காதல் – 2 

நேரம் அதிகாலை நான்கு பத்து.   

மும்பையின் மேல் தட்டு மக்கள்  மட்டுமே வசிக்கும் மந்தாரா பகுதி. சகல வசதிகளையும் தன்னில் ஒருங்கே கொண்ட ‘வெனிஸ்’ அடுக்குமாடி குடியிருப்பு. ஏ பிளாக்கின் பதினைந்தாம் தளத்தில் இருந்தது ஆர்கலி தற்காலிகமாக வசிக்கும் அவளின் வசிப்பிடம்.  

அருண் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது எனப் புரியாமல் அந்த வரவேற்பறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த பெரிய இருக்கையில் ஒருபுறம் ஆர்கலியும், அவளின் அருகே சாருவும் அமர்ந்திருந்தனர். 

ஆர்கலி, ‘எது நடந்தால் எனக்கு என்ன…?’ என்று தன் அலைபேசியில் கவனமாயிருக்க, சாரு நடுங்கியபடி அமர்ந்திருந்தாள். ஆருவை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள மட்டுமே தனக்கு இந்த வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கப்பட்டிருகின்றன என்பதை அறிந்தவள் எனவே, இதனுடைய தாக்கம் எப்படியெல்லாம் வெளிப்படப் போகிறதோ என பயந்தபடி இருந்தாள். 

“ஹே…! நீ உன் ரூமுக்கு போ…!’’ என்றான் அருண் சாருவை கை காட்டி. அவள் விட்டால் போதும் என எழுந்து நிற்க, “என் பிரண்டை இப்படித்தான் ட்ரீட் செய்வீங்களா அண்ணா. இட்ஸ் நாட் பேர்.’’ என ஆர்கலி முகம் சுருக்க, அருண் ஒரு நொடி கூட தயங்கவில்லை. 

கையிலிருந்த ஆப்பிள் ஐ போனை அருகிருந்த கண்ணாடியை நோக்கி விசிறியடித்தான். அது ‘கலீர்’ என்ற ஓசையை வெளிப்படுத்தி சுக்கல் சுக்கலாக உடைத்து நொறுங்கியது.

சாரு முகம் வெளிறி நிற்க, மீண்டும் ஒரு முறை அருண், ‘போ…’ என்றான். அடுத்த நொடி சாரு தன் அறைக்குள் புயலென தஞ்சம் அடைந்திருந்தாள். 

இப்போது ஆர்கலியுமே எழுந்து நின்றிருந்தாள். தமையனின் இந்த கோபம் அவளுக்கு புதியது. அவள் ஏதேனும் அதிகப்படியாக நடந்து கொண்டாள் அவளை கண்டிக்கும் ஒரே ஆள் அவள் அன்னை மட்டுமே. 

“பப்பு இனி இதை செய்யாத.’’ என்று அழுத்தமாக உரைப்பதோடு அருண் நிறுத்திக் கொள்வான். ஆனால் இன்றைக்கு அடக்க முடியாத ஆத்திரத்தை அவன் முயன்று கட்டுக்குள் வைத்திருப்பதை அவனின் இறுகிய தோற்றமே எடுத்தியம்பிக் கொண்டிருந்தது. 

சாரு அறைக்குள் நுழைந்ததும், ஆர்கலியை நோக்கி திரும்பியவன், “பப்பு…! என்ன செஞ்சி வச்சிருக்க தெரியுமா நீ…? நீ சொல்ற எதையாவது நாங்க ஆபோஸ் செய்றோமா…? அப்புறம் ஏன் எங்ககிட்ட சொல்லாம தனியா போகக் கூடாத இடத்துக்கு எல்லாம் போற. அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவார் தெரியுமா…?” என்றான் கடினமாய். 

“அண்ணா…! இது எதுவும் நான் பிளான் செஞ்சி செய்யலை. என் பிரண்ட்ஸ் என் பர்த்டேக்கு ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி அரேஞ் செஞ்சி இருந்தாங்க. போய் ரீச் ஆகும் போது தான் அது எந்த பிளேஸ்னு எனக்கும் தெரிய வந்தது. நான் வேணும்னே எதையும் செய்யல. அண்ட் சாரி இனி இப்படி நடக்காது. அதோட அப்பாவுக்கு எதையும் சொல்லி அவரையும் டென்சன் செய்யாதீங்க. ப்ளீஸ்…!’’ என்றாள் கெஞ்சல் குரலில். 

இது தான் ஆர்கலி. தான் இழைத்தது தவறென்று உணர்ந்தால் ஒரு நொடியும் தயங்காது மன்னிப்பு கேட்டு விடுவாள். அந்த அந்நிய ஆடவன் அவளை முத்தமிட்டது இன்னமும் அவள் உள்ளத்தை படபடப்பில் வைத்திருந்தது. 

தனக்கு ஏன் இத்தனை பாதுக்காப்பு ஏற்பாடுகளை தந்தை செய்து தருகிறார் என்று ஓரளவிற்கு புரிவதைப் போல இருந்தது. தன் அழகிற்கோ, இளமைக்கோ இல்லை என்றாலும், தான் சார்ந்திருக்கும் அரசியல் குடும்பத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க தன்னை பகடைக்காயாக பயன்படுத்த நிறைய வாய்ப்பு உள்ளது என்பதை இன்றைக்கு அறிந்து கொண்டாள். 

அவள் வாழ்வில் அதிகம் வெளி ஆண்களை சந்திக்க நேர்ந்ததில்லை. பள்ளிப் படிப்பு சென்னையின் புகழ் பெற்ற கான்வெட் பெண்கள் பள்ளியில். கல்லூரியில் அவள் இணைந்த பிறகும் கூட அவளை தேடி வந்து நட்பு பாராட்டும் ஆண் நண்பர்கள் குறைவு. 

தேவை என்றால் மட்டுமே இவளும் ஓரிரு வார்த்தைகள் பேசுவாள். எப்போதும் இவளின் பின்னால் காவலுக்கு நிற்கும் இவளின் மெய்க்காப்பாளர்களை கண்டு, யாரும் இவளிடம் நட்பு வளர்க்க துணிவதில்லை. 

ஆனால் தோழிகளோடு இவள் அடிக்கும் கூத்திற்கு எல்லை இல்லை. பெண்களோடு இவள் என்ன செய்தாலும் அதை அவள் வீட்டினர் கண்டு கொள்வதில்லை என்பதால், வாரம் ஒரு முறை வெளி சுற்றுதல், மாதம் ஒரு முறை சுற்றுலா என்று ஆர்கலி தன் கல்லூரி நாட்களை இனிமையாக தான் கழித்து கொண்டிருந்தாள். 

இன்றைக்கு நடந்த நிகழ்வு இவளின் வாழ்வில் ஒரு கருப்பு புள்ளியாய் அமைந்துவிட்டது. ஆர்கலி கலங்கியிருப்பதை உணர்ந்த அருண், “ஆர் யூ ஆல்ரைட் பப்புமா.’’ என கேட்டான். 

“தெரியல அருண் அண்ணா. எனக்கு… எனக்கு அவனை என் கையால கொல்லணும் போல வெறி வெறியா வருது.’’ என்றாள் அடக்க முடியாது. 

“இதோ பார் இப்படியெல்லாம்  அப்செட் ஆகாத. இன்னைக்கு நடந்ததை ஜஸ்ட் ஒரு ஆக்ஸிடன்ட்டுன்னு நினச்சி கடந்து போயிடு. இது ஒன்னும் சினிமா இல்ல. குத்துவேன் வெட்டுவேன்னு இறங்க. இந்த மாதிரி விசயத்தை எல்லாம் துடச்சிட்டு கடக்குறது தான் நம்ம ஸ்டேடஸ்க்கு அழகு. புரியுதா. மார்னிங் சிக்ஸ் ஓ கிளாக் மம்மி, டாடி வீடியோ கால்ல பேச வருவாங்க. உன் ரூம்ல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு. எனிவே மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே பப்பு.’’ என்றவன் தான் அணிந்திருந்த கோட் பாக்கெட்டில் இருந்து சிறிய நகை டப்பாவை எடுத்து தங்கையின் முன் நீட்டினான். 

அந்த பரிசினை கண்டதும் ஆர்கலியின் முகம் புன்னகை பூசியது. ஓடிப் போய் தமையனை அணைத்து கொண்டவன், “தாங்க யூ சோ மச் அண்ணா. சாரி உங்களை தேவையில்லாம டென்சன் செஞ்சிட்டேன். ‘’ என்றவள் அணைப்பில் இருந்தபடியே விழி உயர்த்தி அண்ணனை பார்த்தாள். 

அவள் தலையை ஆதுரமாய் வருடியவன், “இட்ஸ் ஓகே பப்புமா. பீ ஹாப்பி. இட்ஸ் யுவர் டே.’’ என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். 

“சுயர் அண்ணா.’’ என்றவள் அவன் கையிலிருந்த நகைப் டப்பாவை வாங்கி திறந்து பார்த்தாள். ஆங்கிலத்தில் ‘ஏ’ என்ற எழுத்தை சுற்றி இதய வடிவில் சிறு சிறு புள்ளியாய் வைரக் கற்கள் மின்ன வசீகரமாய் மின்னியது அந்த பிளாட்டின மோதிரம். 

“இட்ஸ் மார்வலஸ். லவ் யூ அண்ணா.’’ என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள். 

தங்கை கண்ணில் இருந்து மறையும் வரையும் புன்னகையோடு அவள் முதுகை பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் அறைக்குள் நுழையவும், அதுவரை புன்னகை முகமாய் இருந்தவன் முகம் கடுமையாய் மாறியது. 

தன் அலைபேசியில் சேகரித்து வைத்திருந்த நவ்கர் காவல் நிலையத்தின் தலைமை காவல் அதிகாரி விநாயக்கிற்கு அழைத்தான். என்ன தான் தங்கையிடம் கொலை எல்லாம் செய்ய முடியாது என்று சொல்லி இருந்தாலும், தன் தங்கையை அத்துமீறி தொட்டவனை உயிரோடு விடும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை அருணுக்கு. 

விக்ரம் சொல்லிய செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து அவன் ரத்த அணுக்கள் யாவும் தீப்பற்றினார் போல எரிந்து கொண்டிருந்தது. விக்ரம் அவளை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்ததும் தொடர்பு கொண்டது அருணை தான். 

முருகு, வருணை விட எந்த நொடி எப்படி செயல்பட வேண்டும் என ஆணை கொடுப்பதில் அருண் தான் வல்லவன். அதோடு தங்கை குறித்த எந்த தகவலையும் தனக்கு தெரிவித்த பின் தான் தந்தையை சென்று அடைய வேண்டும் என்று விக்ரமிற்கு மறைமுக உத்தரவே பிறப்பித்திருந்தான். 

ஆரு எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, குடும்ப சூழல் காரணமாக இராணுவ வேலையை விட்டு வந்த விக்ரமை தங்கையின் முக்கிய மெய்க்காப்பாளனாக தேர்வு செய்தவன் அருண் தான். 

எனவே தங்கையை பற்றிய செய்திகள் எப்போதும் முதல் அவன் செவியை தான் எட்டும். அந்த நிகழ்வு நடந்தேறி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்தே அவன் செவி அடைந்தது. ஆம் அவன் விமானத்தை விட்டு இறங்கிய அடுத்த நொடி, விக்ரமின் தொடர் அழைப்புகளை கண்டவன், தானே அழைத்தான்.