காதல் – 5

“இந்த சன்டேவை யார் வர சொன்னது…?’’ என்று புலம்பியபடியே தயாராகிக் கொண்டிருந்தாள் ஆரு. “சாட்டர்டே தான் வர சொல்லி இருக்கும்.’’ என்று புன்னகைத்த சாருவும் அவளோடு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

குடும்பத்திற்கு வெளியே அவர்களின் முதல் சந்திப்பு என்பதால், அருண் அவளையும் உடன் சென்று வர பணித்திருந்தான். அவன் சொல்லாதிருந்தாலும் ஆர்கலி தனியாக கிளம்பி இருக்க மாட்டாள்.

“டைம் அப் கியூட்டி. போலாம்.’’ என்ற சாரு முதலில் முன்னால் நடக்க, அவளுக்கு பின் ஏனோ தானோவென்று தயாராகியிருந்த ஆரு முகத்தை சுளித்துக் கொண்டே நடந்தாள். இவர்களுக்காய் விக்ரம் காத்திருக்க, காரில் ஏறியதும் போனிக்ஸ் மால் நோக்கி அவர்களின் பயணம் தொடங்கியது.

தன் அலைபேசியை குனிந்து பார்த்துக் கொண்டிருந்த ஆரு, “கூல் காபிடேல வெயிட் செஞ்சிட்டு இருக்காராம்.’’ என்றாள் உள்ளே போன குரலில். அவள் கைகளை பற்றிக் கொண்ட சாரு, “ப்ளீஸ் ஆரு… மை பிக் கேர்ள்… அவரோட மனசை முதல்ல பாரு. அது நல்லா இல்லைனா நாம வேற யோசிக்கலாம் சரியா..?’’ என்று அவள் தாடை பற்றி கெஞ்சினாள்.

“ம்…’’ என்று தோழிக்காய் பதில் கொடுத்தவள் அப்போதும் தெளியாத முகத்தோடே இருந்தாள். இவர்களின் வாகனம் போனிக்ஸ் மாலை அடையவும், காரை தனக்கு பின்னால் வந்த காவலர்களிடம் கொடுத்து விட்டு விக்ரம் அவர்களின் பின்னால் நடந்தான்.

இவர்கள் மாலின் வாயிலை அடையவும், சிறுமி ஒருத்தி ஓடி வந்து, “தீதீ… இட்ஸ் பார் யூ…’’ என்று மஞ்சள் நிற ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்தை நீட்ட, ஆர்கலி ஆச்சர்யத்தோடு பெற்றுக் கொண்டாள்.

அடுத்து அவர்கள் மாலின் உள் பிரவேசித்து லிப்டை அடைந்ததும் உள்ளே இருந்த சிறுவன், பெரிய ட்ரபில் சாக்லேட் பாரை நீட்டி, ஹிந்தியில், “இது உங்களுக்காக…’’ என்றான். இப்போது ஆருவின் முகத்தில் ஆச்சர்யத்தையும் தாண்டி முகம் புன்னகையில் பூத்தது.

இவர்கள் கூல் காபி டேவின் வாயிலை நெருங்கும் போது, ஒற்றை டியூலிப் மலர் ஏந்தி  அவளுக்காய் வாயிலில் காத்திருந்தான் ப்ரித்வீராஜ். ஆருவிற்கு உள்ளுக்குள் ஏதோ படபடவென உடையும் உணர்வு.

ஏனெனில் அங்கு நின்று இருந்தது அவள் அறிந்த ப்ரித்வீ அல்ல. இருவரும் நேருக்கு நேர் சந்தித்து ஒரு வருடங்களுக்கு மேலாகி இருந்தது. தொண்ணூற்று சொச்ச எடையில் பெருமாள் கோவில் தேர் போல இருந்தவனை தான் தெரியும் அவளுக்கு.

ஸ்பைக் ஸ்டைலில் முடியை ஜெல் போட்டு நிற்க வைத்து இருந்தான். முழங்கை வரை தொட்ட நீல நிற டீஷர்ட். அடர் கருப்பில் ஜீன்ஸ். காதின் ஒரு பக்கம் வைர கடுக்கன். இதையெல்லாம் விட அவன் உயரத்திற்கு ஏற்ற எடையில் இருந்தான்.

அவனை பார்க்க பார்க்க ஆருவால் பார்வையை திருப்பவே முடியவில்லை. சாரு கூட தன்னையும் மீறி, “வாவ்…’’ என்றிருந்தாள். இவள் அருகே நெருங்க, அவள் கரம் பற்றி சுழற்றி நிறுத்தியவன், முழங்காலில் அமர்ந்து, “பார் மை பியூட்டி புல் பிரின்சஸ்…’’ என சொல்ல, சூழ இருந்தவர்கள் அத்தனை பேரும் கை தட்டினர்.

முகம் சடுதியில் வெட்கத்தில் சிவக்க, அடக்க முடியாது அவனை பார்த்து அழகாக முறுவலித்தவள், “இட்ஸ் எனப் ராஜ்…!’’ என்றாள் தலையை குனிந்து கொண்டு. பற்றிய கரத்தை விடாது அவர்களுக்காக முன்பதிவு செய்திருந்த இருக்கைக்கு அவளை நடத்தி சென்றான்.

இப்போது இவர்களை பின் தொடர்வதா அன்றி வேறு எங்காவது சுற்றி வரலாமா என்ற சிந்தையில் சாரு நிற்க, அவளை திரும்பி பார்த்த ஆரு, “உள்ள வா… உனக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.’’ எனக் கூறி அழைத்து சென்றாள்.

உள்ளே இவர்களின் இருக்கைக்கு அருகில் ராகவன் நின்று கொண்டிருந்தான். அவனை கண்டதும், “ராகவ் அண்ணா…!’’ என சாரு ஓடிப் போய் கட்டிக் கொள்ள, “சதுமா…’’ என்று அவனும் தங்கையோடு ஒட்டிக் கொண்டான்.

“எப்ப வந்தீங்க…? என்கிட்ட சொல்லவே இல்ல…?” என சாரு கலங்கிய விழிகளோடு கேட்க, “ஆர்கலி சிஸ்டர் தான் எனக்கு ப்ளைட் டிக்கெட் புக் செஞ்சு இன்னைக்கு மும்பை வர சொல்லி இருந்தாங்க. நீ என்னை பார்க்காம நாளுக்கு நாள் இளச்சிட்டே போறியாம். அவ காத்துல கரைஞ்சி காணாம போற முன்னாடி வந்துருங்க அண்ணான்னு சொல்லி மெசேஜ் போட்டு இருந்தாங்க.’’ என்றான் கேலியாய்.

“ஓ… அப்படியா சேதி. அண்ணா அவ உங்களை நல்லா ஏமாத்தி இருக்கா. அவ ஆள் கூட கடலை போட என்னை கழட்டி விட தான் உங்களை வர வச்சி இருக்கா.’’ என்றவள் ஆருவை பார்த்து கண் சிமிட்டினாள்.

“ஐயோ அண்ணா. அப்படியெல்லாம் இல்ல…!’’ வாய் அப்படி சொன்னாலும் ஆருவின் முகம் சிவந்து அவளை காட்டிக் கொடுத்தது. இதற்கு முன் அவள் போட்டிருந்த திட்டம் வேறு. இப்போது புதிய ராஜை கண்டதும் மனதிற்குள் ஓடும் எண்ணம் வேறு.

தோழி தடுமாறவும், “ஓகே யூ கேரி  ஆன். நானும் அண்ணாவும் சும்மா மாலை சுத்திட்டு வந்துடுறோம். லஞ்சுக்கு மேரிகுவின் ரெஸ்ட்டாரன்ட்ல மீட் பண்ணலாம்.’’ என்றவள் தன் அண்ணனை இழுத்து கொண்டு வெளியே நடக்க முயன்றாள்.

அதற்குள் ராஜ், ராகவனோடு தன்னை அறிமுகம் செய்து கொள்ள, ஆண்கள் இருவரும் சில நிமிடங்கள் பொதுவாக பேசிக் கொண்டனர். “ஓகே டியூட் லன்ச்ல மீட் பண்ணலாம்.’’ என ராஜ் விடை கொடுக்க, அண்ணனும் தங்கையும் மாலை சுற்றி வர கிளம்பினர்.

கண்ணாடி கோப்பையிலிருந்த நீரை எடுத்து பருகி ஆரு தன் பதட்டம் தணிக்க முயன்றாள். நேற்று வரை அவள் மனதிற்குள் ஓட்டி வைத்திருந்த வசனம் வேறு. சாருவை அவள் அண்ணனோடு அனுப்பி வைத்ததும், “உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது. தயவு செய்து இந்த திருமணத்தை நிறுத்த உதவுங்கள்…’’ என கேட்க எண்ணியிருந்தாள்.

ஆனால் தற்சமயம் ஏனோ பேச வந்த வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கி நின்றன. “ஹாய் மிஸ் கார்ஜியஸ்…! என்ன சாப்பிடலாம்…’’ என்று அவள் கண்ணை பார்த்து கேட்டான்.

“நீங்களே சொல்லுங்க.’’ என்றாள் தயக்கமாய். இருவருக்கும் அவனே, ‘ஐஸ்டு கேரமல் மெக்காண்டோவை’ சொல்ல அது வந்த பின்பும் கூட ஆரு வார்த்தைகளற்ற மௌனத்தை சுமந்து அமர்ந்திருந்தாள்.

“பாக்க ஏதோ கொஞ்சமாவது டெய்லர் லாட்னர் மாதிரி இருக்கேனா…?’’ என அவன் கேட்கவும், அப்போது தான் வாயில் வைத்த பானம் அவளுக்கு புரையேறியது. தன் இருக்கையில் இருந்து எழுந்து, லேசாக அவள் தலையை தட்டிக் கொடுத்தவன், “ஈசி ஈசி…’’ என்றான் சிரித்துக் கொண்டே.

இருவரும் பானத்தை அருந்தி முடிக்கும் வரை அங்கு வேறு பேச்சில்லை. முதலில் ராஜே பேச தொடங்கினான். “சினிமால காட்ற மாதிரி மனசுக்கு பிடிச்சவங்களை பழகி பார்த்து லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுகுற சொபஸ்டிபிகேசன் நம்ம குடும்பத்துல நமக்கு கிடைக்காது. நாங்க ரெண்டு தலைமுறைக்கு முன்னாடியே குஜராத்ல செட்டில் ஆனவங்க. எங்க அம்மா மராத்தி தான். எனக்கு தமிழ்நாட்ல இருந்து தான் பொண்ணு பார்க்கணும்னு எங்க பாட்டியோட ஆசை. அதான் உங்க அப்பா அப்ரோச் செஞ்சதும் கப்புன்னு சம்மந்தத்தை பிடிச்சிட்டாங்க.’’ என்றவன் சிரிக்கவும் ஆருவும் லேசாக புன்னகைத்தாள்.

“போட்டோல உன்னை பார்த்தப்ப எனக்கு பிடிச்சது. வெறும் போட்டோ பார்த்து மட்டும் முடிவு செய்ய கூடாதுன்னு உன் பேஸ் புக், இன்ஸ்டா எல்லாம் சுத்தி வந்தேன். யாருக்கும் தெரியாம உன்னை க்ளோசா அப்சர்வ் செஞ்சேன். நம்ம கல்ச்சர்ல வளர்ந்த மத்த பொண்ணுங்க மாதிரி பணத்திமிர் உன்கிட்ட இல்ல. ரொம்ப இயல்பா இருந்த. உனக்கு என்ன வரும்னு பீல் செஞ்சியோ அதை மட்டும் தான் பண்ணின. ரொம்ப கேர் ப்ரீயா இருந்த. அதோட முக்கியமான விஷயம் நீ ட்ராவலையும் நேச்சரையும் ரொம்ப லவ் பண்ண. எனக்கும் புது புது இடங்களை பார்க்க, மனுசங்களை சந்திக்க, புது புது உணவுகளை சாப்பிட ரொம்ப பிடிக்கும். உன் கூட என் லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு தோணுச்சு.” என்றவன் பேசுவதை நிறுத்தி விட்டு காலி கண்ணாடி கோப்பையை அங்கும் இங்கும் உருட்டினான்.

ஆரு அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் கண்களை பார்த்தவன், “அதான் ஓகே சொன்னேன். ஆனா நாம பஸ்ட் டைம் நேர்ல மீட் பண்ணும் போது உனக்கு என்னை பிடிக்லைன்னு உன் பார்வையை வச்சே தெரிஞ்சிகிட்டேன். யா…! ஐயம் ஃபுட்டி. சாப்பிட ரொம்ப பிடிக்கும். வித விதமா ரக ரகமா ரசிச்சு சாப்பிடுவேன். வீட்டுக்கு ஒரே பையங்கிறதால பெருசா யாரும் தடுத்து இல்ல. ஆனா என் உருவம் உனக்கு பிடிக்லைன்னு தெரிஞ்சப்ப ரொம்ப ஏமாற்றமா இருந்தது. அட்லீஸ்ட் என்கிட்ட பேசி பார்த்துட்டு நீ ரிஜக்ட் செஞ்சி இருந்தா கூட எனக்கு அவ்ளோ வலிச்சி இருக்காது.’’ என்றவன் அமைதியாகிட ஆர்கலி குற்ற உணர்ச்சியில் குறுகினாள்.