“எதுக்கு வந்திருக்கான்? விளக்கம் கேட்கவா? பழி வாங்கவா? முடிஞ்சு போனதை தொடரவா?”, அவள் எதற்கும் தயாராக இல்லை. “இரு இரு…அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியுமா? அதுக்குள்ள கமா போட கேட்கற?”, மனசாட்சி கலாய்க்க, “ஏ..சே..இருக்கற ஆப்ஷன்ஸ் யோசிக்கறேன்”, என்றவள் மனது கல்லூரி நாட்களுக்குச் சென்றது. அவள் பட்ட மேற்படிப்பிற்காக எம்யெஸ்ஸி சேர்ந்த நேரம், அதே கல்லூரியில் கணிதத்தில் பி.எஹ்.டி சேர்ந்திருந்தான் ஜோ. இவள் கல்லூரி சேர்ந்து ஆறு மாதம் கழித்துதான் அறிமுகம்.
ஷீத்தல் சொல்லியது போல அவள் வகுப்பில் அவனது ப்ரவுன் ஐஸ், க்ர்லி ஹேர் மூலம்தான் பிரபலம் ஆனான். ஆனால் அதைக்கொண்டு எந்த பந்தாவும் இல்லை. சில நாட்களிலேயே ‘ஐயோ…படிப்ஸ்டி. சீரியஸ் பார்ட்டி.. சும்மா பார்க்கமட்டும்தான் லாயக்கு’, என்று விலகியிருந்தனர்.
இதிலெல்லாம் அதிகம் சேராது விலகியிருந்தாள் கீர்த்தி. அவளுமே கொஞ்சம் படிப்ஸ் ரகத்தை சேர்ந்தவள்தான். அக்காவின் திருமணம் முடிந்து மீள வேண்டியிருந்ததால், மேற்படிப்பிற்கு, அதுவும் அரசாங்கக் கல்லூரி என்பதால் சம்மதம் பெற்று சேர்ந்திருந்தாள். மாலை வேளைகளில் ட்யூஷனும் எடுப்பதால் பெற்றவர்களுக்கு பாரமில்லைை.
லைப்ரரியில்தான் ஜோவோடு பேச முதல் சந்தர்ப்பம் அமைந்தது. “ஹலோ…உங்க போன் விட்டுட்டு போறீங்க”, என்று அவன் தான் முதலில் அழைத்துப் பேசினான்.
“என்னடா… இந்தப் பொண்ணு நிமிர்ந்துகூட பார்க்கலையே. நம்ம கண்ணு மட்டும் சுத்தி வருதேன்னு வருத்தப்பட்டேன் தெரியுமா?”, பின்னொரு மழை நாளில் காலேஜில் அவள் வகுப்பறைக்கு நடந்து வரும்போது சொல்லி சிரித்திருக்கின்றான்.
நூலகத்தில் ஆரம்பித்து ஓரிரு வார்த்தைகள் பேச, அறிமுக சிரிப்புகள் பகிர என்றது, கான்டீனில் ஒன்றாக உணவு அருந்த மாலையில் ஒரு காஃபி என்று வளர்ந்தது.
எந்த வழிசலும், விரசமும் இல்லாது, ஆரோக்கியமான பொதுவான பேச்சுகள்தான் இருவரிடத்திலும். அவள் குடும்பம் பற்றியும், அவன் குடும்பம் பற்றியும் கூட பேசினார்கள். அப்படித்தான் அவன் பூர்வீகம் கன்யாகுமரி என்று தெரியும். சென்னைவிட்டு அதிகம் செல்லாதவளுக்கு குமரி அவன் பார்வையில் அறிமுகமானது. இங்கே ஹாஸ்டலில் தங்கி படிக்கின்றான்.
பேச்சினூடே எப்போதாவது குமரி வழக்கு தட்டுப்படும். “பி.ஜி இங்க படிக்கவும், நிறைய சென்னை வார்த்தைங்களுக்கு பழகிட்டேன். ஆனாலும் உங்கூட பேசும்போது மிஸ் ஆகுது”, என்று தலை சாய்த்து இதழ் மடித்து சிரிக்கும்போது சற்றே தடுமாறுவாள். பெண்களுக்கு இருக்கவேண்டிய அடர்ந்த நீள இமை முடிகள் அவனுக்கு இருப்பது பற்றி சற்று பொறாமையாகவே இவள் பேச,
“ச்சு… நீ வேற. எங்கம்மாவோட கண்ணு எனக்கு. ஊர்ல பசங்க இதுக்கு எத்தனை கேலி பண்ணுவாங்க தெரியுமா?”, சலித்துக்கொள்ளுவான்.
வீட்டிலிருந்து அவள் எடுத்து வரும் உணவு பெரும்பாலும் அவனுக்கு தந்துவிட்டு அவன் வாங்கும் கான்டீன் உணவை அவள் உண்ணுவாள். “மிச்ச இரண்டு நேரம் நான் வீட்டு சாப்பாடுதான சாப்பிடறேன் ஜோ. நீ சாப்பிடு. ஃப்ரெண்ட்ஸ்க்கு குடுக்கணும்மான்னு சொன்னதுல, இன்னிக்கு அம்மா கொஞ்சம் அதிகம் வெச்சிருக்காங்க.”
“யாருன்னு சொன்னியா?”, புருவம் உயர்த்த, அதில் புன்னகைத்தவள், “அவ்வளவு சுதந்திரம் எல்லாம் கிடையாது ஜோ. அவங்க கேட்கலை நானும் சொல்லலை”, என்று பதிலுரைத்தாள்.
“என்ன எழுதியிருக்காங்க பசங்கன்னு இப்படி சிரிச்சிட்டு இருக்க கீர்த்தி”, ஷீத்தல் கேட்கவும்தான் அரை மணி நேரமாக ஒரு பேப்பர் கூட திருத்தாது அமர்ந்திருந்ததே உரைத்தது.
அடுத்த மூன்று நாட்களுமே தடுமாற்றமாகவே சென்றது கீர்த்திக்கு. ஜோ எதாவது எதிர்கொண்டு பேசுவான் என்ற எதிர்பார்ப்பே பொய்யாகிப் போனது. ஆசிரியர்கள் கூடும் சிறு பொழுதுகளிலும் மற்றவர்களுடன் பேசுவது கூட இவளிடம் இல்லை. தன்னுள் சுருங்கிக்கொண்டாள் கீர்த்தி.
வெள்ளி மாலை தன் குடியிருப்பு வளாகத்துக்கு செல்லும் வழியில் திடுமென்று வழி மறித்து நின்றான். அதிர்ந்து நின்றவள், அவன் முகத்தைப் பார்க்க,
“என்ன ஏதுன்னு கேட்கக்கூட தோணலைல்ல உனக்கு?“ , அவன் முறைக்க இவள் முழித்தாள்.
“ஒரு வாட்ஸப் மெசேஜ் போட்டு ப்ரேக்கப் சொல்லிட்டு போயிட்ட, இத்தனை வருஷம் கழிச்சு பார்க்கற, எப்படியிருக்கன்னு கூட விசாரிக்க முடியலை?” அவன் கோபத்தை மறைக்காமல் வார்த்தைகளை கடித்து துப்ப,
“இல்ல…நீதான் யாரோ மாதிரி பார்த்த, மேடம் டெய்லர் இன்ட்ரோ குடுத்தப்போ எந்த ஊர்னு கேட்ட. ஒரு வேளை என் கூட பேச பிடிக்கலையோன்னு நினைச்சு…” அவன் பார்வையில் அவள் குரல் தேய்ந்து நின்றது.
“நாளைக்கு வெளிய மீட் பண்ணலாம். உன் கூட பேசணும்”, அதிகாரமாய் வந்தது ஜோசஃபின் குரல்.
அதில் நிமிர்ந்து நின்றவள் மோவாயை சற்றே தூக்கி, “நாளைக்கு எனக்கு கிளாஸ் போகணும்”
“என்ன கிளாஸ் எடுக்கற? எப்போ?”
அவன் பார்வையை சந்தித்தவள், “எடுக்கலை, கத்துக்கறேன். செல்ஃப் டிஃபென்ஸ்.பதினொன்னுக்கு முடியும்.”
அவள் பதிலில் ஆச்சரிய பாவனை காட்டியவன், “ஹ்ம்ம்… எங்க வரணும் நான்?” என்று அவனுக்கு வேண்டியதில் குறியாய் நின்றான்.
“அல் கராமா வாங்க”, என்று அங்கே இருக்கும் ஒரு உணவு விடுதியின் பெயரைச் சொல்லி நேரமும் சொன்னாள்.
மறு நாள் குறித்த நேரத்திற்கு படபடப்பை அடக்கி முகத்தை இலகுவாக்கி அவனை சந்திக்கச் சென்றாள். அவளிற்கு முன்னரே வந்து காத்திருந்தான்.
மதிய உணவிற்கு ஆர்டர் கொடுத்து முடித்த பின்னும் ஜோ அமைதியாகவே இருக்க, அவளே பேச்சை தொடங்கினாள். “இங்க எப்படி வந்தீங்க? அதுவும் பி.எச்.டி முடிச்சிட்டு இப்படி ஸ்கூல்ல?”
அவளையே இமைக்காது பார்த்தான், “எப்படிறீ? ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்கமுடியுது உனக்கு?”
“…”
“நான் ஒன்னுமே இல்லையா உனக்கு? அத்தனை பேசினோமே வாழ்க்கையை பத்தி. ஒரே ஒரு வாட்ஸ்-அப் மெசேஜ்ல முடிச்சிட்டு சுத்தமா முறிச்சிட்டு போக எப்படி மனசு வந்துச்சு?”
கண்கள் நீர் கோர்க்க கீர்த்தியின் தலை மட்டுமே இட வலமாக ஆடியது.
அவன் கைபேசியை எடுத்தவன், அவள் அனுப்பியிருந்த கடைசி மெசேஜை திறந்து, “இது எனக்கு புரியலை. அர்த்தம் சொல்லு”, என்று அவள் புறம் தள்ளினான்.
“சாரி…சாரி ஜோ. நான் உனக்கு சரியில்லை. வேணாம். முடிச்சிக்கலாம். நீ என்னை தேடாத. உன் வாழ்க்கையை பார்த்துக்கோ. நாம பிரியறதுதான் ஒரே வழி. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. ஐ’ம் சாரி”
அன்று அதை அனுப்பியபோது இருந்த வலியும் சூழலும் நினைத்து இன்னும் அவள் முகம் கசங்கியது.
கைகள் கொண்டு முகத்தை அழுந்தத் துடைத்து நிமிர்ந்தவள் கண்டது அவனது வேதனை வலியும் நிறைந்த கண்களைத்தான்.
உதட்டினை அழுந்தக் கடித்து வலியை முழுங்கியவள், ஒரு சிறு மூச்சினை இழுத்து, வரவழைத்த லேசான முறுவலோடு, “அதுதான் தெளிவா இருக்கே. இன்னும் என்ன சொல்ல?”
அதில் நிமிர்ந்து அமர்ந்தவன், விரல்களை மேசை மீது கோர்த்து, பிரித்தபடியே, “பிரியறதுதான் ஒரே வழின்னு சொன்னியே, யாரோட நிர்பந்தம்?”, இலகுவாகவே கேட்டான்.
“அது…வீட்டுல நம்ம பத்தி சொல்ல வேண்டிய கட்டாயம். எதிர்பார்த்தபடியே வேற மதம்னு ஒத்துக்கலை.” தோள்குலுக்கினாள்.
“ம்ம்… என்ன கட்டாயம்? உனக்கு ஒரு வேலை கிடைச்சு, நான் பி.எச்.டி முடிக்கற வரை எதுவும் சொல்ல வேணாம்னுதான பிளான்?”
“ஆமாம்…ஆனா ஒரு வரன் கொண்டு வந்தாங்க. அதனால சொல்ல வேண்டியதா போச்சு”, அதுவரை உண்மைதான். இவள் வீட்டில் சொல்லியதும் பெற்றோர் மறுத்து திட்டியதும் அழுது ஆர்பாட்டம் செய்ததும் கீர்த்திக்கு எப்போதோ நடந்தது போலிருந்தது.
“ஏன்? உங்க அப்பா தற்கொலை பண்ணிக்கறதா மிரட்டினாரா? அப்படி பார்த்தாக்கூட உனக்கு இன்னேரம் கல்யாணம் ஆகியிருக்கணுமே? ஏன் பண்ணலை?”, விசாரணையாகவே வந்தது கேள்வி.
“அதுதான் தெரியணும். என்ன ஆச்சுன்னு குடும்பத்தோட காலி பண்ணிட்டு போனீங்க? உனக்கு வேலை கிடைச்சு வேற ஊருக்கு போனதா சொன்னாங்களே பக்கத்து வீட்ல?”
“ஓ.. வீட்டுக்கு வந்திருந்தியா?” அவள் கேட்கவும் அற்பமாக ஒரு பார்வை பார்த்தவன்,
“உன் நம்பர் வேலை செய்யலை. ஜென்ரல் ஆஃபீஸ்ல கிளார்க்கை கரெக்ட் பண்ணி அட்ரெஸ் எடுத்து, வந்தேன். ஆனா அதுக்கப்பறம் எங்க போனன்றதுதான் தெரியலை. உன் ஃப்ரெண்ட்ஸ் யாருக்கும் ஒரு வார்த்தை சொல்லலை. அப்படி என்ன ஆச்சு?”
“என்ன? ஒன்னும் ஆகலை? வேலை கிடைச்சு தனியா போக விடாம அப்பாம்மா கூடவே வந்தாங்க.”
“கல்யாணம் பேசினாங்கன்னு சொன்ன, இப்ப வேலை கிடைச்சு குடும்பமா வேற ஊருக்கு போனீங்கன்னு சொல்ற? அப்ப அந்த வரன் என்னாச்சு?”
“முடிஞ்சு போனதை இப்ப எதுக்கு கேட்கற ஜோ?”, மீண்டும் கேட்க,
“தொலைச்சு கட்டிட்டேன்! ஒழுங்கா பதில் சொல்லு. இத்தனை ஆயிரம் மைல் உன்னை தேடி வந்திருக்கேன். உன் மழுப்பலைக் கேட்டு தலையாட்டிட்டு போவேன்னு நினைச்சியா?”
ஜோசஃப் உறும, என்ன சொல்வது எப்படி சொல்வது என்று யோசித்தாள். மறைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. கிட்டதட்ட இரண்டு வருடங்கள் வாழ்வில் இணைவோம் என்று காதலித்த காலம். அவன் சொன்னது போல இத்தனை வருடம் கழித்தும், இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் என்றால் ஒழுங்கான பதிலை சொல்ல அவளுக்கும் கடமை இருக்கிறது.
இதனால் அவன் வாழ்க்கை தேங்கியிருந்தால், தெளிவித்து அனுப்புவது அவள் செய்த துரோகத்திற்கு ஒரு சிறு பிராயசித்தமாக இருக்கும். எப்படியும் தெரிந்த பின் விலகிச் செல்லத்தான் போகிறான். இல்லையென்றாலும் அனுப்பி வைக்கத்தான் போகிறாள். அதற்கு மனதை திடப்படுத்திக்கொண்டுதானே வந்திருந்தாள். மறக்க விரும்பும் ரணத்தையெல்லாம் மீண்டும் கிளறவேண்டுமே என்றுதான் தயக்கம். அவனுக்காக அதுகூட முடியாதா என்ன?