“எனக்கு அப்படித்தான் தோணுது. நீங்க உங்க மருமகன்கிட்ட பேசுங்க. நான் சீர் வரிசை எல்லாம் இறக்க சொல்லிடுறேன்” என்று அப்போதே அந்த ஏற்பாட்டை ஆரம்பித்தார்.
“ரொம்ப படுத்துறானே?” ராஜேந்திரன் முனகி கொண்டார். புது தம்பதிகள் போன் எடுக்கவில்லை என்றால், அழைத்து கொண்டே இருக்க முடியாத சங்கடம் அவருக்கு.
‘இந்த சுதா இவனை இப்படி ஆடவிட்டுட்டு என்னதான் பண்ணுது?’ என்று தம்பி மனைவியை அழைத்து பேச,
“நான் சொல்லிட்டேன் மாமா. கேட்க மாட்டேங்கிறார். என்னமோ பண்ணட்டும்” என்று சென்றார் சுதா.
தன்வி, தேசிகன் தம்பதியோ மதிய உணவிற்கு தான் எழுந்து வந்தனர். எல்லாம் தயாராக இருக்க, ஆட்களை தடுத்து தாங்களே பரிமாறி உண்டனர்.
தன்வி கணவன் முகம் பார்த்தெல்லாம் பரிமாறவில்லை. இரவில் இருந்து சிவந்தே இருந்த முகம் வேறு அவளை திணற வைத்தது.
“என் கை மேல சாதம் வைச்சுட்ட” என்று தேசிகன் சொல்ல, தன்வி சட்டென நிமிர்ந்த பார்க்க, கணவனோ குறும்பாக கண்ணடித்து வைத்தான்.
“உண்மையாவே வைக்கிறேன் இருங்க” என்று தன்வி முறைக்க,
“வை” என்று கை நீட்டினான் நல்லவன்.
“உங்களோட” என்று அதன் பின் அவனை கண்டு கொள்ளாமல் உணவை முடித்து கொள்ள, “வீட்ல பேசணும்னு, கூப்பிட சொன்னாங்க” என்று ஆள் வந்தது.
தேசிகன் போன் எடுத்து முதலில் பெரியவருக்கு அழைத்து பேசினான். “இல்லை தாத்தா. நாங்க ஊருக்கு கிளம்புறோம்” என்றான் பேரன்.
“தேசிகா. அவரோட செய்முறையை அவர் செஞ்சே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிக்கிறார். கிளம்பிட்டீங்களான்னு கேட்டு இதோட நாலு போன் வந்திடுச்சு” என்றார் அவனின் மாமா.
“மாமா. எனக்கு ஊர்ல வேலை இருக்கு. பிளைட் டிக்கெட் போட்டாச்சு. நேர்ல பார்க்கலாம்” என்று வைத்துவிட்டான்.
தன்வி அதற்குள் பெரியப்பாவிடம் பேசியிருக்க, “என்னங்க” என்று கணவனிடம் கேட்கும் முன், அவன் தயாராக சொன்னான்.
“இங்க அப்பா விருந்து ஏற்பாடு பண்ணியிருக்கார்ங்க”
“என்னை கேட்டு பண்ணாரா? எனக்கு வேலை இருக்குடி”
“நாளை ஒரு நாள்”
“சரி நீ இருந்து பார்த்துட்டு வா. நான் கிளம்புறேன்”
“நீங்க இல்லாம எப்படிங்க?”
“எனக்கு தெரியாது தன்வி. நேரம் ஆச்சு. நீ கிளம்புறியா, இல்லையா?” என்று நின்றான் தேசிகன்.
தந்தைக்கு அழைத்து பேச கூட நேரம் கிடைக்கவில்லை. ஒரு வழியாக அவருக்கு அழைக்க, மனிதர் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.
“ப்பா. அவருக்கு அங்க வேலை இருக்கு. நம்மளோடது திடீர்ன்னு போட்ட பிளான்றதால அவரால மேனேஜ் பண்ண முடியலைப்பா” என்று தன்வி சொல்ல,
“ஒரு நாள்ல என்ன ஆகிடும் தன்வி? நீ போனை அவர்கிட்ட கொடு” என்றார் சதாசிவம்.
தந்தை இருக்கும் மனநிலைக்கு ஏதேனும் பேசி வைத்துவிட்டால் என்ன செய்வது என்று தன்விக்கு போனை கொடுக்க யோசனை.
“ப்பா. நாங்க ஆல்ரெடி கிளம்பிட்டோம். விடுங்கப்பா ப்ளீஸ். அடுத்த முறை கண்டிப்பா பிளான் பண்ணுவோம்” என்று கேட்டு கொண்டாள் மகள்.
“என்ன ரொம்ப குதிக்கிறாரா? நான் வேணா அவர்கிட்ட பேசவா?” என்று தேசிகன் கேட்க,
“இல்லை, இல்லை நானே பார்த்துகிறேன்” என்றுவிட்டாள் தன்வி.
சாவித்திரி மகன், மருமகள் வீடு வரவும் மகனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.
மகன் அதை கண்டு கொள்ளாதவன் போல், அம்மாவிடம் நலம் விசாரித்து, குடும்பத்தினருடன் பேசினான்.
தன்வி உறங்க அறைக்கு வந்த நேரம், தேசிகன் போன் பேசியபடி, ஏதோ வேலையில் இருந்தவன், குட் நைட் என்று மனைவிக்கு உதட்டசைத்து அவளை தூங்க சொன்னான்.
மறுநாள் தேசிகன் காலையிலே கிளம்பிவிட, தன்வி மாமியாருடன் அவரின் அலுவலகம் சென்றாள்.
“உனக்கு ஆபிஸ் ரெடியாகிட்டு இருக்கு, லஞ்சுக்கு வீட்டுக்கு போகும் போது, பார்த்துட்டு போ” என, தன்வியும் அலுவலகத்தை பார்த்து திருப்தி பட்டு கொண்டாள்.
“இந்த இடம் தான்மா, தேசிகன் தம்பி ரிசார்ட் கட்ட பார்த்தது” என்று ஓட்டுனர் வழியில் காட்ட,
“நிறுத்துங்க அங்கிள். பார்த்துட்டு வரேன்” என்றாள் தன்வி. அவளே பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாள்.
“இல்லைமா. தம்பி என்ன சொல்வார்ன்னு” என்று அவர் தயங்க,
“நான் சொல்லிக்கிறேன் அங்கிள்” என்று பெண் காரை நிறுத்த சொல்லி இறங்கிவிட்டாள்.
மிக பெரிய இடம். முதல் கட்ட ஆயத்த பணிகள் எல்லாம் நடைபெற்றிருந்தது. “பூமி பூஜையே ரொம்ப விமர்சையா நடந்ததுமா” என்றார் ஓட்டுனர். அவரிடமும் அந்த வருத்தம் இல்லாமல் இல்லை.
“சுத்தியுள்ள ஏக்கர் எல்லாம் தம்பிக்கு சொந்தமானது தான்மா” என்று காட்ட, தன்விக்கு மலைப்பு. அவ்வளவு நிலங்கள்.
கட்டிடம் கட்ட தேவையான பொருட்கள் எல்லாம் இன்னமும் அங்கிருந்து. எவ்வளவு கனவோட ஆரம்பிச்சிருப்பார்? செங்கல் ஒன்றை கையில் எடுத்த தன்விக்கு மனது பிசைந்தது.
“என்ன மருமகளே இந்த பக்கம்” என்று தேசிகனின் தந்தை வந்தார்.
தன்வி அவரிடம் பேச பிடிக்காமல், எடுத்த செங்கலை பத்திரமாக கீழே வைக்க, மனிதர் அதன் மேலே நடந்து, அதை உடைத்துவிட்டதோடு, “மாமனார் கேட்டா பதில் சொல்ல மாட்டியா?” என்றும் பேசினார்.
தன்விக்கு உடைந்த செங்கலை பார்க்கவும், அவ்வளவு கோவம். “நாம கிளம்பலாம்மா” என்று ஓட்டுனர் சொல்ல,
“பேசிட்டு இருக்கார் இல்லை. அமைதியா நில்லுடா” என்று தேசிகனின் தந்தையுடன் வந்தவன், சட்டென அவரை அறைந்திருந்தான்.
“ஏய்” என்று தன்வி சத்தமிட,
“தம்பி” என்று அந்த ஓட்டுனர் அப்போதும் நிமிர்ந்து நின்று முறைத்தார்.
“என்னடா முறைக்கிற? எல்லாம் அவன் கொடுத்த தைரியமா? தோலை உறிச்சி விட்டுடுவேன்” என்று நாக்கை கடித்து கொண்டு மிரட்ட,
“மா. வாங்க நாம போலாம்” என்றார் அந்த ஓட்டுனர் தன்வியிடம்.
“சொல்லிட்டு இருக்கேன். திரும்ப கூப்பிடுற. நீ போய் அங்க நில்லு போ” என்று சொல்ல, அவர் நகர வேண்டுமே.
“என்னடா போக மாட்டியா? உன்னை” என்று திரும்ப அவரை அடிக்க போக,
“இன்னொரு முறை அவர்மேல் கை வைச்ச, உன்னை அவ்வளவுதான் பாத்துக்கோ” என்றாள் தன்வி கடும் கோபத்துடன்.
“பார்த்தீங்களா சித்தப்பா. உங்க மருமகளுக்கு மரியாதை தெரியலை. கொழுந்தன்கிட்ட இப்படி தான் பேசுவியா நீ?” என்று தன்வியிடமும் அவன் எகிற, தன்வி நீ கிட்ட வந்து பார் என்று கைகளை கட்டி கொண்டு நின்றாள்.