காதல் – 3 

அருணுக்கு தன் கோபத்தை எப்போதும் சாருவிடம் காட்டி பழக்கம் தான். ஆனால் இன்றைக்கு நடந்தது கொஞ்சம் அதிகப்படி. சாரு அவர்கள் வீட்டு ஓட்டுனரின் மகள். ஆரு பிறந்த ஒரு வருடத்தில் அவருக்கு எம். எல்.ஏ பதவி கிடைத்தது. 

அந்த நேரத்தில் அவருக்கு நம்பகமான ஒரு ஓட்டுனர் தேவைப்பட, அபிராமியோடு பள்ளியில் படித்த தோழன் என்ற சிபாரிசோடு வேலையில் சேர்ந்தவர் பிரபாகரன். சாருவின் தந்தை. பிரபாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள். 

அதில் இளையவள் சாரு. ஆருவை விட ஆறு மாதங்களே மூத்தவள். ஆருவிற்கு ஒன்றரை வயது இருக்கும் போது ஒரு நாள் பிரபா எதேச்சையாக தன் மகளை பணியிடதிற்கு அழைத்து வந்தார். அப்போது இரு குழந்தைகளும் ஒன்றாக விளையாட, அபிராமிக்கு அன்றைக்கு ஆருவை பார்த்து கொள்வது எளிதாய் இருந்தது. 

ஆக தினம் பிரபாவின் மகளை அழைத்து வர சொல்லி விட்டார். கேட்பது பள்ளி தோழியல்ல. முதலாளி அம்மா என்ற காரணத்தினால் அத்தனை விருப்பம் இல்லை என்றாலும், பிரபா தினம் சாருவை அவர்களின் வீட்டிற்கு அழைத்து வந்தார். 

மூத்த அண்ணன்கள் இருவரும் அவளை விட கிட்ட தட்ட பத்து வயது வித்தியாசத்தில் இருந்ததால், அவளுக்கு தகுந்தவாறு அவளிடம் விளையாட தெரியவில்லை இருவருக்கும். 

ஆருவிற்கு மூன்று வயதான போது அவளை கிண்டர் கார்டனில் சேர்த்தார்கள். சாரு இருந்தால் தான் தானும் அங்கு இருப்பேன் என ஆரு அடம் பிடிக்க, அப்போது பணப் புழக்கம் அதிகரித்திருந்த காரணத்தினால் முருகானந்தம் இருவரையும் அதே பள்ளியில் சேர்ந்தார். 

இம்முறை பிரபா முழுமையாக அதை எதிர்த்தார். முருகோ, “விடு பிரபா…! பப்பும்மா  துணைக்கு சாரு இருந்தா எனக்கும் நிம்மதியா இருக்கும். இல்லனா புது இடம்… புது சூழல்… பப்பு பழக கஷ்டப்படுவா. உன் மத்த பசங்களையும் இதே மாதிரி பெரிய ஸ்கூல்ல சேர்த்துடலாம். பீஸ் பத்தி எல்லாம் நீ யோசிக்காத. எல்லாம் நான் பார்த்துகிறேன்.’’ என்று அவரின் வாயை அடைத்தார். 

அந்த விசயத்தை கேள்விப்பட்ட பிரபாவின் மனைவி நளினி மிகவும் மகிழ்ந்து போனார். “நம்ம பொண்ணு உங்க பிரண்டோட பொண்ணை பிரண்ட் பிடிச்சது ரொம்ப நல்லதா போச்சுங்க. இல்லைனா நம்ம எல்லா குழந்தைகளும் கார்ப்ரேசன் ஸ்கூல்ல தான் படிச்சி இருந்து இருக்கணும்.’’ என்றார் மகிழ்வாய். 

பிரபாவிற்கும் இதில் மகிழ்வு தான் என்றாலும், என்னவோ ஒரு கவலை அவரை உள்ளுக்குள் வருத்தியது. சாருவும், ஆருவும் ஐந்தாம் வகுப்பை தொடும் போதே, முருகு அரசியலிலும், தொழிலிலும் பரபரவென வளர்ந்து நின்றார். அதுவரை எம்.எல்.ஏவாக  இருந்தவர் எம்.பி பதவியை அலங்கரித்தார். 

அவர்கள் உயர உயர, சாருவிற்கும், அவள் குடும்பத்திற்கும் உண்டான இடைவெளி அதிகரித்தது. சாருவின் வேலை எப்போதும் ஆருவின் பின் அலைவது என்பதை போல் ஆனது. அவள் எங்கு சென்றாலும் சாருவும் உடன் செல்ல நிர்பந்திக்கப்பட்டாள். 

அதுவும் ஆரு பூப்பெய்திய பின் சாருவிற்கு ஒரு அறை கொடுத்து, முருகு அவளை தங்களோடே தங்க வைத்து கொண்டார். பிரபா சாருவை எப்போதாவது தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லும் அளவிற்கு ஆனது நிலை. 

பிரபாவின் முகத்தில் இருந்த வருத்தத்தை சரியாக படித்த முருகு, “ஒன்னும் வருத்தப்படாத பிரபா. எல்லாம் பப்பும்மா கல்யாணம் வரைக்கும் தான். அப்புறம் நீ உன் பொண்ணை உன் வீட்ல கூட்டிட்டு போய் வச்சி சீராட்டு. சரியா. சாருவுக்கும் நல்ல மாப்பிளையா பாரு. கல்யாண செலவு முழுக்க என்னுது தான்.’’ என்று தேற்றி வைத்திருந்தார். 

நளினிக்கு மகள் பிரிந்திருப்பது வருத்தம் என்றாலும், அவளுக்காவது ஒரு ராஜ வாழ்க்கை கிட்டியதே என்று மனதை தேற்றிக் கொண்டாள். சாருவிற்காக என்று மட்டும் அவள் குடும்பத்திற்கு முருகு பல சலுகைகளை செய்து கொடுத்தார். 

ஆரம்பத்தில் இருந்தே அருணுக்கு சாருவை கண்டால் பிடிக்காது. சாரு அவர்கள் வீட்டிற்கு நிரந்தரமாய் தங்க வந்த  பதிமூன்று வயதில் அருண் தொழில் துறையில் மேலாண்மை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.

‘அது என்ன ஒரு ஓட்டுனரின் மகளுக்கு இத்தனை சலுகை…?’ என்று அவனுக்கு புகைச்சலாய் இருக்கும். அதுவும் ஆருவோடு ஒப்பிடுகையில், சாருவின் வெளிறிய நிறம் அவளுக்கு மேல்தட்டு தோற்றத்தை இலகுவாய் கொடுக்கும். 

‘எல்லாம் இந்த அப்பாவை சொல்லணும். யாரை எங்க வைக்கணும்னு தெரியாம…’ என்று மனதிற்குள் புலம்பிக் கொள்பவன், அவள் தனியாய் சிக்கும் நேரம் எல்லாம் அவளை வார்த்தைகளால் தீய்த்து எடுப்பான். 

‘ஆரு ப்ளே கிரவுண்ட்ல விழுந்துட்டாளாமே இன்னைக்கு. அவளை ஒழுங்கா பார்த்துக்கமா நீ எங்க பராக்கு பார்த்துட்டு இருந்த…’ என்பதில் ஆரம்பித்து ‘ஏன் மேத்ஸ் மார்க் குறைஞ்சி இருக்கு. கண்ணு கருவளையம் விழுது. நைட்டு தூங்காம ரூம்ல என்ன பண்றா. அவ போன் சாட் எல்லாம் வாட்ச் பண்ணி எனக்கு அப்பப்ப அப்டேட் பண்ணு.’ என்று வித விதமாக வேலை வைத்து அவளை விழி பிதுங்க வைப்பான். 

அவளை மிரட்ட அவன் தேர்ந்தெடுக்கும் நேரம் எல்லாம் இரவு பதினோரு மணிக்கு மேல் தான் இருக்கும். மொத்த குடும்பமும் உறங்கிய பின், தன் அலைபேசி மூலம் அவளை தோட்டத்திற்கு வர சொல்லி வாட்டி எடுப்பான். 

ஆரம்பத்தில் ஆருவை போல சாரு அவனை அண்ணா என அழைக்க தலையில் வலிக்க கொட்டியவன், “அண்ணா வா… ஒழுங்கா சார்னு சொல்லு. ஆருவுக்கு தான் நான் அண்ணா. உனக்கு இல்ல புரியுதா…?’’ என்று பாடம் எடுத்தான். 

ஆறு வருடங்களாக சாரு இவனிடம் சிக்கி தவிக்கிறாள். ஒரு முறை பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கு படித்துக் கொண்டிருந்தவளை அவன் அழைத்து வழக்கம் போல மிரட்ட, “சார்… நீங்க ரொம்ப திட்றீங்க. நான் எங்க அப்பாகிட்ட சொல்லிட்டு உங்க வீட்டை விட்டு போயிடுறேன். நீங்க உங்க தங்கச்சியை வேற ஆள் போட்டு பார்த்துக் கோங்க.’’ என்றுவிட்டாள். 

“என்ன…’’ என்று அதிர்ந்தவன், வலிக்க அவள் மணிக்கட்டினை பற்றி, “இப்படி நான் பேசுறது எதையாவது வெளிய சொன்ன… உன்னோட சேர்த்து உங்க அப்பாவையும் வீட்டுக்கு அனுப்பி வச்சிருவேன். இப்ப தான் உங்க அண்ணனுக்கு எங்க அப்பா மல்டி நேசனல் கம்பெனில வேலை வாங்கி கொடுத்து இருக்கார். அதை இல்லாம செஞ்சிருவேன். நீ ஒழுங்கா நான் சொல்ற மாதிரி என் தங்கச்சியை பார்த்துக்கிற வரை தான் உன் குடும்பம் நிம்மதியா இருக்கும். அதை மீறி ஏதாவது செஞ்ச… அதுக்கு அப்புறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல. அது எப்படிடி கொஞ்சம் கூட நன்றி இல்லாம பேசுற. பொறந்ததுல இருந்து நீ சாப்பிட, உடுத்த, படிக்கன்னு கணக்கே இல்லாம செலவு செஞ்சி இருக்கோம். அதெல்லாம் சும்மான்னு நினைச்சியா. ஆருவை பார்த்துக்க தான். இனி ஒருவாட்டி என்னை எதிர்ந்து பேசு. அப்புறம் தெரியும் இந்த அருண் யாருன்னு.’’ என்றவன் அவளை வேகமாய் தள்ளிவிட்டான். 

அவன் இழுத்து விட்டதில் சற்று தள்ளியிருந்த சிமென்ட் இருக்கையில் சென்று மோதி விழுந்தவள், அதன் பிறகு அவன் முன்பு வாயை திறப்பதேயில்லை. என்ன திட்டினாலும் மெழுகு பொம்மை போல உணர்வுகள் துடைத்த முகத்துடன் நின்று கேட்டு கொள்வாள். 

அது அருணுக்கு இன்னும் வசதியாக போய்விட, எப்போதெல்லாம் தாங்க முடியாத ஆத்திரத்தில் இருக்கிறானோ அப்போதெல்லாம், நள்ளிரவிற்கு அவளை தோட்டத்திற்கு வர சொல்லி, ஆருவை சாக்கிட்டு கண்ட படி கத்தி தன்னை சமன் செய்து கொள்வான். 

அவளும் அவன் உதிர்க்கும், ‘என் முன்னால நிக்காத. போய் தொலை.’ என்ற ஒரு வார்த்தைக்காக காத்திருந்து அது வெளிப்பட்டதும் அங்கிருந்து ஓடி விடுவாள். அருணின் மனதில் முதலாளி, தொழிலாளி என்ற வர்க்க பேதம் முளைக்க முக்கிய காரணம் அவன் தாத்தா நெல்லையப்பன் தான். 

வருணுக்கும் அருணுக்கும் ஒரு வருடமே இடைவெளி. மகள் இரண்டு கை குழந்தைகளை வைத்து கஷ்டப்படுவதை கண்ட அபிராமியின் தாய் ராஜாமணி அருணை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி அவர்களின் கிராமத்திற்கு அழைத்து சென்றார். 

அபிராமியின் தந்தை நெல்லையப்பன் அவர்கள் ஊரின் பெரும் நிலக்கிழார். அதோடு பஞ்சாயத்து தலைவரும் கூட. அதனால் எப்போதும் தான் என்ற அகந்தையோடே சுற்றி வருவார். அவர் வீட்டில் வேலை ஆட்கள் வாசலில் தயங்கி நிற்பது. அவர்களை கண்டால் மரியாதை கொடுத்து பேசுவது. அவர்கள் வரும் போது ஒதுங்கி நிற்பது. இப்படி சமூகத்தில் நாம் உயர்ந்தவர் என்ற எண்ணத்தை அங்கு சுற்றி இருந்தோரின் நடத்தை அவன் மனதில் பதித்தது. 

உங்களுக்கு நான் மேலானவன் என்ற எண்ணம் அவனுக்கு ஒரு போதையை தர அதை அனுபவிக்கக் தொடங்கினான். பதினேழு வயதில் கல்லூரி படிப்பிற்காய் முருகு அவனை சென்னை அழைத்து வந்த போது கூட, அடையாளம், அந்தஸ்து போன்றவற்றை உடன் சுமந்தே வந்தான். 

அதை அவன் வீட்டிலும் காண்பிக்க செய்தான். கல்லூரியில் கூட தனக்கு நிகரானவர்களை மட்டுமே நண்பர்களாக வைத்து கொண்டான். இளையோரை எள்ளி நகையாடும் ரகமில்லை. ஆனால் நீ என்னிடம் நெருங்காதே என்ற தோரணையை வெளிபடுத்த தயங்கமாட்டான். 

அறைக்குள் நுழைந்த அருணிற்கு மனம் கொஞ்சம் சமன் பட்டிருந்தது. ‘என் தங்கச்சிக்கு தப்பா எது நடந்தாலும் அது அவளுக்கும் நடக்கும்னு புரியணும்.’ என்று எண்ணிக் கொண்டவன் அந்த எண்ணத்தோடு உறங்கிப் போனான். 

அதே நேரம், ‘விடியற்காலை பன்னாட்டு காவலகத்தில் தீ விபத்து’ என்ற செய்தி இந்தியாவின் முக்கிய செய்தி அலைவரிசைகளிலும் ஒலித்து கொண்டிருந்தது. அதை குறித்த எந்தப் பிரக்ஞையும் இன்றி உறங்கிக் கொண்டிருந்தான் அருண். 

ஏற்கனவே உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த சாருவின் நிலை இன்னமும் மோசமாகியது. எப்போதும் அருணின் ஏச்சு பேச்சுக்கள் சகஜம் என்பதால் சாரு அதை எப்போதும் கண்டு கொள்ளமாட்டாள். 

ஆனால் இன்றைக்கு அவன் எல்லை மீறி நடந்து கொண்டது அவன் மனதை மிக மோசமாக கீறியிருந்தது. ஆரு மட்டுமே படிப்பில் ஏனோ தானோ என்று இருப்பாள். ஆனால் சாரு அப்படியல்ல.