சமூகத்தின் முக்கிய புள்ளிகள் மட்டுமே ஒன்று கூடும் பப். அலறிக் கொண்டிருந்த இசை காது சவ்வுகளை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தை முழுதும் இருளில் மூழ்க விடாமல் வானில் மின்னும் மின்னலைப் போல அவ்வப்போது மின் விளக்குகள் ஆங்காங்கே ஒளிர்ந்து அந்த இடத்தில் சோபையான ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன.
அந்த இடத்தின் மையத்திலிருந்து, “ஹே…’’ என்று புறப்பட்ட ஆரவாரக் குரல், ஹை டெசிபலில் காதை பதம் பார்த்துக் கொண்டிருந்த இசையையும் மீறி ஒலிக்க, அங்கிருந்த சொகுசு இருக்கையில் கையில் மதுக் கோப்பையுடன் அமர்ந்து தாக சாந்தி செய்து கொண்டிருந்தவர்கள் கவனம் மொத்தமாய் அந்த குழுவை நோக்கி திரும்பியது.
மத்தியில் மெழுகுவர்த்தி ஒளிர்ந்த கேக்கை சில இளம் பெண்கள் சுமந்திருக்க, அந்த மஞ்சள் ஒளிக்கு தன் முகம் காட்டி வாய் நிறைய புன்னகையோடு நின்றிருந்தாள் ஆர்கலி.
“ஹாப்பி பர்த் டே ஆரு…’’ என்று பல உற்சாக கூக் குரல்கள் ஒலிக்க, அதை தொடர்ந்து, டீஜேவில்,”ஹாப்பி பர்த்டே… ஹாப்பி ஹாப்பி பர்த்டே…’’ என்ற ஆங்கில ராப் பாடல் அலற, கேக்கை வெட்டி முடித்தவளின் முகத்தில் இம்மி அளவும் இடமின்றி முகம் முழுக்க, கேக்கை அப்பி வைத்திருந்தனர் அவளின் தோழிகள்.
“ஹே…ஓ…. நோ…’’ என்று அவர்களிடம் செல்லமாய் கோபித்தவள், தன் கையில் இருந்த திசு பேப்பர் கொண்டு முடிந்த மட்டும் அதை அழுத்தி துடைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதற்கு அதிகம் வாய்ப்பு கொடுக்காது தோழிகள் அவள் கரம் பற்றிக் கொண்டு நடனமாட தொடங்கினர்.
“கைஸ்… இட்ஸ் நாட் பேர்…’’ என்று சலித்தாலும் அவர்களோடு இணைந்து அவளும் உடலை லாவகமாய் நெளித்து ஆட துவங்கி இருந்தாள். முதல் பாடல் முடிந்ததும், அடுத்த அதிவேக ஹிந்திப் பாடல்கள் ஒலிக்க, அந்த மங்கையர் கூட்டம் தொடர்ந்து துள்ளிக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இருபது நிமிடங்கள் விடாமல் ஆடியதில் களைப்படைந்த ஆர்கலி, அருகிலிருந்த தன் தோழியிடம், “சாரு … வாஷ் ரூம் போயிட்டு வறேன்.’’ என அவள் காதோரோம் முணுமுணுத்துவிட்டு, அந்த கூட்டத்தை விட்டு விலகி நடந்தாள்.
ஆர்கலி தமிழ்நாட்டு வேளாண் துறை அமைச்சர் முருகானந்தத்தின் மகள். இவளுக்கு முன் மூத்தது இரண்டும் ஆண்களாகிப் போய்விட, இளைய மகள் தன் அன்னையின் சாயலில் வந்து உதித்ததில் அவருக்கு இளவரசி ஆகிப் போனாள்.
ஆர்கலி அவரின் பொக்கிஷம். மூத்தவன் வருணும், அதற்கு அடுத்தவன் அருணும் ஒன்றை வருட இடைவெளியில் பிறந்தவர்கள். ஆனால் ஆர்கலி அதன் பிறகு எட்டு ஆண்டுகால இடைவெளி எடுத்து பிறந்தவள்.
அவள் பிறக்கும் போது முருகானந்தம் நாற்பதை தொட்டு இருந்தார். ஆனால் அவள் பிறந்த பிறகு தான் அவர் தொட்டது எல்லாம் துலங்கியது. அவள் வளரும் போது அவளோடு சேர்ந்து அவரின் சொத்து மதிப்பும் வளர்ந்தது.
அதனால் ஆர்கலி பார்வையை மொழி பெயர்த்து பார்த்துக் கொள்ளும் ஆட்களை அவளை சுற்றி நியமித்தார். அவள் எதையுமே வாழ்வில் ஆசைப்பட்டது கிடையாது. ஏனெனில் அவள் ஒன்றை விரும்பும் முன்னே அவள் அது மடி சேர்ந்து இருக்கும்.
வாழ்வில் அவள் எதற்கும் பெரிதாய் அலட்டிக் கொண்டது கிடையாது. கல்வியை கடனே என்று தான் முடித்தாள். அவள் அதிகம் வாழ்வில் விரும்பியது வர்ண வர்ண ஆடைகளையும், அதை உடுத்திக் கொள்ளும் போது அது எடுத்துக் காட்டும் அழகினையும் தான்.
எனவே சென்னையில் உயர் கல்வி முடித்ததும், மும்பையில் இருந்த தேசிய உடை அலங்கார தொழில் நுட்பக் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு கலை தான் படிப்பேன் என தன் தந்தையிடம் அறிவித்தாள். மகள் கேட்கும் முன்பே செய்து முடிக்கும் தந்தை, அவள் கேட்ட பின்பு அமைதியாய் இருப்பாரோ…?
அவளோடு சேர்ந்து, அவள் ஒன்றாம் வகுப்பு முதல் உடன் படித்த தோழி சாரு லதாவிற்கும், சேர்த்து தன் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்தார்.
இடம் கிடைத்து விட்டதாக அவர் அறிவித்த நாளில், தன் தந்தையின் தோளை கட்டி கொண்டு குதித்தாள் ஆர்கலி. முருகானந்தம் தனக்கு அமைச்சர் பதவி கிட்டிய போது கூட அத்தனை மகிழ்ந்து போனதில்லை.
வருண் தந்தையின் அடிபற்றி அரசியலில் நுழைந்திருந்தான். சென்னையின் இளம் மேயர் என்ற பதவியை தற்சமயம் அலங்கரித்துக் கொண்டிருக்கிறான். அருணுக்கு அரசியல் ஈடுபாடு அத்தனை கிடையாது.
அதனால் இளம் திரைபட தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்தான். தந்தை, மற்றும் தமையனின் பக்க பலமிருக்க, ஓரிரு படங்கள் அடிவாங்கினாலும், தொடர்ந்து வெற்றி பெற்ற படங்களின் மூலம் இலாபம் பார்த்துக் கொண்டிருந்தான்.
தற்சமயம் கோலிவுட்டை தாண்டி, பாலிவுட்டிலும் அவனுக்கான அடையாளத்தை பதித்துக் கொண்டிருந்தான். ஆர்கலி தந்தைக்கு இளவரசி என்றால், அவன் தமையன்களுக்கு குட்டி தேவதை.
வீட்டில் அனைவரும் அவளை, ‘பப்புமா’ என்று தான் அழைப்பர். இப்படி தமிழ்நாட்டின் செல்ல சீமாட்டியாய் வளர்ந்த ஒருத்தி தன் டீன் ஏஜ் முடிந்தது என அறிவிக்கும் இருபதாம் பிறந்த நாளை கொண்டாட, தன் உடன் படிக்கும் தோழிகளின் ஏற்பாட்டின் படி, அவளின் மெய்காப்பாளர்கள் கூட அறியாது, நகரின் முக்கிய கேளிக்கை விடுதிக்கு புறப்பட்டு வந்திருந்தாள்.
மற்றவர் கண்களுக்கு புலப்படாத தந்தையின் பாதுகாப்பு கோட்டை தாண்டியிருக்கிறோம் என்பதை அவள் அப்போது அறியவில்லை.
அதே கேளிக்கை விடுதியின் முதல் தளத்தில், தன் இருகைகளையும் கழுத்தில் தாங்கி மேற் கூரையை அண்ணார்ந்து பார்த்தபடி கண்களை மூடி அமர்ந்திருந்தான் லூகா.
பாதாம் எண்ணையில் தேன் கலந்த புது நிறம். எடுத்து சீவியிருந்த சிகை தோள் தாண்டி புரண்டிருந்தது. திரண்டிருந்த புஜமிரண்டும் மதம் கொண்ட யானையின் தந்தத்தை ஒற்றை கையில் பற்றி அடக்கிவிடும் வலுவை பறைசாற்றிக் கொண்டிருந்தன.
ஆதிகாலத்தில் பனி மலை சிகரங்களில் போர் புரிந்த வைக்கிங் போர் வீரன் ஒருவன், நவீன உடை அணிந்து வந்ததை போன்ற ஆஜானு பாவ தோற்றத்தில் இருந்தவன், கால் மேல் கால் போட்டு, வலது காலை மட்டும் அறையில் ஒலித்து கொண்டிருந்த மெல்லிசைக்கு ஏற்றவாறு ஆட்டிக் கொண்டிருந்தான்.
“லூ…’’ அவனின் மெய்க்காப்பாளனும் நண்பனுமான ஜேம்ஸ் அழைக்க, தலை நிமிர்ந்து பார்த்தவன், விழிகளிலே, “என்ன…?’’ என்ற வினாவினை தொடுத்தான்.
“நேத்தைக்கு நாம பேசி முடிக்க வேண்டிய டீலை முடிச்சாச்சு. இன்னும் ஏன் இந்தியால இருக்கோம். எனக்கு ஒன்னும் புரியல. உங்க பாட்டிக்கு பிடிச்ச ஆக்ராவையும் தாஜ்மஹாலையும் கூட பார்த்துட்டோம். இன்னும் ஏன் இங்க இருக்கோம். இந்த தூசி, கூட்டம், கார சாப்பாடு எதுவும் எனக்கு சகிக்கல… எப்ப கிளம்புறோம்.’’ என்றான் பிரெஞ்சு மொழியில் எரிச்சலை அப்பட்டமாக காட்டி.
தற்சமயம் வலது காலின் மேல் இடது காலை போட்டுக் கொண்டவன், ஒற்றை புருவம் உயர்த்தி கேள்வி கேட்டவனை கூர்மையாய் பார்த்தான். அந்த பார்வை, ‘உனக்கு நான் கட்டாயம் இப்போது பதில் கொடுக்க வேண்டுமா…?’ என்ற செய்தியை தாங்கியிருந்தது.
அடுத்த கணம் ஜேம்ஸ் தன்னைப் போல ஒரு அடி பின்னால் வைத்தான். தன் தலையை மெச்சுதலாக அசைத்த லூ, “குட்…! ஐ நீட் ட்ரிங்க்ஸ்..’’ என்றவன், மீண்டும் தலையை பழையபடி வைத்து கண்களை மூடிக் கொண்டான்.
அதே நேரம் சென்னையில் முருகானந்தத்தின் அலைபேசி அழைத்தது. ‘நள்ளிரவு ஒரு மணிக்கு யார் தன்னை அழைப்பது…?’ என்ற எண்ணத்தோடு அலைபேசியை எடுத்தவர் அதில் ஒளிர்ந்த தன் இளைய மகனின் எண்ணை கண்டு புருவம் சுருக்கினார்.
‘இவன் ஏன் இந்நேரத்துல கூப்பிடுறான்…?’ என்று எண்ணியபடியே அழைப்பை ஏற்றவர், “ஹெலோ…’’ என்றது தான் தாமதம். அந்தப் பக்கம் அருண் பொரிய தொடங்கியிருந்தான்.
“அப்பா…! பப்புமாவை கவனிக்காம என்ன செஞ்சிட்டு இருக்கீங்க. இப்ப அவ எங்க இருக்கா தெரியுமா…? உங்க கார்ட்ஸ் எல்லாம் களை வெட்ட கூட யூஸ் ஆக மாட்டானுங்க போல. யூஸ் லெஸ் பெலோஸ்..’’ அவன் காட்டமாய் கத்திக் கொண்டிருக்க, முருகானந்தம் நள்ளிரவில் உறக்கம் தடைபட்ட எரிச்சலோடு மகனின் வார்த்தைகளும் புரியாத கோபத்தில், “டேய்…! என்ன நடந்ததுன்னு சொல்லிட்டு குதிடா…! நடுராத்திரி எழுப்பி விட்டுட்டு நாய் மாதிரி கத்திட்டு இருக்க.’’ என்றார்.
“என்னது…’’ என்றார் முருகானந்தம் அதிர்ச்சியாய். மகள் பிறந்த நாளை கொண்டாட பப்பிற்கு சென்றதற்கு எல்லாம் அவருக்கு அந்த அதிர்ச்சி வந்துவிடவில்லை. மாறாக உரிய பாதுகாப்பு ஏதுமின்றி தனியே அவள் சென்றது மட்டுமே அவரை அதிர்ச்சியில் தள்ளியிருந்தது.
“என்னடா சொல்ற அருண்.’’ என்றார் மகனிடம் இறங்கி விட்ட குரலில். ஆர்கலி எங்கு சென்றாலும், தேவையில்லாத நபர்களை தவிர்த்து அந்த இடத்தில் பாதுகாப்பு அடுக்கினை பல மடங்கு பலப்படுத்தி வைப்பார் முருகானந்தம்.
அவருக்கு இருந்த தொழில் எதிரிகள் அப்படி. அதோடு அமைச்சரின் மகள் நள்ளிரவில் அடித்த கூத்து என்று எந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்திலும் தன் மகள் பெயர் வருவதை அவர் இம்மியளவும் விரும்பாதவர்.
சற்று நேரம் அலைபேசியில் மௌனம் நீடிக்க, “இப்ப என்னடா செய்றது…?’’ என்றார் முருகானந்தம்.
“இப்ப கேளுங்க. அவ லொகேசன் அப்பப்ப வாட்ச் பண்ணுங்கன்னு சொல்லியிருந்தேன் இல்ல. அந்த பப்புக்கு பாப்புலர் லீகல் பர்சன்ஸ் மட்டும் வந்தா பரவாயில்லை. அண்டர் கிரவுண்ட் இல்லீகல் பார்சன்ஸ் கூட வருவாங்க. பப்புமாவை பேசன் டிசைனிங் படிக்க பெங்களூர் அனுப்பலாம்னு சொன்னேன். நீங்களும் வருணும் விடாப்பிடியா மும்பை அனுப்பி வச்சீங்க. அனுப்பி விட்டது நீங்க. வால்ல பத்த வச்ச மாதிரி அவளை வாட்ச் பண்ற வேலை எனக்கு.’’ என்றான்.