அத்தியாயம் – 1 

பரபரப்பான துபாய் நகரம் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வேறுபட்டிருக்கும். ஆடைக் கொள்கையிலிருந்து, கொண்டாட்டக் களிப்புகள்வரை உலகமயமாக்கலின் முழு பரிணாமமும் இங்கே காணமுடியும். வானாளாவிய உலக வர்த்தக கட்டிடங்களுக்கிடையே அழகிய சிறு மசூதிகள் இஸ்லாமிய நாடுதான் இது மறந்துவிடாதீர்கள் என்று ஞாபகப்படுத்தும். 

பலதரப்பட்ட மக்கள், மொழிகள், பண்பாடுகள் இயைந்து இணைந்து பாலைவனத்தில் உருவாக்கியிருக்கும் ஒரு வைரம். ஐக்கிய அமீரகத்தின் அரசர் ஷேக் மொஹமது பின் ரஷீத் , அவர் வாரிசு ஷேக் ரஷீத் பின் சயீத் போன்றவர்களின் தீர்க்க தரிசனமும், விடா முயற்சியும், கட்டுப்பாடுகளும் முக்கியமாக பலகோடி பெட்ரோ டாலர்களும் துபாய் நகரத்தை மட்டுமல்லாது அதனோடு இணைந்து பல நகரங்களின் வளர்ச்சிக்கும் வித்திட்டது. அரசியல் மேடைகளில் எவ்வளவு எளிதாக சென்னையை அடுத்த துபாய் ஆக்கிடுவேன் சிங்கப்பூராக மாற்றிக் காட்டுவேன் என்று சூளுரைக்கிறார்கள்? 

துபாய் மெட்ரோ ரயிலில் பெண்களுக்கான தனிப் பெட்டி, குடும்பங்களுக்கான பெட்டிகள், ஆண்களுக்கான பெட்டிகள் என்று தனித் தனியாக வரையறுத்திருப்பார்கள். ஊர்ந்து நகர்ந்து ஒரு வழியாக தான் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை அடைந்த ரயிலின் பெண்கள் பெட்டியிலிருந்த கீர்த்தி, துபாய்  நகரத்தினைப் பற்றிய சிந்தனையை விடுத்து, அவள் வேலைபார்க்கும் பள்ளியின் குடியிருப்பு மனைக்கு அழைத்துச் செல்லும் ஷட்டில் பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள். 

துபாயின் குளிர் காலமாதலால் சுற்றுலாத் தளமான துபாய் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஆட்கள் நடமாட்டம் சற்றேனும் தெருக்களில் இருக்கிறது. வெயில் ஏற ஏற, தெருக்களில் வண்டிகள் மட்டும்தான் பயணப்படும். விடுமுறையான சனிக்கிழமையில் காலையில் கிளம்பியவள் நிதானமாக துபாய் மெரினா சென்று சுற்றிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தாள்.  புகழ்பெற்ற துபாய் பள்ளியொன்றில் வேதியல் பாடமெடுக்கும் கீர்த்திக்கு வளாகத்திலேயே தங்குவதற்கு ஒரு விடுதியும் தந்துள்ளது பள்ளி நிர்வாகம். சமையல், ஒற்றைப் படுக்கையுடன் கூடிய சிறிய அப்பார்ட்மென்ட் என்றாலும் தனியாக இருப்பதில் கீர்த்திக்கு நிம்மதி. 

வந்து சேர்ந்த அரை மணி நேரத்தில்  அம்மாவிடமிருந்து அழைப்பு. “ம்ப்ச்..” என்ற சலிப்புடன் எடுத்தாள். 

“சொல்லுமா…” 

“நல்லாருக்கியா கீர்த்திமா…” , வழக்கமான விசாரிப்பு. அடுத்து இன்று என்ன செய்தாய், என்ன உண்டாய் என்று விசாரணை வரும். 

எல்லாவற்றுக்குமாய் சேர்த்து பதிலளித்தாள். 

“சரிடி… இன்னிக்கு ப்ரீத்தி, மாப்பிள்ளை குழந்தையோட வந்திருந்தா”,என்ற அம்மா சரோஜினியின் தகவலில் பல்லைக்கடித்தாள். இத்தனைக்கு பிறகும் அவனை மாப்பிள்ளை என்று சொல்ல எப்படி வாய் வருகிறதோ? 

“…” 

“ஹர்ஷி குட்டி அத்தனை அழகுடி. பேச்சு வர ஆரம்பிச்சிடுச்சா, சொல்லிக்கொடுத்தா கப்புனு பிடிச்சி திரும்ப அழகா சொல்றா”, ஒன்னரை வயது பேத்தியின் பெருமை பேசினார். 

“…” 

“ஹலோ..”, பதில் வராததை உணர்ந்து சரோஜினி அழைக்க, 

“சொல்லு” என்றாள் கீர்த்தி. 

“என்னடி…”, குறையாகக் கேட்டார் சரோஜினி. 

“ஷ்….” சத்தமாக ஒரு மூச்சினை விடுத்தவள், “நீ பேசின, நான் கேட்டுட்டு இருக்கேன். என்ன சொல்லணும்?” 

“எப்படி திரும்ப வருவ? இந்த வருஷம் லீவுக்கு வருவல்ல?”, பேச்சை மாற்றினார். 

“எதுக்கு?” 

“கீர்த்திமா… ப்ரீத்தி ஒரு வரன் எடுத்துட்டு வந்திருந்தா..” 

“வேணாம்”, அதற்கு மேல் பேச விடாமல் முடித்தாள்.  

“வயசு ஏறிட்டே போகுதுடி உனக்கும். எப்ப சின்னவளுக்கு பண்ணப்போறீங்கன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த வரன் நல்ல இடம். பையன் பெங்களூருல ஐ.டில வேலை பார்க்கறான்.” 

“ம்ம்…  நீ என்ன பண்ணு, அவங்ககிட்ட எனக்கு நடந்ததெல்லாம் சொல்லு. அதுக்கு அப்பறமும் பரவாயில்லைன்னு வந்தா பார்த்துக்கலாம்.” 

“அதெல்லாம் சொல்ல வேணாங்கறாடி ப்ரீத்தி” 

“உங்களுக்குக்கென்ன போச்சு. கல்யாணத்தை முடிச்சு கூட்டிவிட்டுட்டு வந்துடுவீங்க? அதுக்கப்பறம் நாந்தான சமாளிக்கணும்?   நடந்தது எல்லாம் நீயும் அவளும் மறந்துடலாம். அனுபவிச்ச என்னால இன்னும் மறக்கமுடியலைம்மா. எனக்கு கல்யாணம் பண்ணிக்க நினைக்கும்போதே அருக்களிக்குது உடம்பு.” 

“கீர்த்தி…”, வலியோடு வந்தது அன்னையின் குரல். 

“எனக்கு வரன் தேடறதை நிப்பாட்டிட்டு அவ குடும்பத்தை பாக்கச் சொல்லு. லீவுக்கெல்லாம் வரமாதிரி இல்லை. இன்னும் இரண்டு வருஷம் இங்கேயே இருக்க கண்டிப்பா கான்ட்ராக்ட் கிடைச்சிடும்.” 

அந்தப்புறத்திலிருந்து திகைப்பு மட்டுமே பதிலாக வந்தது. 

“ம்மா… நாளைக்கு கிளாஸ் எடுக்க கொஞ்சம் ரெடி பண்ணணும்.  தேவையில்லாம பேசி என் மூட கெடுக்காதே.” , இணைப்பை துண்டித்தாள்.  

ஒரு வாரம் போல் வழமையாக சென்றது. அன்று வகுப்பு முடித்து, பெண்கள் ஓய்வறைக்கு திரும்பினாள் கீர்த்தி. தோழியும் சக வகுப்பாசிரியையுமான ஷீத்தல் பெரிய புன்னகயோடு வரவேற்றாள். 

“ஏய் கீர்த்தி வா வா உனக்காகத்தான் வெயிட்டிங்!” 

“என்ன ஷீத்து? வரவேற்பெல்லாம் பலமா இருக்கு!” 

“இந்தப் பாலைவனத்துல நாம பார்க்கறதுக்கு புதுசா ஒரு ஆதாமை இறக்கியிருக்காரு கர்த்தர்” 

“ட்ரெஸ் போட்டுதான?”, கீர்த்தியின் கலாய்ப்பில் முறைத்த ஷீத்தல், 

“ம்ம்… போட்டுத்தான். ஆனா இல்லாமப் பார்க்க யாருக்கு குடுத்து வெச்சிருக்கோ?”, என்று ஏக்கப்பட, காதைப் பொத்திய கீர்த்தி, “ச்சை.. உங்கிட்ட போய் வாய் குடுத்த என்னை சொல்லணும்!” 

“அது…”, என்று போட்டிருந்த சல்வாரின் காலரை ஏற்றிவிட்ட ஷீத்தல், 

“வழுக்கை விழுந்த வெள்ளைக்கார கிழம்தான் வரும்னு பேசிகிட்டிருந்தோம்ல, ஆனா வந்திருக்கறது நம்ம ஊர்காரராம்டி. அதுவும் முப்பது வயசுதானாம்.” ரகசியம் பேசினாள். 

“எது புது கணக்கு வாத்தி வரப்போறதா சொன்னியே அவரா?” 

“ம்ம். அதேதான். லஞ்ச் முடிஞ்சப்பறம் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்துவாங்களாம்.” 

“பார்த்துட்டு முடிவு பண்ணு ஷீத்து. அதுக்குள்ள கற்பனை குதிரையை ஓட்டாத. முப்பதுக்கே நம்ம ஊர் ஆளுங்களுக்கும் முன் மண்டை பெருசாகிடுது.” கீர்த்தி புன்னகைத்து ஷீத்தலை புகைய விட்டாள். 

இத்தனை பேசும் ஷீத்தல் விவசாயக் குடும்பத்தில் பிறந்த திருநெல்வேலிக்காரி. மூத்த பெண்ணாக இங்கே வந்து சம்பாதித்து, ஒரு தங்கையை கரையேற்றி, தம்பி படிப்பு, பெற்றோர் பராமரிப்பு, இவைகளுக்கிடையே தன் திருமணத்திற்கும் இழுத்துப் பிடித்து சேர்த்துக்கொண்டிருக்கிறாள். 

“நான் ஒரு பத்து நிமிஷம் கலர் கலரா கனவு கண்டுடக் கூடாதே!”, சிலுப்பிக்கொண்டு சென்றவளை சமாதானம் செய்தபடியே பின்தொடர்ந்தாள் கீர்த்தி. 

மதிய உணவு முடிந்து, அனைவரும் மீட்டிங் ரூமில் ஆஜராக, சற்று நேர சலசலப்பிற்கு பிறகு பள்ளியின் முதல்வர் மேடம் டெய்லருடன் வந்தவனைப் பார்த்து “ச்சோ.. முடி இருக்குடி..லேசா சுருட்ட முடி”, கையை பிடித்து அவள் கவனம் ஈர்த்தாள் ஷீத்தல். 

உள்ளே வந்தவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் நிலைகுத்தி நின்றது. இமைக்க இயலாது பார்த்துக்கொண்டிருந்தாள். ‘ஜோ…இங்கயா?…எப்படி?’,  நெஞ்சு படபடத்ததில், மூச்சு தப்பியது. இருபது பேர் இருந்த அறை இப்போது மூச்சை முட்டுவது போல இருந்தது. 

அவன் பார்வை அவளை தொட்டு ஒரு சில நொடிகள் தாமதித்துச் சென்றது. “ஜோசஃப் ஆரொக்யராஜ்” என்று சற்றே அவன் தந்தை பெயரை சொதப்பிவிட்டு “ “நம் புது கணக்கு ஆசிரியர் மற்றும் பள்ளியின் கணக்கு துறை பொறுப்பாளர், பி.எச்.டி பட்டம் பெற்று மூன்றாண்டுகளாக ஆசிரியர் பணியில் இருந்தவர்” என்று கூறி இங்கே பணியாற்ற வந்திருப்பது பற்றிய மகிழ்ச்சியை ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டு ஒவ்வொருவராக அறிமுகப்படுத்த ஆரம்பித்தார். 

“ஓ… முடிச்சிட்டானா.. சூப்பர்” , மகிழ்ந்தது கீர்த்தியின் மனம். அதே நேரம், ‘எதுக்கு காலேஜ்ல வேலைக்கு போகாம ஸ்கூலுக்கு டீச்சரா வரணும்?’ என்று யோசனை சென்றது. 

அருகேயிருந்த முதல்வர் சொல்வதை கவனமாக ஒரு சிறு புன்னகையுடன் கேட்டுக்கொண்டவன், எதிரில் இருந்த கணிப்பொறி ஆசிரியர் வில்லியம்ஸிடம் கைகொடுத்து பேசினான். அடுத்து, அடுத்து என்று அறிமுகப்படலம் தொடர்ந்து, இதோ ஷீத்தலுக்கு அருகில் வந்திருந்தார்கள். 

“அவர் பயாலஜி டீச்சர் ஷீத்தல் அண்ட் கெமிஸ்ட்ரி டீச்சர் கீர்த்தி.  போத் ஆர் ஃப்ரம் யுவர் ஸ்டேட் ஜோ”, என்று சொல்ல, இரு கரம் கூப்பி வணக்கம் வைத்தான். 

எங்கே என்று ஷீத்தலிடம் கேட்க அவள் திருநெல்வேலி என்றாள். அடுத்து அவள்புறம் திரும்ப, ‘ஓஹ்… தெரியாது? ரைட்’ என்று நினைத்து, “சென்னை” என்று முடித்துக்கொண்டாள். 

அதோடு அவர்கள் நகர்ந்துவிட, மெல்ல தள்ளிச் சென்று நின்று கொண்டாள். “ஹே.. ப்ரவுன் ஐஸ் பார்த்தியா? ம்ம்…என்னைவிட கொஞ்சம் நிறமா இருக்காரு. நல்லவேளை ஆறடிக்கு வளராம சராசரி உயரம்தான், முக்கியமா தொப்பை இல்லை”, ஷீத்தல் அடுக்கினாள். அவள் கவலை அவளுக்கு. ஐந்தடி இரண்டங்குலம் உயரத்தில் இருப்பவளுக்கு ஜோவின் ஐந்தடி ஏழு அங்குல உயரம் தோதாகத்தான் இருக்கும். ‘அதைவிட உன் உயரம் இன்னும் செட் ஆகுமே. மேல சாயும்போது கரெக்டா அவன் உதடு நெத்திக்கு வருமே’, என்றது மனது. 

“அதுக்கான ரைட்ஸ் எதுவும் இல்லை உனக்கு. நினைப்பில் வை. அவனே தெரியாத மாதிரி போறான்” , என்று மனதை அடக்கியவள், 

“ஷீத்து…அடக்கிவாசி.”, என்று சிறுகுரலில் எச்சரித்தாள். 

“ம்ம்…தெரியும் தெரியும்… அனாலும் தமிழ், கிரிஸ்டியன் வேற… கொஞ்சம் சபலம் தட்டுதே கீர்த்தி, கத்தோலிக்கா இருப்பாரா?” 

ஆம் என்று தெரிந்தாலும், “இல்லைன்னா என்ன செய்வ?”, என்று கேட்டு வைத்தாள். 

“ம்ப்ச்… கனவை கலைச்சிட வேண்டியதுதான்.  இல்லாட்டா…அம்மா விளக்குமாத்தை எடுத்துக்கும்”, என்று சோகமாக சொல்லியபடியே அவளுடன் வெளியேறினாள். 

அடுத்து கீர்த்திக்கு வகுப்பு இல்லாததால், திருத்த வேண்டிய அசைன்மென்ட் பேப்பர் கட்டுடன் அமர்ந்து யோசிக்கையில்தான் ஒன்று விளங்கியது. ஜோவிற்கு அவளைக் கண்டு ஆச்சரியம் இல்லை. ஆக அவள் இங்கிருப்பதை தெரிந்துகொண்டுதான் வந்திருக்கிறான். மூன்றாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது அவனோடும், அவள் கல்லூரி நட்புகளுடனுமான தொடர்புகளை துண்டித்து. கைப்பேசி, வாட்சப் இணைப்பு முதல், வீடு வரை எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டபின், அதுவும் துபாய் வந்தபின் யாருடனும் பேசவே இல்லை. ஒரு வேளை என்னை அடையாளம் தெரியவில்லையா என்ற யோசனை சென்ற மறு நொடி, “நீ மறந்துட்டியா? மறக்க முடியுமா? நீ அவனுக்கு செஞ்சது நம்பிக்கை துரோகம்”, மனசாட்சி தலையில் கொட்டியது.