அத்தியாயம் 23

ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள்.

கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது மடியினுள் புதைந்து போவதைப் போல் இடையிறுக்கிய அணைப்புடன் உறங்கிக் கொண்டிருப்பதை எப்பொழுதும் போல் இன்று ரசித்துப் பார்க்காமல் வியப்புடன் பார்த்திருந்தாள் அவள்.

அவனின் முகத்தைத் தழுவிய கண்கள் அவனது மேனிக்குள் உலவவும், அவன் மார்பிலிருந்து வீசிய சந்தன சவ்வாது மணத்தை நுகர்ந்தவளுக்கு, முந்தைய நாளின் நிகழ்வுகள் மனத்திற்குள் காட்சிகளாய் விரிய, அதிர்ந்தடங்கியது அவள் தேகம்.

இத்தனை நாள்களாய் தான் கண்டுணர்ந்தவனுக்கும் நேற்று தான் பார்த்தவனுக்கும் எத்தனை வேறுபாடுகள்.

தன்னுடைய சிரசில் பெருமாளின் பொன்மேனி‌ச் சிலையை வைத்திருந்தவனாய், அவரைக் கரங்களில் தொடாமலும் அதே சமயம், கீழேயும் விழ விடாமலும், கால்களைச் சுழற்றியவனாய் அவன் ஆடிய இறையாட்டத்திற்கு இணையாக அவனுடைய தலையில் வீற்றிருந்த பெருமாள் சிலையும் ஆடுவது போல், அவன் ஆடிய ஆட்டத்தை இப்பொழுது நினைக்கும் போதும் புல்லரித்தது அவளுக்கு.

இந்தக் காட்டானிற்குள் இப்படியொரு தெய்வீகத்தன்மையா என நேற்று அவனை வியந்து பார்த்தவளின் உணர்வுகள் இன்னும் வடியாதிருக்க, அணுஅணுவாய் தன்னவனை வியப்புடன் நோக்கியிருந்தன அவளது கண்கள்.

மெல்ல தனது கைகளைத் தூக்கியவளாய் அவனது தலைமுடியைக் கோதியவளின் உள்ளம், ‘என்னே பேறு பெற்றேன்! நேற்று இந்த அண்டசாசரத்தைக் காக்கும் எம்பெருமாளைத் தாங்கியிருந்த இச்சிரசை இன்று என் மடியில் தாங்கும் பாக்கியம் கிடைக்க என்னே பேறு பெற்றேன்’ என்று எண்ணி உவகைக் கொண்டது.

அவளது ஸ்பரிசத்தில் கண்களைத் திறந்தவனின் விழிகளோ பொன்யொத்த மேனியாளின் அழகு வதனத்தில் படிந்தன. தன்னவளின் முகத்தில் பூரிப்பும் வியப்புமான பார்வையைக் கண்டு புருவத்தை உயர்த்தினான்.

“கண்ணா” என்ற போதே நெஞ்சம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகியது அவளுக்கு.

“என்னாயிற்று கோதை” பதட்டத்துடன் கேட்டவனாய் எழுந்தவன் அமரவும்,

“நான் காதலிக்கும் கண்ணனின் மற்றொரு பரிமாணத்தை நேற்று கண்டப்பின் உள்ளம் நெகிழ்ந்து கிடக்கிறது கண்ணா! ஏன் இத்தனை நாள்களாய் என்னிடம் இதனைக் கூறவில்லை கண்ணா! உங்களுடன் இன்பமாய்ப் பொழுதை கழித்து விட்டுப் போகலாம் என்று தான் இந்த விழாவிற்கு வந்தேன். ஆனால் வேறொரு கண்ணனைக் கண்டப்பின்….” எனும் போதே அவளின் தொண்டை அடைத்துக் கண்கள் குளம் கட்டிக் கொள்ள,

குரலைச் செருமியவளாய், “தங்களை மணம் புரியும் தகுதி எனக்கு இருக்கிறதாயென ஐயம் கொள்கிறது உள்ளம் கண்ணா” என்றாள்.

“இந்த வனத்திற்கும் அதிலுள்ள அனைத்து ஊர் மக்களுக்கும் காவல்காரக் கருப்பண்ணனாக இருக்கும் என்னைக் கண்ணனாக ஏற்றுக் கொண்ட உன்னை விட, வேறு யாருக்கு என்னை மணம் செய்து கொள்ளும் தகுதி இருந்து விட முடியும் கோதை” ஆதூரமாய் உரைத்தவனாய் எழுந்து நின்றவன் கைகளில் அவளை ஏந்திக் கொள்ள, அவனின் எதிர்பாரா இச்செயலில் நொடியில் பதறிப் பின் அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டவளின் நெற்றியில் முட்டியவனாய் நடந்தவனின் மார்பில் தலைச்சாய்த்து கிறங்கிக் கிடந்தவளை ஐந்து நிமிட நடைக்குப் பிறகு இறக்கி விட்டதும், நின்றிருந்த இடத்தைப் பார்த்து விழிகளை விரித்தாள்.

அந்த அடர்வனத்தின் நடுவில் கோனை கொண்டையுடன் உயர்ந்த பிரமாண்டச் சிலையாய் பெரிய மீசையுடன் கையில் அரிவாள் வைத்துக் கொண்டு ஆஜானுபாகுவான தோற்றத்தில் அமர்ந்திருந்த கருப்பண்ணசாமி சிலையின் முன்னே நின்றிருந்தனர் இருவரும்.

“இங்கே எதற்காக?” என்றவள் கேள்வியாய் அவனைப் பார்க்க,

“காதலியின் ஐயத்தைப் போக்குவது காதலனின் கடமையல்லவா கோதை” என்றவனாய் முன்னே நடந்தவனைப் புரியாத பார்வைப் பார்த்தாள் அவள்.

முந்தைய நாள் விழாவில் கருப்பண்ணசாமியின் கழுத்தில் சூடப்பட்ட மாலைகள் அப்படியே இருக்க, அதிலிருந்து இரண்டை எடுத்து வந்தவனை, அதிர்ந்த பார்வையுடன் பார்த்தவளாய், “என்ன செய்யப் போகிறீர் கண்ணா?” எனக் கேட்டாள்.

ஒரு மாலையை அவளின் கரத்தினில் கொடுத்தவனாய், “கந்தர்வ மணம்” கன்னத்தில் குழி விழச் சிரித்தவாறு கூறியவனின் கன்னக்குழியில் நின்ற தனது ரசனைப் பார்வையை அதிர்வுடன் அவனது கண்களில் பதித்தாள்.

(கந்தர்வ திருமணம் என்பது சடங்குகள், சாட்சிகள், குடும்பப் பங்கேற்பு இல்லாமல், இரு நபர்களிடையே ஒருமித்த ஏற்பின் அடிப்படையில் நடைபெறும் திருமணம்)

காதலுடன் கண்ணொடு கண்ணினை நோக்கியவனாய் முன்னேறியவன், “இப்பிறவி மட்டுமல்ல இனி நான் இப்பூமியில் எடுக்கும் அத்தனை பிறவியிலும் நீ மட்டுமே எனது மணவாட்டியாகும் வரம் வேண்டும் கோதை! அவ்வரத்தைத் தந்தருளுவாயா உன் கண்ணனுக்கு?” எனக் கேட்டவனாய் மாலையைக் கையில் ஏந்தி அவன் நிற்க,

மிகுதியான காதலில் மயங்கிய மனத்தின் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தவளாய், தானே அவனது கழுத்தில் தாவிச் சென்று மாலை அணிவித்து அவன் கேட்ட வரத்தை மனமுவந்து அளித்திருந்தாள் கோதை.

அவளுக்கேற்ற அளவுக்குத் தலையைக் குனிந்து மாலையை வாங்கியவன் நிமிர்ந்து அவளது கழுத்திலும் மாலை அணிவித்துக் கந்தர்வ மணம் புரிந்த அடுத்த நொடி அவளது கன்னத்தில் தனது மீசை முடி உராய அழுத்தமாய் முத்தத்தைப் பதித்திட, நாணத்துடன் அவனை விட்டு அவள் தள்ளி நின்ற வேளை,

“கோதை” என்ற கோபமான ஆக்ரோஷமான குரல் கேட்டுப் பதறி நிமிர்ந்தாள் பெண்.

இக்காட்சிகளைக் கண்டவாறு கண்மூடி அமர்ந்திருத்த தாமரையின் உடல் அதிர, அன்னிச்சையாய் அவளின் கரம் அருகிலிருந்த மாதவனின் கரத்தோடு கோர்த்துக் கொண்டன.

தானும் அவளின் கரத்தைப் பற்றியவனாய் தைரியமளித்தான் மாதவன்.

கருப்பண்ணனும் கோதையும் குரல் வந்த திசை நோக்கித் திரும்ப, கோபத்துடன் இவர்களை நோக்கி வந்த முருகையன் அவளின் கன்னத்தில் அறைந்திருந்தார்.

கோதையின் உடல் அச்சத்தில் நடுங்க, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

விருட்டென அவளின் கைப்பற்றித் தோளோடு அணைத்தவனாய் தன்னுடன் நிறுத்திய கருப்பண்ணன், “கோதையின் தந்தையாகிப் போனதால் தான் என்னவளைத் தொட்டப் பின்பும் உம் உடலில் இன்னமும் உயிர் ஒட்டியிருக்கிறது” எனக் கர்ஜித்திருந்தான்.

“ஓஹோ இல்லையென்றால் உயிரை ஊடுருவி எடுத்து விடுவாயோ?” என்று கோபமாய்க் கத்தியவராய் கோதையின் புறம் திரும்பியவர் கலங்கிய குரலில்,

“இப்படி ஒன்று உன் வாழ்வில் நடந்திடக் கூடாது என்று தானே அத்தனை மெனக்கெட்டேன். சற்று பிசகினாலும் தவறாகி விடும் என்று இதைத் தானே நான் கூறி வந்தேன். இப்படி நீ களவு மணம் செய்து பாவத்தைத் தேடிடக் கூடாது என்று தானே உனக்கான ஜாதகத்தைத் தேடித் தேடி அலைந்தேன். எங்கே தவறிப் போனேன் நான்” என்று கண்ணீருடன் அவர் உரைப்பதைக் கேட்டு அழுதவளாய்,

“தந்தையே! நான் சொல்வதைக் கேளுங்கள்! கருப்பண்ணன் தான் எனக்கானவர் தந்தையே!” தழுதழுத்த குரலில் உரைத்தாள்.

“இல்லை வந்து விடு! என்னுடன் வந்து விடு! இவன் வேண்டாம் உனக்கு” என்று அவளின் கரம் பற்றி அவர் இழுக்கவும் கோபம் கொண்டவனாய் கருப்பண்ணன் அவளின் கையை அவரின் கையிலிருந்து விடுவித்து உதறித் தள்ள, கீழே விழுந்திருந்தார் முருகையன்.

அவனது செயலை அவமானமாய்க் கருதி வெகுண்டவராய், “சபிக்கிறேன் உன்னை! எம் மகளுக்கானவன் அல்லன் நீ! இப்பிறவியில் ஏதுமறியாத பேதையான எம் மகளை ஏமாற்றி மணம் புரிந்து விட்டாய் ஆனால் இனி நீ எடுக்கும் எப்பிறவியிலும் எம் மகளுக்கு நீ மணாளனாக மாட்டாயெனச் சபிக்கிறேன்” அந்த வனமே அதிரும் வண்ணம் உரத்தக் குரலில் கூறியவரின் சத்தம் கேட்டு ஊரே அங்குக் கூடிவிட்டிருந்தது.

“உண்மையாய் நேசிக்கும் உள்ளங்களை எவரின் சொல்லும் பிரித்திடாது” என்று அப்பொழுதும் கருப்பண்ணன் அசட்டையாய் பேசிட, கோதை தான் இந்தச் சாபத்தைக் கேட்டு பதறிப் போனாள்.

‘ஓ இவரோட சாபத்தால தான் நாங்க இரண்டு பேரும் முதல் கல்யாணமா ஒன்னு சேராம போனோமா? இதைத் தான் காலைல தாமரை கனவுல கண்டு சொல்லி அழுதாளா? ஆனா அப்புறம் எப்படி இந்தச் சாபத்தையும் மீறி இப்ப நாங்க ஒன்னு சேர்ந்தோம்’ என்று யோசித்தவனாய் காட்சியினைப் பார்த்திருந்தான் மாதவன்.

முருகையனின் ஓலமான உரத்தக் குரலில் ஊரே கூடிவிட, ஒரு வீட்டின் பிரச்சினை இப்பொழுது ஊர் பிரச்சினையாகிப் போனதால், வழக்காடு மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது இவர்களின் பிரச்சினை.

“என் பெண்ணுக்கேற்ற வரன் இவனில்லை. செங்கோடன் தான் அவளின் ஜாதகத்திற்குப் பொருத்தமான வரன். பெற்றோர் கன்னியா தானம் செய்து கொடுக்காத வரையில் அப்பெண் பெற்றோருக்குத் தான் கட்டுப்பட்டவள்! அதனால் என் பெண்ணை என்னுடன் அனுப்பி வைக்குமாறு கருப்பண்ணனுக்கு உத்தரவிடுங்கள்” என்று தன்னுடைய பிராதை அளித்தார் முருகையன்.

சுற்றியிருந்த கூட்டத்தினுள் நின்றிருந்த செங்கோடனின் பார்வை துவேஷத்துடன் கருப்பண்ணன் மீது படித்திருந்தது.

“நாங்கள் இருவரும் கருப்பண்ணசாமியை சாட்சியாக வைத்துக் களவு மணம் புரிந்திருக்கிறோம். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொண்டு மணம் புரிந்து கொள்வது நமது மரபின் வழியில் இயல்பாய் நிகழ்வது தானே. இதனைக் குற்றம் என்றுரைத்து என் இல்லாளை எம்மிடம் இருந்து பிரிப்பது எவ்வகையில் அறமாகும்” என வாதிட்டிருந்தான் கருப்பண்ணன்.

வழக்காடு மன்றத்தில் வழக்கை விசாரித்த ஊர் பெரியோர்கள், “தாங்கள் காலம் தாழ்த்தி விட்டீர் முருகையா! தங்களின் மகள் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதே தாங்கள் கண்டித்து முடிவெடுத்திருக்க வேண்டும். களவு மணத்தை அங்கீகரிக்கும் நாடு இது! ஆகையால் கோதை கருப்பண்ணனின் மணத்தை அங்கீகரிக்கிறோம். கோதை இப்பொழுது முருகையனின் மகள் அல்ல கருப்பண்ணனின் மனைவியாவாள். கோதை கருப்பண்ணனின் மணத்தை ஏற்றுக் கொண்டு அவர்களை மன்னித்து வாழ்த்துமாறு முருகையனை கேட்டுக் கொள்கிறோம்” என்று தீர்ப்பளித்தனர்.

மனம் நொந்து போனார் முருகையன்.

“இனி இவள் தங்களின் மகளே இல்லை” எனக் கூறிவிட்டு அவர் புறப்பட,

“உன் வாழ்வை நீயே கெடுத்துக் கொண்டாய்” அழுகையின் விம்மலுடன் உரைத்தவராய் கணவனுடன் நீலாம்பிகை நடக்கவும்,

“நில்லுங்கள்! உண்மையை அறிந்து கொண்டு செல்லுங்கள்” என்றவனாய் வந்து நின்றான் வீரபத்திரன்.

அவனோடு காவியுடையுடுத்திய சடாமுடி சாமியார் ஒருவர் வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் செங்கோடனின் முகம் கருத்து உள்ளத்தில் அச்சம் படரவாரம்பித்தது.

முருகையனும் நீலாம்பிகையும் திரும்பி நின்று வீரபத்திரனைப் பார்க்க, “செங்கோடனின் ஜாதகச்சுவடி பொய்யாய்த் திருத்தப்பட்டது! அதை அவனுக்குச் செய்து கொடுத்த சாமியாரை இங்குச் சாட்சியாகக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றவனாய் முருகையனைப் பார்த்த வீரபத்திரன்,

“கருப்பண்ணனுக்கும் எனக்கும் செங்கோடன் ஏதோ சூழ்ச்சி செய்வதாய்த் தோன்றியது மாமா. அதனால் அவனைப் பின்தொடர்ந்து கண்காணித்து இந்த உண்மையைக் கண்டறிந்தோம் நாங்கள். சாட்சியாய் இந்தச் சாமியாரைக் கொண்டு வந்து உங்களிடம் பேச வைக்க முயற்சித்திருந்த வேளையில் இவ்வாறு நடந்து விட்டது. என் நண்பன் உத்தமன் மாமா” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு உரைத்தான் வீரபத்திரன்.

“பொய்! பொய்! கோதையை எனக்கு அவளின் தந்தை மணமுடிக்காமல் தவிர்க்க இவ்வாறு என் மீது பொய்யான பழியைச் சுமத்துகின்றனர்” என்றான் செங்கோடன்.