“அவன் உனக்கு ஹலோ சொன்னான்” என்ற தேசிகன் மனைவியை தீர்க்கமாக பார்த்தான்.

தன்விக்கு இஷ்டமில்லை என்றாலும், கணவனுக்காக, “ஹலோ முரளி” என்றாள்.

“சரி நான் வரேன்ண்ணா. வரேன் அண்ணி” என்று அவன் கிளம்ப பார்க்க,

“முரளி நில்லு. சாப்பிட்டு போ” என்றான் தேசிகன் கட்டளையாக.

“ண்ணா. எனக்கு பசிக்கலை” என்று அவன் மறுக்க,

“டேய் சாப்பிடாம வெளியே கால் எடுத்து வைச்ச பார்த்துக்கோ” என்று தேசிகன் அரட்ட,

“போறேன்ண்ணா” என்று முரளி டேபிளில் அமர, அத்தை அவனுக்கு நின்று பரிமாறினார்.

தேசிகன் மனைவியை அழைத்து கொண்டு அறைக்கு வந்தவன், “அவன்கிட்ட இப்படி நடந்துக்காத தன்வி” என்றான்.

“என்னை கடத்தினவருக்கு மாலை, மரியாதை பண்ண சொல்றீங்களா?”

“மாலை மரியாதை நீ பண்ணிட்ட? என்ன பார்க்கிற? நான் சொல்லித்தான் அவன் உன்னை கடத்தினான். நீ எனக்கு பண்ணத்தானே. அப்புறம் அவன்கிட்ட மட்டுமென்ன?” தேசிகன் கேட்க,

“உங்களுக்கு பண்ணது என்னோட இஷ்டம். அவர்கிட்ட நான் இப்படி இருக்கிறதும் என்னோட சுதந்திரம். நீங்க கேள்வி கேட்க கூடாது” என்றாள் தன்வி தீர்மானமாக.

“எனக்காக கூடவா?”

“உங்களுக்காக நான் பண்ண எவ்வளுவோ இருக்கு”

“அதோட இதையும் சேர்த்துக்கோடி. அரவிந்தன் எனக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முரளியும் எனக்கு முக்கியம். கத்தி எரிஞ்சவங்களை விட்டு, குத்தின கத்திகிட்ட கோவப்படாத”

“ஆக எனக்கு கத்திப்பட்டு வலி இருக்குன்னு உங்களுக்கு தெரியும்”

“வலிக்கு மருந்து போடத்தான் இப்போவரை முயற்சி பண்ணிட்டு இருக்கேன்” என்றான் தேசிகன்.

“வலி போனாலும் வடு மறையாது”

“தன்வி. தன்வி. நமக்குள்ள இருக்கிறது நமக்குள்ள மட்டும் தான். நீ என்னை என்னவேணா பண்ணு. அதுக்கான முழு உரிமையும் நான் உனக்கு ஆல்ரெடி கொடுத்துட்டேன். ப்ளீஸ் உன்னோட கோவத்தை முரளிகிட்ட காட்டாத”

“நான் முரளிகிட்ட ஜஸ்ட் சுஜா இல்லைன்னு சொல்ல மட்டும் தான் வந்தேன். ஆனா அவன் எனக்கு மயக்க மருந்து கொடுத்து”

“என்னை காலி பண்ணிட்டான் ராஸ்கல்” என்று தேசிகன் இடையிட்டு முடித்து வைத்தான்.

“என்ன, என்ன மீன் பண்றீங்க நீங்க?” என்று தன்வி அவன் நெஞ்சில் குத்த,

“இன்னும் கூட குத்திக்கோடி. ஆனா முரளிகிட்ட மட்டுமில்லை வேற யார்கிட்டேயும் முகம் காமிச்சிடாத. என்னால அதை ஏத்துக்க முடியாது.”

“காட்டினா என்ன பண்ணுவீங்க?” தன்வி வீம்புக்கென்றே கேட்டாள்.

“என்னோட கோவத்தை நீ தாங்க மாட்ட. வேறேதாவது தான் யோசிக்கணும்” என்றான் அவன் உண்மையாகவே.

“அப்போ என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னது எல்லாம் சும்மா இல்லை” தன்வி கேட்க,

“பிடிச்சா கோவப்பட கூடாதா? இதென்ன அராஜகம்?” என்ற தேசிகன் மனைவியை தன் நெஞ்சுக்கருகில் இழுத்து கொண்டான்.

“நாம பேசிட்டிருக்கோம்” என்று தன்வி முறைக்க,

“இல்லை. சண்டை போடுறோம். எனக்கு பிடிக்கலை. போதும் நிறுத்திக்கலாம்டி” என்றான் தேசிகன். தன்விக்கும் அதே எண்ணம் இருந்ததால், கணவனின் நெஞ்சிலே தன்னை தேற்றினாள்.

அன்று முழுதும் தேசிகன் வீட்டில் மனைவியுடனே இருக்க, மாலை இளையவர்களுக்கு அவர்களுடன் இணைந்து கொண்டனர். தேசிகனின் மாமா மகள், அவளும் கணவனுடன் வந்திருக்க, விருந்து அமர்களப்பட்டது.

பெரியவர்கள் சீக்கிரம் உறங்க சென்றுவிட, சிறியவர்களுக்கு தூக்கம் அண்டவில்லை.

தன்வி புதிதாக இணைந்திருக்க, அவளுக்கு பல கதைகளை சொல்வதும், மாற்றி மாற்றி கிண்டல் அடித்து கொள்வதுமாக இருந்தார்கள்.

தேசிகன் தான் அவர்களை எல்லாம் விரட்டிவிட்டு, மனைவியுடன் அறைக்கு வந்தான். தன்வியின் போன் அறையிலே இருந்திருக்க, விடுபட்ட அழைப்புகள் எக்கச்சக்கம்.

நடுஇரவாகிவிட, மறுநாள் அழைத்து கொள்ளலாம் என்று மெசேஜ்களுக்கு மட்டும் பதில் அளிக்க ஆரம்பித்தாள். தொழில் சம்மந்தப்பட்டதும் அதில் அடக்கம் என்பதால் பெண் அதில் மூழ்கிவிட, தேசிகனுக்குள்ளும் பல எண்ணங்கள்.

அதில் முதலாவது தன்வி. அவளுக்குள் இன்னமும் அந்த கோவம் இருப்பது, கணவனை அதிகமே யோசிக்க வைத்தது.

மறக்கவே மாட்டாளா?

முரளிகிட்ட என்ன கோவம்?

அவன் எனக்காக தானே பண்ணான்?

என்னை விட்டு, எங்க குடும்பத்தை விட்டு அவன்மேல் போய்?

சதாசிவத்தோட பொண்ணா இருந்துகிட்டு இவ்வளவு கூட இல்லைன்னா எப்படி?

ச்சு. இப்போ போய் ஏண்டா அவரை நினைக்கிற?

தூக்கத்துல வந்து உன்னை பயமுறுத்த போறார் பார்த்துக்கோ!

“ஏங்க என்னாச்சு?” என்று தன்வி கேட்க,

“எனக்கு விபூதி வைச்சிவிடு தன்வி. ப்ளீஸ்” என்ற கணவன் வேகமாக எழுந்தமர்ந்தான்.

“இதென்ன?” தன்விக்கு புதிதாக இருக்க, கணவன் கேட்டுவிட்டானே என்று சாமி அறைக்கு சென்று எடுத்து வந்து கணவனுக்கு வைத்துவிட்டாள் பெண்.

“இப்போதான் நிம்மதியா இருக்கு” என்று தேசிகன் ஆசுவாசம் கொள்ள,

“அப்படி என்னங்க?” என்று புரியாமல் பார்த்தாள் தன்வி.

“இல்லை உன் அப்பாவை நினைச்சுட்டேன். அதான் கனவுல வந்துட கூடாதுன்னு. ஹேய். ஹேய் அடிக்காதடி. ஆஹ். வேணாம் தன்வி” என்று தேசிகன் அலற, அலற மனைவி வெளுத்தாள்.

“எப்போ பாரு அவரை சீண்டிகிட்டு”

“சரி உன்னையே சீண்டுறேன். இனி அவரை நினைக்கவே மாட்டேன். விடுடி” என்று அவளை அடக்கி, தனக்குள் கொண்டு வந்த பின்னே தேசிகனுக்கான சேதாரம் நின்றது.

மறுநாள் சதாசிவம் நேரிலே வந்து நிற்க, “விபூதி வேலிடிட்டி நைட்டுக்கு மட்டும் தானா?” என்று மனைவியிடம் கிசுகிசுத்தான் தேசிகன்.

தன்விக்கு கோவம் உச்சிக்கு ஏற, தேசிகனின் இடையில் கிள்ளி வைத்தாள்.

“ஸ்ஸ்” என்று வலியில் வாயை குவித்து ஊதியவன், இடையை தேய்க்க முடியாமல் நெளிந்தான்.

“என்ன தேசிகா?” என்று மாமா கேட்க,

“ஒன்னுமில்லை மாமா” என்றவன், சதாசிவம் உணவுண்டு வரவும் அவர்முன் நின்றான்.

“ரெஸ்ட் எடுக்கிறீங்களாப்பா” என்று தன்வி கேட்க,

“இருக்கட்டும்டா” என்றார் தந்தை.

அவரின் முகத்தில் கூடுதல் ஒளி தெரிய மகளுக்கு குழப்பம்.

தந்தை வருவதாக எந்த தகவலும் இல்லை. காலை இவர்கள் உணவு முடித்த நேரம், சதாசிவம் வந்து நின்றார்.

“வாங்கப்பா” என்று முகம் மலர தன்வி அவரை வரவேற்க, மகளை தோளோடு அணைத்து கொண்டார் தந்தை.

“நைட் கூப்பிட்டேன்டா உன்னை” என்று சதாசிவம் சொல்ல,

‘வரேன்னு சொல்லத்தான் அத்தனை முறை கூப்பிட்டாரோ’

“போன் ரூம்லே இருந்ததுப்பா” என்றாள் மகள்.

வீட்டில் உள்ள மற்றவர்களும், “வாங்க. வாங்க” என்று அவரை வரவேற்று, உணவு பரிமாற சதாசிவமும் மறுப்பில்லாமல் சாப்பிட்டார்.

‘மனுஷன் ரொம்ப ஜாலியா இருக்கார், ரைட் எதோ வில்லங்கம் தான்’ மருமகன் தயாராகி கொண்டான்.

“இங்க பாருடி. எதுவா இருந்தாலும் என்கூடவே நின்னு சண்டை போடணும். உன் அப்பாவோட பொட்டியை கட்டிடாத சரியா. எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு, உன் பின்னாடி அலைய முடியாது.” என்று மனைவிக்கும் சொல்லி வைக்க,

“நல்லதே நினைக்க மாட்டிங்களா” என்று தன்வி கணவனை கடிந்து கொண்டாள்.

“நினைச்சுட்டாலும்” என்று தேசிகன் நொடிக்க,

“க்கும்” என்றார் மாமனார்.

“தன்விக்கு நாங்க செய்ய வேண்டிய சீர் எல்லாம் நின்னு போச்சு. விருந்து வைக்கணும்”

‘இவர் விருந்து யாருக்கு வேணும்?’ தேசிகன் முகத்தை சாதாரணமாக வைக்க போராடினான்.

தங்கள் வீட்டிற்க்கு வந்திருக்கிறார் என்ற கட்டுப்பாடு அவனுக்குள் அதிகமே இருந்தது.

“இது உங்களுக்காக” என்று ஒரு அக்ரீமெண்டை எடுத்து மருமகனிடம் கொடுத்தார் சதாசிவம்.

“இவருக்கும் எனக்கும் டிவோர்ஸ் அப்ளை பண்ணிட்டாரா என்ன?” என்று முனகி அதை வாங்கினான் தேசிகன்.

சதாசிவத்திற்கு ஏதோ எல்லாவற்றையும் சரி செய்துவிட்டார் போல் ஓர் நிமிர்வு!

“என்னங்க அது?” என்று தன்வி கேட்க,

தேசிகனோ கட்டுப்பாட்டை தகர்த்து, சட்டென்று பாய்ந்து மாமனாரை அணைத்திருந்தான்.

“ஆஆஹ்ஹ்” என்று மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டது.

தேசிகன் சந்தோஷப்படுவான், மகள் கோவம் போயிடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மனிதர், தேசிகனின் அணைப்பில், ‘அதுக்காக இந்தளவு இல்லைப்பா’ என்று சிலை போலவே நின்றுவிட்டார்.

தன்விக்கு மட்டும் ஏதோ சந்தேகமாக இருக்க, “ஏங்க?” என்று அவன் தோள் தொட்டாள்.

“விட சொல்லு தன்வி” என்று சதாசிவம் வேறு சொல்ல,

“விட்டா உங்கமேல பாய்ஞ்சிடுவேன். பரவாயில்லையா?” என்றான் மருமகன்.

“பாய்ஞ்சிடுவாரா? என்ன தன்வி இது?” என்று சதாசிவம் முழிக்க,

“அவ்வளவு கடுப்புல இருக்கேன். உன் அப்பாவை பேசாம இருக்க சொல்லு” என்ற மருமகன் வலிமையில், மனிதர் இயந்திரத்திற்குள் சிக்கிய கரும்பு சக்கை போலானார்.