மலர் சூடும் பெண்மை 24

தன்வியை பார்க்க கிளம்பி கொண்டிருந்தார் சதாசிவம்.

“சுதா இன்னும் எவ்வளவு நேரம்?” என்று மனைவிக்கு குரல் கொடுக்க,

“வந்துட்டேன்ங்க. இப்போ நாம தன்வியை பார்க்க போயே ஆகணுமா?” என்று கேட்டார் சுதா.

“பார்ட்டில இருந்து அப்படியே கிளம்பிட்டா தன்வி. நான் உன் மருமகனை கூப்பிடத்தான் செஞ்சேன். ஆனாலும் அவர் வரலைன்னு என்னை தான் எல்லாம் பேசுறீங்க” என்று சதாசிவம் சொல்ல,

“உன்னை தான் சொல்வோம், நீ பண்ணதுக்கு தான் மாப்பிள்ளை உன் வீட்டு வாசற்படியை மிதிக்க மாட்டேங்கிறார்” என்று ராஜேந்திரன் வந்தார்.

“ண்ணா”

“ஆமா இப்போ எதுக்கு தன்வி வீட்டுக்கு கிளம்பி நிக்கிற? திரும்ப சண்டை போடவா?” 

“ண்ணா. நான் உங்க மாப்பிள்ளைகிட்ட பேசத்தான் போறேன். என் பொண்ணுக்காக அவர்கிட்ட மன்னிப்பு கேட்கவும் நான் ரெடிதான்” என்றார் தந்தை.

“நீ மன்னிப்பு கேட்ப, எங்களுக்கு தாண்டா மனசு ஆறாது. உன் பொண்ணும் அதை விரும்பமாட்டா”

“அப்புறம் என்னை வேறென்ன தான் செய்ய சொல்றீங்க? என் பொண்ணு அவ வீட்டுக்காரரோட அவளோட வீட்டுக்கு வந்து போக வேண்டாமா?”

“இப்போவும் அவளுக்காக தான் யோசிக்கிறீங்க? மருமகன்கிட்ட நீங்க நடந்துகிட்ட விதம் தப்புன்னு உங்களுக்கு தோணலையாங்க” என்று சுதா ஆதங்கத்துடன் கேட்க,

“என்னமோ நான் மட்டும்தான் மோசமா நடந்துகிட்ட மாதிரி பேசுறீங்க? உன் மருமகன் பண்ணது எல்லாம் உனக்கு மறந்து போச்சா? முதல்ல இந்த கல்யாணமே என்னை கடத்தி வைச்சு நடந்தது தான்” என்று குதிக்க,

“உன்னை கடத்தினது மருமகன் இல்லை, உன் போட்டிக்காரன் பண்ண வேலை அது. மாப்பிள்ளை அவன்கிட்ட இருந்து உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தார்” என்றார் ராஜேந்திரன்.

“என்ன மாமா சொல்றீங்க?” சுதா அதிர்ந்து போக,

“ஆமா அத்தை. தேசிகன் உதவியால தான் மாமாவை நம்மால உடனே கன்டுபிடிக்க முடிஞ்சது. சிங்கப்பூர் வேலை முடிய கூடாதுன்னு செஞ்சது” என்று மனோகரும் சொன்னான்.

சதாசிவத்திற்கு இந்த விஷயம் புதிது. அவரை ஏதோ ஓர் அறையில் அடைத்து வைத்து, நேரத்திற்கு உணவு மட்டும் கொடுத்து கொண்டிருந்தனர் அவ்வளவு தான்.

“ம்ம். இப்போ அடுத்து வேற எதையாவது தூக்கிட்டு வந்து மருமகனை குறை சொல்லு” என்று ராஜேந்திரன் தம்பியிடம் சொல்ல,

“ண்ணா” என்றார் தம்பி.

“மாமா. மனுஷங்களை நம்மால படிக்க முடியாதா? தேசிகன் இயல்பா இருக்கான். அவனோட குணமே அதுதான். தேசிகன் யார்கிட்டேயும் பம்முறதில்லை, பாயவும் செய்றதில்லை” என்றான் மனோகர்.

“மாப்பிள்ளை. பம்முறதில்லை. அது அவருக்கு வரவும் வராது. ஆனா பாயறதில்லைன்னு மட்டும் சொல்லாதீங்க, அதுவும் என்னை வைச்சுக்கிட்டு” என்று சதாசிவம் முகம் சுருக்கினார்.

“ஏன் உன்மேல பாய்ஞ்சு, பிராண்டி வைச்சுட்டாரா மாப்பிள்ளை. எங்க அந்த காயத்தை காட்டு பார்ப்போம்” என்று ராஜேந்திரன் கேட்க,

“ண்ணா. எல்லாம் ஊமைகுத்து. உங்களுக்கு தெரியாது விடுங்க. இப்போ என்ன அவர் தப்பு செய்யலை. நான் மட்டுமே தப்பு. அவ்வளவு தானே? எனக்கு புரிஞ்சிடுச்சு. என் மகளை பார்க்க நான் போலாமா?” என்று கேட்டார் சதாசிவம்.

நாங்களும் வரோம். உன்னை மாப்பிள்ளைகிட்ட தனியா அனுப்ப முடியாதுஎன்று மொத்த குடும்பமும் கிளம்பினார்கள்.

அப்படி என்ன பண்ணிடுவேன் நான்? இவ்வளவு நம்பிக்கை தானா என்மேல?” என்று சதாசிவம் வழி நெடுக பொருமி கொண்டே வந்தார்

முரளி அவரின் பாதுகாப்பிற்கு உடன் வந்திருக்க, “நீ அப்படியே உன் அண்ணனோட நின்னுக்கோ. என்கூட எதுக்கு இருக்க நீ?” என்று அவனிடமும் பொரிந்தார்.

உங்க மூக்குல மார்க் போட்டதும் கிளம்பிடுறேன்என்று முரளி முனகிவைக்க

பார்த்தீங்களா? பார்த்தீங்களா என்ன சொல்றான்னு, இவனே அவன்கிட்ட என்னை விட்டுட்டு வந்தாலும் வருவான்என்று சதாசிவம் இன்னும் டென்சன் ஆகிப்போனார்.

அவன் என்ன சொன்னான்னு இப்போ குதிக்கிற நீ? கொஞ்சம் நேரம் அமைதியா இருடா. நான் போன் பேசணும்என்று முரளி பேச்சு கேட்காததில், தம்பியை அடக்கினார் ராஜேந்திரன்.

சதாசிவம் பொறுக்க முடியாமல், முரளியின் தலையில் கொட்டி வைக்க, “ஐயோ அம்மாஎன்று பெரிதாக அலறினான் முரளி.

என்ன சதாசிவம் இது? வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க மாட்டேங்கிற. உனக்காக இருக்கிறவனை போய் கொட்டுற?” என்று ராஜேந்திரன் சத்தம் போட,

பரவாயில்லை. இருக்கட்டும் விடுங்க சார். அண்ணியோட அப்பாக்கு என்மேல எல்லா உரிமையும் இருக்குஎன்று முரளி பாவமாக சொன்னான்.

ராஜேந்திரன் அதில் இன்னும் தம்பியை உஷ்ணமாக பார்க்க, “ண்ணா. அவன் நடிக்கிறான். அவனை நம்புவீங்க, என்னை நம்ப  மாட்டீங்க இல்லை. சரி இருக்கட்டும். இனி இவன் என்னோட இருக்க வேணாம். பாதுகாப்புக்கு நாம வேற ஆளை வைச்சுக்கலாம்என்று முடித்து கொண்டார் சதாசிவம்

நீங்களே பலசாலி. உங்களுக்கு எதுக்கு தனியா ஆள் வேற. நீங்களே உங்களை பார்த்துக்கோங்கஎன்று முரளி சொல்ல,

தம்பி நீங்க மாப்பிள்ளைக்கு தம்பி மாதிரின்னு தன்வி சொன்னா. அவர் பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்கஎன்ற சுதா, “ஏங்க கொஞ்ச நேரம் அமைதியா தான் வாங்களேன்என்று கணவருக்கும் சொன்னார்.

முரளியை கோவமாக பார்த்த சதாசிவம், “உனக்கு என்கூட இருக்க முடியாதுன்னு நேரா சொல்லுடாஎன்றார்.

என் அண்ணாவை பேசாம இருந்தீங்களான்னா உங்களுக்காக உயிரை கூட கொடுக்கிறேன்என்றான் முரளி.

சதாசிவத்திற்கு நொடி பேச்சே வரவில்லை. இவனை போல நான் யாரை சம்பாதிச்சு வைச்சிருக்கேன்? மனிதரின் எண்ணம் இதுவாக தான் இருந்தது.

தேசிகனின் வீடும் வந்துவிட, முரளி சென்று அவனின் விரல் ரேகையை பதித்து கதவை திறந்துவிட்டான்.

உட்காருங்க. அண்ணா, அண்ணி வந்திடுவாங்கஎன்று சட்டென தேசிகன் வீட்டு ஆளாய் மாறிவிட்டான் முரளி.

அவர்களுக்கு குடிக்க, சாப்பிடவும் ஏற்பாடு செய்திருந்தான். “தன்வி வந்திடட்டும்என்று சுதா உணவுண்ண மறுக்க,

காலையில சாப்பிடாம தானே கிளம்பினோம். சாப்பிடுங்க. அவங்களை தொந்தரவு பண்ண வேணாம்என,

சித்தி. எப்படியும் முரளி அவங்களா வரவரைக்கும் நம்மளை போன் கூட பண்ண விட மாட்டான். வாங்க அதுக்கு சாப்பிடவாவது செய்வோம்என்றான் வாசுதேவன்.

சுதாவிற்கு மறுக்க முடியவில்லை. சதாசிவம், ராஜேந்திரன் இருவரும் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதால், அவர்கள் மட்டும் உணவுண்டிருந்தனர்.

முரளி அவர்களுக்கு குடிக்க அனுப்பி வைத்தவன், மற்றவர்கள் உணவுண்ண ஏற்பாடு செய்தான்.

நீயும் எங்களோட உட்காருஎன்று முரளியை அழைத்தார் சுதா

ம்மாஎன்று தன்வி, தேசிகனும் வந்துவிட்டனர்.

தேசிகன் மாமனார்களை முதலில் வரவேற்று, அதன் பின் மற்றவர்களை வரவேற்றான்.

தூங்கிட்டோம் பெரியப்பா. உங்களை வெல்கம் பண்ண முடியலைஎன்று தன்வி சொல்ல,

இருக்கட்டும்டா. போய் சாப்பிட்டு வாங்கஎன்றார் சதாசிவம்.

தன்வியுடன் உணவுண்ண அமர்ந்த தேசிகன், “முரளி வாஎன்று தம்பியை தன் மறுபுறம் அமர வைத்து கொண்டான்.

பொதுவான பேச்சுகளுடன் உணவு முடிய, சுதா கணவனுக்கு கண் காட்டினார்.

க்கும்என்றார் சதாசிவம்.

வாசுதேவனுடன் பேசி கொண்டிருந்தான் தேசிகன்

என்ன சொல்லி கூப்பிடுறது?’ மனிதருக்கு திடீர் சந்தேகம். இதுக்கு முன்ன அவரை என்ன சொல்லி கூப்பிட்டோம்? எதுவும் இல்லையே?

மாப்பிள்ளை ம்ஹூம் மருமகனே ச்ச்சே. பேர் சொல்லியே கூப்பிட்டுடலாம்

அவர் இமை சுருங்க தீவிரமாக யோசித்து நிமிர, மொத்த குடும்பமும் அவரை தான் கடுப்புடன் பார்த்து கொண்டிருந்தது. தன்வியை தவிர, அவளுக்கு தந்தையின் தடுமாற்றம் வருத்தம் தான்.

தேசி. என்ன சத்தமே வரலை?” 

வாசுதேவாஎன்று மகனை அழைத்து அவர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்ப பார்க்க, மகன் மட்டுமே அவரை பார்த்தான். தேசிகன் போன் எடுத்து கொண்டான்.

இது வேலைக்கு ஆகாது. “மாப்பிள்ளைஎன்று தேசிகனை அழைத்தார் சுதா.

சொல்லுங்க அத்தை” 

நம்ம வீட்டுக்கு வாங்க மாப்பிள்ளைஎன்றழைத்தார். மருமகனை போய் இப்படி சம்பிரதாயமா கூப்பிடுற மாதிரி ஆகிடுச்சே என்ற சங்கடம்!

வரேன் அத்தைஎன்று தேசிகன் உடனே சொன்னான். மறுக்கவெல்லாம் மாட்டான். ஆனால் வர மாட்டான் நல்லவன்!

மருமகனே. என் தம்பி பேச்சை எல்லாம் மனசுல வைச்சுக்காதய்யா. வீட்டுக்கு வாப்பாஎன்றார் ராஜேந்திரனும்.

மாமா. நான் வரேன் மாமாஎன்றான் மருமகன்.

தேசிகன். சித்தப்பாக்காக நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம். நீங்க வீட்டுக்கு வரணும்என்று ராஜேந்திரனின் மகன்கள் அழைக்க,

சாரி எல்லாம் எதுக்குங்க. நான் வரேன்என்று தேசிகன் அவர்களை அணைத்து கொள்ள.

தன்வியும், நீங்களும் வந்து போனாதான் எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்என்றாள் ஸ்ருதி.

அண்ணி. தன்வி வீடு அது, நான் வராமஎன்று சொல்ல, மனோகர் மட்டும், நீ நடத்து என்பது போல் அவனை பார்த்திருந்தான்.

ண்ணாஎன்ற தேசிகனுக்கு தன்னை போல புன்னகையும் வந்துவிட,

வீட்டுக்கு வாங்கஎன்றார் சதாசிவம்.

தேசிகன் புன்னகை மிதமாக, சரியென்று தலையசைத்தான்.

அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்க கூடாது. ஏதோ கோவம். உங்களுக்காக வைச்ச பங்க்ஷன்ல, க்கும். தப்பு தான். நான் மன்னி

ப்பாஎன்று முதல் குரல் மகளிடம் இருந்து கோவமாக வந்தது.

அதன்பின் தான் மற்றவர்கள் அவரை நிறுத்த, சதாசிவத்திற்கு மனம் பாரமானது

என் குடும்பம் என் மரியாதையை பார்க்கும் போது, நானும் அவங்களை இப்படி ஓர் இடத்துல நிறுத்தியிருக்க கூடாது. அதுவும் என் பொண்ணு அவ கஷ்டப்பட்டும், என்னை கீழிறங்க விடாம தாங்கி பிடிக்கிறா, அப்பாவா நான் அவளுக்கு இதுதான் செய்யணுமா?

இனி நான் கவனமா இருக்கேன். நடந்ததை மறந்திட்டு வாங்க. உங்க வீடு அது. என் பொண்ணுங்க தான் எனக்கு எல்லாம். நீங்க வீட்டுக்கு வராம இருந்திடாதீங்கஎன்று மருமகனிடம் நேரே கேட்க,

தேசிகன் மனைவியை தான் பார்த்தான். இந்த நொடி வரை, அவனை அழைக்கவில்லை தன்வி. இப்போதும் வாங்க என்று சொல்லவில்லை.

உன்னோட முடிவு தான் என்னோட முடிவு என்று நின்றாள் தன்வி.

ஆனாலும் தந்தைக்காக வருந்துபவளை எப்படி அவனால் தவிக்க விட முடியும்?  

ரெடியாகி வா தன்விஎன்றான்.

தன்விக்கு ஏனோ கண்கள் கலங்கி கொண்டு வந்தது. இமை சிமிட்டி கொண்டவள், உண்மையா என்று கண்ணால் கேட்டாள்.