சாருவிற்கு அவனின் ‘ஹோதா’ எரிச்சலை கிளப்ப அவனுக்கு எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தாள். முதலில் மேலோட்டமாக பேசிக் கொண்டிருந்த அருண், அவன் சினிமாவை பற்றிய பேச்சை தொடங்கவும் அவனுடன் தீவிரமாக கலந்துரையாட தொடங்கினான்.
அப்போது தான் ராஜும், ஆருவும் அந்த உணவகத்திற்குள் நுழைந்தனர். “என்ன ஆர்டர் செய்யலாம்…?’’ என ப்ரித்வீ கேட்க, “உங்களோட ட்ரீட். சோ நீங்களே ஆர்டர் பண்ணுங்க.’’ என்றாள் சாரு ஆருவை முந்திக் கொண்டு.
அவளைப் பார்த்து இயல்பாக சிரித்த ப்ரித்வீ, அங்கிருந்த உணவுப் பட்டியலை எடுத்து, சுவையில் நன்றாக இருக்கும் என்று தான் அறிந்தவற்றை எல்லாம் தருவித்தான். உணவு வகைகள் வந்த பின்பும், ஆருவும், பிரித்வீயும் தணிந்த குரலில் தங்களுக்குள் பேசியபடியே உணவருந்திய விதம் அருணுக்கு நிறைவை தந்தது.
சாருவின் தட்டில் கிரேவி தீர்ந்து விட, ஆருவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் மற்றவர்கள் தட்டிலும் ஒரு கண்ணை வைத்திருந்த ராஜ், கிரேவியை அவள் பக்கம் நகர்த்தியதோடு, அவள் குறைவாக வைத்து கொள்வதை கண்டவன், “இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க இந்த டேஸ்ட் வேற எங்கயும் கிடைக்காது.’’ என்றபடி அவள் தட்டில் கிரேவியை பரிமாறினான்.
“ஆமா… ஆமா எது எது எங்க எவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்கிறது எல்லாம் இவருக்கு அத்துப்படி. கிரேவியை நிறைய போட்டுக்கோ சாரு.’’ என்றாள் ஆரு சிரித்தபடி.
அதுவரை சாந்தமாய் இருந்த அருணின் முகம் சடுதியில் கடுமைக்கு மாறியது. “எவ்ளோ டேஸ்ட்டா இருந்தாலும் லிமிட் தாண்டி எதையும் சாப்பிட முடியாது.’’ என்றவன் வேகமாய் அந்த கிரேவியை தன் பக்கம் நகர்த்தி கொண்டான்.
மற்றவர்கள் யாருக்கும் அவன் செயல் தவறாய் தோன்றவில்லை. ஆனால் சிறு வயது முதல் அவன் பார்வையை கொண்டே, அவன் பேச இருக்கும் வார்த்தையை ஊகிக்கும் திறன் படைத்திருந்த சாரு பட்டென நிமிர்ந்து அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
ஆனால் அருண் அவள் பக்கமே திரும்பவில்லை. அதன் பிறகு உணவுவேளை அமைதியாகவே கழிந்தது. உணவு முடியவும், மற்ற நால்வரும் பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.
சாரு அவர்களுக்கு இடையில் வரவில்லை. தோழியின் நெடு நேர அமைதியை உணர்ந்த ஆரு தானாவே அவளிடம் திரும்பி, “ஏய்… என்னடி ரொம்ப அமைதியா இருக்க. ஆர் யூ ஓகே.’’ என்றாள் அக்கறையாய்.
உடனே முகத்தில் ஒரு புன்னகையை ஒட்டிக் கொண்ட சாரு, “நீயும் அண்ணாவும் பேசுறதை நோட்ஸ் எடுத்துட்டு இருந்தேன். நாளைக்கு எனக்கும் யூஸ் ஆகும் இல்ல.’’ என்று தோழியின் காதருகில் மெதுவாய் முணுமுணுக்க, ஆரு பொங்கி சிரித்தாள்.
‘சரியான பிராடுடி நீ…!’’ என்று ஆரு சாருவை அடிக்க, ஆண்கள் மூவரும் அமைதியாய் இவர்களின் கலாட்டாவை கவனித்து கொண்டிருந்தனர். அதே சிரிப்புடன் ராஜை நோக்கி திரும்பியவள், “அண்ணா…! நீங்க ஆருவுக்கு கிப்ட் கொடுக்க தானே இந்த மீட்டிங். என்ன கிப்ட் கொடுத்தீங்க..?’’ என்றாள்.
இவள் அண்ணா என்ற வார்த்தையை அழுத்தி உச்சரிக்கவும் அருண் அவள் முகம் பார்த்தான். ஆனால் இம்முறை கவனமாக சாரு அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.
“நல்லவேளை நியாபகப்படுத்தினீங்க சிஸ்டர். இல்லைனா கிப்டை என் பான்ட் பாக்கெட்டோட ரிட்டர்ன் கொண்டு போய் இருப்பேன்.’’ என்றவன் எழுந்து தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த அந்த சிறிய நகை டப்பாவை எடுத்தான்.
சாரு, “ஹே…’’ என்று ஆர்ப்பரிக்க, ஆண்கள் இருவரும் புன்னகையுடன் பார்த்திருக்க, ஆருவிடம், “மே… ஐ…’’ என ராஜ் சம்மதம் கேட்டான். ஆரு காது வரை சிவந்த முகத்தோடு தன் வலக்கரத்தை அவனை நோக்கி நீட்டினாள்.
அங்கு அமர்ந்திருந்த மோதிரத்தை கண்டதும் அவன் முகம் ஸ்தம்பித்து போனது. “இது… இது… இந்த மோதிரம்…’’ என திணற, “என்ன மோதிரம் ராஜ்…’’ என்றவள் அப்போது தான் தன் வலது கை மோதிர விரலில் கம்பீரமாய் அமர்ந்திருந்த மோதிரத்தை கண்டாள்.
வேகமாய் இடது கையை உயர்த்தி பார்த்தாள். பிறந்த நாளுக்கு அருண் கொடுத்த வைர மோதிரம் அங்கு வீற்றிருந்தது. இந்த கையில் தந்தை அவளின் பதினெட்டாம் பிறந்த நாளுக்கு பரிசளித்த இவளின் ராசிக்கல்லான இரத்தினக் கல் பதித்த பிளாட்டின மோதிரம் அணிந்திருப்பாள்.
இப்போது அந்த மோதிரத்தை உற்றுப் பார்க்கவும் தான் அவளுக்கு வேறுபாடு விளங்கியது. நடுவில் இருந்த அந்த கல் இவள் ஏற்கனவே அணிந்திருந்த மோதிரம் போல் இல்லாதிருக்க, அடிக்கடி இவளுக்கு பரிசு வரும் மோதிரங்களை மாற்றிப் போட்டு பழகியவள், எனவே ஏதேனும் நிகழ்விற்கு மாற்றிப் போட்டு இருப்போம் என்ற நினைவில், “இது அப்பா பிரசன்ட் செஞ்ச ரிங்.’’ என்றாள்.
“ஓ…” என்றவன் அவள் கையை உயர்த்தி மேலும் கீழும் அந்த மோதிரத்தை பார்த்தான். அவனின் செயல் அருணுக்கே ஏதோ போல் இருக்க ஆருவின் முகம் வெளிப்படையாக சுருங்கியது. “டோன்ட் மிஸ்டேக் மீ ஆரு. ஒரு நிமிஷம் அந்த மோதிரத்தை கழட்டி தா…’’ என்றான் தீர்க்கமாய்.
ஆரு குழப்பத்துடன் கழற்றி அதை அவன் கையில் வைக்க, “ஒரு நிமிஷம்…’’ என்றவன், தன் காரிலிருந்த கிட் பேக்கை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தான். அதில் இருந்த லென்ஸ் கொண்டு அந்த மோதிரத்தை சோதித்தான்.
“மார்வலஸ்…’’ என்றவன் நிமிர்ந்து, “இது ஒரு அபூர்வ வகை வைரக்கல். எவ்ளோ விலை கொடுத்தாலும் கிடைக்காது. ரோஸ் கட்டிங், ரெட் கலர், அண்ட் இன்டர்ணலி ப்ளாலெஸ் டைப். எப்படியும் ஒரு இருநூறு வருசம் பழமையானதா இருக்கும். இந்தியால இது கிடைக்க வாய்ப்பே இல்ல. அப்பா இதை எங்க வாங்கினார்னு ஏதாச்சும் டீடைல்ஸ் சொன்னாரா…?’’ என்றான் அந்த வைரம் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில்.
அவன் கொடுத்த தகவல்களில் மலைத்தவள், “இல்ல… எனக்கு நியாபகம் இல்ல…’’ என்றாள் திணறி. உடனே அருண் அவளின் உதவிக்கு வந்தான். “அப்பா வழக்கமா வாங்குற ஜுவல்லரில ஏதாச்சும் ரேர் டைப் ஜுவல் வந்தா அவருக்கு தான் முதல் கால் வரும். அப்படி அப்பா வாங்கி இருக்க சான்ஸ் இருக்கு.’’ என்றான்.
“இதோட மதிப்பு தெரியாதவங்க ஆக்சிடன்ட்டாலா இதை சேல் செஞ்சி இருக்கலாம்.’’ என்றவன் அந்த மோதிரத்தையே பார்த்துக் கொண்டிருக்க, ‘எங்களின் செல்வ வளம் இவனுக்கு தெரியாதா…?’ என்ற கோபத்தில் அருண், “அப்படி என்ன பெரிய விலை இருந்துடப் போகுது…?’’ என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்த ராஜ், “டீ ட்வண்டி டீம் மொத்தமா ஏலம் எடுக்க எவ்ளோ பணம் தேவைப்படுமோ அதை விட அதிகம் தேவைப்படும். அதோட பரம்பரை பரம்பரையா இந்த மாதிரி மோதிரங்கள் எல்லாம் ராஜ வம்சாவளியை சேர்ந்ததா இருக்கும். அதை அவங்க யாருக்கும் சேல் செய்ய மாட்டாங்க. இதோட நேச்சரை வச்சி பார்த்தா ஒரு காலத்துல இது யாரோ ஒரு ராணியோட கையில வெட்டிங் ரிங்கா இருந்து இருக்கணும்.’’ என்றான்.
அவன் கொடுத்த தகவல்களில் அருணின் மனதே கலக்கமுற்றது. தனியாக ஆருவிடம் அந்த மோதிரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
சாரு தான், “எந்த ராஜாவோ… எந்த ராணிக்கோ போட்ட மோதிரத்தை பத்தி எல்லாம் நமக்கு என்ன கவலை அண்ணா. பரிசு அதோடு விலையில இல்ல… கொடுக்குற அன்புல இருக்கு. நீங்க உங்க ராணிக்கு மோதிரம் போடப்போறீங்களா இல்லையா…?’’ என்றாள்.
அவளின் வார்த்தைகளே மீண்டும் அனைவரையும் நடப்பிற்கு திருப்பியது. ராஜ் அவளிடம் அவள் ஏற்கனவே அணிந்திருந்த மோதிரத்தை நீட்டினான். அதை தன் சிறிய கைப்பைக்குள் பத்திரம் செய்ய முனைய, “கைல போட்டுக்கோ ஆலி. அது உனக்கு ரொம்ப அழகா இருந்தது.’’ என்றான்.
அவள் மீண்டும் மோதிர விரலில் அந்த மோதிரத்தை அணிந்து கொள்ள, தான் வாங்கி வந்த மோதிரத்தை அவளின் ஆட்காட்டி விரலில் அணிவித்தான். மற்ற மூவரும் கைதட்டி ஆர்ப்பரிக்க, அதன் பிறகு கடற்கரை, பூங்கா என்று உற்சாகமாகவே நாளை கடத்தினர்.
இரவு ஏழு மணி விமானத்திற்கு கிளம்ப வேண்டியிருக்க, ஐவருமே விமான நிலையத்தில் இருந்தனர். ராகவ் தன் தங்கையை அணைத்து கொண்டு உச்சியில் இதழ் பதிக்க, தானும் அவளை கட்டிக் கொண்டு, “மிஸ் யூ அண்ணா…!’’ என்றாள் குழந்தை போல.
“இனி மாசம் ஒருமுறை வர ட்ரைப் பண்றேன்.’’ என வாக்கு கொடுக்க சாருவின் முகம் பிரகாசித்தது. “அடுத்த மாசம் ஏதாச்சும் சாக்கு சொல்லிட்டு உன்னை பார்க்க வரவா கார்ஜியஸ்…?’’ என்று ராஜ் ஆருவிடம் தாழ்ந்த குரலில் வினவிக் கொண்டிருக்க, “வராமா இருக்க ஐடியா வேற இருக்கா…?’’ என்று மெல்லிய குரலில் பதில் கேள்வி கேட்டு புருவம் உயர்த்தவும், ப்ரித்வீ வெடித்து சிரித்தான் மற்றவர்களின் பார்வை தங்களை நோக்கி திரும்புவதையும் பொருட்படுத்தாது.
அருண் தன் அலைபேசியை நோண்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். யார் கவனத்தையும் கவராதவன் போல. ஆனால் அங்கிருந்த நால்வரையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். தான் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதை போல உணர்ந்தவன், நிமிரும் போது, சாரு தன் அண்ணனோடு செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
அவள் அண்ணன் தான் என்றாலும், அந்த நெருக்கம் அவனுக்கு எரிச்சலை தர, “பப்புமா லேட் ஆச்சு. இன்னும் டென் மினிட்ஸ்ல எங்களுக்கு செக் இன் ஸ்டார்ட் ஆயிடும். நீங்க கிளம்புங்க. நாளைக்கு காலேஜ் வேற இருக்கு இல்ல.’’ என்றான் அண்ணன் குரலில்.
ராஜ் கைகுலுக்கி பார்வையால் விடை கொடுக்க, சாருவும் தன் அண்ணனை மீண்டும் ஒரு முறை ஆரத்தழுவி விடை கொடுத்து வெளியே வந்தாள். அவர்கள் வாயிலை நோக்கி நடக்க, ‘உன்ன அப்புறம் பேசிக்கிறேன்.’ என்று மறையும் சாருவின் முதுகையே பார்த்திருந்தான் அருண்.
“சார்…” என்று ராகவன் அருகில் வந்து உலுக்கவும் கலைந்தவன், “எஸ்…! போலாம்.’’ என்று அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்தான்.
இவர்கள் தங்கள் உலகில் மூழ்கி மோதிரத்தை மறக்க, அதை அணிவித்து சென்றவனோ ஒவ்வொரு நொடியும் அவளை மறக்காது நினைத்துக் கொண்டிருந்தான்.