ரவு-3

“சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் ” என்று சமையல் அறையில் போனில் கத்த சஷ்டி ஒலித்துக் கொண்டிருக்க, அங்கு பாலில் ஏலக்காய் தட்டிப் போட்டபடி பால் பொங்குவதற்கு ஆர்வமாக காத்திருந்தார் மாணிக்கம்.

அவர் தோற்றத்துக்கும் சமையல் அறைக்கும் சம்பந்தமே இருக்காத வகையில் தான் இருந்தார் அவர். பார்க்க கம்பீரமாக, நல்ல உயரத்தில், பெரிய மீசையுடன் இருந்தவரை முதலில் பார்ப்பவர் பயந்து தள்ளித்தான் போக நினைப்பார். அவருக்கு வயது ஆகிவிட்டது என்பதை காட்டும் விதமாக ஆங்கங்கே எட்டிப் பார்க்கும் நரையை வைத்தே கண்டுகொள்ள முடியும். இப்படி இருப்பவர் தான் சமையல் அறையில் கண்ணில் ஆர்வம் பொங்க பாலை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பாலும் பொங்கிக் கீழே ஊற்றிவிட, அது கீழேக்கே பார்த்துப் பொங்கி ஊற்றியிருக்கிறதா என்று எட்டிப் பார்த்து உறுதிப்படுத்திவிட்டு மகிழ்ந்த முகத்துடன் பாலில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து, முதலில் சமையல் அறை திண்டில் அருகில் டேபிளில் வைக்கப்பட்ட சாமி படத்தின் முன் வைத்து விளக்கு ஏற்றி மனதார வேண்டிக்கொண்டு நெற்றியில் பட்டையாக திருநீரை வைத்துக்கொண்டார்.

பின் மீதம் இருக்கும் பாலை சிறு சிறு பேப்பர் கிளாசில் ஊற்றி தட்டில் அடுக்கி அங்கு பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்த பசங்களுக்குக் கொடுத்துவிட்டு தன் மகனைக் கண்களால் தேடியபடி அருகில் இருந்த அறைக்குள் செல்ல அங்கு அவர் மகனுக்குப் பதிலாக கிருபா தான் இருந்தான். அவன் மாணிக்கத்தைப் பார்த்ததும் புன்னகை முகத்துடன் பாலை எடுத்தபடி “ என்னப்பா உங்க ஸ்பெஷல் டீயைக் காணோம் “ என்று கேட்டவாறு பாலைக் குடிக்க

மாணிக்கம் “ வீட்டுக்குப் புதுசா வந்திருக்கோம் பால் தான் முதல்ல காய்ச்சனும் தம்பி வேணா ஈவினிங்  நான் டீ போட்டுத் தரேன் தம்பி “

“ ஈவினிங் கண்டிப்பா டீ வேனும் ப்பா“ என்று பாலைக் குடித்தவனைப் பார்த்து

“ ஆரி எங்க தம்பி “ என்று ரூமைச் சுற்றிப் பார்க்க ஆரியன் பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். அவனைப் பார்த்து மாணிக்கம் சிரிக்க ஆர்யன் தலையைக் குனிந்தபடி அவரிடம் இருந்து பாலை எடுத்துக்கொண்டு

 “ நீங்க எந்தப் பொருளையும் தூக்காதீங்க பசங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க எதை எங்கே வைக்கணும்னு சொன்ன போதும் மதியம் சாப்பாடு ஆர்டர் பண்ணிருக்கேன் வேலை பார்க்கிற பசங்களுக்குச் சேர்த்து நீங்க இன்னைக்கு சமைக்க வேணாம் மேற்பார்வை மட்டும் பார்த்துக்கோங்க ஏதாவதுனா கால் பண்ணுங்க கிருபா இங்கதான் இருப்பான் நானும் முடிஞ்ச அளவு சீக்கிரம் வர ட்ரை பண்றேன் “ என்று ஒப்பித்துவிட்டு அவர் முகம் பார்க்காமல் பாலைக் குடிக்க அதற்கு மாணிக்கமும்

“சரி தம்பி பார்த்து போயிட்டு வாங்க“ என்று வெளியே சென்றுவிட்டார்.

 அவர் சென்றதும் கிருபா “டேய் ஆரி என்னடா இவ்வளவு வருஷம் ஆகுது இன்னும் அப்படியே இருந்தா என்ன அர்த்தம்? பாவம்டா அப்பா!“ அதைக் கேட்டு முகம் இறுக ஆதி “என் கில்ட் என்னை விட்டு போக மாட்டிக்கிதுடா மச்சான். அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் என்னாலதான்னு ஃபீல் ஆகுதுடா.“

 “நீ இப்படியே இருந்தா எப்படிடா? கொஞ்சம் கொஞ்சமாக மறக்க பாருடா. அப்பாவும் பாவம்லடா?“ அதைக் கேட்டு தலை ஆட்டியபடி அவன் ஆபீசுக்குக் கிளம்பினான்.

 இவர்கள் பேசியதை வெளியில் இருந்து கேட்ட மாணிக்கம் தன் மகனை எண்ணி வருந்தியவராக கிச்சன் மேடையில் வைத்திருந்த தன் மனைவி தெய்வானை படத்தைக் கண்களால் பார்த்து கைகளால் வருடியவர் மனதுக்குள்

 “தெய்வானை, நம்ம பையனை பாரும்மா. இன்னும் அதையே நினைச்சி அவனை அவனே வருத்திட்டு இருக்கான். நீதான் அவனை பழையபடி மாத்தணும்மா“ என்று தன் மனைவி படத்திற்கு அவளுக்குப் பிடித்த ஜாதி பூவை வைத்தபடி அவர் கண்கலங்கப் பார்த்தார்.

 பின் நினைவு வந்தவராக ஒரு பெரிய செம்பினை எடுத்து அதில் காய்ச்சின பாலை ஊற்றிக்கொண்டு வெளியே வர அதே சமயம் ஆரியன் மற்றும் கிருபாவும் வெளியே வந்தனர். வந்தவர்கள் மாணிக்கம் கையில் இருந்த செம்பின் அளவைப் பார்த்துவிட்டு மாணிக்கத்தை ஒரே நேரத்தில் பார்க்க அதற்கு அவரும் இருவரையும் என்ன என்பது போல பார்த்தார்.

கிருபா “என்ன அப்பா, செம்பு ரொம்பச் சின்னதா இருக்கு. யாருக்கு இது?“

“என்ன தம்பி கிண்டல் பண்றீங்களா? இது எதிர்வீட்டில இருக்கிறவங்களுக்கு எத்தனை பேர் இருக்கிறாங்கன்னு  தெரியல்லை. அதான்ப்பா, செம்பில எடுத்திட்டு போறேன்” என்று செல்லி செல்லும் தன் தந்தையைப் பார்த்து சலிப்பாகத் தலையை அசைத்த ஆரியன் கிருபாவிடம் திரும்பி, “என் தங்கச்சி எப்போ வருவாடா ?” என்று கேட்க அதற்கு அவன் “

உன் தங்கச்சிதான? பொறுமையா வருவா பசங்களை ஸ்கூலுக்குப் பேக்கப் பண்ணிட்டுப் பொறுமையாகத்தான் ஆரி வருவா.” அதைக் கேட்டுத் தலையை ஆட்டியபடி, “அப்போ நான் கிளம்புறேன்டா. அவ வந்தா சொல்லிடு” என்று கிளம்பிவிட்டான்.

வெளியே மாணிக்கம், மயூரி வீட்டுக் காலிங் பெல்லை அடித்தபடி நின்றுகொண்டிருந்தார். உள்ளே அப்போதுதான் நல்ல ஆழ்ந்த தூக்கத்துக்குள் சென்றுகொண்டிருந்த மயூரிக்கு வீட்டின் மணி சத்தம் கேட்க, முதலில் அதைக் கண்டுகொள்ளாமல் உறங்கியவள், பின் மீண்டும் அடிக்கும் சத்தம் கேட்டு கோபமாக எழுந்து, “எவன்டா மார்னிங் வந்து பெல் அடிக்கிறது?” என்று எழுந்து தூக்கக் கலக்கத்துடன் தள்ளாடியபடி எழுந்து வந்தாள்.

 வெளியே வந்த ஆரியன் தன் தந்தை எதிர்வீட்டுக் காலிங் பெல்லை அடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு, அவர் அருகே சென்று ஏதோ பேசப் போக, சரியாக அந்த நேரம் மயூரி கதவைத் திறந்தாள்.

 கதவைத் திறந்து நின்ற மயூரியை ஏற்ற இறக்கத்துடன் பார்த்த ஆரியன் ஒன்றும் பேசாமல் லிப்டில் சென்றுவிட்டான். மயூரியைப் பார்த்த மாணிக்கம் கூட ஒரு நொடி திகைத்துப் பின் சுதாரித்து “சாரிம்மா, தூங்கும் போது தொந்தரவு பண்ணிட்டேனா? சாரிம்மா” என்று மாணிக்கம் பேசியதைக் கேட்ட மயூரி

“பரவாயில்லை அங்கிள், சரி சொல்லுங்க என்ன வேணும்?” என்று அலட்சியமாகப் பேச,

அதற்கு அவர் “அது நாங்க இன்னைக்குத்தான் எதிர்த்த வீட்டுக்குக் குடி வந்திருக்கோம். அதான் பால் கொடுத்துட்டுப் போலாம்னு” என்று சிரித்த முகத்துடன் பால் செம்பை நீட்ட, அவர் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்துவிட்டு ஏதோ நினைவு வர, அதைக் கண் மூடி ஒதுக்கியவளாக அவர் தந்த பாலை வாங்கிக்கொண்டாள்.

பின் மாணிக்கம் “என் பேரு மாணிக்கம் ம்மா. நானும் என் பையன் மட்டும்தான் இருக்கோம். என் பையன் ஏதோ கம்பெனி வேலைக்குப் போறான். அவன் போய்ட்டா நான் மட்டும்தான் இருப்பேன். ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளும்மா ” என்று அவரைப் பற்றி அனைத்தையும் மயூரி கேட்காமல் சொன்னவரைப் பார்த்து சிரித்த மயூரி,

 “நான் மயூரி. இந்த வீட்டில நான் மட்டும்தான் இருக்கேன் நான் கேமிங் கம்பெனியில நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கிறேன். அதாவது இரவுதான் வேலைக்குப் போவேன்” என்று மயூரியும் அவளைப் பற்றி சொன்னாள். எப்போதும் தெரியாத நபரிடம் பேசக்கூட யோசிக்கும் மயூரி, இவரிடம் அனைத்தையும் சொன்னாள் என்று அவளுக்கே புரியவில்லை. அவர் சிரிப்பைப் பார்த்தும் ஏனோ சொல்லத் தோன்றியது. அவளும் சொல்லிவிட்டாள்.

மயூரி சொன்னதைக் கேட்ட மாணிக்கம் மீண்டும் அவளை எழுப்பியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். அவர் சென்றதும் கதவை மூடிவிட்டு கையில் இருந்த பாலைப் பார்த்த மயூரி “லைட்டா பசிச்ச மாதிரி இருந்துச்சு பரவாயில்லை பாலே கிடைச்சிருக்கு” என்று அதை நுகர்ந்து பார்க்க அதில் ஏலக்காய் மணம் வீச அதை ஒரே மூச்சில் முழுவதும் குடித்துவிட்டு செம்பை சின்க்கில் போட்டுவிட்டு அவள் அறைக்குச் சென்று எதேச்சையாகக் கண்ணாடியைப் பார்க்க அவள் தோற்றத்தை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டாள். தலைமுடி கலைந்து கண்ணில் போட்டிருந்த மஸ்காரா அழிந்து அவள் கண்ணைச் சுற்றி கருவளையம் போல இருக்க அவள் கண்களும் சிவந்திருந்தன. அவளைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட மயூரி “காலையில் டயட்ல மேக்கப் அழிக்க மறந்துட்டேன் போலயே இந்தக் கோலத்தில தான் அங்கிள் பார்த்தாரா அச்சோ மயூ” என்று முகத்தில் கை வைத்துப் பேசியவள் “நல்லவேளை அங்கிள் மட்டும் தான் பார்த்தார்” என்ற நிம்மதியுடன் தூங்கச் சென்றாள்.

இங்கு மயூரியைப் பார்த்துவிட்டு தன் பைக்கில் சென்ற ஆரியன் “இவ்வளவு நேரமாவா தூங்குவாங்க அதுவும் மேக்கப்போட” என்று எண்ணியபடி ஆபீசுக்குச் சென்றான்.

நான்கு பக்கமும் இருட்டாக இருந்த அந்த அறையில் ஆறு வயதே ஆன ஒரு பெண் குழந்தை தலையில் கட்டுடன் வீங்கி சிவந்த முகத்துடன் அழுதுகொண்டிருந்தது. அப்போது கதவைத் திறந்துகொண்டு ஒரு நல்ல குண்டான பெண் ஒருவளும் அவளுடன் ஒரு ஆணும் நின்று பெங்காலி மொழியில் இவளை பார்த்து  “ஐந்து லட்சம்னா எனக்கு ஓகே பாமா”  என்று அந்த ஆண் சொல்ல அதற்கு பாமா என்ற அந்த பெண்

 “இதோ பாரு நான் ஒன்றும் ஸ்கூல் வைச்சி நடத்தல்லை இவ சின்ன பெண்ணா இருக்க கஸ்டமர் கிட்ட விட முடியாது அதுவரை சும்மாதான் பார்த்துக்கணும் அதுக்கு ஐந்து லட்சம் எல்லாம் அதிகம் வேணும்னா இரண்டு லட்சம் தரேன் ”

“என்ன பாமா நீங்களே இவ்வளவு கம்மியாகச் சொல்றீங்”

“இதோ பாரு ரெண்டுனா ஓகே முடியாதுனா கூட்டிட்டு போ “ அதற்கு அவன் ஏதோ யோசித்து பின் “ சரி பாமா “ என்று பணத்தை வாங்கிக்கொண்டு அந்தக் குழந்தையை அவளிடம் விட்டுச் சென்றான்.

பின் பாமா அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று வேறு ஒரு அறையில் இருந்த பெண்ணிடம் தள்ளி “ ஏய் லலிதா இவளைப் பார்த்துக்கோ. நீ கஸ்டமர் பார்க்கும்போது இவளையும் கொஞ்சம் சேர்த்துக்கோ. ஆனா பார்த்து, பாப்பா டேமேஜ் ஆகக் கூடாது, புரியுதா “ என்று சொல்லிவிட்டுச் சென்றாள். குழந்தையை பார்த்த லலிதா சிரித்த முகத்துடன் பெங்காளியில் “ அழாதீங்க, ஏன் அழுகிறீர்கள் “ என்று கேட்க, அதற்கு அந்த குழந்தை அவள் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்து அழுகையை நிறுத்தி “ அம்மா வேணும், என்னை அம்மா கிட்ட கூட்டிட்டு போங்க “ என்று தேம்பியபடி பேச, குழந்தை தமிழ் பேசியதைக் கேட்டு அதிர்ந்த லலிதா தமிழில் “ பாப்பா நீ தமிழா? இங்கு எப்படி வந்த பாப்பா “ என்று அதிர்ந்து பேச, லலிதா தமிழில் பேசியதைக் கேட்டு அழுகையை நிறுத்திய குழந்தை அவளிடம் ஏதோ சொல்ல, அதைக் கேட்டு சிரித்த முகத்துடன் லலிதாவும் ஏதோ பேச பின் லலிதா “ ஆமாம் பாப்பா, உன் பேரு என்ன “ என்று  அவளை மடியில் அமர வைத்து கேட்க, அதற்குக் குழந்தை “என் பேரு மயிலு “ என்று அழகாகச் சொல்ல, அதைக் கேட்டு கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தா லலிதா “ இங்க உன் பேரு மயிலுன்னு சொன்ன நீ தனியா தெரிவ அப்பறம் கஷ்டம் ஆகிடும் பாப்பா அதுனால இனிமே யார் உன் பேர் கேட்டாலும் மயூரின்னு சொல்லு அந்த பேருல இங்க ரெண்டு பேரு இருக்காங்க “ என்று அவளை அனைத்தபடி பேசியவரை அன்னாந்து பார்த்தால் ஆறு வயது மயூரி.