தன்விக்கு அந்த மனிதர் நிற்கும் இடத்தில் நிற்க கூட பிடிக்காததால், காருக்கு வந்துவிட, ஓட்டுனர் தேசிகனின் தந்தையை அடக்கி, அங்கிருக்கும் மரத்தில் கட்டிவிட்டார்.
கை உடைக்கப்பட்டவனையும் கட்டி போட்டுவிட்டு, இருவரின் போனையும் எங்கோ தூக்கி வீசிவிட்டார்.
“அவங்க ஏதோ திட்டத்தோட தான், காரை தன்வி மேடம் பக்கத்திலே நிறுத்தி வம்பிழுத்தாங்க தம்பி. அதான் அந்த பையன் கையை உடைக்க வேண்டியதா போச்சு” என்று தேசிகனுக்கும் போனில் அழைத்து சொன்னார்.
தன்வியும் அப்போது தான் அதை உணர, வீட்டினர் இவர்கள் வருமுன் அங்கிருந்ததோடு, முதலில் தன்வியின் நலனை தான் ஆராய்ந்தனர்.
ஓட்டுனரிடம் தேசிகனின் மாமா ஏதோ விசாரித்து கொண்டிருக்க, “பேரன் கல்யாணத்துலே, எனக்கு அவன் மேல சந்தேகம் வந்திடுச்சு. புதுசா வீட்டுக்கு எல்லாம் கூப்பிட்டான். என்ன திட்டம் வைச்சிருக்கான் தெரியலையே” என்றார் பெரியவர் யோசிக்க,
“தன்வியை தனியே பார்க்கவும், சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க பார்த்திருக்கான். நாம கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்” என்றார் தேசிகனின் மாமா.
அரவிந்தன் போனோடு உள்ளே வந்தவன், “இன்னமும் கட்டிப்போட்ட இடத்துல இருக்காங்களாம். இனிமேல் அண்ணி பக்கமே திரும்பாத மாதிரி எதாவது செஞ்சிடலாம் தாத்தா” என்றான் ஆவேசமாக.
“அரவிந்தா. நிதானமா இரு ராசா. தேசிகன் வரட்டும்” என்று பாட்டி சொல்ல,
“அண்ணா வரும் போது வரட்டும் பாட்டி. எனக்கு அந்தாளை எதாவது செஞ்சே ஆகணும்” என்று கத்த,
“அரவிந்த்” என்று சாவித்திரி மகனை கண்டிப்புடன் அழைத்தார்.
“ஒருத்தன் அந்த வழியில போனதே அதிகம். நீயும் கிளம்பாத”
“அண்ணா போயிட்டான்னா, நானும் அந்த வழியில தான் இருக்கேன்னு அர்த்தம்மா” என்றான் இளைய மகன்.
“டேய். ஏண்டா இப்படி? முதல்ல அமைதியா இருந்து, அவங்க திட்டத்தை கண்டுபிடிங்க. அப்புறம் என்ன செய்றதுன்னு பார்ப்போம்” என்று சொல்ல,
“சாவித்திரி சொல்றது சரி. அதை என்னன்னு பாரு” என்று தேசிகனின் மாமாக்கு சொல்ல, அவர் உடனே கிளம்பினார்.
ஆனால் அவருக்கு முன் தேசிகன் அங்கிருந்தான். கை உடைத்திருந்தவனின் கதறல் வெகு தொலைவில் கேட்டது.
தேசிகனின் தந்தைக்கு மகனின் ஆக்ரோஷத்தை பார்க்க, பார்க்க வியர்த்துவிட்டது.
“என் பொண்டாட்டி உன்கிட்ட மன்னிப்பு கேட்கணுமா?” என்று அவனின் இன்னொரு கையையும் உடைத்ததோடு, உடம்பில் எங்கு அடி விழுகிறது என்று தெரியாமல் மொத்தமும் தடம் பதிந்து போனது.
வலியில் மயங்கி விட்டவனை பார்த்தபடியே அங்கு வந்த தேசிகனின் மாமா, “எதாவது சொன்னானா?” என்று கேட்டார்.
“இனி இந்தாள் சொல்லுவார். கேட்டுட்டு வாங்க” என்று வீட்டுக்கு கிளம்பிட்டான்.
தன்வி ஹாலிலே இருக்க, அவளை நெருங்கும் முன், அவளை முழுதும் ஆராய்ந்துவிட்டான்.
“நான் ஓகே” என்று தன்வி சொல்லவும் செய்தாள்.
தேசிகனின் அத்தை மருமகனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார். அவனிடம் இன்னமும் அந்த ஆக்ரோஷம் மிச்சமிருக்க, வீட்டினர் மௌனம் காத்தனர்.
காற்று நன்றாக வீசிய போதும், தேசிகனிடம் இருந்து வேர்வை வடிந்து கொண்டே இருந்தது.
கைகளை இறுக்கமாக கட்டி கொண்டவனின் கால்கள் வேகமாக ஆடியது.
இவரை நான் கண்டுக்காம விட்டிருக்க கூடாது. எப்படி விட்டேன்? ஏன் விட்டேன்? கல்யாணத்துல பிரச்சனை பண்ணப்பவே நான் ஏன் சுதாரிக்காம போனேன்?
“தேசிகா ராசா. என்னயா. நிதானமா இரு” என்றார் பாட்டி பேரனின் கால்களின் மேல் கை வைத்து.
“நிதானமா தான் இருக்கேன் பாட்டி. பார்த்துக்கலாம் விடுங்க” என்றான்.
“உங்க பேரன் அதுக்கான வாய்ப்பை எனக்கு கொடுக்க மாட்டேங்கிறார். நான் என்ன செய்யட்டும்?”
“ஒன்னும் செய்ய வேண்டாம். எல்லாத்தையும் திருப்பி எடுத்திட்டு போங்க” என்றான் தேசிகன்.
“தேசிகா. என்னயா இது?” என்று பாட்டி கண்டிக்க,
“ஏங்க” என்றாள் தன்வி அவனை கட்டுப்படுத்தும் விதமாக.
“திருப்பி எடுத்துட்டு போறதா? என்ன பேசுறோம்ன்னு யோசிச்சுதான் பேசுறாரா உங்க பேரன்?” என்று பெரியவரிடம் மாமனார் கேட்க,
“நல்லா யோசிச்சு, தெளிவாத்தான் சொல்றேன். உங்க சீர் எங்களுக்கு வேண்டாம்” என்றான் தேசிகன்.
“அப்போ இதுக்காக தான், நான் விருந்துக்கு கேட்டப்போ எல்லாம் முடியாதுன்னு சொன்னதா?”
“பங்க்ஷனுக்கு கூப்பிட்டு வைச்சு அவமான படுத்தி அனுப்புறது தானே உங்க வழக்கம். அதான் முடியாதுன்னு சொன்னேன்” என்றான் மருமகன்.
“அதுக்காக தான் உங்ககிட்ட வந்து மன்னிப்பு கேட்கவும் ரெடியா இருந்தேனே”
“உங்க மன்னிப்பு எனக்கு இப்போவும் வேண்டாம். நான் உங்க வீட்டுக்கு வந்தது என் பொண்டாட்டிக்காக, இப்போ இதெல்லாம் வேணாம் சொல்றது எனக்காக”
“என் பொண்ணுக்கு நான் செய்றதை நீங்க எப்படி தடுக்க முடியும்? நான் சீரை இறக்கிட்டு தான் போவேன்” என்ற சதாசிவம், “எல்லாம் இறக்குங்க” என்று ஆட்களுக்கு குரல் கொடுத்தார்.
ம்ஹூம். ஒரு பொருள் கூட கீழிறங்கவில்லை.
சதாசிவத்திற்கு ரத்த அழுத்தம் உச்சிக்கு ஏற, மனிதர் கைகள் நடுங்க ஆரம்பித்தது.
முரளி உடன் வந்திருந்தவன், “அண்ணா” என்றான்.
“என்னடா நீ இறக்க போறியா? போய் இறக்கு பார்ப்போம்” என்றான் தேசிகன்.
“ண்ணா. நான் அப்படி சொல்லலை” என்று அவன் பதற,
“எப்போவோ நடந்ததுக்கு என்னை பழி வாங்குறீங்களா?” என்று சதாசிவம் கேட்டார்.
“பழி வாங்கிறதுன்னா உங்களுக்கு அர்த்தம் தெரியாதா? அதென்ன எப்போவோ நடந்தது? இப்போவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம தானே லாரியை வீட்டு வாசல்ல நிறுத்தினீங்க?”
சதாசிவம் நொடி திணறி, “நீங்க நாள் தள்ளி போடவும், எனக்கு சந்தேகம் வந்திடுச்சு அதனால தான்” என,
“சந்தேகமே வேணாம். உங்க செய்முறை எனக்கு எப்போவும் வேண்டாம்” என்றான் ஆணித்தரமாக.
“என்னங்க” என்று தன்வி அவன் கை பற்றி கொள்ள,
தேசிகன் அவளின் கையை தன்னோடு கோர்த்து கொண்டவன், “நான் நானா வாழ, இதெல்லாம் எனக்கு தேவை தன்வி” என்றான் மிக தெளிவாக.
“தேசிகா. நாம பேசி, இதை என்னன்னு”
“தாத்தா. பணத்துக்காக தான் நான் அவர் பொண்ணை கட்டிகிட்டேன்னு நாலு பேர் பார்க்க சொன்னார். இதையெல்லாம் வாங்கி அவர் சரின்னு நிரூபிக்கணுமா?”
“தேசிகா. சில விஷயங்களை அப்படியே விட்டுடணும். அப்போதான் நாம அமைதியா வாழ முடியும்” என்றார் சாவித்திரி.
“அமைதியா வாழ்ந்தா மட்டும் போதுமா? இல்லை கொஞ்சம் தன்மானத்தோடும் வாழணுமா?” என்று அம்மாவிடம் பதில் கேள்வி கேட்டான் மகன்.
“ராசா. தன்வி பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாருயா” என்று பாட்டி சொல்ல,
“என் உணர்வுகளுக்கு உன்கிட்ட மதிப்பு இருக்கு தானே தன்வி?” என்று நேரே மனைவியிடம் கேட்டான் தேசிகன்.
“இருக்கு” என்று தன்வி சொன்னவள்,
“ப்பா” என்று அவரிடம் சென்று நின்றாள்.
“என்னடா இது? நான் வேணா இப்போ கூட சாரி கேட்கிறேன். ஆனா எடுத்துட்டு வந்த சீரை திருப்பி எடுத்துட்டு போக முடியாது தன்வி” என்றார் தந்தை அவரின் முடிவில்.
“ப்பா. ரொம்ப பெர்சனலா எடுத்துக்க வேணாம்ப்பா. அவருக்கு வேணாம்ன்னா வேணாம். ஏன் கட்டாயப்படுத்தி கொடுக்கணும்?”
“தன்வி நான்”
“ப்பா. ப்ளீஸ். அவருக்கான நேரத்தை நாம கொடுப்போம். வருங்காலத்துல அவர் ஏத்துக்கலாம், அதுவரைக்கும் இதையெல்லாம் பெருசு பண்ண வேணாமே. என்னங்க” என்று கணவனிடமும் கண் காட்ட,
“ஒவ்வொருத்தரா சண்டை போடுங்க சார், இப்போ முதல் உங்க மருமகன். அங்க திரும்புங்க” என்று தேசிகன் பக்கம் ஜாடை காட்டினான் முரளி.
“என்னை ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு காட்டுறார் உங்க பேரன். நான் தப்புன்னு சொல்லியும், இப்படி பண்ணா என்ன பண்றது?”
“ஒன்னும் பண்ண வேணாம் சம்மந்தி. சீர் என்ன பெரிய சீர், உங்க பொண்ணை விடவா சீர். அவளையே விடாம பிடிச்சி வைச்சிருக்கான். அவன்கிட்ட போய். டேய், எப்படியும் எங்க சம்மந்தி தான், நீ ஓரமா நில்லு போ” என்று சதாசிவத்தின் கை பற்றி அழைத்து சென்றார்கள்.
தேசிகன் புன்னகையுடன் நிற்க, தன்வி அவனை முறைத்து வைத்தாள்.
“உங்ககிட்ட நான் ரொம்ப கவனமா இருக்கணும். பொறுமையா காத்திருந்து, திருப்பி கொடுக்கிறீங்க இல்லை” தன்வி அவனை கணித்து சொல்ல,
“நீ மட்டும் தாண்டி அதுல விதி விலக்கு” என்றான்.
“என்னை வேணாம்ன்னு சொன்ன பொண்ணை, வேணுமே, வேணும்ன்னு விடாம கட்டிகிட்டேன். இந்த உலகத்துல எனக்கு எல்லாம் வேற. நீ வேற!” என்றான் தேசிகன்.