இளாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் தேவசேனா. என்னதான் இயல்பாக காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் சேஷனின் நினைவு எழாமல் இல்லை. இன்று என்ன செய்து வைக்கப் போகிறானோ? என்று ஏதோ ஓர் உள்ளுணர்வு அவளை உறுத்திக் கொண்டே தான் இருந்தது.
ஆனால், அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்று உரைப்பவன் போல் ஆதிசேஷன் அவளை அழைக்க வரவே இல்லை. சரியான நேரத்திற்கு கார் அனுப்பி வைத்தவன் அத்துடன் ஒதுங்கிக் கொண்டான்.
அப்போதும், “இதை மட்டும் ஏன் செய்யணும்? நான் கேட்டேனா?” என்று மனதிற்குள் கனன்றபடியே தான் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கிளம்பினாள் தேவசேனா.
இந்த கோபம் கார் அனுப்பியதற்காகவா? இல்லை, அவன் வராமல் போனதற்காகவா? என்று ஆழ்மனம் எழுப்பிய கேள்விக்கு விடை தேடும் எண்ணமில்லை தேவசேனாவுக்கு.
மலர் தேவாவின் முகத்தில் தோன்றும் அத்தனை உணர்வுகளையும் ஒன்றுவிடாமல் உள்வாங்கிக் கொண்டிருந்தாலும், எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
ஆனால், வெகுநேரமாகியும் தேவா வாய் திறவாமல் இருக்கவும், “என்னாச்சு தேவா” என்று மட்டும் கேட்டு வைக்க, அதற்கும் அமைதியாக தலையை மட்டுமே அசைத்தாள் தேவசேனா.
“நீ எப்போ இவ்ளோ அமைதியா மாறின?” என்று விடாமல் அவள் கேள்வி எழுப்ப,
“நான் எப்போ மாறினேன் மலர். உன்னோட பாஸ் அடுத்து என்ன பிளான் பண்ணிட்டு இருக்கார்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றாள் அமைதியாக.
அவள் பதிலில் சட்டென புரையேறப் பார்த்தது மலருக்கு. “என்ன என்ன பிளான் தேவா. அதுதான் அவர் வரலையே?” என்று மலர் திக்கி திணறி பேச,
“அவனை அப்படியெல்லாம் நம்பவே முடியாது. கண்டிப்பா பெருசா எதையோ பண்ணப் போறான்.” என்று அவள் யோசனையுடனே கூறவும், மலருக்கு அன்று மதியம் ஆதிசேஷனுடன் பேசிய நிமிடங்கள் தான் நிழலாடியது.
“இதுங்க ரெண்டும் சுத்தி இருக்க நம்மை தான் எப்பவும் சுத்தல்ல விடுதுங்க. அட ஆண்டவா” என்று மனதிற்குள் புலம்பியபடி மலர் அமர்ந்திருக்க, அடுத்த பத்து நிமிடத்திற்கெல்லாம் மண்டப வாயிலை அடைந்தது அவர்களின் கார்.
அமைச்சரின் திருமணம் வெகு ஆடம்பரமாக அரங்கேறிக் கொண்டிருக்க, முக்கிய அரசியல் புள்ளிகள், சினிமா பிரபலங்கள், பத்திரிக்கை, தொழில் துறையினர் என்று நிரம்பி வழிந்து கொண்டிருந்தது அந்த திருமண மாளிகை.
தேவாவின் கார் உள்ளே நுழைவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் இளாவின் சக அமைச்சர் ஒருவர் உள்ளே நுழைந்திருக்க. அவரின் ஆதரவாளர்களால் மண்டப வாயில் நிறைந்திருந்த நேரம் தான் தேவாவின் கார் வந்து நின்றது.
ஊடகத்தினர் தேவசேனாவைக் கண்டதும் கேமராக்களை அவள் புறம் திருப்ப, அவர்களை கண்டு கொள்ளாமல் தேவா காரை விட்டு இறங்கிய நிமிடம் அவளை வரவேற்பவன் போல மண்டபதிற்குள் இருந்து வேகமாக வெளியே வந்தான் ஆதிசேஷன்.
தேவா காரை விட்டு இறங்கியவள் அவன் வேகத்தில் திகைத்து நிற்க, வந்த வேகத்தில் இரு கைகளையும் நீட்டி அவளை அணைத்துக் கொண்டவன் “லவ் யூ பொண்டாட்டி” என்றான் காதோடு.
சுற்றி நின்ற அத்தனை கேமராக்களும் அவர்களை வட்டமிட்டுக் கொண்டிருக்க, “யார் பார்த்தால் எனக்கென்ன?” என்பதுபோல் தேவாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவன் மண்டபத்திற்குள் நுழைய, சேனா அங்கு வைத்து அவனை எதுவும் செய்ய முடியாத ஆத்திரத்தில் பற்களை நறநறவென கடித்துக் கொண்டிருந்தாள்.
அதற்கும், அவள் காதோரம் குனிந்து ஏதோ ரகசியம் பேசுபவனாக, “பார்த்து பல் எல்லாம் கொட்டிட போகுது. அப்புறம் நான் தான் கஷ்டப்படணும்” என்றான் சிரிப்புடன்.
முகம் மாறாமல், அதே மிளிர்வான புன்னகையுடன், “நீ நிச்சயமா என கையால தான் சாகப் போற சேஷா” என்று அவனை மிரட்டினாள் அவன் மனைவி.
“எனக்கு ஓகேதான் பொண்டாட்டி”
“ இது என்ன புதுசா பொண்டாட்டி. அசிங்கமா இருக்கு சொல்லாத”
“ஓ… அப்படியா. அப்போ ஓகே. முயற்சி பண்ணு” என்று சேனா அசராமல் பதில் கொடுக்க, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இருவரும் காதல் மிகுதியில் ஏதோ ரகசியம் பேசுவதாகத் தான் பட்டது.
காரை விட்டு இறங்கிய நிமிடமே மலர் ஒதுங்கிக் கொள்ள, மண்டபத்தின் வெளிவாயிலில் இருந்து உள்ளே நுழைவதற்குள் இத்தனையும் பேசி முடித்திருந்தனர் இருவரும்.
என்னவோ, தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த மலருக்கு அந்த காட்சி அத்தனை நிறைவாக இருந்தது. அவள் மட்டும் என்றில்லாமல் ஸ்ரீநிவாசும் அவர்கள் இருவரைத்தான் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் மண்டபத்தின் உள் வாயிலில் நின்றிருந்த ராதா, இவர்களை கண்டுவிட்டு அருகில் வர, அப்போதுதான் பேச்சை நிறுத்தினர் இருவரும்.
ராதா, “தேவா வா வா” என்று தேவசேனாவின் கையைப் பிடித்து அவருடனே அழைத்துச் செல்ல முற்பட, “நான் கூட்டிட்டு வரேன் ஆன்ட்டி” என்றான் சேஷன்.
அவனது வார்த்தைகளில் மெல்ல தலையசைத்துக் கொண்டவராக ராதா நகர, “கொஞ்சநேரம் உட்கார்ந்து இருக்கேன் ஆன்ட்டி. கூட்டம் குறையட்டும்” என்றாள் தேவா.
“சரிம்மா” என்று சிரிப்புடன் அவர் தலையாட்ட,
“நீங்க எப்படி இருக்கீங்க” என்று பேச்சை வளர்த்தவளிடம் பேசிக்கொண்டே நின்றார் ராதா.
நலம் விசாரித்தலில் தொடங்கி இளமாறன்- ஆத்மீ திருமண நிகழ்வுகள் வரை அத்தனையும் அவர்கள் பேசிக் கொண்டிருக்க, பொறுமையிழந்து “ஸ்டேஜ்க்கு போகலாம் ஆன்ட்டி.”என்றுவிட்டான் சேஷன்.
என்னவோ, தேவாவிடம் பேசுவது போல் அத்தனை இலகுவாக சேஷனிடம் பேசுவது இல்லை ராதா. நேர் எதிரில் சந்திக்க நேர்ந்தால் கூட, மரியாதையான ஒரு சிரிப்புடன் விலகிக் கொள்வார்.
இப்போதும் சேஷன் இடையிடவும், அமைதியாக தலையசைத்து விட்டார். “வா தேவா” என்று அவர் முன்னே நடக்க, சேஷனிடம் அங்கே வைத்து எதையும் பேச முடியாமல் சேனாவும் உடன் நடந்தாள்.
மேடையை நெருங்கவும், இளா கையசைத்து தேவாவை அருகில் அழைக்க, அவனிடம் தலையசைத்து கணவனுடன் மேடை ஏறினாள் சேனா.
“என்ன செய்ய. ஒரு சின்னபையன் அடம்பிடிச்சு அழும்போது வராம எப்படி இருக்க முடியும்” என்றாள் சேனா.
அவள் பேச்சில் இளா அவளை அடிப்பதுபோல் லேசாக கையை உயர்த்தி சேஷாவை கண்டு சட்டென இறக்கிக் கொள்ள, சற்று தோரணையாகத் தான் நின்றிருந்தான் சேஷன்.
என்னவோ, இளா, ஆத்மீ, ராதா என்று அத்தனைப் பேரிடமுமே சற்று விலகித்தான் நின்றான் சேஷன். இனி எந்த விதத்திலும் சேனாவைக் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருக்க, “என்னாச்சு இவனுக்கு?” என்று யோசித்தபடியே தான் மணமக்களிடம் விடைபெற்றாள் தேவசேனா.
இருவரும் முன்வரிசையில் இருந்த இருக்கையில் சில நிமிடங்கள் அமரவும், “என்ன பிளாஷ் நியூஸ்க்கு கண்டெண்ட் கொடுத்தாச்சு. இப்போ அடுத்து என்ன?” என்றாள் சேனா.
“அந்த நியூஸை உண்மையாக்கணும் இல்ல” என்று வெகு தீவிரத்துடன் சேஷன் உரைக்க,
“நீயெல்லாம் திருந்தவே மாட்டடா” என்று எழுந்துவிட்டாள் தேவா.
அங்கு அதற்குமேல் நின்று அவனிடம் பேச்சை வளர்க்கும் எண்ணம் இல்லை சேனாவுக்கு. உணவைக்கூட மறுத்து அவள் நகர, விடாமல் அவளைத் தொடர்ந்தான் சேஷன்.
இப்போதும் அங்கிருந்த சிலரது கண்கள் ஆர்வமாகவே இந்த ஜோடியைத் தழுவ, சேஷனின் நட்சத்திர அந்தஸ்து அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சேஷன் எதைக்குறித்தும் கவலையற்றவனாக தங்களை நெருங்கிய பத்திரிக்கையாளர்களை தவிர்த்தபடியே சேனாவைக் காரில் ஏற்றி, தானும் மறுபக்கம் வந்து அமர்ந்து காரை எடுத்தான்.
அடுத்த பதினைந்து நிமிடங்கள் காரில் ஆழ்ந்த அமைதி மட்டுமே நிறைந்திருந்தது. சேனாவின் மௌனமும் சேஷனுக்கு உவப்பாக இல்லாததால், அவனே பேச்சை தொடங்கி வைத்தான்.
“அடுத்து என்ன தேவா” என்று நிதானமாக அவன் கேட்க,
அவனுக்கு பதில் கூறாமல் சமூக வலைதளங்களில் வெளிவர தொடங்கி இருந்த தங்களைப் பற்றிய செய்திகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள் தேவசேனா.
“தேவா” என்று சேஷன் மீண்டும் குரல் கொடுக்க,
“சோ, இதுதான் உன்னோட பிளான்..”
“எது” என்று சேஷன் எதிர்கேள்வி கேட்கவும், சேனா அலைபேசியை அவனுக்கு முன்னே நீட்ட, “இது தற்செயலா நடந்தது சேனா. இதுல தப்பென்ன இருக்கு. நீ என பொண்டாட்டி தானே.”
“ஓ… ரியல்லி… நீ ஒருத்தியை கூட கூட்டிட்டு போறது இதுதான் முதல் முறையா. இதுக்கு முன்னே நிறைய பேரை இப்படி கூட்டிட்டு வந்திருக்கியே. அவங்க எல்லாம் உனக்கு என்ன உறவு. இல்ல, அத்தனைப் பேரும் உனக்கு பொண்டாட்டியா” என்ற அவளது பேச்சில்,
“தேவா” என்று கார் அதிரும்படி கத்தியிருந்தான் சேஷன்.
அவனது கத்தலில் சிறிது அடங்கினாலும், வெறி அடங்கவில்லை சேனாவுக்கு.
“என்ன ரொம்ப வலிக்குதா?” என்று வெறி பிடித்தவளாக கேட்டவள், “இதைவிட அதிகமா வலிச்சது எனக்கு. எனக்கு சொந்தமானவன். எனக்கு பிடிக்குதோ இல்லையோ, நான் உன்னோட வாழ்ந்தேனோ, இல்லையோ, நமக்குள்ள லவ், லஸ்ட் இந்த கருமம்மெல்லாம் இருந்ததோ இல்லையோ… ஆனா, நீ எனக்கு சொந்தமானவன். அந்த எண்ணம் எப்பவும் எனக்குள்ள இருக்கும்.”
“அப்படி இருக்கும்போது நீ இன்னொருத்திக் கூட ஜோடியா வந்து நிற்கும்போது நான் என்ன ஆகி இருப்பேன்? யோசி. கொஞ்சமே கொஞ்சம் என் பக்கம் இருந்து யோசி.”
“சரி. அப்படிக்கூட வேண்டாம். இப்படி யோசி. நான் இதேபோல, உன்னைப்போல இன்னொருத்தன் கூட ஜோடியா போய் இருந்தா, நீ என்ன செய்து இருப்ப?”
“தேவா” என்ற சேஷனின் குரல் மன்றாடலாக கேட்க,
“இதையெல்லாம் இப்பவும் உன்கிட்ட கேட்க எனக்கு பிடிக்கல சேஷா. ஒரு பேச்சுக்காக கூட இதை சொலதிறது எனக்கு அருவெறுப்பா இருக்கு. ஆனா, இதையெல்லாம் நீ என்னை யோசிக்க வைக்கிற. இதையெல்லாம் யோசிக்க பயந்து தான் உன்னைவிட்டு விலகிப் போறேன் நான். உனக்கு ஏன் இதெல்லாம புரியல” என்று பெரும் மனத்தாங்கலுடன் சேனா கேட்க,
“அவளுக்கு இன்னைக்கு கல்யாணம் தேவா. இந்த பேச்சு இப்போ சரியா? நீ இதை பேசலாமா?”
“இப்போதான் எனக்கும் அதிகமா ஞாபகம் வருது சேஷா. என்னை என்ன செய்ய சொல்ற. நீ அவ அக்காவை லவ் பண்ணுவ. அவ செத்துப் போனதும் உன் அம்மாவும், பாட்டியும் உன்னை எனக்கு கட்டி வைப்பாங்க. நீ அதுக்கும் பேசிப் பேசியே என்னை சித்ரவதை பண்ணுவ.”
“நான் அதையும் சகிச்சுட்டு சுத்தி வந்தா, நீ அவ தங்கை கூடவும் சேர்ந்து சுத்துவ. உன்னையும், அவளையும் அப்படி ஒரே பெட்ல பார்க்கும்போது, ச்சீ…” என்று உடலைக் குலுக்கிக் கொண்டாள் தேவா.
“மறுபடியும் எனக்கு அதே கேள்விதான் வருது. நான் அப்படி யாரோ… ச்சீ…உவாக்” என்று உமட்டுவது போல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டவள், “உன்னால தான்டா இது போல கேவலங்களை எல்லாம் நான் யோசிக்க வேண்டி இருக்கு” என்று சரமாரியாக அவனை அடிக்க தொடங்கிவிட்டாள்.
அவளது கைகளின் வேகம் தாங்காமல் சேஷன் காரை சாலையை விட்டு ஒதுக்கி நிறுத்திவிட, அவனை அடித்து ஓய்ந்தவளாக தனது கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள் சேனா.
கண்களில் கண்ணீர் வந்துவிடுமோ என்று சற்றே அச்சமாக இருக்க, “இவன் முன்னால் அழுவதா” என்று தன்னை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்.
சேஷனுக்கு என்ன சொல்லி அவளை சரி செய்வது என்று சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. அத்தனையும் அவன் செய்த தவறு தான். ஆனால், சம்பந்தபட்டவளிடம் இருந்து கேட்கும்போது பூதாகரமாக தோன்றியது.
அவள் கேட்ட அத்தனைக் கேள்விகளும், நிற்கவைத்து கொல்லக்கூடிய ரகம் தான். ஆனால், அத்தனையும் நியாயங்கள். அன்று அவள் கூறிய அவளது நியாயங்கள். சேஷனால் பதில் கொடுக்க முடியாத நியாயங்கள்.
இதுவரையிலும் முகமூடி அணிந்தபடியே ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தவள் அவளாக உள்ளிருப்பதை வெளியேக் காட்டி இருக்க, அதைக் கண்டு மகிழ முடியாத நிலையில் இருந்தான் சேஷன்.
கைகளால் கார் ஸ்டியரிங்கை அழுத்திப் பிடித்தவன் அப்போது தான் தேவாவின் முகம் பார்க்க, வழக்கத்திற்கு அதிகமாக வியர்த்திருந்தது அவளுக்கு.
அதற்குமேல் அவளை அப்படியே விட மனமில்லாமல், “தேவாம்மா…” என்று பதட்டத்துடன் சேஷன் அவள் கைகளை விலக்க, சக்தி முழுவதும் வடிந்தவளாக அமர்ந்திருந்தாள் அவள்.
“ஒண்ணும் இல்ல தேவா. டென்ஷன் ஆகாத. என்னை இன்னும் அடிக்கணுமா. அடிச்சுக்கோ. ஆனா, நீ டென்ஷன் ஆகாத” என்று அவள் இருகைகளையும் தன்னோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்டவனுக்கு அப்போது தான் நிஜத்திற்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது.
“இது பிடிக்குமா இவளுக்கு. இல்லை, இதற்கும் சேர்த்து பேசி வைப்பாளோ…” என்று உள்ளுக்குள் நடுங்கியவனாக அவன் தேவாவின் முகம் பார்க்க, எந்த உணர்வுகளும் இல்லாமல் கண்களை மூடி அவன்மீது சாய்ந்திருந்தாள் தேவா.
மெல்ல அவளது தலையை வருடிக் கொடுத்தபடியே அவன் அமர்ந்திருக்க, சில நிமிடங்களில் அவனிடம் இருந்து விலகி அமர்ந்து கொண்டாள் தேவசேனா.
அவளது கம்பீரம் மீண்டிருக்க, காரின் சீட்டில் தலை சாய்த்து கொண்டாள். சேஷன் காரின் சீட்டை சற்றே தளர்த்திவிட்டு, வண்டியை எடுத்தான்.
அவர்கள் வீட்டிற்கும் செல்லாமல், மலரின் வீட்டிலும் அவளை விட மனதில்லாமல் சேஷன் வந்து சேர்ந்த இடம் அவர்கள் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு கடற்கரை பங்களா.
தொழில்முறை விருந்தினர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து தங்கக்கூடும் என்பதால் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும் அந்த வீடு.
வீட்டின் வாயிற்காவலன் சேஷனின் காரைக் கண்டதும் வேகமாக கதவைத் திறந்துவிட, உள்ளே நுழைந்து காரை நிறுத்தி அதன்பின் சேனாவை எழுப்ப முயன்றான் அவன்.
ஆம், இதற்குள் ஆழ்ந்த உறக்கதிற்கு சென்றிருந்தாள் அவன் மனைவி.
“தேவாம்மா. தேவா” என்று சிலமுறை அழைத்துப் பார்த்தவன் அவள் எழவில்லை என்றானதும் கைகளில் தூக்கிக் கொண்டான்.
அங்கு அவனுக்காக இருந்த அறையில் அவளை படுக்க வைத்து வெளியே வந்தவன், அவர்கள் இருவருக்கும் இரவு உணவை வாங்கி வரும்படி வேலையாளை அனுப்பிவிட்டு, மலரை அழைத்தான்.
அவனது அழைப்புக்காகவே காத்திருந்த மலர், “தேவா எங்க சார். எப்படி இருக்கா? எங்க இருக்கீங்க?” என்று இடைவெளி விடாமல் பேச,
“அவனை பேச விடு” என்று அவளைக் கண்டித்தான் ஸ்ரீநிவாஸ்.
“சேஷா” என்று அவன் குரலும் கொடுக்க,
“மலர் உன் ஃப்ரெண்ட் நல்லா இருக்கா. இப்போ தூங்கிட்டு இருக்கா. நீ அவளோட திங்க்ஸ் எல்லாம் நிவாஸ் கிட்ட கொடுத்துவிடு. மார்னிங் நான் அவளை கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரேன்” என்றான் சேஷன்.
“சத்தியமா உன் ஃப்ரெண்ட் நல்லா இருக்கா மலர். சேஷனால இனி அவளுக்கு இன்னொரு கெட்டது நடக்காது. நீ முழுமையா என்னை நம்பலாம்.” என்று அவன் உறுதி கொடுக்க, மலர் பதில் கொடுக்கவில்லை.
அடுத்த ஒருமணி நேரத்தில் அவர்களுக்கான இரவு உணவு, தேவாவின் உடமைகள் என்று அத்தனையும் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால், எதையும் தொட மனமற்று பால்கனியில் அமர்ந்திருந்தான் சேஷன்.
அவனிருந்த இடத்தில் இருந்த விளக்குகளை கூட அவன் அணைத்து விட்டிருக்க, அந்த இருட்டில் அவன் அமர்ந்திருந்தது யாருக்கும் தெரியாது.
எப்படி அவன் உருவம் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைந்திருந்ததோ, அப்படியே அவன் வடித்த கண்ணீரும் அவனோடே சேர்ந்து மறைந்து கொண்டிருந்தது.
சேனா தனது கண்ணீரை தனக்குள் மறைத்துக் கொண்டிருக்க, அவள் கணவனோ இந்த ஆழி சூழ்ந்த பிரபஞ்சத்திடம் தனது கண்ணீரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
விட்டுப் போனவள் எப்போதோ வெகுதூரம் போய் இருக்க, அருகில் இருப்பவளை அடியோடு தொலைத்து விட்டேனோ என்று அச்சம் கொண்டிருந்தது மனது.
அப்படி இல்லை என்பதுபோல் அருகில் கேட்டது, “சேஷா” என்ற அவன் ஜீவனின் குரல்.