தன்விக்கு இரவு முழுமையான உறக்கம் இல்லை. ஏதோ அவளை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
மறுநாள் அவளே தேசிகன் அத்தைக்கு அழைத்து பேசினாள். “இன்னும் தகவல் வரலை. இவங்களும் வரலை” என்றவர், “நீங்க காலை சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வாங்க” என்று சொல்லி வைத்தார்.
“ண்ணா என்ன இது? தன்வி?” என்று இருவரையும் கோவமாக பார்த்தார்.
தன்வி, “நான் சம்மதம் சொல்லி தான் நாள் குறிச்சாங்கப்பா” என்றாள்.
“என்ன? என்ன பேசுற நீ? இரு, என்னை வெளிய விட, எனக்காக சம்மதம் சொன்னியா?” என்று சதாசிவம் கேட்க.
“அப்படி இல்லைப்பா. நான் முழுமனசோட தான் சம்மதம் சொன்னேன்” என்றாள் மகள்.
“இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன். என்ன எல்லாம் சேர்ந்து விளையாடுறீங்களா?”
“நான்தான் முதல்லே சொன்னேன் இல்லை. இவர் கண்டிப்பா ஒத்துக்க மாட்டார்ன்னு. மகள் சொன்னா அப்பாவும் மகளுக்காக ஏத்துப்பார்ன்னு சொன்னது யார் இங்க?” என்று வந்தான் தேசிகன். அவனுடன் மனோகர் இருக்க, ஸ்ருதி கணவனிடம் சென்று நின்றாள்.
ராஜேந்திரன் தேசிகனுக்கு பதில் சொல்ல முடியாமல், “நம்ம வீட்ல பிள்ளைங்க விருப்பம் தான் நம்மளோட முடிவுன்றதை மறந்திடாத சதாசிவம்” என்றார் தம்பியிடம்.
“ண்ணா. அவளுக்கு இவனை பிடிக்காது”
“அப்படியா?” என்று தன்வியிடம் புருவம் உயர்த்தினான் தேசிகன்.
தன்வி நெற்றி நீவிவிட்டு கொள்ள, ராஜேந்திரன் தம்பியையும், அவர் குடும்பத்தை தனியே அழைத்து வந்தார்.
“ண்ணா நீங்க என்ன சொன்னாலும் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்றார் சதாசிவம்.
“நீ எப்போ இருந்து ரவுடியா மாறின?” என்று அண்ணன் கோபம்கொண்டார்.
“ண்ணா”
“வாயை மூடுடா. நானும் பேச கூடாதுன்னு பார்க்கிறேன். அரசியல்ல இருக்கிற நான் கூட இதெல்லாம் செய்றதில்லை. ஆனா நீ கேஸ் கொடுத்து உள்ள வைக்கிறதென்ன, ஆள் வைச்சு கடத்த பார்க்கிறதென்ன?”
“ண்ணா, என் பொண்ணுக்காக”
“பொண்ணை பெத்த அப்பன் செய்ற வேலையா இது? சும்மா அவளை இதுக்குள்ள இழுக்காத”
“வேறெதுக்கு நான் இதெல்லாம் பண்ணுவேன்”
“சதாசிவம். இங்க பாரு, நாம சில விஷயங்களை விடணும்ன்னு நினைச்சாலும் அது நம்மளை விடாது. அந்த மாதிரி தான் தேசிகன், தன்வி விஷயம். உன் பொண்ணு அவன் வேணாம்ன்னு தாலியை கழட்டி உண்டியல்ல கூட போட்டுட்டா. ஆனா அவளே திரும்ப அவன் வேணும்ன்னு கேட்கிற மாதிரி தான் சூழ்நிலை அமையுது. இதுல இருந்தே உனக்கு புரியலையா?”
“அப்படியா கேட்ட நீ?” என்று மகளிடம் குதிக்க,
“ப்பா. எனக்கு அவர் வேணாம்ன்றது நான் எடுத்த முடிவு தானே. அதுக்குள்ள நீங்க இந்த கேஸ், கடத்திறது எல்லாம் செஞ்சிருக்க வேண்டாம் இல்லை”
“நான் செஞ்சிதானால தான் இப்போ நீ அவனுக்கு சம்மதம் சொல்றியா?”
“அவர் நம்மகிட்ட ஓர் வாய்ப்பு கேட்டார்”
“நீயும் கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்ட?”
“ப்பா”
“தம்பி. உன் பொண்ணை கார்னர் பண்ண ட்ரை பண்ணாத. இந்த இடத்தில நீங்க எல்லாமே தப்பு. உன் பொண்ணு, தேசிகன், நீ எல்லார் மேலயும் குற்றம் இருக்கு. சும்மா அதையே நோண்டிட்டே இருந்தா வாழ முடியாது. இரண்டு பேருமே வாழ வேண்டிய பிள்ளைங்க”
“ண்ணா”
“தம்பி. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் நம்ம பொண்ணை வேற இடத்துல கட்டி கொடுத்து, அங்க அவ வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு நமக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா? இதே தேசிகன்னா நானே அவனுக்கு உத்திரவாதம் கொடுக்கிறேன். நமக்கு தேவை நம்ம பொண்ணு நல்லா வாழணும், அதை மனசுல வை போதும்”
“ப்பா. எனக்காக சம்மதம் சொல்லுங்க” தன்வி அவர் கைபற்றி கேட்டாள்.
சதாசிவத்திற்கு எப்படி யோசித்தாலும் மனது ஒப்பவில்லை, தேசிகனை பிடிக்கவில்லை தான்.
“ஏங்க. இந்த ஒரு முறை எங்க பேச்சை கேளுங்க, நாமளே நம்ம பொண்ணு கல்யாணத்தை முழு மனசோட நடத்தி கொடுப்போம். அவ நல்லா வாழணும்” என்றார் சுதா.
“எப்படி சுதா?”
“இங்க பாருங்க எனக்கும் அவங்க மேல கோபம் இருக்கத்தான் செய்யுது. அதை பார்த்து என் பொண்ணு வாழ்க்கையை நான் கோட்டை விட தயாரில்லை. வெளியே இருந்து எந்த மாப்பிள்ளை வந்தாலும் டிவோர்ஸ், கையெழுத்து வாங்கி கொடுங்கன்னு தான் கேட்பாங்க. இதுதான் எதார்த்தம். அதை நாம ஏத்துக்கத்தான் வேணும்”
“சரி டைவோர்ஸ் வாங்கிடுவோம்”
“இதுக்கு அப்புறமும் தேசிகன் டிவோர்ஸ் கொடுப்பான்னு உனக்கு தோணுதா? என்ன நினைச்ச அவனை” ராஜேந்திரன் கடுமையாக கேட்டார்.
ஸ்ருதியும், அவர்களுடன் சேர்ந்து கொள்ள, “மாமா. நமக்கு வேற வழி இல்லை. கல்யாண வேலைய பார்க்கலாம் வாங்க” என்றான் மனோகர்.
இறுதியாக சதாசிவத்தின் அரை குறை சம்மதத்துடனே, தேசிகன் தன்வி திருமண வேலைகள் ஆரம்பமானது.
ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு, அதே ஊரில் வேறு ஒரு வீடெடுத்து தங்கினார்கள். பட்டு அவர்கள் இடத்திற்கே தேடி வந்தது. தாலி செய்ய கொடுத்தனர். பத்திரிக்கை கொடுக்க ஆண்கள் மட்டும் சென்னை சென்று வந்தனர்.
தேசிகன் வீட்டு பெண்கள் பாதி நேரம் தன்வி வீட்டில் தான் இருந்தனர். தேசிகன் அவளை பார்க்க முயற்சி செய்யவில்லை.
நிச்சயம் எல்லாம் ஏதுமில்லை. நேரே முகூர்த்த நாள் வந்தது.
அதே கோவிலுக்கு மணக்கோலத்தில் வந்து நின்றாள் தன்வி.
தேசிகனின் முடிவு அது. மண்டபம் எல்லாம் வேணாம். அந்த கோவில்ல தான் எங்க கல்யாணம் நடந்தாகணும் என்று உறுதியாக நின்றுவிட்டான்.
கோவில் முழுதும் அலங்காரத்தில் ஜொலித்தது. சீரியல் லைட்டுகள் பகல் போல் காட்சியளிக்க, தன்வி வந்த நேரம் அவளையே பார்த்து நின்றான் தேசிகன்.
இருவரும் அருகருகே நிற்க, முதலில் பூஜை அமர்க்களமாக நடந்தேறியது.
அடுத்து இவர்களின் திருமணமும் கோலாகலமாக நடந்தது.
சுஜாதா முதல் கொண்டு தேசிகனின் தந்தை வீட்டினரும் வந்திருந்தனர்.
சாவித்திரியை தன் பக்கத்தில் நிற்க வைத்த தேசிகன், தன் தம்பிகளையும் அருகேயே வைத்துக்கொண்டான்.
மிதமான அலங்காரத்தில் தனக்கருகே நின்ற தன்வியை நேருக்கு நேர் பார்த்தபடி மூன்று முடிச்சிட்டான் தேசிகன். தன்வி அமைதியாக, அவனின் மாங்கல்யத்தை ஏற்று கொண்டாள்.
சதாசிவம் மகள் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவளுக்கு அர்ச்சத்தை தூவினார்.
அதன்பின்னான சடங்குகள் நடந்து முடிய, உணவுக்காக தேசிகனும் தன்வியும் தனியாக அமர வைக்கபட்டனர். தேசிகன் மாலை அவன் கழுத்து செயினில் சிக்கி கொண்டிருக்க, அதனை சரி செய்து கொண்டிருந்தவனிடம்,
“என்னை இதே கோவில்ல வைச்சு ஜெயிச்சுட்டீங்க இல்லை” என்று கேட்டாள்.
தேசிகன் விரல்கள் நொடி நின்றதுடன், “தாலி கட்டி எல்லாம் யாரும் யாரையும் ஜெயிச்சிட முடியாது. அதுக்கு என் அப்பாம்மாவே சாட்சி” என்றான்.
தன்விக்கு அவன் பதில் நன்றாக புரிந்தது. “அப்புறம் எதுக்கு இதே கோவில்?”
“தொலைச்ச இடத்துல தானே தேடணும்”
“நான் தொலைஞ்சுதா எனக்கு ஞாபகமில்லை”
“நான் என்னை தான் தேடினேன்” என்ற தேசிகனின் பதிலில் பெண்ணுக்கு மெலிதான புன்னகை.
“தேசிகன்னா யார்ன்னே நான் புரிஞ்சுக்க நீ தேவைப்பட்ட”
“புரிஞ்சுக்கிட்டீங்களா என்ன?”
“தெரியலை. இனி கூடவே தானே இருப்ப. ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பா புரிஞ்சிப்பேன். ம்ம். கூட இருப்ப தானே?” என்று கேட்க,
“உங்களுக்கு என்ன தோணுது?” என்றவள், தேசிகனின் மாலையை சரி செய்தாள்.
அவனை நெருங்கி நின்று, பெண்ணின் மெல்லிய குளிர்ந்த விரல்கள் அவன் கழுத்தில் உரச, செயின் சிக்கலை சரி செய்து கொண்டிருந்தவளின் புது மாங்கல்யம் தேசிகனின் முகத்தில் மோதியது.
தன்வி சிக்கலை நீக்கிவிட்டவள், மாலையை சரியாக அணிவித்து அவனிடம் இருந்து விலக பார்க்க, எதுவோ இழுபட்டு மீண்டும் தேசிகனிடமே முட்டி நின்றாள்.