அத்தியாயம் 27

இமையான் நாட்டின் அரசன் இமையேந்திரனுக்கு அரிதான பொக்கிஷங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வைப்பதில் அதீத விருப்பமும் ஆர்வமும் உண்டு.

அவரின் இத்தகைய ஆசையைப் பற்றி அறிந்த செங்கோடன், எதிரி நாட்டின் அரசனாய் இருப்பவரிடம் இந்நாட்டு பொக்கிஷத்தைப் பற்றி உரைத்தால் அதனைக் கைப்பற்றுவதற்காகவே போர் மூளும் என்று நம்பினான். அதற்கேற்ப இந்நாட்டின் பொக்கிஷங்களைப் பற்றி அந்த அரசரிடம் உரைத்து நம் நாட்டின் மீது படையெடுக்கும் எண்ணத்தை ஊற்றெடுக்கச் செய்து விட்டான்.

இவ்விடயத்தை அரசவையில் ஒற்றன் செய்தியாகப் பகிர்ந்து கொண்டிருந்த பொழுது, ‘அரசரும் அறியாத மாதவப்பெருமாள் சிலையின் ரகசியம் பற்றிச் செங்கோடன் அறிவானே! ஒருவேளை பொக்கிஷமென இச்சிலையைப் பற்றி எதிரி நாட்டு அரசரிடம் தெரிவித்திருப்பானோ’ என்ற சந்தேகம் எழுந்தது கருப்பண்ணனுக்கு. ஏனோ மனத்தில் ஒருவிதமான பயத்தை உணர்ந்தான் கருப்பண்ணன்.

அங்கே அரசவையில் இச்செய்தியை ஒற்றன் கூறியிருந்த அதே நேரம், இங்கே வீட்டில் குழந்தைக்கு அமுதூட்டியவாறு அமர்ந்திருந்த கோதையின் நெஞ்சில் ஏதோ விசித்திரமான உணர்வு உண்டானது. உடனே நரசிம்மர் கோவிலுக்குச் செல்லென உள்ளம் உந்தித் தள்ளியது.

குழந்தை மாதவக்கண்ணன் அமுதுண்டு முடித்ததும், அவனை மடியிலிருந்து இறக்கிப் படுக்கையில் படுக்க வைத்து விட்டுச் சமையலறையில் இருந்த அத்தையிடம் வந்தவள், “அத்தை! நரசிம்மர் கோவில் வரை சென்று வருகிறேன்! மாதவனைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்றவளாய் நரசிம்மர் கோவிலை நோக்கி புறப்பட்டுச் சென்றாள்.

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து கிளம்பிய போது, வீட்டினருகில் இருந்த குடிலில் தங்கியிருந்த செங்கோடனின் அன்னை மேகலை இவளை நோக்கி ஓடோடி வந்தவராய், “பச்சை உடம்புக்காரி, எதற்கம்மா இப்படி வேகாத வெயிலில் வெளியே செல்கிறாய்!” எனக் கேட்டார்.

பெரும்பாலும் இவளது அத்தையுடன் இணைந்து வீட்டு வேலைகள் செய்வார் மேகலை. ஆயினும் எப்பொழுதும் மற்றவரைக் குறைக் கூறும் அவரது பேச்சு கோதைக்குப் பிடிக்காது என்பதால் அவரிடம் சற்று ஒதுக்கத்துடன் தான் பழகுவாள்.

“உடம்பு நன்றாகத் தான் இருக்கிறதம்மா” என்றவளாய் நில்லாது சென்றிருந்தாள் கோதை.

கோதை சில மைல் தூரம் நடந்து சென்றிருந்த போது, “கோதை… கோதை” என்றழைத்தவராய் வந்து நின்ற மேகலை, “இந்த நீராகாரத்தைக் குடித்து விட்டு போம்மா! உன் அத்தை தான் உன்னிடம் இதனைக் கொடுக்கச் சொன்னார்” என்றவராய் வலுகட்டாயமாய் அவளின் கரத்தினில் நீராகாரம் நிறைந்த சொம்பைத் திணித்தார்.

“அத்தையா கொடுத்து விட்டார்கள்” எனக் கேட்டாள்.

ஆமாம் என்றவர் சொன்னதும், கடும் வெயில் மண்டையைப் பிளப்பதை நிமிர்ந்து பார்த்தவளாய், நீராகாரத்தைப் பருகினாள்.

“சரிம்மா! நான் வருகிறேன்” என்றவளாய் முன்னே செல்ல,

“கோதை உன்னுடன் நானும் வரவா? வேகாத வெயிலில் தனித்துச் செல்கிறாயே! நான் வந்தால் உனக்கு உதவியாக இருக்குமல்லவா?” என்று கேட்டார்.

“இல்லை அம்மா! தங்களின் உதவி இப்போதைக்கு எனக்குத் தேவையில்லை” என்றவளாய் முன்னேறிச் சென்றவள், ‘என்னாயிற்று இன்றைக்கு இவருக்கு! இது நாள் வரை இப்படி எல்லாம் உதவுவதாகக் கேட்டதில்லையே’ என்று சிந்தித்தவாறு நடந்திருந்தாள்.

நரசிம்மர் கோவிலை அடைந்து மூடியிருந்த வேலிகளைக் கடந்து உள்ளே சென்றாள் கோதை.

மதிய வேளை என்பதால் கோவிலின் கதவுகள் பூட்டப்பட்டிருக்க, உள்ளே எவரும் இல்லை.

சாவியினால் கதவுகளைத் திறந்தவாறு உள்ளே சென்றவளுக்கு லேசாய் தலைச்சுற்றுவது போல் தோன்ற, அப்படியே அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்து விட்டாள்.

தன்னைச் சுற்றி ஏதோ நடப்பது போன்ற உள்ளுணர்வுத் தோன்ற, தன்னை மீறி விறுவிறுவென எழுந்தவளாய் நரசிம்மப் பெருமாளின் கருவறைக்குள் சென்று, அங்கே இருந்த பெரிய நரசிம்மப் பெருமாளின் சிலையின் பின்னே இருந்த அறையின் வழியாகப் போர்கருவி இருக்கும் அறைக்குள் சென்றாள்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் படியான ஆயுதம் எதையேனும் கையில் வைத்துக் கொள்ள வேண்டுமென எண்ணியவளாய் அங்கிருந்த வாள்களைப் பார்வையிட்டவளின் செவியில் ஏதோ பேச்சுச் சத்தம் கேட்க, அதிர்ந்தவளாய் எவ்வித சத்தமும் எழுப்பாது அப்படியே நின்றாள்.

கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பேச்சின் ஒலி அதிகரிக்க, யாரோ பேசிவாறே தான் இருக்கும் இடத்தை நோக்கி வருவதை உணர்ந்தவளின் நெஞ்சு துடிப்பு எகிற, மறுநொடி அங்கிருந்த பெரிய கதவின் பின்னே ஓடிச் சென்று மறைந்து நின்றாள்.

“கொல்லரே இப்பொழுதாவது என்னை நம்புவீரா? பாரும்! உம்மை எதிரி நாட்டின் போர்க்கருவி அறைக்கே நான் அழைத்து வந்திருக்கிறேன். இப்பொழுதாவது அரசரிடம் எம்மை நம்பச் சொல்லி உரைப்பீரா?” என்று ஒருவன் பேசுவதைக் கேட்டாள்.

‘எதிரி நாட்டுக் கொல்லனை இங்கே அழைத்து வந்துள்ளானா? யாரது?’ செவியில் கேட்ட செய்தியில் நெஞ்சம் குமுறிக் கொண்டு வர, தூணிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள் கோதை.

‘செங்கோடா’ அதிர்ச்சியில் கண்கள் விரிய வாயசைத்துச் சொன்னவளாய் நின்றவள், ‘கதவையெல்லாம் சாற்றிவிட்டுத் தானே உள்ளே வந்தேன்! எந்தப் பாதை வழியாக வந்திருப்பான்?’ என்று சிந்தித்தாள்.

‘மாதவப் பெருமாள் கோவிலின் பாதாளச்சுரங்க வாசல் வழியாக இக்கோவிலின் இந்த அறைக்கு வந்திருப்பானாய் இருக்கும். அது தவிர இங்கு வர வேறு மார்க்கம் இல்லையே! ஆமாம் எதற்காகக் கொல்லனை இங்கே அழைத்து வந்திருக்கிறான் இவன்’ என்று சிந்திக்கலானாள்.

செங்கோடனின் பேச்சைக் கேட்ட அந்தக் கொல்லனோ, “அரசர் கேட்டது இதுவல்லவே செங்கோடா? ஏதோ அரிதான பொக்கிஷம் என்றுரைத்தாயே! எங்கே அது?” எனக் கேட்டார்.

“ம்ம் இதெல்லாம் பார்த்ததும் என்னை நம்புவீர் என்று நினைத்தேன்” என்று பெருமூச்சு விட்டவனாய், “வாரும் காண்பிக்கிறேன்” என்று அந்த அறையின் எதிர்புறமிருந்த வேறொரு பாதை வழியாகப் பாதாள அறைக்கு அந்தக் கொல்லனை அழைத்துச் சென்றான் செங்கோடன்.

‘எந்தப் பொக்கிஷத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஒரு வேளை மாதவப் பெருமாள் சிலையாக இருக்குமோ!’ என்று நினைத்த மறு நொடி, கோதையின் நெஞ்சம் பதற, ‘அய்யோ எம் மாதவன்! என் உயிரே போனாலும் எம் மாதவனை எவருக்கும் தர மாட்டேன்’ என்று மனத்திற்குள் சூளுரைத்தவளாய் அவர்கள் அங்கிருந்து சென்றதை உறுதிச் செய்து கொண்டு வெளியே வந்தவள், இடைக்கச்சையோடு வாளை சொருகியவளாய் அவர்கள் சென்ற பாதை வழியே பாதாள அறை நோக்கிச் சென்றாள்.

‘நான் தர மாட்டேன்! என் உயிரே போனாலும் எம் மாதவனை நான் தர மாட்டேன்’ மீண்டும் மீண்டும் மனத்தோடு ஜபம் போல் உச்சரித்தவளாய் தடதடக்கும் மனத்துடன் முன்னேறிச் சென்றிருந்தாள்.

விறுவிறுவென நடையில் வேகம் கூட்டிச் சென்றவளுக்கு மெல்ல தலைச்சுற்றுவது போல் தோன்றியது.

‘நான் தர மாட்டேன்! என் உயிரே போனாலும் எம் மாதவனை நான் தர மாட்டேன்’ மனத்திற்குள் உச்சரித்த வண்ணம் தலையை உலுக்கியவளாய் மயக்கத்தைத் தெளிவித்தவளின் கண்களுக்குச் சில அடித் தூரத்திலேயே அந்தக் கல்லின் பிரகாசம் தெரிந்தது.

அந்தப் பிரகாசத்தைப் பார்த்ததும், “இச்சிலையைக் காப்பது எனது இல்லாளான உனது கடமை கோதை!” அன்று கருப்பண்ணன் இச்சிலையைக் காண்பித்து உரைத்தது இவளது நினைவில் வந்து போனது.

“நிச்சயம் கண்ணா! எம் மாதவனை நான் யாருக்கும் தர‌ மாட்டேன். என் உயிரே போனாலும் யாருக்கும் நான் தர மாட்டேன்” மனத்தோடு உறுதிப் பூண்டாள்.

மாதவனை எப்படியேனும் இவர்களிடமிருந்து காப்பாற்றியாக வேண்டுமென்ற ஆக்ரோஷத்துடன் கையில் வாளை ஏந்தியவளாய் வேக நடையுடன் அந்த அறை நோக்கிச் சென்றாள்.

“என்ன ஒரு பிரகாசம்? இத்தகைய கல்லை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை செங்கோடா” அந்த எதிரி நாட்டு கொல்லர் வியப்பில் விரிந்த கண்களுடன் கூறியவாறு கையில் மாதவப் பெருமாளை ஏந்தி நிற்பதைப் பார்த்த நொடி, அந்தச் சிலை மட்டுமே தனது குறியென வெறிக் கொண்ட வேங்கையாய் ஓடி வந்தவள், ஒரு கையால் அந்தக் கொல்லனின் கழுத்தின் மீது வாளை வீசியவாறு மறுகையில் மாதவப் பெருமாளின் சிலையைப் பிடுங்கி தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் கோதை. கண்களில் குரோதம் குடியேற அவளின் நெஞ்சம் ஆக்ரோஷத்தில் ஏறியிறங்கத் துடித்திருக்க உக்கிர காளியாய் கொல்லனைப் பார்த்திருந்தாள்.

நிமிட நேரத்தில் நடந்த இச்செயலில் தன் முன்னே உயிரற்றுக் கிடந்த கொல்லனைக் கண்டு அதிர்ந்தவனாய் செங்கோடன், “கோதை” எனக் கத்தியவாறு தனது இடுப்பில் சொருகியிருந்த வாளை எடுத்து அவளை நோக்கி வீசினான்.

அவன் வாள் வீசிய திசையிலிருந்து எதிர்புறம் நகர்ந்தவளாய் அவனது தாக்குதலில் இருந்து தப்பியவள், துரிதமாய்ச் செயல்பட்டு மடிந்து அமர்ந்தவளாய் தனது கையில் இருந்த வாளை அவனது வயிற்றில் சொருகினாள்.

‘கோதை’ என வலி நிறைந்த குரலுடன் கத்தியவாறு செங்கோடன் கீழே விழுவதை, கண்கள் சொருக தெளிவற்ற காட்சியாய் பார்த்தவளின் வாயினிலிருந்து ரத்தம் வழிய, மாதவப் பெருமாள் சிலையை மார்போடு இறுக அணைத்தவாறு, ‘எம் மாதவனைத் தர மாட்டேன்’ எனக் கூறியவாறே அப்படியே சரிந்து விழுந்தாள்.

அதே நேரம் அரசவையில் இருந்த கருப்பண்ணனின் உள்ளம் ஏதோ இனம்புரியாத உணர்வில் கவலையுற்றுப் படபடவெனத் துடிக்க, வீரபத்திரனிடம் உரைத்துவிட்டுக் கிளம்பியவனாய் புரவியில் வீட்டை நோக்கி வந்திருந்தான்.

அடுத்தச் சில மணி நேரத்தில் வீட்டிற்குச் சென்றவன், தாயின் மூலம் கோதை நரசிம்மர் கோவிலுக்குச் சென்றிருப்பதை அறிந்து அங்கே சென்று பார்த்தான். கோவிலைச் சுற்றி எங்குமே அவள் இல்லாது போக, தடதடக்கும் மனத்துடன் பாதாள அறை நோக்கி ஓடினான்.

அங்கே செங்கோடனும் மற்றொருவனும் இறந்து கிடப்பதையும், கோதை மார்போடு மாதவன் சிலையை இறுக்கிப் பிடித்தவாறு வாயில் ரத்தத்துடன் இருப்பதையும் பார்த்து பேரதிர்ச்சிக்குள்ளானவனாய், “கோதை” எனக் கத்தியவாறு அவளருகில் சென்றவனின் கண்ணீர் விழி மீறி கன்னத்தைக் கடந்திருந்தது.

குரல் தழுதழுக்க, “கோதை! கண் திறந்து பார் கோதை! உனக்கு என்னாயிற்று” என்றவனாய் அவளின் கன்னத்தைத் தட்டியவன், அவள் கரத்திலிருந்த சிலையை இழுக்க, அது வரை அசைவில்லாது கிடந்தவள், அவன் சிலையை இழுத்த மறுநொடி, மேலும் அச்சிலையைத் தன் நெஞ்சோடு அணைத்தவளாய், “தர மாட்டேன். எம் மாதவனை நான் யாருக்கும் தர‌ மாட்டேன். என் உயிரே போனாலும் தர மாட்டேன்” எனக் கத்தியவாறு கண் விழித்துப் பார்த்தாள்.

தன் எதிரே கருப்பண்ணனைக் கண்டதும் அவளின் மனம் சமன்பட, “கண்ணா வந்து விட்டீர்களா? மாதவனைக் காப்பாற்றி விட்டேன் கண்ணா” மெல்ல தன் கைப்பிடியைத் தளர்த்தியவளாய் உரைத்தவள் முழுதாய் மயங்கிப் போனாள்.

அவளின் பிடி தளர்ந்ததும் மாதவப் பெருமாள் சிலையைத் தூக்கி அங்கேயே வேறொரு இடத்தில் பதுக்கி வைத்து விட்டு கோதையைக் கையில் ஏந்தியவனாய் மருத்துவக் குடிலை நோக்கி ஓடினான் கருப்பண்ணன்.

இக்காட்சியினைத் தியானத்தில் பார்த்தவனாய் அமர்ந்திருந்த மாதவனின் உள்ளம் ரயில் தண்டவாளமாய்த் தடதடவெனத் துடித்திட, அவனின் வாயோ அவனையும் மீறி, ‘வந்து விடு கோதை! மீண்டு வந்து விடு கோதை’ என்று அசைந்திருந்தது.