நீங்க தான் அந்த ஆளுங்களை சொல்லி உங்க சம்மந்திக்கு கொடுத்தீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றார் பேரன்.
“அது, சும்மா பேசும் போது பேச்சோடு பேச்சா”
“புரியுது தாத்தா. ரொம்ப கஷ்டப்பட்டுக்க வேணாம்”
“டேய் இப்போ என்ன? நான்தான் சொன்னேன். என் பொண்ணை பண்ணதுக்கு, திருப்பி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது செஞ்சுட்டேன். போடா” என்று சென்றார் தாத்தா.
“என்னாச்சு?” என்று வீட்டு பெண்கள் புரியாமல் கேட்க,
“வெளிநாட்டுக்கே போகணும்ன்னாலும், போய் வா ராசா” என்று பாட்டி பேரனின் கன்னம் வழித்தார்.
தேசிகன் எங்கோ பார்த்து தலை முடியை கோதிக்கொள்ள, தன்வி எழுந்து அறைக்குள் ஓடிவிட்டாள்.
சாவித்திரிக்கு முகம் முழுதும் புன்னகை. அன்னை மனது நிறைந்து போனது.
அரவிந்தன் மட்டும் அண்ணனை முறைத்து கொண்டே சுற்ற, “உனக்கு என்னடா?” என்று பிடித்து வைத்து கேட்டான் தேசிகன்.
“பணம் போனா அந்தாள் அடங்கிடுவாரா? வெளியே வந்தும் திரும்ப எதாவது செஞ்சா அப்புறம் நான்”
“அரவிந்த்”
“ண்ணா. எனக்கு”
“உடனே எதுவும் நடக்காது. நீ பொறுத்து தான் ஆகணும். இருப்பன்னு நம்புறேன்” என்று முடித்து கொண்டான்.
அந்த வாரமே தன்வியின் அலுவலகம் தயாராகிவிட, திறப்பு விழாவிற்கு நாள் குறித்தனர்.
ராஜேந்திரனின் மொத்த குடும்பமும், அலுவலக ஆட்களும் முதல் நாளே வந்துவிட, தேசிகன் சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தான்.
பூஜைக்கு தம்பதி சகிதமாக அமர்ந்து, சாவித்திரி கையால் ரிப்பனை கட் செய்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி என்று எல்லாம் நல்லபடியே முடிந்தது.
சதாசிவத்திற்கு முழு திருப்தி. “ரொம்ப நல்லா இருக்குப்பா” என்று விழா முடிந்ததும் ராஜேந்திரன் மருமகனின் தோள் தட்டினார்.
மச்சான்களும் அவனை அணைத்து பாராட்ட, “நீங்களும் பாராட்டலாம்ண்ணா. நான் கூச்சம் எல்லாம் படமாட்டேன்” என்று மனோகரிடம் சொன்னான் தேசிகன்.
“உன் பொண்டாட்டிக்கு நீ செய்ற. நான் எதுக்கு மேன் உன்னை கட்டிப்பிடிச்சு பாராட்டணும். முதல்ல எங்களுக்கு எதாவது சாப்பிட கொடு தம்பி. பூஜை முடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகிடுச்சு” என்றான் மனோகர்.
“அப்படியே மாமனாருக்கு ஏத்த மருமகன் நீங்கண்ணா” என்று தேசிகன் கடுப்பாக,
“எப்போ பார்த்தாலும் அவர் நினைப்பு தான் உனக்கு. பாரு உனக்கு பின்னாடி தான் நிக்கிறார். போய் பேசிட்டு வா” என்று மனோகர் சீண்ட,
“அதுக்கு அந்த மலை மேலிருந்து குதிச்சிடுவேன்” என்றான் தேசிகன்.
“என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க?” என்று தன்வி கணவனை அழைக்க வந்தவள் கண்டிக்க,
“உன் அப்பாகிட்ட பேசுறதுக்கு”
“மலை மேலிருந்து குதிச்சிடுவேன் சொன்னாரா?” என்று தன்வி முடித்து வைத்தாள்.
“பொண்டாட்டிக்கு நல்லா ட்ரைனிங் கொடுத்திருக்க தம்பி” என்று மனோகர் புருவம் தூக்க,
“நீங்க அண்ணிக்கு கொடுத்திருக்க மாட்டீங்களே” என்று கேட்டான் தேசிகன்.
“மாமா ஏன் கொடுக்கணும்? அக்காவை விட மாமாதான் அப்பாகிட்ட குளோஸ் தெரியுமா?”
“நல்லா தெரியுது. விஷம் பொங்கி வழியுதுங்கண்ணா”
“உங்களோட! மாமா ஒரு நிமிஷம்” என்று கணவனை இழுத்து வந்தவள், “எப்போ பாரு என் அப்பாவையே வம்பிழுப்பிங்களா? முரளிகிட்ட பேசினேன். அப்ரூவலை வாங்க கூடாதுன்னு நிறுத்தி வைச்சிருக்கீங்களாமே?” என்று கேட்க.
“ஹேய் இன்னைக்கு உன்னோட நாள். இதை அப்புறம் பார்ப்போம். டேய் பந்தி போடாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று கத்தி கொண்டே சென்றுவிட்டான்.