அத்தியாயம் 3

தியானம் செய்து தன்னைச் சமன் செய்தவளாய் தனது வீட்டிற்குச் சென்ற தாமரை அன்னையிடம் பேசி சமாதானம் செய்தாள். பின்பு இருவருமாகச் சேர்ந்து உண்டுவிட்டு ஓய்வெடுத்தனர்.

ஆத்மநல்லூரைப் பற்றி விமலா கூறியதிலிருந்து அந்தக் கோவிலைப் பற்றியும் ஊரைப் பற்றியும் அங்குச் செல்வதற்கு முன்பு விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென எண்ணியிருந்தாள் தாமரை. அதன் பொருட்டு அன்று மாலை பக்கத்து வீட்டிலிருக்கும் பெரியவர் லிங்குசாமியிடம் கேட்டு வக்கீல் ராஜாவின் அலைபேசி எண்ணை வாங்கி வந்தாள்.

அதே நேரம் அங்கு ஆத்மநல்லூரில்…

“அரி ஓம் நமோ நாராயணா

ஓம் நமோ நாராயணா

அரி ஓம் நமோ நாராயணா”

தனது கணீரென்ற குரலில் கண்களை மூடியவாறு ஆழ்ந்த பக்தியுடன் மாதவப் பெருமாளை மனத்தில் நினைத்துப் பாடிக் கொண்டிருந்தான் சக்தீஸ்வரன்.

அவன் குரலில் குழைந்து வந்த பக்தியின் உணர்வுப்பெருக்கில், அழகிய மாதவப் பெருமாள் கோவிலில் சாமியைத் தரிசித்தவாறு நின்றிருந்த பெருமக்கள் பலர் நெஞ்சுருக மெய்மறந்து நின்றனர்.

எப்பொழுதுமே சிவனடியாராய் சிவனை மட்டுமே துதிப்பாடிடும் சக்தீஸ்வரனா எம்பெருமாள் நாராயணரை மெய்யுருகிப் பாடுவது என்ற இன்ப அதிர்வுடன் அவனைப் பார்த்திருந்தாள் அவனது மனைவி இளவஞ்சி.

பருவ வயதிலேயே ஓதுவாரிடம் ஈசனுக்கான பண்ணிசைப் பாடல்களைப் பயின்ற சக்தீஸ்வரன், அன்றாடம் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் நித்திய பூஜையாக அவருக்குப் பாடல்கள் பாடி வணங்குவதை வாடிக்கையாகக் கொண்டவன்.

பருவ வயதிலேயே திருவெம்பாவை வாசித்து வந்தவளான இளவஞ்சி, ஈசனின் அடியவரைத் தவிர வேறெவரையும் மணக்க மாட்டேனெனும் மன வைராக்கியத்துடன் வளர்ந்து ஈசனின் நேசனான சக்தீஸ்வரனை மணம் புரிந்து கொண்டவள்.

சென்னையில் சொந்தமாக ஆடை தயாரிக்கும் நிறுவனம் (கார்மெண்ட்ஸ்) நடத்தி வரும் சக்தீஸ்வரன், அங்கேயே தாய் தந்தையர் மனைவியுடன் வசித்து வருகிறான். இளவஞ்சி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறாள்.

சக்தீஸ்வரனுக்கு ஆத்மநல்லூரில் இருக்கும் கருப்பண்ணசாமி தான் குலதெய்வம். சக்தீஸ்வரனின் தந்தை நல்லசிவத்திற்கு அவரது தம்பியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் தங்களுக்கு எந்தச் சொத்தும் வேண்டாமென இந்த ஊர்ப்பக்கமே பல வருடங்களுக்காக வராது இருந்தனர் சக்தீஸ்வரன் குடும்பத்தினர். குலதெய்வப் பூஜையையும் செய்யாது விட்டிருந்தனர்.

சக்தீஸ்வரன் இளவஞ்சியை மணந்த பிறகு, சக்தீஸ்வரனின் ஆயுள்கண்டம் நீங்க ஆத்மநல்லூருக்கு இருவரும் தம்பதியாக வர வேண்டுமென இளவஞ்சியின் கனவில் எம்பெருமான் ஈசன் அசிரீரியாக உரைத்தார். அதனையேற்று இளவஞ்சியும் சக்தீஸ்வரனும் ஆத்மநல்லூருக்கு வந்த போது தான், இந்த அழகிய மாதவப் பெருமாள் கோவிலில் இருந்த சிவலிங்கம் காணாமல் போயிருந்ததைக் கண்டுபிடித்து, வக்கீல் ராஜா மூலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துச் சிவலிங்கத்தை மீட்டெடுத்தனர்.

(இளவஞ்சியும் சக்தீஸ்வரனும் எப்படி இணைந்தார்கள், எவ்வாறு இந்தச் சிவலிங்கத்தைக் கண்டடைந்தார்கள், கயவர்களிடம் இருந்து எவ்வாறு இதனை மீட்டார்கள் எனும் முழுக்கதையை, இதன் முதல் பாகமான ‘எங்கேயோ பார்த்த ஞாபகம்’ நாவலில் வாசிக்கலாம்)

சக்தீஸ்வரன் கண்களை மூடியவனாய் ஆழ்ந்த பக்தியுடன் நாராயணரைப் பாடிக் கொண்டிருந்த போது, அர்ச்சகர் ஆரத்திக் காண்பிக்கும் மணிச்சத்தத்தில் கண் விழித்தான்.

விழித்தவனின் விழிகளில் கண்ணீர் தேங்கி நிற்க, இரு கரங்களையும் விரித்து ஏந்தி தனது குறைகளைக் கூறியவனாய் பெருமாளைத் தரிசித்தான்.

கணவனின் கண்ணீரைக் கண்டதும், இது வரை துக்கத்தை அடக்கி வைத்தவளின் கண்களும் கண்ணீரைச் சொரிய, சற்றுத் தேம்பியவளாய், ‘என்னைக் கை விட்டு விட்டாயே மாதவா! உன் பிரியத்திற்குரிய பக்தை இல்லையா நான்?’ என்று அவளது மனம் இறைவனிடம் கேட்டிருந்தது.

மனைவியின் விம்மல் ஒலிக் கேட்டு அவளைப் பார்த்தவன், அவளது கண்களில் தேங்கி நின்ற கண்ணீரைக் கண்டு அவளின் தோளைத் தட்டிக் கொடுத்தவனாய்த் தேற்றினான்.

ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக் கொண்டு பிரசாதத்தை வாங்கியவனாய் மனைவியின் கைப்பற்றி அங்கிருந்து வெளியே அழைத்து வந்த சக்தீஸ்வரனின் உள்ளம் துயரத்தில் துவண்டிருந்தது.

“நீங்க சிவனைத் தவிர வேற யாரையும் பாடி நான் கேட்டதே இல்லையேப்பா! இன்னிக்கு என்ன அதிசயமா நாராயணரைப் பாடுனீங்க?” கண்களில் கண்ணீர் மிச்சமிருக்க, புன்னகையில் கவலையை மறைத்தவளாய் கேட்டிருந்தாள் இளவஞ்சி.

“என் ஈசன் தான் என்னைக் கைவிட்டுட்டாரு! இவராவது நம்ம பிரச்சினையைச் சரி செய்ய மாட்டாரான்ற ஆதங்கம் தான் தங்கப்பொண்ணு” சற்றுச் சோகமாய் அவன் உரைக்கவும்,

“என்னங்க நீங்க? எல்லாம் தெரிஞ்ச நீங்களே எம்பெருமான் ஈசனை இப்படிக் குறையா பேசலாமா? உங்க ஈசனுக்கு நிகரா என்னை நேசிக்கிறதா எப்பவும் சொல்லுவீங்களே! அந்தளவுக்கு அவர் மேல அன்பை வச்சிருக்க நீங்க இப்படிச் சொல்லலாமா?” ஆதங்கத்துடன் கேட்டிருந்தாள் இளவஞ்சி.

“அவர் மட்டும் அப்படிச் செய்யலாமா வஞ்சி. எனக்கு ஒரு பிரச்சனைனா நான் தாங்கிக்குவேன். உன்னைக் கஷ்டப்படுத்தும் போது எப்படி நான் பொறுத்துப்பேன்” வேதனையான குரலில் அவன் உரைத்திருந்த நேரம்,

“யய்யா! சக்தி தானே நீயி! அப்படியே உன் தாத்தனை உறிச்சி வச்சிருக்கியேயா” என்றவாறு எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அவனருகில் வந்து தனது நடுங்கும் கரங்களால் அவனின் கன்னத்தை வருடியவாறு கேட்டிருந்தார்.

அவரது கண்களில் தெரிந்த வாஞ்சையிலும் பாசத்திலும் நெகிழ்ந்தவனாய் அம்மூதாட்டியை தன்னருகில் அமர வைத்து, “ஆமா பாட்டி! சக்தி தான் நானு. நீங்க யாரு பாட்டி? என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?” என மென்மையான குரலில் கேட்டான்.

“இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இங்க களவு போன சிவலிங்கத்தை நீ தான முன்ன நின்னு தேடிக் கொண்டாந்து வச்ச! இந்த ஊருல உள்ள அம்பூட்டு பேத்துக்கும் உன்னைத் தெரியும்யா. நான் உன் பாட்டிக்கு சிநேகிதியாக்கும். எனக்கெப்படி உன்னைத் தெரியாம போகும். நீ சிவலிங்கத்தைக் காப்பாத்த கோர்ட்ல கேசு போட்ட சமயத்துல நான் மெட்ராஸ்ல என் பொண்ணு வீட்டுல இருந்தேன். அதான் அப்ப உன்னைப் பார்க்க முடியாம போய்டுச்சு. ஏன் சாமி நீ அதுக்குப் பொறவு இந்த ஊருப் பக்கமே வரலை. அந்தச் சிவலிங்கத்தை இங்கே வச்சதோட உன்னோட வேலை முடிஞ்சிதுனு இருந்துட்டியா?” என்றவர் கேட்டதற்கு,

“இல்ல பாட்டி. இந்த ஊருக்கு வர முடியாதபடி நிறையப் பிரச்சினைகள் வந்துடுச்சு. அதெல்லாம் கவனிக்கவே நேரம் சரியாப் போச்சு” என்றான் சக்தீஸ்வரன்.

“எல்லாருக்குமே அவங்கவங்க பிறவிக்குனு ஏதாவது காரணக் காரியம் இருக்கும் சாமி! உன்னோட பிறவிக்கான காரணக் காரியத்தை அறிஞ்ச பிறகும் அதைச் செய்யாம விட்டுட்டு இருக்கலாமா?” என்று அந்த மூதாட்டி கேட்டதும், பெருமூச்சு விட்டவனாய்,

“இவரைக் காக்குறது எங்க கடமைனா, எங்களுக்குத் தேவையானதை கொடுக்கிறதும் இவரோட கடமை தானே பாட்டி” வேதனை நிறைந்த குரலில் கேட்டான் சக்தீஸ்வரன்.

“கேள்விப்பட்டேன் சாமி! உன் பொஞ்சாதிக்கு ரெண்டு முறை கரு தங்கிக் கலைஞ்சிடுச்சாமே! அந்தச் சோகத்துல தான் இங்கன வராம இருந்துட்டியலா ரெண்டு பேரும்” என்றவராய் சக்தீஸ்வரனையும் இளவஞ்சியையும் அவர் பார்க்க, இளவஞ்சியின் தொண்டை விம்ம கண்களில் கண்ணீர் சூழ, சக்தீஸ்வரனின் முகத்தில் வலியின் ரேகைகள்.

இக்கோவிலுள்ள ஈசனைப் பாதுகாப்பதே சக்தீஸ்வரனின் பிறவிக் கடன் என்று அறிந்த பின்பும் சக்தியால் அதனை முழுமையாகச் செய்ய இயலாதவாறு பிள்ளைப்பேற்றின்மையின் வலி அவனை இங்கு வர விடாமல் செய்திருந்தது.

சிவலிங்கத்தை மீட்டெடுத்த போது வந்தவன் அதன் பின்னர் இரண்டு வருடங்களான நிலையில் இன்று தான் இக்கோவிலுக்கு வந்திருக்கிறான்.

அதிலும் இங்குச் சிவலிங்கத்திற்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அவ்வப்போது வக்கீல் ராஜா மூலம் நிலவரங்களைக் கேட்டறிந்து கொண்டதினால் தான் இங்கு வராமல் இருந்து விட்டான். ஆனால் கடந்த ஒரு வருடமாக இங்கு வரும் அதிகாரிகளுக்கு ஏதேனும் துர்சம்பவங்கள் நடப்பதை அறிந்த பிறகு மனம் கேளாமல் இன்று மனைவியுடன் ஆத்மநல்லூருக்கு வந்திருக்கிறான்.

“பிறவிக் கடமை செய்யவும் மனசுல சந்தோஷம் வேணுமே பாட்டி” அலுப்புடன் உரைத்தான்.

“சடைவு வந்தால் உங்களுக்குச் சங்கடங்கள் தீர்ப்பது யார்?” அப்பாட்டி கூறியது புரியாமல் இருவரும் நோக்க,

“இறைவன் மேல நமக்குச் சடைவு வந்துட்டா நம்மளோட சங்கடங்களை எப்டி இறைவனால தீர்த்து வைக்க முடியும் சாமி” என்ற அம்மூதாட்டியின் வரிகள் அவனைச் சிந்திக்க வைத்தன.

“உன் ஈசனோட மனக்குறையைத் தீர்த்துவையா! அவன் உன் குறையைத் தீர்த்து வைப்பான்” என்ற அந்தப் பாட்டி, இளவஞ்சியிடம் வந்தவராய், “சீக்கிரம் உன் வயிறு நிறைஞ்சிடும் தாயி. வெசனப்படாத! ரெண்டு பேரும் நல்லாருப்பீங்க” என்றவராய் இருவருக்கும் ஆசி அளித்து விட்டுக் கோவிலில் இருந்து சென்றிருந்தார்.

இருவருமே திக் பிரமை பிடித்த நிலையில் அமர்ந்திருந்தனர். அடுத்த ஐந்து நிமிடத்தில் தன்னுணர்வு பெற்றவர்களாய் விழிக்கும் போது, “உன் ஈசனோட மனக்குறையைத் தீர்த்துவையா! அவன் உன் குறையைத் தீர்த்து வைப்பான்” என்ற அந்தப் பாட்டியின் வரிகளே சக்தீஸ்வரனின் செவியில் ஒலித்தவண்ணமிருந்தன.

“என்னுடைய ஈசனுக்கு என்ன மனக்குறை?” எனச் சிந்திக்கலானான் சக்தீஸ்வரன்.

—–

அன்றிரவு உணவை முடித்த பிறகு மொட்டை மாடிக்குச் சென்று காற்று வாங்கியவாறே ராஜாவிடம் பேசலாம் என்று நினைத்த தாமரை மேல் மாடி நோக்கிச் சென்றாள்.

முதல் மாடியில் மாதவன் தங்கியிருக்கும் வீடு இருக்க, அதைக் கடந்து தான் அதற்கு மேல் இருக்கும் மொட்டை மாடிக்குச் செல்ல வேண்டும்.

இவள் படிக்கட்டு வழியாக முதல் மாடிக்குச் சென்ற போது மாதவனின் வீட்டின் ஜன்னலில் இருந்து, புகைப்பிடித்தால் வருவது போன்ற நீளமான புகை வருவதைக் கண்டு கோபமுற்றவளாய், ‘காட்டான்! காட்டான்’ வாய்க்குள் முனகியவாறு படபடவென அவனது வீட்டின் கதவைத் தட்டினாள் தாமரை.

முக்கால் பேண்ட்டும் கையில்லாத பனியனுமாய்க் கதவைத் திறந்தவனை அத்தனை கோபத்துடன் பார்த்தவள், “எவ்ளோ தைரியம் இருந்தா எங்க வீட்டுல சிகரெட் பிடிப்பீங்க? நேத்து என்னமோ அவ்ளோ நல்லவன் மாதிரி பேசுனீங்க” கத்தியிருந்தாள்.

அவளுக்கு இணையான கோபத்துடன் அவளை முறைத்தவனாய், “உன் வீட்டுல தங்குறேன்றதுக்காக உன் பேச்செல்லாம் கேட்டுட்டு அமைதியா இருப்பேன்னு நினைக்காத ராங்கி ராக்காயி. எனக்கும் வாய் இருக்கு. என்னாலயும் இஷ்டத்துக்குப் பேச முடியும்” கண்களில் கோபம் கொப்பளிக்கப் பல்லைக் கடித்துக் கொண்டு அடிக்குரலில் சீறியிருந்தான் மாதவன்.

“கோவக்காரக் கருப்பசாமியாட்டம் இருந்துட்டு யாரைப் பார்த்து ராங்கி ராக்காயினு சொல்ற?” அவனது விளிப்பில் இவளது மரியாதை விளிப்பும் பறந்து போக, கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு சீறினாள்.

மகளின் கத்தல் அட்சரச்சுத்தமாய்க் கீழறையில் இருந்த விமலாவின் செவியைத் தீண்டியிருக்க, அவசரகதியில் மேலே வந்தவராய், “என்னடி என்னாச்சு? எதுக்கு இந்தத் தம்பி கூடச் சண்டைப் போட்டுட்டு இருக்க?” எனப் பதட்டத்துடன் வினவினார்.

“பாருமா! நேத்து என்னமோ இப்ப தண்ணி அடிக்கிறதில்லை. ஸ்மோக் செய்றதில்லைனு அப்படிப் பேசினாரு. இப்ப தம் அடிச்சிட்டு இருக்காரு இந்தாளு. கேட்டா என்னை மரியாதை குறைவா பேசுறாரு” என்று புகார் வாசித்தாள் தாமரை‌.

“ஆன்டி உங்க பொண்ணு தான் தேவையில்லாம என் மேல பழிப்போட்டுப் பேசுறாங்க” அவளை இன்னுமே அழுத்தமாய் முறைத்தவனாய் விமலாவிடம் உரைத்திருந்தான் மாதவன்.

“தாமரை வீட்டுல அகர்பத்தி வாசம் தான்டி வருது. நீ எதையோ பார்த்துட்டுத் தப்பா கேட்குறனு நினைக்கிறேன்” என்று விமலா கூறவும், விருட்டென அவனைத் தள்ளி விட்டு அறைக்குள் நுழைந்து பார்த்தாள் தாமரை.