மறுபக்கம் முருகானந்தம் அமைதியாயிருக்க, ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன் கோபத்தை குறைத்து கொண்டவன், “முதல்ல உங்க கார்ட்ஸ்சை கிளம்பி அங்க போக சொல்லுங்க. அதுக்கு முன்னாடி மும்பை லோக்கல் ஸ்டேசன்ல பேசி அங்க ஏரியா கிளியர் செய்ய சொல்லுங்க. பப்புவுக்கு நார்மல் ப்ரொடக்சன் மாதிரி தெரிஞ்சா போதும். பெங்களூர்ல இருந்து இப்போ நான் ஏர்போர்ட் போயிட்டு இருக்கேன். இன்னும் ஹால்ப் அன் அவர்ல எனக்கு மும்பை ப்ளைட் இருக்கு. மார்னிங் நாலு மணிக்கு அவ அப்பார்ட்மென்ட்க்கு ரீச் ஆயிடுவேன். சிக்ஸ் ஓ கிளாக் வீடியோ கால் பண்றேன். வீட்ல எல்லாரும் இருக்க மாதிரி பார்த்துகோங்க.’’ என்றான்.
அருணுக்கு முன் கோபம் அதிகம் என்றாலும் காரியத்தில் வீரியமானவன். அதை உணர்ந்திருந்த முருகானந்தம், “சரிப்பா…! ஜாக்கிரதை.’’ என்றதோடு தன் பேச்சை முடித்து கொண்டு, மகன் இட்ட கட்டளைகளை நிறைவேற்ற துவங்கினார்.
அடுத்த வருடம் மகளுக்கு திருமணம் முடிக்க உத்தேசமாயிருந்தார். தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்தில் தற்சமயம் வைர வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும், லிங்கேஸ்வரனின் மகன் ப்ரித்வீ ராஜனுக்கு மகளை ரகசியமாக பேசி வைத்திருந்தார்.
அடுத்த தேர்தலுக்கு முன் அதிகாரப் பூர்வ நிச்சயத்தை அறிவிக்க இருந்தார். ஆனால் மகளின் செய்கைகள் இப்போதெலாம் அடிக்கடி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிக் கொண்டிருந்தன. அவளை கடியவும் முடியாது, அதே சமயம் கண்டு கொள்ளாமல் கடக்கவும் முடியாது தவிக்க தொடங்கினார்.
‘அடுத்த மாசமே நிச்சயத்தை அனவுன்ஸ் செஞ்சிட வேண்டியது தான். அபிராமிக்கு தெரிஞ்சா அவ பங்குக்கு அவ வேற குதி குதின்னு குதிப்பா…’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவர் மகளின் முக்கிய மெய்க்காப்பாளனான விக்ரமுக்கு அழைத்தார்.
முருகானந்தத்தின் சக தர்மினியான அபிராமி பழமையில் ஊறியவர் இல்லை என்றாலும், தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத புதுமையில் இருந்து விலகியே நிற்பார். கணவனும், மகன்களும் மகளை தலையில் தூக்கி வைத்து ஆட, அவளை தேவைப்படும் போது வார்த்தை கொண்டு தரையில் நடக்க வைக்கும் ஒரே ஆள்.
மகள் ஊரறிந்த மதுக் கடையில் பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவர் அறிய நேர்ந்தால் மறுகணமே வீடு ரெண்டு பட்டு விடும்.
அருகில் மனைவி உறங்கிக் கொண்டிருக்க, தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு முன்னரே பால்கனிக்கு வந்திருந்த முருகு, லேசான ஆனால் அதே நேரம் ஆதிக்கமான குரலில் விக்ரமை சாடிக் கொண்டிருந்தார்.
‘இப்போதே மேடமை பாதுகாப்பாக அழைத்து வந்து விடுகிறோம் சார்.’ என்று விக்ரம் பதறிக் கொண்டு கிளம்பும் வரை அவனை வறுத்தெடுத்தவர் அதன் பிறகே ஓய்ந்தார்.
சிப்பந்தி மதுவகைகளை எடுத்துக் கொண்டு லூகாவின் அறைக்குள் நுழைந்தான். கதவு திறந்து மூடும் இடைவெளியில் தரை தளத்தில் காதை கிழித்து கொண்டிருந்த இசை அந்த இடத்தையும் நிறைத்தது.
தலையை உயர்த்தி பார்த்தவன், “என்ன சத்தம் அது…?’’ என்று ஆங்கிலத்தில் சிப்பந்தியிடம் வினவினான்.
“கீழ பார்ட்டி நடக்குது சார். பர்த்டே பார்ட்டி.’’ என்றான். என்னவோ லூகாவின் பசிய நிற கண்கள் அவனிடமிருந்து நான்கடி எட்டி நிற்க சொன்னது சிப்பந்தியை.
“ஓ…’’ என்ற லூகா, தான் அணிந்திருந்த ஓவர் கோட்டை கழற்றி சோபாவில் எறிந்தவன், கதவை திறந்து கொண்டு வெளியே நடந்தான். அவன் பின்னால் ஓடி வந்த ஜேம்ஸ், “லூ… என்ன செய்ற நீ…? இங்க நாம ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கோம். இன்டர் போல் ஏஜன்சி கண்ல மண்ணை தூவ எல்லாரையும் பீச் ரெசார்ட்ல தங்க சொல்லி இருக்கேன். நீ எங்க போயிட்டு இருக்க.’’ என்றான் பதட்டமாய்.
இது அவர்கள் எல்லை இல்லை. அதோடு சிறிய கை துப்பாக்கிகள் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் இந்திய எல்லைக்குள் கொண்டு வர வேண்டாம் என்று லூ சொல்லி இருந்தான். இப்படி பொது வெளி தேடி லூ செல்வது ஜேம்சிற்கு பெருங் கவலையை கொடுத்தது.
“இட்ஸ் பார்ட்டி டைம் மேன். லெட்ஸ் என்ஜாய்.’’ என்றவன் இசை ஒலித்துக் கொண்டிருந்த இடம் நோக்கி பெரிய எட்டுக்களை எடுத்து வைத்து நடந்தான்.
ஆர்கலி தன் முகத்தை முழுமையாக கழுவி வந்திருந்தாள். முகத்தில் ஒரு துளி ஒப்பனையில்லை. எப்போதோ கண்ணில் தீற்றியிருந்த காஜல் லேசாக இமையோரம் வழிந்திருந்து, சிறு குழந்தை தீற்றிய ஓவியம் போல கலைதலின் அழகில் இருந்தது.
“ஹே பரம் பரம் பரம் பரம சுந்தரி…’’ என்ற பாடல் ஒலிப் பெருக்கியில் அலறிக் கொண்டிருக்க, தன் சுருட்டை முடி நாலாபுறமும் துள்ளி விழ ஆர்கலி ஆடிக் கொண்டிருந்தாள். அந்த பப்பில் அது பெண்களுக்கான இடம்.
சமூகத்தில் எத்தனை உயரத்தில் இருக்கும் ஆணும், அந்த இடத்தில் கால் வைக்க முடியாது. தொலைவில் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்க்கலாம். அவ்வளவே. முதலில் தோழிகளின் இந்த திட்டமிடலை ஆர்கலியின் தந்தைக்கு கடத்திவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த சாரு கூட லேடிஸ் ஹால் என்ற பிறகு தான் அமைதியானாள்.
அதோடு அவர்கள் கல்லூரி நாட்களின் முடிவினை எண்ணிக் கொண்டிருந்தனர். ‘இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம் இதெல்லாம் செய்ய போறோமோ என்ன…? இப்பவே என்ஜாய் செஞ்சிடலாம்.’ என்ற முடிவிற்கு வந்திருந்தவள், மற்ற தோழிகளோடு கூட்டணி போட்டு தன் உயிர் தோழியின் பிறந்த நாளை கொண்டாட வந்திருந்தாள்.
இசை ஒலித்த இடத்தை வந்தடைத்த லூகா கண்டது, அவ்வப்போது ஒளிரும் செயற்கை வெளிச்சம் முகத்தில் விழ, குதூகலமாய் ஆடிக் கொண்டிருந்த பெண்களை தான்.
அப்போது திடீரென அனைத்து விளக்குகளும் ஒளிர்ந்து அந்த இடத்தையே பிரகாசிக்க செய்ய, திடீர் வெளிச்சத்தை அனுமதிக்க இயலா விழிகள் லேசாய் கூசி சிறுத்தது.
அப்படி பாதி கண்கள் மூடிய நிலையில் லூகா அவளை கண்டான். முகத்தின் இருபுறமும் சுருள் கூந்தல் தோள் வரை புரள, அங்கிருந்த மற்றவர்களை போல அவளும் அரை விழி மூடியிருந்தாள்.
உள்ளுணர்வு உந்த லூகா அவளை நோக்கி நடந்திருந்தான். அவளுக்கும் அவனுக்கும் சில அடிகளே மீதம் எனும் போது தான் அதை அவன் கவனித்தான். அவளின் வலது கண் இமையில், மொத்த அழகிற்கும் திருஷ்டி பொட்டிட்டதை போல கர்வமாய் வீற்றிருந்தது அந்த சிறு மச்சம்.
“கிரானி…’’ என்று தனக்குள் பரவசமாய் சொல்லி கொண்டவன், அடுத்த கணம் தன் கண்கள் வெளிப்படுத்திய அசௌகர்யத்தை கருத்தில் கொள்ளாது வேகமாய் அவளை நோக்கி நடந்திருந்தான்.
அங்கு எல்லைக் கோட்டில் நிற்க வைத்திருந்த பவுன்சர் பாய்ஸ் அவன் எண்ணம் உணர்ந்து அவனை தடுக்க, ஒற்றை கையால் அவர்களின் மணிக்கட்டு எலும்பை முறித்து அவர்களை தூர தள்ளியிருந்தான்.
இது என்ன விபரீதம் என்று ஜேம்ஸ் அவனை தடுக்க ஓடி வர, அதற்குள் அந்நிய ஆடவன் ஒருவன் தங்களை நோக்கி வருவதை கண்ட பெண்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
‘ஏன் இந்த கூக்குரல்…?’ என அறிய ஆர்கலி தன் விழிகளை திறந்தாள். அச்சமயம் அவள் கண்டது, பசிய நிற விழிகள் மின்ன தன்னை ஆர்வமாய் நோக்கிக் கொண்டிருந்த புதியவனை தான்.
அவனை கண்டு குழப்பமாய் முகம் சுருக்கி, “வூ ஆர் யூ…?’’ என ஆர்கலி வினவ, “மை டியர் ஸ்வீட் ஹார்ட். வில் யூ மேரி மீ…?’’ என்றவன் நொடிப் பொழுதும் தாமதிக்காது அவள் உயரத்திற்கு குனிந்து, மென்மையாய் அவள் இதழ்களை சிறை செய்தான்.
அவன் வாய் மொழியில் அதிர்ந்தவள், திமிறி விலகும் அவகாசத்தை கூ அவளுக்கு வழங்கவில்லை. ‘என்ன சொல்கிறான் இவன்’ என அவள் திகைத்து நின்ற ஒரு நொடிக்குள் பாவையை தன் கைவளைவிற்குள் சிறையெடுத்திருந்தான்.
விளக்குகள் உயிர் பெறக் காரணமாயிருந்த விக்ரம் அப்போது தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். வந்தவன் கண்டது, முத்தக் காட்சியை தான். அதுவரை தேமே என்று நின்றிருந்தவர்கள் வெளிச்சத்தில் அரங்கேறிய அந்த நாடகத்தை தங்கள் அலைபேசியில் படம் எடுக்க தொடங்கி இருந்தனர்.
லூகா முதுகு காட்டி நின்றிருந்தபடியால் அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஆர்கலியின் முகம் அலைபேசியில் வசமாய் சிக்கியது.
“ஓ… மை காட்.. நோ…’’ என்று அலறிக் கொண்டே விக்ரம் அவ்விடம் நோக்கி ஓட, அவனோடு வந்த மெய்க்காப்பாளர்களும் அவனோடு ஓடினர். அந்த இடத்தை காலி செய்ய வந்திருந்த காவலர்களும், அப்போது தான் நிலவரத்தின் கலவரம் உணர்ந்து, “கேட் லாக் பண்ணுங்க. எல்லார் மொபைலும் சீஸ் பண்ணுங்க.’’ என்று ஹிந்தியில் அலறினர்.
விக்ரம் ஓடிப் போய் விலக்கும் முன்பே, நெகிழ்ந்து நின்று கொண்டிருந்த லூகாவை பலம் திரட்டி உந்தி தள்ளிய ஆர்கலி, ஓங்கி அறைந்திருந்தாள். அவன் நிமிர்ந்து நின்றிருந்தாள் அவனின் நெஞ்சை தான் அவளால் தீண்ட முடியும்.
அவன் முத்தமிட குனிந்திருக்க, அவள் விலக்கி தள்ளிய போதும் அவன் அதே நிலையிலிருந்தான். அது அவளுக்கு வசதியாய் போய் விட தன் பலம் அனைத்தையும் வலது கைக்கு கடத்தி கொடுத்திருந்தாள் அறையை.
சராசரி ஆணை பொறி கலங்க வைத்திருக்குமோ என்னவோ… ஆனால் லூகாவின் வன்முறை பழகிய உடலுக்கு அது லேசாக தட்டிய உணர்வினை கூட கொடுக்கவில்லை. ஆனால் அவள் கை ஓங்கியதும், உதட்டினை துடைத்துக் கொண்டே அவனை அருகருப்பாய் பார்த்த விதமும் அவனுள் வன்மத்தை கிளறியது.
அதற்குள் அவர்களை நெருங்கி இருந்த விக்ரம், தடாலடியாக லூகாவின் பின்னங்காலில் ஒரு உதை கொடுத்து அவனை மண்டியிட வைக்க முயன்றான். ஆனால் தற்சமயம் லூகா தன் முழு உயரத்திற்கும் ரௌதிரமாய் நிமிர்ந்து நின்றான்.
“ப்ளடி ராஸ்கல். யார் மேல கை வச்ச. நான் யாருன்னு தெரியுமா…?நீ இனி இந்த ஊரை விட்டு உயிரோட போக முடியாது டா.’’ என்றவள் துள்ளிக் கொண்டு போய் மீண்டும் அவனை தாக்க முயன்றாள்.
மூன்று வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவமிருந்த விக்ரம், அவளை தடுத்து தன் பாதுக்காப்பு வளையத்திற்குள் நிறுத்தி வைத்தான். லூகாவிடம் எதுவோ அவனுக்கு தவறாகப்பட்டது.
“மேம் சாப். ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாயிருங்க.’’ என்று அவளை அமைதிபடுத்த முயன்று கொண்டிருக்க, அவர்களை நெருங்கியிருந்த ஜேம்ஸ், “தவறான புரிதலுக்கு மன்னித்து விடுங்கள். அவர் மது அருந்தி இருக்கிறார்.’’ என்று உரத்த குரலில் ஆங்கிலத்தில் அறிவித்தபடி அங்கு நுழைந்தான்.
விக்ரம் அவனை முறைத்தபடி, அங்கிருந்து தன் கை வளையத்திற்குள் ஆர்கலியை வைத்தபடி அங்கிருந்து விலக, கை நீட்டி அவளை சுட்டிய லூகா, “ஐ… வில்… கேட்ச் யூ சூன்..’’ என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாக உச்சரித்தான்.
பார்வை வெஞ்சினத்தில் பளபளக்க, முகம் ரௌத்திரத்தில் இறுகி இருக்க, அதற்கு மாறாக இதழ்களோ கீற்றான புன்னகையில் விரிந்திருந்தது.
தற்சமயம் விக்ரமோடு, ஆர்கலியின் உள்ளமும் பயத்தில் உறைய, அவனை விளங்கா பார்வை பார்த்துக் கொண்டே அவ்விடம் விட்டு அகன்றாள்.