உடனே இங்கிருந்து கிளம்பியாக வேண்டும். “டிக்கெட் வேணும். சீக்கிரம் பாருங்க” என்று அவளின் ஆட்களை முடுக்கிவிட்டவள், மெடிக்கல் எமெர்ஜென்சி என்று மீட்டிங் ஆட்களுக்கு தகவல் கொடுத்தாள்.
சதாசிவம் காணாமல் போனதை பற்றி யாருக்கும் தெரிய கூடாது என்பதால் அவளின் உதவியாளர்களுக்கு கூட சொல்லாமல் கிளம்பினாள்.
அன்றைய நாளே முடிந்துவிட்டது. ஆனால் சதாசிவத்தை பற்றி சின்ன தகவல் கூட இல்லை.
‘அப்பா கிடைத்துவிட்டார்’ என்ற சொல்லை கேட்க, மிகுந்த வேண்டுதலுடன் விமானத்தை விட்டு வெளியே வந்த தன்விக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உடன் அச்சமும் அதிகரித்தது.
பணம், பதவி எல்லாம் இருந்தும் அப்பாவை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்?
பெரியப்பாவிற்கு அழைத்தவள், அவர் எடுக்காமல் போக வேறு ஒருவருக்கு அழைத்தாள்.
அவருடன் தொழில் தொடர்பாக அடிக்கடி பேசிய பயன், யாரை பிடித்தால் நடப்பது தெரியும் என்று புரிந்து கொண்டு அவருக்கு அழைத்து கேட்டாள்.
“தலைவர் தேனில தான் இருக்கார்ம்மா. மண்டபத்தை விட்டு நகரலை” என்றார் அவர்.
தன்விக்கு ஏதோ புரிவது போல் இருக்க, “தேசிகன்?” என்றாள் கம்மிவிட்ட குரலை சரிசெய்து.
“ஆமாம்” என்று அவர் சொல்ல, தன்வி நகர முடியாமல் அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
காட். கோவம் உச்சிக்கு ஏற, உடனே அவனுக்கு அழைத்தாள் பெண்.
தேசிகன் போன் எடுக்க வேண்டுமே!
“எனக்கு டிக்கெட் பாருங்க” என்று வைத்தவள், அங்கிருந்து அப்படியே தேனி கிளம்பினாள் பெண்.
ராஜேந்திரன் இன்னமும் மண்டபத்தில் இருக்க, தன்வி நேரே அவரிடம் சென்றாள். மகளை பார்த்ததும், “நீ ஏன் இங்க வந்த?” என்று ராஜேந்திரன் கோவம் கொண்டார்.
“எனக்கும், இதுக்கும் சம்மந்தம் இருக்கு இல்லை பெரியப்பா” என்றாள்.
“தன்வி நீ உன் அப்பா பொண்ணுன்னு காட்டாத. உங்களுக்கெல்லாம் எதிலும் நிதானம் இல்லையா?” என்று கத்தவே செய்தார்.
“உன் அப்பாக்கு தேசிகன்கிட்ட இருந்து கையெழுத்து வேணும்ன்னா இந்தளவு இறங்குவானா அவன்? விடிஞ்சா அவங்க வீட்ல கல்யாணத்தை வைச்சுக்கிட்டு அவனை அடிச்சு, மிரட்டி, கடத்த பார்த்திருக்கான். அறிவுள்ளவன் செய்ற வேலையா இது. முட்டாள், முட்டாள். அவ்வளவு படிச்சு சொன்னேன். கேட்டானா என் பேச்சை” என்று வெடித்தார் மனிதர்.
“கையெழுத்துக்காகவா?” தன்வி திகைத்தாள்.
“முன்ன அவன் செஞ்சு வைச்சு கிறுக்கு தனமே அதிகம். இதுல இது வேற?”
“நாம பேசி பார்க்கலாம் பெரியப்பா”
“என்னன்னு பேசுவ? அப்போ உனக்காக, நீ அவங்க வீட்டு மருமகளா வரணும்ன்னு தான் உன் அப்பனை விட்டாங்க. இல்லைனா போதை மருந்து கேஸ் கொடுத்து தேசிகனை மாசம் உள்ள வைச்சதுக்கு அவனை விட்டிருப்பாங்க நினைக்கிறியா நீ?
“ட்ரக் கேஸா?” தன்வி அதிர்ந்து அமர்ந்துவிட்டாள்.
இவ்வளவு நேரம் தெரியாத சோர்வு இப்போது பெண்ணுக்கு தெரிந்தது. கால்களில் பலம் இல்லாதது போல் உணர்ந்தாள் பெண்.
ஏன் இந்தளவு தந்தை கீழிறங்க வேண்டும்? அப்போது செய்ததும் சரியில்லை, இப்போது செய்ய நினைத்ததும் சரியில்லை.
“ஊருக்குள்ள கூட விட மாட்டேங்கிறாங்க. நம்ம பதவி பவர் எல்லாம் வெளியே தான், இன்னமும் ஊருக்குள்ள இந்த கூட்டம் எல்லாம் அப்படியே தான் இருக்காங்க” என்று ராஜேந்திரன் கடுப்படித்தார்.
வயதான காலத்தில் அவருக்கு தூங்க கூட முடியவில்லை. தம்பியின் கவலை ஒரு பக்கம், தங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோவம் மறுபக்கம்.
என்னோட பதவி, பவர் எல்லாம் இவங்க முன்னாடி ஒண்ணுமே இல்லையா என்ன?
மனிதருக்கு தாங்கவே முடியவில்லை. தேசிகன் ஊருக்குள் கூட நுழைய முடியவில்லை. எல்லையிலே தடுத்து நிறுத்தபடுகிறார்கள்.
எவ்வளவு பெரிய அதிகாரிகள், காவலர்கள், அரசியல்வாதிகள் சென்றாலும், உள்ள விட முடியாது என்றே நிற்கிறார்கள்.
பணம் இருக்குமளவு ஆட்களையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு ஒன்றென்றால் மற்றவர்கள் உயிராக நிற்கின்றனர்.
“இந்த சுத்து வட்டாரத்திலே அவங்க ஆளுங்க தான் அதிகம் சார். நாம மேல கை வைச்சா வேற மாதிரி தான் போய் முடியும். பேசி சமாதானமா முடிச்சுக்க பாருங்க” என்று இவருக்கு தான் அறிவுரை கிடைத்தது.
ராஜேந்திரனுக்கு அவர்கள் பலம் தெரியும். ஆனால் இவ்வளவு உறுதி என்பது அவருக்கும் இப்போது தான் தெரிகிறது.
எப்படியாவது உடைத்துவிடலாம். அவர்களுக்குள் ஊடுருவி தன் தம்பியை மீட்டுவிடலாம் என்று படாதபாடு படுகிறார். ஆனால் ஒரு அடி கூட நகர முடியவில்லை.
ஆரம்பித்த இடத்திலே தான் நின்று கொண்டிருக்கிறார். இதில் தன்வி வேறு அவர்கள் ஊருக்கே வந்து நிற்கிறாள்.
நிச்சயம் அவர்களுக்கு தன்வி வரவு தெரிந்திருக்கும். இனி என்ன செய்வார்களோ?
கனத்த மௌனத்திற்கு பிறகு ஓர் முடிவோடு நிமிர்ந்த தன்வி, “நான் அவங்க வீட்டுக்கு போறேன் பெரியப்பா” என்றாள்.
“இப்போதானே சொன்னேன். அவங்க ஊர் எல்லையில”
“பெரியப்பா. நான் போறேன். என்னை விடுவாங்கன்னு தோணுது” என்றாள் தன்வி இடையிட்டு அழுத்தமாக.
“இல்லை. இது சரிப்பட்டு வராது. எல்லாம் கோவத்துல இருக்காங்க, நீ இப்போ உள்ள போனா”
“எதுவும் ஆகாது. அப்படியே என்னவா இருந்தாலும் நாம சந்திச்சு தான் ஆகணும் பெரியப்பா” என்றாள் பெண்.
சதாசிவம் அவர்களின் பிடியில் இருக்கிறாரே?
“நானும் வரேன்” என்று ராஜேந்திரன் யோசித்து சொன்னார்.
இனியும் நாளை கடத்துவதில் பயனில்லை. நேருக்கு நேர் பேசத்தான் வேண்டும்.
ராஜேந்திரன் கார் அவர்கள் எல்லையில் நிற்க, “விட முடியாது” என்றார்கள்.
தன்வி அவள் பக்கம் கார் கண்ணாடியை இறக்க, உடனே அவர்களுக்கு பாதை விட்டனர்.
ராஜேந்திரனுக்கு கோவமே. “எனக்கே வழி இல்லை. ஆனா உன்னை பார்த்ததும் விடுறாங்க” என்று பொங்க செய்தார்.
“பெரியப்பா. அவங்களுக்கு நான் அவங்க மருமகள். தேசிகனுக்கான மரியாதை எனக்கு கிடைக்குது. அவ்வளவு தான்” என்றாள் தன்வி.
ராஜேந்திரன் ஆச்சரியமாக இதை உள்வாங்க, கார் தேசிகன் வீட்டிற்குள் நுழைந்தது.
எதையும் வெளிக்காட்டாமல் இருவரையும் வரவேற்று குடிக்க கொடுத்தனர். தன்வி கண்கள் தேசிகனை தேடியது.
“இப்போ உன் அப்பாக்காக என் மருமகனை தேடுற இல்லை” என்று அத்தை பளிச்சென கேட்டார்.
தன்வி இந்த கேள்வியை எப்படி எதிர்கொள்ள என்று நொடி திணறி, “அவருக்காகவும் தான் தேடினேன்” என்றாள் தன் மனதை மறைக்காமல்.
“என்ன திடீர்ன்னு?” அவர் நம்பாமல் கேட்க,
“அவர்கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்றாள்.
எல்லார் முகத்திலும் கோவம். “உன் மன்னிப்புக்காக ஒன்னும் என் மருமகன் தவம் கிடைக்கலை” என்றார் அத்தை.
“கேட்க வேண்டிய இடத்துல நான் இருக்கேன்” என்று தன்வி சொல்ல,
“உன்னை மன்னிச்சுட்டேன். நீ கிளம்பலாம்” என்று வந்தான் தேசிகன்.
அவனிடம் காயங்கள் நன்றாக தெரிய, பெண்ணுக்குள் குற்ற உணர்ச்சி.
“சாப்பிட வைச்சு அனுப்பி வைங்க அத்தை” என்று சொன்னவன் வெளியே செல்ல போக,
“தேசிகன். ப்ளீஸ்” என்றாள் தன்வி.
“பேர் சொல்ல கூடாது” பெண்ணை பார்த்து தீர்க்கமாக சொன்னான்.
“சரி இனி சொல்லலை. உங்ககிட்ட பேசணும்”
“எனக்கு பேச ஒன்னுமில்லை”
“என் அப்பா”
“அப்படி யாரையும் எனக்கு தெரியாது” அவளை பேச விடாமலே இடைவெட்டினான்.
“தம்பி. உன் கோவம் நியாயம். என் தம்பி செஞ்சது தப்பு” என்று ராஜேந்திரன் பேச,
அங்கிருந்தோர் எல்லாம் அதிர, தன்வி அவனை அலுப்புடன் பார்த்தாள்.
“திரும்ப நீ ஆரம்பிக்காத தேசிகா”
“இதென்ன நான் நீ போட்டியா?”
“மருமக சம்மதம் சொன்ன சந்தோஷத்தை கூட நாங்க அனுபவிக்கல. அதுக்குள்ள நீ குண்டை தூக்கி போடுற” என்று பெரியவர்கள் சத்தமிட்டனர்.
“தாத்தா. நான் சொன்ன பிராயசித்தம் இது இல்லை” என்றான் தேசிகன்.
“அவங்க அப்பா பண்ண தப்புக்கு மகள் ஏன் பிராயசித்தம் பண்ணனும்?”
“அவங்க அப்பாவை விட்டுடு. பேச்சு உனக்கும், உன் பொண்டாட்டிக்கும்”
“இந்த மேடத்துக்கு இருக்க அதே தன்மானம், சுயமரியாதை, மதிப்பு எல்லாம் எனக்கு இருக்காதா? அவங்க வேணாம் சொன்னா நான் வேணாம். அவங்க வேணும் சொன்னா நான் வேணுமா?” என்று தன்வியை நேருக்கு நேர் பார்த்து கேட்டான் தேசிகன்.