காதல் – 4

அடுத்த ஒரு வாரம் எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக கழிந்தது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல ஆரு தன் தோழிகளுடன் குதூகலிக்க கடற்கரை விடுதிக்கு புறப்பட்டிருந்தாள். அவள் தன் மற்ற தோழிகளுடன் நீச்சல் உடையில் கடலில் குதித்துக் கொண்டிருந்தாள். 

அது ஒரு தனியாருக்கு உட்பட்ட பகுதி. அங்கு அவர்களை தவிர வேறு யாரும் நுழைய முடியாது. தோழிகள் விளையாடிக் கொண்டிருக்க, சாரு மணலில் குனிந்து அமர்ந்து, தான் கையோடு கொண்டு வந்திருந்த வெள்ளைத்தாளில் அடுத்து வடிவமைக்க வேண்டிய உடைகளை ஸ்ரத்தையாய் உருவாக்கிக் கொண்டிருந்தாள். 

இன்னும் பத்து நாட்களில் அவர்களின் தேர்வு தொடங்க இருந்தது. செயன் முறை தேர்வுகள் மட்டுமே மூன்று சுற்றில் நடைபெற இருந்தன. இவர்களின் ஆடை வடிவமைப்பை மதிப்பிட, அவர்களின் ஆசிரியர்களோடு, வெளி பல்கலை கழகங்களிலிருந்தும் ஆசிரியர்கள் வருவர். 

கூடவே கல்லூரியின் சார்பில் மிகப் பெரிய அளவில் பேசன் ஷோ ஒன்றும் ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. எனவே சாரு தன் இருமடங்கு உழைப்பை கொடுத்து தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தாள். 

கல்லூரியை விட்டு நீங்கும் போது பணி ஆணையோடு தான் செல்ல வேண்டும் என்ற உறுதியில் இருந்தாள். அவள் கல்லூரியில் இணைந்த நாள் முதல் அவளை நேரில் அழைத்து திட்ட முடியாத அருண் இரவில் அலைபேசியில் அழைத்து பேசுவான். 

தினம் திட்டுவான் என்று சொல்ல முடியாது, ஆனால் அவளிடம் பேசும் போது குரலில் கடுமை கட்டாயம் வெளிப்படும். இவர்கள் கல்லூரியில் இணைந்த அடுத்த ஒரே ஆண்டில் பாலிவுட் படங்களை தயாரிக்கப் போகிறேன் என்று இவர்களுக்கு எதிர் குடியிருப்பை ஆக்ரமித்தான். 

ஆரு தமையனின் வரவில் குதூகலிக்க, சாரு மனதிற்குள் மிரண்டு போனாள். ‘போச்சுடா…! மறுபடி காது தீயப் போகுது.’ என்று அவள் கவலைப்பட இம்முறை அவன் தாக்குதல்கள் வேறு பாணியில் இருந்தன. 

மும்பைக்கு ஏற்ப அவள் மாடல் உடைகளை அணிய, முதல் நாள் அவளை பார்வையால் எரித்தவன், அவள் தனியே சிக்கிய போது, “என் தங்கச்சி மாதிரியே ட்ரெஸ் செஞ்சா உனக்கும் அவளுக்கும் என்ன வித்யாசம். ஈவ்னிங் பார்சல் வரும். அதுல இருக்க ட்ரெஸ் மட்டும் தான் நீ இனி யூஸ் பண்ற. வேற ஏதாச்சும் ட்ரெஸ்ல என் கண்ல பட்ட அவ்ளோ தான்…’’ என்று உறுமிவிட்டு செல்ல சாரு முற்றிலும் குழம்பி போனாள். 

அருண் சொன்னதை போலவே அவளுக்கான உடைகள் பார்சலில் அடுத்த நாள் வந்து சேர்த்தது. அத்தனையும் நீள நீள குர்தி வகை உடைகள். ‘ஏதாச்சும் ஆஸ்ரமம் ஆரம்பிக்கிற ஐடியால இருக்கியா…?’ என்று சாரு அவள் அவ்வுடைகளை அணிந்த போது கிண்டல் செய்ய, ‘உங்க அண்ணன் வந்து அங்கயும் நான் தான் மட குருன்னு உக்காந்து உயிரை வாங்குவான்.’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், வெளியே அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து தோழியை சமாதானம் செய்து வைத்தாள். 

நெடு நேரம் கடலில் ஆட்டம் போட்ட ஆர்கலி மூச்சு வாங்க சாருவின் அருகில் வந்து அமர்ந்தாள். தோழி மும்பரமாக வரைந்து கொண்டிருக்க, லேசாக தன் கையில் ஒட்டியிருந்த நீர் துளிகளை அக்காகிதத்தின் மீது தெளித்தாள். 

உடனே சாரு முகம் சிவக்க கோபமாய் தோழியை நிமிர்ந்து பார்த்தாள். “ஹே… கூல்… கூல்… எதுக்கு இப்ப டென்சன். அதான் காலேஜ்ல ஆறு நாளும் விழுந்து விழுந்து டிசைன் செஞ்சிட்டே இருக்க இல்ல. இன்னைக்கு ஒரு நாள் என் கூட ஜாலியா இருந்தா என்ன…? உனக்கு மட்டும் எக்ஸாம் இல்ல மேடம். எங்களுக்கும் தான் எக்ஸாம்.’’ என்றாள் கிண்டலாய். 

ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்ட சாரு, “உனக்கு அது ஜஸ்ட் ஒரு எக்ஸாம். அவ்ளோ தான் ஆரு. ஆனா எனக்கு லைப். இன்னும் ஒன் ஆர் டூ இயர்ஸ்ல உனக்கு மேரேஜ் நடக்கும். அப்புறம் எனக்கு உன்ன பாத்துகிற வேலை இருக்காது இல்ல. என்னோட அடுத்த வேலைக்கு தான் தயாராக வேண்டாமா…?’’ என்றாள். 

முகத்தில் எதையும் காட்டவில்லை என்றாலும் குரலில் இயலாமையின் வலி. தோழியின் மனதை உணர்ந்த ஆரு ஈர உடலோடு அவளை பக்கவாட்டில் கட்டிக் கொண்டாள். 

“சாரு…! சாரி…!’’ என்றாள் உள்ளார்ந்த மன்னிப்பை வேண்டி. ஆருவின் பங்கு இதில் ஒரு துளியும் இல்லை என்பதோடு, இவளின் நட்பு கிடைத்ததால் மட்டுமே,  சிறந்த கல்வி தனக்கு கிடைத்தது என்பதையும் உணர்ந்தவள், “எரும விடுடி. டிராயிங் சேர்ந்து நனஞ்சுற போகுது.’’ என்றாள் இலகுவாய். 

உடனே தள்ளி அமர்ந்தாள் ஆரு. சாரு அணிந்திருந்த துப்பட்டாவை கொண்டு, அந்த வெண் காகிகத்தில் ஆங்காங்கே தெளித்திருந்த நீர் திவலைகளை கவனமாக துடைத்தவள், “பரவாயில்ல சரு… உன்னோட சாமியார் ட்ரெஸ் இதுக்கெல்லாம் யூஸ் ஆகுது பாறேன்.’’ என்றாள் சிரிப்போடு. 

“உன்ன…!’’ என்றவள் அவள் தலையில் வலுவாய் கொட்ட, முகத்தை சுருக்கிய ஆரு, “பிசாசு…! வலிக்குற மாதிரி கொட்ற. இரு எங்க அண்ணன் கிட்ட உன்னை போட்டு கொடுக்குறேன்.’’ என்றாள் முகத்தை சுருக்கி. 

உடனே சாருவின் முகம் பயத்தில் வெளிற, வாய் விட்டு சிரித்த ஆரு, “ஏமாந்த புல்… எலிக்குட்டி புல்… எட்டி எட்டி பார்த்தா பூனைக் குட்டியாம்.’’ என்று சிரித்துக் கொண்டே பாட, மற்ற தோழிகளும் அங்கு குழுமினர். 

“இந்த பாடலின் பொருள் என்ன…?’’ என அவர்கள் இந்தியில் கேட்க, ஆரு ஹிந்தி வெர்சனை பாடி மீண்டும் ஒரு முறை சாருவை கடுப்பேற்றினாள். தோழிகள் நகைப்பொலியோடு அந்த இடம் கலகலத்தது. மதிய உணவை முடித்துக் கொண்டு அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். 

காரில் திரும்பி கொண்டிருக்கும் போது, தன் அருகே அமர்ந்திருந்த சாருவின் கைகளை சுரண்டிய ஆரு, “ஏய்…! அப்படி என்ன டிசைனை நீ வரைஞ்சிட்டு இருந்த காட்டு.’’ என்றாள். “போடி என்ன கிண்டல் செஞ்ச இல்ல. காட்ட மாட்டேன் போ.’’ என்றாள் சாரு முகத்தை சுளித்து கொண்டு. 

“போடி…’’ என்ற ஆரு பற்றியிருந்த தோழியின் கரத்தை விட்டு விட்டு நகர்ந்து ஜன்னலை ஒட்டி அமர்ந்தவள் முகத்தையும் வெளிப்புறம் திருப்பிக் கொண்டாள். 

தோழியை ஒட்டி அமர்ந்த சாரு, அந்த வெண்ணிற தாளை ஆருவின் கைகளில் திணித்தாள். முதலில் வேண்டாம் என அவள் கைகளை விலக்க, விடாப்பிடியாய் சாரு திணிக்க, வேண்டா வெறுப்பாக பார்ப்பவள் போல ஆரு அந்த வரைபடத்தை பார்த்தாள். 

ஆனால் அடுத்தகணம் அவளையும் மீறி, “வாவ்…’’ என்ற வார்த்தை அவள் வாயிலிருந்து வெளிப்பட்டு இருந்தது. சாரு வரைந்திருந்தது பெண்கள் அணியும் திருமண உடை. அதில் மேற்கத்திய சாயலில், இந்திய காலாசாரத்தை பிணைத்து அந்த உடையை வடிவமைத்து இருந்தாள். 

முழங்கை வரை கை கொண்ட கவுன் வகை உடை. அதில் தோள்கள் இணையும் இடத்தில் லேசான பப். கழுத்துப் பக்கம் தேவையான அளவு இதய வடிவ இறக்கம். இடுப்பு குறுகி பின் குடை போன்று விரிந்து தரை வரை நீண்ட உடையில், இடுப்பு பக்கம் ஒட்டியாணம் போல ரோஜாக்கள் கொண்டு அலங்கரித்து இருந்தாள். 

தரையில் புரண்ட உடையின் ஒவ்வொரு ப்ரில் டிசைனிலும் ஒவ்வொரு வகை பூக்கள் வரிசையாய் கொடி போல உடலையை அலங்கரித்து இருந்தன. மொத்தமாக அந்த உடையே ஒரு பூக்குவியல் போல இருந்தது. 

“செம… செம… சரு… இது தான் என்னோட வெட்டிங் ட்ரஸ்னா நான் நாளைக்கே கூட கல்யாணம் செஞ்சுப்பேன். அமேசிங்.’’ என்றாள் அந்த தாளில் இருந்து பார்வையை அகற்றாமல். 

“ஷ்…! உங்க வீட்டு ஆளுங்களுக்கு கார்ல கூட காது இருக்கலாம். இது தான் பெஸ்ட் சான்ஸ்சுன்னு உன்னை அந்த ப்ரித்வீராஜ் கிட்ட கோர்த்து விட்ற போறாங்க.’’ என்றாள்  முகத்தை சீரியசாக வைத்து கொண்டு. 

அவளை திரும்பி பார்த்து முறைத்த  ஆரு, “என் மூடை ஸ்பாயில் பண்றது எப்படின்னு உன்கிட்ட எல்லாரும் டியூசன் படிக்கலாம்.’’ என்றவள் அந்த தாளை தோழியின் கையில் கொடுத்துவிட்டு, கண்களை மூடி இருக்கையின் பின் சாய்ந்து அமர்ந்தாள். 

“சாரிடி…!’’ என தோழியை தேற்றுவது இம்முறை சாருவின் முறையானது. அடுத்த வாரம் திட்டமிட்டதை போல தேர்வுகள் தொடங்க செயன் முறை தேர்வுகள் மூன்று சுற்றில் இரண்டில் முதலிடத்தை தக்க வைத்து ஆரு முதல் மதிப்பெண்ணோடு சுழல் கோப்பையையும் கைப்பற்றினாள். 

சாருவின் உடைகள் முதல் பத்து இடங்களுக்குள் வந்தது. இத்தனைக்கும் ஆரு பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை. தேர்வுக்கு முந்தின நாள் நள்ளிரவு வரை தான் தன் ஆடைகளை வடிவமைத்தாள். பிடித்தத்திற்கும், கடமைக்கும் இருந்த வேறுபாட்டை சாரு அன்று உணர்ந்தாள். 

ஆயினும் தோழி முதலிடம் பிடித்ததில் முழு மனதோடு மகிழ்வாய் அவளை வாழ்த்தினாள். ஆனால் ஏன் முதலிடம் பிடித்தோம் என்று ஆரு வருந்தும் சம்பவம் அதிவிரைவில் நடந்தேறியது. இவள் செய்தியை வீட்டில் அறிவிக்க, முருகுவின் வழி செய்தி ப்ரித்வீயின் வீட்டையும் அடைந்தது. 

முதலிடம் பிடித்த ஆருவிற்கு பரிசு வழங்க விரும்புவதாக ப்ரித்வீ முருகுவிடம் அனுமதி கேட்க, விரைவில் திருமணம் என்று மனதிற்குள் முடிவெடுத்திருந்த அவரும் மகிழ்வோடே சம்மதம் தெரிவித்தார்.