சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு தன்னை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று வெறி கொண்டு படித்தாள். ஆனால் அவளின் மதிப்பெண் அத்தனையும் ஆரு உடை அலங்கார கல்வியை தேர்ந்தெடுக்கவும் வீணாய் போனது. 

ஆனால் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என கொண்டவள், தனக்கு வராத உடை அலங்காரத்தை கூட நேர்த்தியாய் பயின்றாள். எப்படியும் ஆருவிற்கு இன்னும் ஓரிரு வருடங்களில் திருமணம் என்பதை அறிவாள். 

எனவே அவர்கள் தன்னை தன் வீட்டிற்கு அனுப்பும் போது, சுயகாலில் நிற்கும் தகுதி கொண்டவளாய் தன்னை தகவமைத்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாள். ஆனால் இன்றைக்கு நடந்த நிகழ்வு அவளை அடியோடு புரட்டிப் போட்டிருந்தது. 

காலையில் முதல் வேலையாக தன் மூத்த அண்ணன் ராகவனை அழைத்து, படிப்பு முடிந்த கையோடு வீட்டிற்கு அழைத்து கொள்ள சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டாள். அழுகையில் கரைந்த விழிகளோடு எப்போது உறங்கினோம் என்பதை அறியாமல் உறங்கியும் போனாள். 

யாருக்கும் காத்திருக்காமல் கதிரவன் தன் ஆயிரம் பொற்க்கரங்களால் பூமியை தீண்ட, பொழுது புலர்ந்தது. உறங்கிக் கொண்டிருந்த ஆருவை எழுப்பிய அருண், வீட்டின் மற்ற உறுப்பினர்களோடு அவளை காணொளியில் பேச வைத்தான். 

சாருவின் பக்கம் திரும்பவே இல்லை. சாரு களைத்து ஒடுங்கி ஆருவிற்கு பின்னால் நின்று கொண்டிருந்தாள். எப்போதும் கல கலவென இருக்கும் பெண் அல்ல என்றாலும், அவளிடம் தென்பட்ட சோர்வு அபிராமியின் கவனத்தை ஈர்த்தது. 

“சாரும்மா ஏன் டல்லா இருக்க. உடம்பு சரியில்லையா…?’’ என்றார் அவளிடம் அக்கறையாய். “இல்ல ஆன்ட்டி நான் நல்லா தான் இருக்கேன்.’’ என்றாள் உடனடியாய் முகத்தில் ஒட்ட வைத்த புன்னகயுடன்.

அவளின் அந்த பதிலில் அருண் தன்னையும் மீறி அவளின் முகம் பார்த்தான். அழுத தடம் முகத்தில் தெரிய, உள்ளுக்குள் அழுத்திய உணர்வை தோளை குலுக்கி விரட்டியடித்து கவனத்தை தங்கையின் மீது திருப்பினான்.

குடும்பம் மொத்தமும் வாழ்த்தி முடித்து, நல விசாரிப்புகள் முடிக்கவும், “போதும் போதும். மீதியெல்லாம் நேர்ல பேசிக்கலாம்…’’ என்றவன் அலைபேசியை அணைத்துவிட்டு, ஆருவிடம் திரும்பி, “ஈவ்னிங் ஹோட்டல் தாஜ்ல பார்டி அரேஞ் செஞ்சி இருக்கேன். வருணும், அண்ணியும் தாரிகா குட்டியும் வருவாங்க. அஞ்சு மணிக்கு அங்க இருக்க மாதிரி பார்த்துக்கோ. இனி எங்க போனாலும் விக்ரம் கூட வருவார்.’’ என்றான் கண்டிப்புடன். 

‘சரி’ என்று ஆரு தலை அசைக்க, ‘பார்த்துக்கோ’ என்று சாருவிடம் கண் காட்டியவன், அதன் பிறகே தன் தொழிலை கவனிக்க சென்றான். இன்றைக்கு வளர்ந்து வரும் இயக்குனர் இருவரிடம் கதை கேட்பதாக சொல்லியிருந்தான். வேக வேகமாக குளித்து அலுவலகம் கிளம்பி சென்றான். 

ஆருவும் நடந்த நிகழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளி வந்து கொண்டிருந்தாள். அருணும் தெரியாத வெளிநாட்டவன் நம் கலாச்சாரம் தெரியாது நடந்து கொண்டான் என தங்கையை தேற்றி வைத்திருந்தான். 

மாணவிகள் நடந்த விஷயம் குறித்து வாயை திறக்க கூடாது என பலமாக காவல் துறையினால் எச்சரிக்கப்பட்டிருந்தனர். ஆக ஆர்கலி கல்லூரிக்கு சென்ற போது அவளின் எந்த வழமையும் பாதிக்கப்படவில்லை. 

அன்றைக்கு அவளின் பிறந்த நாள் என்று மொத்த மாணவர்களுக்கும் மதிய விருந்து கொடுத்தாள். ஆசிரியர்களுக்கு தனி கவனிப்பு. அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருக்க, அப்போது தான் வாடியிருந்த சாருவை கவனித்தாள். 

ஆரு குழந்தை பருவம் முதலே சாருவை விரும்பியே நட்பாக ஏற்றவள். அவளிடம் மட்டுமே தன் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்துவாள். “ஓய் சாதா…! என்னடி ரொம்ப டல்லா இருக்க. உனக்கு இப்ப பீரியட்ஸ் டைம் கூட இல்லையே…?’’ என்று யோசிக்க அவள் தலையில் தட்டி அதற்கு தடை விதித்தாள் சாரு. 

“வீட்டு நியாபகம். வேற ஒன்னும் இல்ல. அதுவும் பெரிய அண்ணாவை பார்த்து ஒன் இயர் ஆகப் போகுது. அவங்க பெங்களூர்ல ஜாப் ஜாயின் செஞ்சதுல இருந்து நான் வீட்டுக்கு போகும் போது அவங்களுக்கு லீவ் இருக்குறது இல்ல… அவங்க வீட்டுக்கு வந்தா நான் அங்க இருக்குறது இல்ல… டூ டேஸ்ல அண்ணா பர்த்டே. சின்ன வயசுல எல்லாரும் ஒண்ணா ரொம்ப ஜாலியா இருப்போம். இன்னைக்கு உன் பர்த்டே கொண்டாட்டம் எல்லாம் பார்க்கவும் எனக்கு அவங்க  நியாபகம் வந்துருச்சு.’’ என்று வாயில் வந்ததை அடித்து விட்டாள். 

அந்த நேரத்திற்கு, “ஓ..’’ என கேட்டுக் கொண்ட ஆர்கலி, “காலேஜ் முடிஞ்சதும் பீச் போயிட்டு அப்புறம் வீட்டுக்கு போலாம்.’’ என்று அவளை இழுத்து கொண்டு நடந்தாள். கடற்கரை என்றால் சாருவிற்கு பிடித்த இடம். 

அதோடு அவளுக்கு பிடித்த உணவை தருவித்து கொடுத்து முடிந்த அளவு தோழியை நன்றாக கவனித்து கொண்டாள் ஆரு. அவளின் அன்பில் கரைந்த சாருவும், மெல்ல மெல்ல இயல்பிற்கு திரும்பினாள். 

மாலை ஐந்து மணிக்கு தோழிகள் இருவரும், விக்ரம் படை சூழ அந்த ஏழு நட்சத்திர விடுதியை அடைந்தனர். ஆர்கலி வெண்ணிற உடையில் பார்ட்டி கவுன் ஒன்றை அணிந்திருக்க, சாரு நீண்ட லேகாங்கா உடையை அணிந்திருந்தாள். 

இருவரும் உள்ளே நுழைய, குடும்ப உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரமாய் ஆர்கலியை வரவேற்றனர். அருண் சில பாலிவுட் நட்சத்திரங்களையும் தன் தங்கையின் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்திருந்தான்.

வருண் தங்கையை அணைத்து கொள்ள, அவளின் அண்ணி வசுந்திரா உச்சந்தலையில் முத்தமிட்டு தன் அன்பை வெளிபடுத்தினாள். இரண்டு வயது தாரிகாவோ, ‘ஹாப்பி பர்த் டே அத்தை…’’ என்று ஒரு ரோஜாவை நீட்ட மொத்த அரங்கமும், ‘சோ க்யூட்…’ என்று ஆர்பரித்தது. 

சாரு ஒதுங்கி நின்று அமைதியாக அந்த கொண்டாட்டத்தை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாள். ஆர்ப்பாட்டமாய் கேக் வெட்டும் படலம் முடிய, வருண், அருண், வசுந்திரா, தாரிகா என தன் குடும்பத்திற்கு கேக்கை ஊட்டி முடித்த ஆரு சாருவை கண்களால் தேடினாள். 

அதை உணர்ந்த அருண், “மத்தவங்களுக்கு எல்லாம் பீஸ் இப்ப சர்வ செய்ய வருவாங்க. நீ போட்டோக்கு போஸ் கொடு போ.’’ என்று அவளை அங்கிருந்து நகர்த்தினான்.  எட்டு மணி வரை தொடர்ந்த பிறந்த நாள் கொண்டாட்டம் இரவு உணவோடு முடிவிற்கு வந்தது. 

“சென்னை ப்ளைட் ஒன்பது மணிக்கு. நாங்க ஹோட்டல்ல இருந்து நேரா ஏர்போர்ட் போறோம் பப்புமா.’’ என்று வருண் அறிவிக்க, “அவ்ளோ சீக்கிரமாவா…?’’ என்று ஆரு முகத்தை சுருக்கினாள். 

“ஹே…! நீ கொஞ்சம் சும்மா இரு தாயே. நீ விளையாட்டுக்கு மூஞ்சை சுருக்கினாலும் உன் அண்ணனுங்க போய் ப்ளைட் டைமை சேஞ் செஞ்சிட்டு வந்தாலும் வந்துடுவாங்க.’’ என வசுந்தரா சொல்ல, “பின்ன இல்லையா…’’ என அருணும், வருணும் ஒரே நேரத்தில் சொல்ல அங்கிருந்த அனைவரும் பொங்கி சிரித்தனர். 

அவர்கள் கிளம்பும் வரை அங்கே கலகலப்பிற்கு பஞ்சமின்றி போக, ஆரு நடந்த நிகழ்விலிருந்து முழுதாக வெளி வந்திருந்தாள். கிளம்பும் முன் விக்ரமிடம் கவனம் என குறிப்பு காட்டிய அருண், சாருவிடம் வந்து, “வேணும்னு நான் எதையும் செய்யல. ஓவரா ரியாக்ட் செய்யாம ஆருவை பார்த்துக்கோ.’’ என்றவன் அண்ணன் குடும்பத்தோடு சென்னை கிளம்பினான். 

அவன் கிளம்பி செல்லவும் சாரு ‘அப்பாடா’ என உணர்ந்தாள். விக்ரம் அழைத்து செல்ல இருவரும் தங்கள் குடியிருப்பிற்கு திரும்பினர். அலுப்பாய் உணர்ந்த ஆரு படுத்தவுடன் உறங்கிப் போனாள். சாருவிற்கும் நேற்றே தூக்கம் தடைபட்டிருக்க, படுக்கையில் சாய்ந்ததும் உறங்கிவிட்டாள். 

நேரம் இரவு பதினொன்றை தொட்டுக் கொண்டிருக்கும் போது ஆர்கலி உறங்கிக் கொண்டிருந்த அறையின் கண்ணாடி ஜன்னலை திறந்து உள்ளே நுழைந்தது அந்த நெடிய உருவம். உறங்கிக் கொண்டிருந்தவளை நெருங்கிய உருவம், “ஹாய் ஸ்வீட் ஹார்ட்…!’’ என்றுவிட்டு லேசாக அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, எதுவோ தன் கன்னத்தில் ஊர்கிறது என்ற எண்ணத்தில் ஆரு தன் கன்னத்தை தேய்த்துவிட்டுக் கொண்டு திரும்பிப் படுத்தாள். 

அவளின் அந்த செய்கை அந்த நெடிய உருவத்தின் இதழ்களில் ஒரு சிறு புன்னகையை தோற்றுவித்தது. அவளின் வலக்கரத்தை பற்றியவன், அவளின் மோதிர விரலில் ஏற்கனவே குடியிருந்த மோதிரத்தை அகற்றி விட்டு, தன் பரம்பரை மோதிரத்தை அவளுக்கு அணிவித்தான். 

அவள் சலனமின்றி உறங்கிக் கொண்டிருக்க, “ஹாப்பி பர்த்டே மை லிட்டில் ஸ்வீட் ஹார்ட்…!’’ என்றவன் தான் பற்றியிருந்த விரல்களில் இதழ் பதிக்க, அப்போதும் அவள் லேசாக சிணுங்கி புரண்டு படுத்தாள்.அவ்வளவே. “ஸ்லீபிங் பியூட்டி…’’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அவளை நெருங்கி இரவு விளக்கின் ஒளியில் மென்மையாக தெரிந்த அவளின் முக வடிவை கூர்ந்து பார்த்தான். 

வலது கண்ணின் இமையில் வீற்றிருந்த மச்சம் அவனை இழுக்க, அதை தொட கையை உயர்த்தியவன், பின் தன் கரங்களை பின்னால் இழுத்துக் கொண்டான். அவள் காதோரம் குனிந்தவன், “ஐ வில் கேட்ச் யூ சூன்…’’ என்றவன் வந்த வழியே திரும்ப, ஆர்கலி ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருந்தாள். 

 அவன் வருவான்.