ஷிவாவிற்கு எதிர்பாராத அதிர்ச்சிதான்.. அவளின் குரல் கேட்டது.. சட்டென கோவம் வருத்தம் என எல்லாம் பறந்து போனது.. என்ன பேச வந்தோம் என மறந்து கூட போனது அவனுக்கு.

மீண்டும் ஒருமுறை “சொல்லுங்க “ என்றாள் மனையாள்.

ம்கூம்.. கேட்க கேட்க.. ஏதும் பேச தோன்றவில்லை.

லேகா “என்னாச்சு.. இந்த நேரத்தில் கூப்பிட்டிருக்கீங்க.. “ என்றாள்.

ஸ்தம்பித்திருந்த ஷிவா  “அஹ.. டிவோர்ஸ் கேட்டவளிடம் பேசனும்ன்னு தோணுச்சி” என்றான், ஆழ்ந்தக் குரலில்.

லேகா பதில் சொல்லவில்லை.

ஷிவா “சொல்லுங்க மேடம் டிவோர்ஸ் கொடுக்கணுமே.. என்ன சொல்லி கொடுப்பீங்க” என்றான், எரிச்சல் அவனின் ஓவ்வொரு வார்த்தையிலும் தெறித்து விழுந்தது.

லேகாவிற்கு கண்கள் இரண்டும் சிவந்து போகிற்று.. கோவத்தில் “என்னிடம் உண்மையாக இல்லைன்னு சொல்லிக் கொடுப்பேன். என்னை பொய் சொல்லி கல்யாணம் செய்துகிட்டார்ன்னு சொல்லிக் கொடுப்பேன்” என்றாள் அழுத்தமாக.. கோவத்தில் இவளுக்கும் வார்த்தைகள் தெரித்தது.

ஷிவா “என்ன பொய் சொன்னேன்.. உன்கிட்ட எந்த பொய்யும் நான் சொல்லலை. சொல்ல போனால் நீதான் பொய் சொல்லி என்னை கல்யாணம் செய்திருக்க.. என்னை பிடிக்கும்ன்னு சொல்லி கல்யாணம் செய்துட்டு.. இப்போ என்னை விட்டு போயிட்ட.. நான்தான் கேஸ் போடணும்.. சீட்டிங் செய்துட்டான்னு” என்றான் கோவமாக.

லேகா “இப்போதும் நீங்க பொய் சொல்றீங்க.. நான் எதுமே செய்யவில்லை.. உண்மையா இருந்ததற்கு.. எவ்வளோ பெரிய தண்டனை. சந்துருவிற்கு சொத்து இருக்குன்னு நீங்க சொல்லவேயில்ல.. சந்துரு சொல்லிட்டே இருப்பான்.. எதோ இருக்கும் அக்கா.. எதற்கு அவ்வளோ பெரிய இடம் நம்மிடம் ஏன் இறங்கி வரவேண்டும்.. என சொல்லிட்டே இருப்பான். ஆனால், உங்ககிட்டதான் ஷேர்ஸ் இருக்கனும்ன்னு.. ஒருவார்த்தை சொல்லவில்லை.. என்ன என்ன வேலை செய்திருக்கீங்க.. என்னிடமும் ஏதும் சொல்லவில்லை..” என்றாள், அழுகையில்லை.. ஆனால், அணையாத தீயாக கோவம்.. பொறுத்திருந்த கோவம்.. அவளுள்.

ஷிவாவிற்கு தடுமாறியது.. ஏதும் பேசவில்லை.

மனையாள் “இப்போது பேசுங்க.. உண்மைதானே.. கல்யாணம் ஆனாபிறகும்.. ஒருவார்த்தை சொன்னீங்களா..” என்றாள்.

ஷிவா “லேகா, உண்மையை சொல்றேன் கொஞ்சம் பொறுமையாக கேளு.. ம்.. ஷிவாவோட அகராதியில் கல்யாணம் என்பது.. கண்டிப்பாக லாப நட்டங்களை கொண்டதுதான். அப்படிதான் நான் யாரை திருமணம் செய்திருந்தாலும்.. நடந்திருக்கும். தொழில் சொத்து என எதோ ஒன்றின் அடிப்படையில்தான் நடந்திருக்கும். இதை மாற்றமுடியாது. நான் அதற்கு தாயராகவே இருந்தேன். அப்படிதான் நம்முடையதும் நடந்ததது. ஆனால்,” என சொல்லி நிறுத்தினான். 

இரண்டொரு நிமிடங்கள் கடந்தது “உன்னை பார்க்க.. தீக்ஷியின்  நிச்சயத்திற்கு வந்த போதும் சரி.. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் உன்னை பார்க்க வந்தேன்.. ஆனால், உன்னை பார்த்ததும்.. பிடித்திருந்தது. எதோ குரல் நல்லா இருக்கு.. அமைதியா பேசுகிறாய்.. அப்பா அம்மாவை அனுசரிச்சு போவேன்னுதான் பார்க்க வந்தேன். ஆனால், அந்த விழாவில் என் சொந்தமெல்லாம் தள்ளி.. ஒதுங்கி நிற்க.. நீ மட்டும்.. அக்கறையா எதைபற்றியும் கவலைபடாமல்.. அப்பா தம்பி.. சொந்தம்.. வேலை.. என.. சுற்றிக் கொண்டிருந்த. லேகா என்றால் அங்கே தெரியாதவர்கள் யாருமே இல்லை அந்த கூட்டத்தில்.. அஹ.. நல்லா அழகா இருந்த சரி.. பக்குமாகவும் ஒரு விழாவினை இப்படி நெருக்கடியில்லாமல் நடத்த முடியும் என அப்போதான் பார்த்தேன். அந்த இடத்தில் எல்லோரும் சம்பர்தாயமா இருந்தாங்க.. ஆனால், நீதான் உயிர்போடு இருந்த..” என சொல்லி நிறுத்திக் கொண்டான்.

லேகா நடுவில் ஏதும் பேசவில்லை.. கணவனின் காதல் நிமிடங்களை கேட்டுக் கொண்டிருந்தாள்.. அவன் பிடித்திருந்தது என சொன்னதில் மனது நிதனமாகியது. எத்தனையோ வகையில் ஷிவா தன் ப்ரியத்தை அவளிடம் சொல்லியிருக்கிறான்.. இப்படி என்றும் சொல்லியதில்லை.

ஷிவா தொடர்ந்தான் “அதனால் எனக்கு இந்த ஷேர்ஸ் விஷயம் பெரிதாக தெரியவில்லை. நீ  வந்தாய்.. எல்லாம் கம்ப்ளீட் ஆனதாக இருந்தது எனக்கு. அஹ.. சந்தோஷமாகதானே இருந்தோம். நடுவில் அதை எதற்கு சொல்வானே..  அதாவது உனக்கும் எனக்கும் நடுவில் இது பெரிதாக தெரியவில்லை எனக்கு. நமக்கு நடுவில் இதை நான் கொண்டே வரவில்லையே.  அதனால் சொல்லவில்லை. ம்.. உன்னை பார்ப்பதற்கு.. இந்த ஷேர்ஸ்.. தாத்தா.. அம்மா என இவர்கள் எல்லாம்தானே உதவினார்கள்.. அஹ.. அவ்வளவுதான். அதனால் சொல்லவில்லை” என்றான்.

லேகா “அதெல்லாம் சரி.. ஏன் கல்யாணத்திற்கு அப்புறம் சொல்லவில்லை.. என் தம்பிக்கு இதில் பங்கு இருக்கு.. என” என்றாள்.

ஷிவா வியாபாரத்தில் தேர்ந்தவனாகிற்றே.. அஹ எத்தனை அசாதரண நிலைகளையும் சாமாளிப்பவனாகிற்றே “ஏன் சொல்லனும், குடும்பம் வேறு.. தொழில் வேறு.. உங்களுக்கு தெரியும் போது நீ.. என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சரிதான். அதனால் நான் உன்னை எதற்கும் தயாராக வைத்திருந்தேன்.. முன்பே சொல்லியிருந்தால்.. சந்துரு சார்ந்த விஷயங்கள் எனக்கு தெரியாமலே போயிருக்கலாம்.. ஏன் லேகாவின் கோவம்.. பிடிவாதம் கூட எனக்கு புரியாமல் போயிருக்கலாம். ஆனால், இப்போது, எல்லாம் புரியவில்லை என்றாலும்.. கொஞ்சம் கொஞ்சம் புரிகிறதே.. நானும் குடும்பஸ்தானாக வளருகிறேனே” என்றான்.. லேசான புன்னகையோடு.

லேகா “இல்ல, நீங்க சொல்லியிருக்கணும். எனக்கு எதுவுமே தெரியலை.. உங்களை பற்றி உங்க குடும்பத்தை பற்றி.. நான் எல்லாம் தெரியும் என வந்தேன்.. ஆனால், நீங்க எவ்வளோ பெரிய விஷயத்தை மறைச்சீட்டீங்க.. தீக்ஷி சந்துருவின் கல்யாணமே.. இப்போது எதற்கு நடந்தது என எனக்கு புரியும் போது.. என்னால் முடியலை.. இது முழுக்க முழுக்க.. பணம்.. அஹ.. இதெல்லாம் தப்பில்லையா” என்றாள்.

ஷிவா ஒரு பெருமூச்சு விட்டான் ‘அவங்களே சந்தோஷமா இருக்காங்க.. இவ எதுக்கு.. இப்போ இதை நோண்டுகிறாள்’ என எண்ணம். தலையை கோதிக் கொண்டே பால்கனியில் நடந்தான் ‘இவளுக்கு.. லவ் புரியலை, அஹ.. நம்மைவிட மோசம்.. அவளுக்கு லாஜிக் இடிக்கிறது.. அதான் பிரச்சனை’ என இதழ்க்கடையில் வந்த புன்னகையை மறைத்துக் கொண்டான்.

லேகா “தெரியுதா.. உண்மையை அப்போதே சொல்லியிருந்தால்.. சந்துரு அவன் வேலையை பார்த்திருப்பான்.. இப்போது பாருங்க.. உங்க கூட இருக்கான்.. உங்களுக்கு உங்க அப்பாக்கு யாருக்குமே பிடிக்காமல்..” என்றாள்.

ஷிவா “லேகா.. ப்ளீஸ்.. கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வா.. சந்துருவிடம் பேசு.. அவன் என்ன சொல்றான்னு கேளு.. உன்மேல எந்த தப்புமில்ல. அவனுக்கு பிடித்த வேலை.. அமைந்திருக்கு. அத்தோடு, இந்த திருமணம் உன்னால் நடந்தது.. ஆனால், பிடிக்காமல் நடக்கவில்லை.. அவன் சந்தோஷமா இருக்கான்.. அதுக்கு நீதான் காரணம். நீ போய்.. தீக்ஷி சந்துருவோடு இரண்டுநாள் இரு.. அவங்ககிட்ட பேசி பாரு.. அவங்க எவ்வளோ சந்தோஷமாக இருக்காங்கன்னு தெரியும்.. ம்.. எல்லாம் சரியாதான் நடந்திருக்கு. குழப்பங்கள் தெளிவை கொடுக்கும் லேகா.. கொஞ்சம் நம்பு டி.. எல்லாம் இப்போது சரியாகிவிட்டது.. நீ நம்பு” என்றான்.

லேகாவிற்கு இந்த நொடிதான் அழுகையாக வந்தது.. ‘எல்லாம் சரியாகிவிட்டதா.. ஏன் என்னால் ஏற்க முடியவில்லை.. ஏன் எனக்கு சரியாகவில்லை’ என அழுகையாக வந்தது. அவள் கேவினாள். எதுவும் சரியாக இல்லை என்ற மாயையிலிருந்து கணவனின் பேச்சு அவளை வெளிக் கொணர்ந்தது.

கணவனின் காதுகளில் விழுந்தது.. அவளின் அழுகை சத்தம்.. “என்ன அழறீயா” என்றான் ஷிவா.

லேகா பதில் சொல்லவில்லை.. கண்களை துடைத்துக் கொண்டாள்.. 

கணவன் சமாதாணமாக “நாமும் சரி செய்துக்கலாம் லேகா.” என்றான், இதமான குரலில்.

இந்த இதம் அவளை.. அசைத்ததுதான்.. ஆனால்,  இன்னமும் அழுகையாக வந்தது.. எப்படி சரி செய்ய முடியும்.. என. 

ஷிவா “லேகா.. மோர்னிங் நான் வரேன்” என்றான்.

லேகா “வேண்டாம்.. எதுக்கு வரீங்க.. எனக்கு வேலையிருக்கு, நான் கடைக்கு போகனும்” என படபடவென ஒப்புவித்தவள்.. அழைப்பினை துண்டித்துவிட்டாள்.

ஷிவா போனினை வெறித்தான் சிலநொடிகள்.. பின், போனினை தூக்கி.. அருகிலிருந்த ஈசிசேரில் வீசிவிட்டு.. சின்ன பால்கனியில் ஆனந்தமாக நடந்தான். 

மறுநாள் காலையில், லேகா அவசரஅவசரமாக கிளம்பி கடைக்கு சென்றுவிட்டாள்.

அவள் எட்டுமணிக்கு கடை திறந்து வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

அடுத்த அரைமணி நேரத்தில்.. ஷிவா அழைத்தான் லேகாவிற்கு.

மனையாளுக்கு பயம்.. நேரில் வீட்டிற்கு வந்துவிட்டாரோ என.. அழைப்பினை ஏற்றாள்.

ஷிவா “லேகா, சுதாகர் மாமா வந்திருக்காங்க.. தாத்தா பாட்டி 60யத் வெட்டிங்க்கு இன்வைட் பண்ண.. உன்கிட்ட பேசணுமாம்” என சொல்லி கைபேசியை அவர்களிடம் கொடுத்தான்.

லேகாவிற்கு ஒன்றும் பேச முடியவில்லை. அவர்களிடம் நலம் விசாரித்து.. அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லி.. அவர்களின் அழைப்பினை ஏற்றாள் பெண்.