மனம்கொள்ள காத்திருக்கிறேன்!

21

தீக்ஷிதா விடுமுறை முடிந்து கல்லூரி செல்லும் நாளும் வந்தது. அதனால் தன் வீடு செல்ல, எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

பெண்ணவளுக்கு மனதேயில்லை.. கணவனை விட்டு பிரிய.. ‘என்ன செய்வது.. படிக்க வேண்டுமே’ என எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.. அத்தோடு கணவனிடம் “அந்த வீட்டில் இருக்கலாமே.. நீங்க வேலவன் தானே போறீங்க.. அங்கே வாங்களேன்” என்றாள்.

கணவனுக்கும் அதே ஆசை இருக்கிறதுதான்.. மனையாளோடு இருக்கலாம்.. கொஞ்சம் கொஞ்சம் அவளை உரசிக் கொண்டும்.. அணைத்துக் கொண்டும் உறங்கலாம் என, ஆசைதான். ஆனால், லேகா தனியாக இருக்கிறாள்.. அவளை எப்படியேனும் கணவனோடு சேர்த்திட வேண்டும் என ஒரு எண்ணம். தான் மட்டும் சேர்ந்து இருப்பது உறுத்திகிறது பலநேரங்களில். 

அதனால் மனையாளிடம் “ம்.. இது பெரிய ப்ராசஸ் திக்க்ஷி ம்மா.. கொஞ்சம் டைம் கொடு.. சீக்கிரம் வந்துவிடுகிறேன்” என சொல்லி அவள் மடித்து வைத்திருந்த துணிகளின் மேல்.. படுத்துக் கொண்டான்.

தீக்ஷி “ஹய்யோ.. நான் என்ன செய்வேன்.. எல்லாவற்றை இப்படி கலைக்கிறீங்க” என சொல்லி சும்மாவேனும் அழத் தொடங்கினாள்.

சந்துரு அவளை தனக்குள் இழுத்துக் கொண்டு உருளத் தொடங்க.. பெண்ணவள்.. “ம்கூம்.. இப்போதுதான் நல்லவர் மாதிரி பேசினீங்க.. அக்கா தனியா இருக்கா என் மாமா இல்லாமல்ன்னு.. இப்போ என்ன ரொமான்ஸ் என்கூட.. போங்க” என சொல்லி.. கணவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்.

“அடி.. அது அது செண்டிமெண்ட். இது ஜஸ்ட் ரொமான்ஸ்.. ஒரே கிஸ்.. ஒரே ஹக்’ன்னு.. அதைவைச்சே காலத்தை ஓட்டுறேன்.. அதுக்கு கூட.. நீ கிண்டல் பண்ற.. வர வர.. கொழுப்பு ஜாஸ்த்தியா போச்சு..” என சொல்லி.. தன்னவள் தன் நெஞ்சில் பதித்திருந்த.. தளிர் கரங்களை தன் அசால்ட்டான தாக்குதலில் தகர்த்து.. அவளின் மேலேயே.. படர்ந்து.. இன்னமும் அழுத்தமாக அவளை தழுவிக் கொண்டான் காதல் கணவன்.

“ஏ சூழலி..

அழகி.. விலகி..

கலகட்டி  போறவளே..

இருடி.. திருடி..

பொழியுது தேனு..

பொதையுறேன்  நானு..

அடைமழ கொட்டுச்சா..”

நீண்ட முத்தத்திற்கு பிறகு.. இருவரும் விலகினர்.

பெண்ணவள் நிமர்ந்து எழுந்து அமர்ந்தாள். 

சந்துரு “காபி பேபி..” எழுந்து கிட்சென் சென்றான்.

தீக்ஷி  மீண்டும் எல்லாவற்றையும் மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். சந்துரு காபி பிஸ்கட் என எடுத்து வந்தான் அறைக்கு.. இருவரும் அதை மென்றுக் கொண்டே வேலையை செய்தனர்.

தீக்ஷி “உங்ககிட்ட ஒன்னு சொல்லவா.. “ என ஆரம்பித்தாள்.

சந்துரு “என்ன..” என்றான்.

லேகா, ஷிவாவின் உடல்நலமில்லா போது சென்று மருத்துவமனையில் பார்த்துக் கொண்டதை பெண்ணவள் இப்போது கணவனிடம் சொன்னாள்.. “அப்பாதான் கூட இருந்தாங்களாம்.. அப்பாதான் என்கிட்டே சொன்னாங்க” என்றாள்.

சந்துருவிற்கு சிரிப்பாக இருந்தது.. கேட்டுவிட்டு சிரித்தான் ஒரு மூன்று நிமிடம். தீக்ஷிக்கும் சிரிப்பு.. புன்னகையோடு.. கணவன் சிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் நிதானமாக சந்துரு “அப்போ உன் அண்ணனுக்கு.. அந்த ஷேர்ஸ் வேண்டும். அப்போதுதான் லேகாவோடு வாழ்வான்.. ம்.. அதான் தடுக்குது. அவளை இப்படியே விட்டு வைத்திருக்கிறான் போல..” என்றான்.

தீக்ஷி “சந்துரு.. இன்னமும் அதையே சொல்லாதீங்க. ஷிவா அண்ணா, அப்படி ஒன்னும்.. இல்லைன்னு எனக்கு தோணுது” என்றாள்.

சந்துரு நக்கலாக “என்ன வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல.. முட்டாள்தனமாக உன் அண்ணனை நீ நம்பு.. அவனுக்கு.. லேகாவின் அருமை தெரியலை.. அவன்கூட வாழனுமா அவள்ன்னு இருக்கு.. ஆனால், லேகாவிற்கு அவனைத்தானே பிடிக்குது.. ” என சலித்துக் கொண்டே பேசினான்.

தீக்ஷிக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை.

சந்துரு “அவளுக்காகதான் எல்லாமே தீக்ஷி.. நீ தப்பா எடுத்துக்காத.. நம்ம கல்யாணமே அவளுக்கு ஷிவாவை பிடிக்கும் என்பதால்தான் நடந்தது. இந்த ஷிவாவிற்கு இதெல்லாம் புரியாது.. ம்..” என பேச முடியாமல் அமைதியானான்.

தீக்ஷிக்கு ஒருமாதிரி ஆக “அப்போ என்னை வேண்டாம்ன்னு சொல்லிடுவீங்களா” என்றாள்.. குழந்தையென.

கணவன் “லூசு.. ஏதாவது உளறாத. இப்போது நீ வேற கிளம்பாத புதுசா.. எனக்கு இந்த ஷிவாவின் மேல் வருகிற கோவம் அப்படியே உன்மேல வந்திடும். சும்மா.. எதையாவது சொன்னால்.. நீ எதுக்கு உன்னை நினைத்துக் கொள்கிறாய்.. அப்படிதான் நம்ம ரிலேஷன்ஷிப் இருக்கா? போய் வேலையை பாரு.. சித்தூர் போயிட்டு லேகாவை பார்த்துட்டு சென்னை வரனும்.. கிளம்பு. அப்புறம், இதை மறந்துட்டேன்.. அதை மறந்துட்டேன்.. எடுத்து வந்து கொடுங்கன்னு சொல்லாத..” என்றவன் எழுந்து சென்றான் தன் அறைக்கு.

தீக்ஷிக்கு, கணவனின் நிலை புரியும்.. அக்கா இப்படியே வீட்டில் இருக்கிறாளே என கவலையும்  புரியும்.. நான் இப்போது பேசியது தவறுதான் என எண்ணி.. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு.. குளித்து.. உடைமாற்றிக் கொண்டு தயாராகினாள்.

சித்தூர் கிளம்பினர். செல்லு வழியில் உணவு உண்டுவிட்டு.. நடுயிரவில் வீடு வந்தனர். லேகாவிடம் சொல்லியிருந்தனர், அதனால் லேகா விழித்திருந்தாள். 

லேகாவின் முகத்தில் ஜீவனில்லா புன்னகை. இருவரையும் தலையசைத்து வரவேற்றாள். தீக்ஷி “அண்ணி, சாப்பிட்டீங்களா.. இந்தாங்க.. ஐஸ்கிரீம்..” என்றாள்.

லேகா வாங்கிக் கொண்டாள்.. “எக்ஸாம் எப்படி செய்திருக்க..” என்றாள்.

இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர். தீக்ஷி மேலே கிளம்பி சென்றாள்.

சந்துரு இப்போது அமர்ந்தான் லேகாவின் அருகே.. “என்ன லேகு, ஷிவா போன் ஏதாவது..” என்றான்.

லேகா “டேய்.. அதெல்லாம் எதுக்கு இப்போ.. போய் தீக்ஷி கூட டைம் ஸ்பென்ட் பண்ணு.. சும்மா என்னை ஆராய்ச்சி பண்ணாத” என்றாள் எரிச்சலாக,

சந்துரு விடாமல் “ஆமாம்.. சண்டை என்னால்தானே ஆரம்பித்தது.. அதாவது, நான் ஷேர்ஸ் கொடுக்கலைன்னு. இல்லை, ஷிவா ஏதாவது உன்னை அவாயிட் பண்றானா” என்றான்.

லேகா தலையசைத்தாள் ‘இல்லை’ என.

சந்துரு “இந்த சேர்ஷ்ஸ் அப்புறம் தாத்தாவோட உயில் பற்றி சொல்லாததால் வந்ததா” என்றான்.

லேகா “டேய்.. நீ ரொம்ப யோசிக்கிற” என்றாள்.

சந்துரு “லேகாவை நான் யோசிக்காமல் இருந்தால்தான் பிரச்சனை.. சொல்லு.. அவன் உன்கிட்ட இந்த தாத்தா உயில் பற்றி சொல்லியிருந்தால்.. நீ என்கிட்ட வந்து கண்டிப்பா எழுதிக் கொடுக்க சொல்லியிருப்பதானே.. சுமூகமா முடிந்திருக்கும். அவன் உன்கிட்ட எதுவுமே சொல்லைன்னு கோவமா” என்றான்.

லேகா ஓய்ந்தக் குரலில் “சந்துரு.. உன்னைவிட ஷிவா எவ்வளவோ பரவாயில்ல.. என்னை கொஞ்சமாவது புரிந்திருக்கார் போல” என்றவள் அன்னார்ந்து பார்த்துக் கொண்டே “நான் உன்கூடதான் இருப்பேன்.. அந்த ஷேர்ஸ்சினை கொடுக்க சொல்லியிருக்கமாட்டேன்னு.. அவருக்கு தெரிந்திருக்கு.. க்கும்.. என்கிட்டே எதுவமே சொல்லியே.. அன்னிக்கு கூட.. ரொம்பநேரம்.. என்னை தேடிட்டே.. இருந்தான்..” என கடைசி வார்த்தைகளை தனக்குள் சொல்லிக் கொண்டவள்.. தானும் ஷிவாவும் கடைசியாக இருந்த நாளினை நினைத்துக் கொண்டாள்.. சொல்லாமல் கொள்ளாமல் கண்ணீர் வழிந்தது, பெண்ணுக்கு.

சந்துரு, என்ன செய்வது என தெரியாமல் “நான் பேசறேன்.. இதை முடித்துக் கொள்ளாமே” என்றான்.

லேகா “அஹ.. இதை முடிக்கணும்ன்னு நினைச்சாலே தலை வலிக்குதுடா.. என்னடா பேசனும்.. என்னடா செய்யணும்.. எப்படி இதை பார்த்தாலும் எனக்குதானே அசிங்கமாகுது. அப்படி வெட்கம்கெட்டு.. அவரை கல்யாணம் செய்துகிட்டேன்.. என்னுடைய அடத்தினால்தானே நடந்தது.. இது முழுக்க முழுக்க ஷேர்ஸ்சுகாக மட்டும் நடந்த கல்யாணம்.. அது உண்மைதானே. அதை என்னால் மறக்கவே முடியலை.. நான் ஏமாந்த்திருக்கேன்.. கல்யாணம் ஆனபிறகும்.. என்கிட்டே எதுமே சொல்லலை.. எனக்கு புரியலை.. அவரின் மனதில் எங்க நானிருக்கேன்னு புரியலை.. நான் அவருக்கு சப்போர்ட் செய்யமாட்டேன் அப்படின்னா.. என்கிட்டே ஏதும் சொல்லமாட்டாரா..” என கண்ணீர் துடைத்துக் கொண்டே பேசி முடித்தாள்.

சந்துரு “லேகா, ஷிவா உன்னை..  உன்னை விரும்பாமல்.. இந்த திருமணம் நடந்திருக்கும்ன்னு நீ நினைக்கிறீயா” என்றான்.

லேகாவிற்கு “போடா.. அதெல்லாம் இருக்கும்ன்னு.. தோணலை. நம்பிக்கை போயிடுச்சி.. அவர் என்னை நம்பவில்லைதானே. எனக்கும் எல்லாம் சரியாகிடும்ன்னு இருந்த நம்பிக்கை போகிடுச்சி” என்றாள்.

சந்துருவிற்கு இந்த வார்த்தைகள்.. வலியை  தந்தது. லேகா, ஒரு அன்பு பைத்தியம். அவளுக்கு, அன்பு கொண்டவர்களுக்கு எதிராக யோசிக்க தெரியாது, ஒருவரை பிடித்தது என்றால் பிடித்தது.. ஏன் என்ற கேள்வியே அவளிடம் வராது. அவர்களுக்கு இதற்கு கோவம் வரும்.. இந்த உணவு பிடிக்கும்.. இந்த கலர் பிடிக்கும்.. என எல்லாம் அந்த அன்பானவர்க்ளுக்காகவே யோசிப்பாள். ஆனால், தம்பி கணவன் என்ற இருபெரும் அன்பில் தலைசுற்றி நிற்கிறாள்.. அதுவும் முதல்முறை  தோற்று நிற்கிறாள் லேகா. அதை கண்ட தம்பிக்கு  வலிக்கிறது.

 தம்பி “லேகு.. ஷிவாகிட்ட நான் பேசலாம்ன்னு இருக்கேன்” என்றான்.

லேகா, தம்பியின் வார்த்தைகளை முடிக்க கூட விடவில்லை.. “வேண்டாம்.. அதெல்லாம் அப்படி பேசித்தான் ஆகணும்ன்னு எதுவுமில்ல.. நீ ஏதாவது செய்தேன்னு தெரிந்தால்.. நான் இங்க இருக்கமாட்டேன்.. சொல்லிவிட்டேன்” என்றவள் தன்னறைக்கு சென்றுவிட்டாள்.

லேகாவின் மனதிலிருப்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது சந்துருவிற்கு.. தான் விரும்பி நம்பி மணந்தவன் தன்னிடம் மிகப்பெரிய விஷயத்தை மறைத்ததை அவளால் ஏற்கவே முடியவில்லை. ஞாயம்தான், சரியோ தவறோ ஒரு வார்த்தை ஷிவா சொல்லியிருந்தால்.. இவள் சண்டையிட்டு பேசி.. என ஒருமாதிரி மனம் ஆறியிருக்கும் அவளுக்கு., ஆனால், தன்னை மதிக்கவேயில்லை கணவன் என்பதை அவளால் ஏற்கவே முடியவில்லை.. என சந்துரு எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தான். இதற்கு முடிவேயில்லையா என சிந்தனை.

அஹ.. அன்பிற்கு விடை தேட முடியாது. அன்பு என்பது கேள்வியே இல்லாதது.. அது முழுமை. பதிலுக்கு பதில் வரவேண்டும் என நாம் எதிர்பார்த்தால்.. இன்னமும் முழுயை தேடிக் கொண்டிருக்கிறோம் என உணர்க. லேகாவும் ஷிவாவும்.. இந்த தேடுதலில் இருந்தனர்.

நாட்கள்தான் வேகமாக கடந்தது. எப்போதும் ஷிவா, தன் மானையாளின் நினைப்புடன்.. இருந்தான். பெரும்பாலும்.. வெளியூர் பயணங்கள் இருந்தது. அந்த டென்ஷன் நிறைய இருந்தது அவனிற்கு.. அதெல்லாம்விட எப்போதடா.. சந்துருவின் சவால் நேரம் முடியுமென காத்திருந்தான். ஒரு விடை கிடைக்கும்.. என காத்திருந்தான்.

சந்துருவும் அதற்காக காத்திருந்தான். மாமன் மச்சான் இருவரும் ஒரு முடிவோடு இருந்தனர்.. லேகாவிற்காக.

இந்த நிலையில், ஹம்சாவின் திவசம் வந்தது.

ரமேஷ் இந்தவருடம் எல்லோரையும் அழைத்து செய்ய விரும்பினார். அதனால், தன் சம்பந்தி வீட்டாரை அழைத்தார் திவசத்திற்கு. ‘என்ன செய்வது பேசி ஒரு முடிவெடுக்க வேண்டுமே.’ அதனால், ஏற்பாடுகள் நடந்தது.

திவசத்தன்று.. காலையில்தான் ஷிவா வந்தான்.. நேராக ஏர்போர்ட்டிலிருந்து சித்தூர் வந்து சேர்ந்தான். ரமேஷ் “வாங்க மாப்பிள்ளை” என்றார். 

காலை மணி பதினொன்று இருக்கும். ஓய்ந்த கண்களும்.. களையிழந்த முகமாக வந்து சேர்ந்தான் ஷிவா. பார்த்த லேகாவிற்கு என்னமோ போலானது. கணவன் டயர்டே ஆகமாட்டானா என எண்ணிக் கொண்டிருந்தவளின் கண்களில் இப்போது கலக்கம் வந்தது.

கணவனிடம் பேச முயன்ற மனதை.. அடக்கிக் கொண்டு.. கிட்சென் சென்றாள். ஷிவாவின் கண்கள் அவளையே தொடர்ந்தது கோவமாக. எதுவும் செய்ய முடியாத கோவம் அவனிடம். 

இப்போது சந்துரு “வாங்க” என அழைத்து ஷிவாவின் பார்வையை தன்பக்கம் திருப்பினான்.

ஷிவா ஒரு தலையப்போடு அதை ஏற்றுக் கொண்டு அமர்ந்தான்.

உள்ளிருந்து அத்தை அவர்களின் மருமகள் என இருபெண்கள் வந்து.. ஷிவாவை வரவேற்றனர். ஷிவா அவர்களை நலம் விசாரித்தான்.. இரண்டு வார்த்தைகள் பேசினான். 

தன் மாமனாரை பார்த்து  ஷிவா “அப்பா அம்மா வரலையா” என்றான்.

மாமனார் “இல்ல மாப்பிள்ளை.. அன்றே வடிவேலு சொல்லிவிட்டார்.. வேலையிருக்கு என.. மதியம் சாப்பாட்டிற்கு வந்திடுறேன்னு சொன்னார்.. நீங்க சாப்பிட்டீங்களா” என்றார்.

ஷிவா “ம்.. காலையில் சாப்பிட்டேன் மாமா..” என்றான்.

அய்யர் அழைத்துக் கொண்டு சுந்தரம் இப்போது உள்ளே வந்தார். “ஷிவா.. இப்போதான் வரியா” என்றார்.