அத்தியாயம் 2

“ஏன்மா ஆத்மநல்லூர்னு சொன்னதும் ஷாக் ஆகுற?” எனக் கேட்டாள் தாமரை‌.

அச்சமயம் வீட்டின் வாசல் கதவைத் தட்டும் ஓசைக் கேட்டு மகளிடம் தேநீர் அளித்தவராய் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார் விமலா.

வாசலில் நின்றிருந்தவனைக் கண்டு, “வாங்க தம்பி. உள்ளே வாங்க” என அழைத்தார்.

“பரவாயில்லங்கமா” என்றவனாய், “மேலே திங்க்ஸ்லாம் அரேஞ்ச் செஞ்சிட்டேன். இன்னிக்கு நைட் வெளில வேலையா போக வேண்டியது இருக்கனால வெளியவே சாப்பிட்டுப்பேன். நீங்க சமைக்க வேண்டாம்னு சொல்ல தான் வந்தேன்” என்றான்.

“ஓ சரிங்க தம்பி. உள்ளே வாங்க. காபி குடிச்சிட்டுப் போங்க” என்றவர் மீண்டும் அழைக்கவும் சங்கோஜத்துடன் உள்ளே வந்தமர்ந்தான் அவன்.

சமையலறைக்குள் இருந்தவளாய் இவர்களின் பேச்சைக் கேட்டிருந்தவளோ, ‘என்னது அம்மா சமைச்சு கொடுக்கிறதா சொன்னாங்களா? அம்மா இந்தளவுக்கு ஒரு ஆம்பிளையை நம்பி வீட்டுக்குள்ள வரைக்கும் விட மாட்டாங்களே. இதுக்குள்ள வேற எதுவும் உள்குத்து இருக்குமோ’ என்று யோசித்தவளாய் நின்றிருக்க,

முகப்பறையில் அமர்ந்திருந்தவராய், “தாமரை! மாதவன் தம்பி வந்திருக்கு. ஒரு கப் காபி போட்டு கொண்டாமா”  என்று சத்தம் கொடுத்தார் விமலா.

அம்மாவின் இந்தப் பேச்சில், ‘நான் காபி போட்டுக் கொடுக்கனுமா அந்தாளுக்கு? ம்மாஅஅஅ உன் பிளான் என்னனு புரியுதுமா! இப்பவே இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்’ மனத்திற்குள் நினைத்தவளாய் காபியைக் கலந்த தாமரையின் மூளையோ, ‘இவரு பேரு மாதவனா! எனக்கு இதுக்கு முன்னாடி மாதவன்ற பேருல யாரையாவது தெரியுமா? இவரை எங்கே பார்த்திருப்பேன்’ என்று சிந்தித்திருந்தது.

மாதவனிடம் காபியை அளித்தவளாய் அவனின் எதிரில் அமர்ந்தவளுக்கு அவனது தாடியில் ஆங்காங்கே தென்பட்ட நரைமுடிகள் அவனது வயதைப் பறைச்சாற்ற, ‘என்னோட வயசு தான் இருக்கும்னு அம்மா சொன்னாங்களே! ஆனா அதுக்கும் மேல இருக்கும் போலயே’ என்று யோசித்தவளாய் அவனைப் பார்த்திருந்தாள்.

“தம்பி நைட் பத்து மணிக்கு மேல வந்தா வீட்டு கேட்டைத் திறக்க மாட்டேன். அப்புறம் நான் சொன்ன மத்த ரூல்ஸ்லாம் நினைவிருக்குல” என்று விமலா கேட்கவும்,

“வீட்டுக்குள்ள தண்ணி அடிக்கக் கூடாது, தம் அடிக்கக் கூடாதுனு சொன்னதைத் தானே கேட்குறீங்க. எனக்கு அந்தப் பழக்கம்லாம் இப்ப இல்லைங்கமா” என்றான் அவன்.

“என்னது இப்ப இல்லையா? அப்ப முன்னாடி இருந்துச்சா சார்” சற்றுக் கோபத்துடனே கேட்டிருந்தாள் தாமரை.

‘கோவக்காரக் கருப்பசாமினு நினைச்சா குடிகாரக் கருப்பசாமியால இருக்காரு’ அவளை மீறி அவன் மீதான கோபம் பெருகிக் கொண்டே போனது.

அவளின் கோபத்தை வீட்டு உரிமையாளரின் கண்டிப்பாக நினைத்துக் கொண்டு, தாமரையைப் பார்த்துப் புன்னகைத்தவனாய், “ஆமாங்க. டிவோர்ஸ் ஆன நேரத்துல சோகத்துல ஆரம்பிச்ச பழக்கம் இது. சோகத்துல குடிக்க ஆரம்பிச்சு சோஷியல் டிரிங்கர்னு ஸ்டேட்டஸ் வைக்கிற அளவுக்கு இருந்துச்சு. இப்ப முழுசா நிறுத்தி இரண்டு மூனு வருஷம் ஆகுது” என்றான்.

அவன் மீது அதிருப்தியான பார்வையை வீசியவளாய், “எனக்கு தண்ணி அடிக்கிறவங்க மேல நல்ல அபிப்ராயம் இல்லங்க. இப்படி தான் நிறுத்திட்டதா சொல்லிட்டு வாழ்க்கைல தாங்க முடியாத சோகம் வரும் போது மனசு நேரா அந்தக் குடில தான் போய் நிக்கும்” நறுக்கெனவே கூறியிருந்தாள்.

அவளின் இந்த நேரடித் தாக்குதலில் கோபம் கொண்டவனாய், “நீங்க எனக்கு நல்ல சர்டிபிகேட் கொடுக்கணும்னு இதை நான் சொல்லலைங்க. எனக்கு பொய் சொல்லிப் பழக்கம் இல்லை. அதனால உண்மையைச் சொன்னேன். நீங்க என்னைக் கெட்டவன்னு நினைச்சா நினைச்சிக்கோங்க. ஐ டோண்ட் கேர்” தோளைக் குலுக்கியவனாய் இறுகிய குரலில் உரைத்திருந்தான்.

பேச்சுப் போகும் திசையைப் பார்த்துப் பயந்தவராய் விமலா, “ஏன்டி இப்படிப் பேசுற! ஏதோ அந்தத் தம்பி டைவர்ஸ் ஆன மனக்கவலைல குடிச்சதா தானே சொன்னிச்சு! அதுவும் இப்ப குடிக்கிறதில்லைனு சொல்லிடுச்சு தானே” மாதவனுக்காகப் பரிந்து வந்து பேசினார்.

“ஏன் எனக்கும் தான் டிவோர்ஸ் ஆச்சு. மனசு கஷ்டமா இருந்துச்சு. நான் என்ன தண்ணி அடிச்சிட்டா இருந்தேன். மனக்கவலையைப் போக்கனும்னு குடிக்கிறவங்க என்னிக்குனாலும் திரும்பவும் அதை தொடுவாங்கமா” ஆவேசமாக தாமரைக் கூறிய குற்றச்சாட்டில் கோபம் கொண்டு சட்டென இருக்கையை விட்டு எழுந்தவனாய், “உங்க வீட்டுக்கு வாடகைக்கு தங்க தான் வந்திருக்கேனே தவிர நான் ஒன்னும் உங்க வீட்டு மாப்பிள்ளையா வரலை. அதனால என்னைப் பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தேங்க்ஸ் ஃபார் யுவர் காபி” கோபக்கனலைக் கண்களில் தாங்கி பற்களைக் கடித்தவாறு தாமரையைப் பார்த்து உரைத்தவன் விறுவிறுவென வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தான்.

‘சரியான மண்டகனம் பிடிச்சவரா இருப்பாரு போல! இவரை இந்த வீட்டு மாப்பிள்ளை ஆக்கிட்டாலும், குடும்பம் உருப்புட்டுறும்’ உதட்டைச் சுழித்தவளாய் மனத்திற்குள்ளேயே மாதவனைத் திட்டித் தீர்த்தாள் தாமரை.

மாதவன் கோபத்துடன் வெளியே சென்றதைப் பார்த்துக் கவலையுற்ற விமலா, “என்னடி இப்படிச் செஞ்சிட்ட?” என்று மகளை முறைத்தார்.

“என்ன செஞ்சிட்டேனாம்? உன் பிளான் புரிஞ்சி தான் இப்படிப் பேசினேன்மா. அவருக்கு என்னைக் கட்டி வைக்கலாம்னு பிளான் செஞ்சி தானே அவரை இங்கே தங்க வச்சிருக்க! அவருக்கு வேணா உன் பிளான் தெரியாம இருக்கலாம். எனக்குத் தெரியுமே என் அம்மாவைப் பத்தி! அதை முளையிலேயே கிள்ளி எரிய தான் இப்படிப் பேசினேன். ஆனா நான் பேசினதுலாம் உண்மையான வார்த்தைகள். இந்தக் குடினால நான் பட்ட கஷ்டங்கள்லாம் உனக்குத் தெரியும் தானேமா. இனி நீயா போய் என் பொண்ணைக் கட்டிக்கோங்கனு கேட்டா கூட அவர் என் பக்கம் வர மாட்டாரு” என்றவளாய் தனது அறைக்குள் புகுந்து கொண்டாள் தாமரை.

தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார் விமலா. தான் போட்டத் திட்டத்தையெல்லாம் நொடியில் தூள் தூளாக்கிய மகள் மேல் கோபம் பொங்கியது அவருக்கு. தனக்குப் பிறகு மகள் தனியாளாகி விடக் கூடாதேயெனத் தான் பரிதவிப்பதை ஏன் அவள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாள் என்று ஆயாசமாய் வந்தது அவருக்கு.

அன்றைய நாள் முழுவதும் தாயிடம் கோபம் கொண்டவளாய் பேசாமல் மௌனம் காத்தவள், மறுநாள் தந்தையின் நினைவு நாளில் தாயைத் தேற்றி அவரிடம் சகஜமாகப் பேசினாள் தாமரை.

அன்று அலுவலகத்திற்குச் செல்லாமல் விடுப்பு எடுத்தவளாய் வீட்டிலேயே இருந்தாள் தாமரை. தந்தைக்கான பூஜையெல்லாம் முடித்து அமர்ந்த தாயிடம், “ஏன்மா நேத்து ஆத்மநல்லூர்னு சொன்னதும் ஷாக் ஆன! அடுத்த வாரமே நான் அங்கே போகனும்மா! உன்னை விட்டுட்டு தனியா வேறொரு ஊருக்குப் போகனும்னு நினைச்சா தான் மனசுக்குள்ள என்னமோ மாதிரி இருக்கு” என்றாள்.

கணவனின் நினைவு நாளில் அவரை எண்ணிச் சோகத்துடன் இருந்த விமலா, மகளின் இந்தக் கேள்வியில் தன்னிலைப் பெற்றவராய், ‘ஆமா இதை எப்படி நான் மறந்தேன்’ சற்று அதிர்வுடன் அவளைப் பார்த்தார்.

“அந்த ஊருக்குப் போக வேண்டாம் தாமரை. இங்கேயே வேற டிரான்ஸ்ஃபர் கேளேன்” என்றார்.

“ஏன்மா இப்படிச் சொல்ற? இதுலாம் எங்க கையில இல்லையேமா! நான் போய் தான் ஆகனும்” என்றாள்.

“அந்த ஊருல இருக்க பெருமாள் கோயில்ல இருந்த சிவலிங்கத்தையே கடத்தினதா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி கேஸ் நடந்துச்சு தாமரை. நம்ம பக்கத்து வீட்டு லிங்குசாமி அண்ணாவோட தம்பி பையன் ராஜா தான் அந்த கேஸை எடுத்து நடத்தினான். அதனால எனக்கு இந்த விஷயம் தெரியும்” என்றவர் சொன்னதும்,

“என்னது பெருமாள் கோவில்ல சிவலிங்கமா? அதை கடத்தினாங்களா?” அதிர்ச்சியுடன் கேட்டாள் தாமரை.

“ஆமா தாமரை. அந்தப் பெருமாள் கோவில்ல தனியா சிவன் சன்னதி இருக்காம். அந்தச் சிவலிங்கத்தைத் தான் கடத்திட்டாங்கனு ராஜா கேஸ் போட்டு மீட்டெடுத்தான். அதுவுமில்லாம அந்தக் கோவில் தர்மகர்த்தா அப்ப இறந்து போனாருனும் உன்னை மாதிரி ஏதோ ஆபிசருக்கு கால்லாம் உடைஞ்சிதுனும் கேள்விப்பட்டேன். அதுக்கப்புறம் அங்கே அடிக்கடி ஏதாவது துர்சம்பவங்கள் நடந்துட்டே இருக்கிறதா அந்த ராஜா சொல்லிட்டே இருப்பான். நீ அங்கே போக வேண்டாம் தாமரை. உனக்கும் ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு” பதட்டத்துடன் மகளின் கைகளைப் பற்றியவராய் விமலா உரைக்கவும்,

“நீ சொல்றதை எல்லாம் கேட்டப் பிறகு, கண்டிப்பா அந்த ஊருக்குப் போகனும்னு தோணுதும்மா. இப்படிச் சிலைக் கடத்தல் நடக்குற இடத்துக்கு வேலைக்குப் போனா தான் என்னுடைய பவரை நான் சரியா உபயோகிச்சு நல்லது செய்ய முடியும்மா. எந்தப் பிரச்சனையும் இல்லாம போனோமா வந்தோமானு இருக்கிற வேலைல என்ன சுவாரசியம் இருக்குமா” என்றாள்.

“அடியேய் சுவாரசியமா வேலை செய்ற வயசா உனக்கு? முப்பத்திரண்டு ஆகுது இப்பவே! கல்யாணம் செஞ்சி குழந்தைப் பெத்துக்கோனு சொன்னா, உசுர பறிக்கிற வேலைக்குப் போறேன்னு நிக்கிறியே” என்று புலம்பினார் விமலா.

“இப்படிச் சொல்லித் தான் எனக்கு கல்யாணம் செஞ்சி வச்சீங்க! அது மொத்தமா துவைச்சு போட்ட என்னோட மன தைரியத்தையும் சந்தோஷத்தையும் மீட்டெடுக்க நான் பட்ட கஷ்டம் எனக்கு தான்மா தெரியும். இனியும் அந்தப் புதைக்குழில போய் சிக்கிக்க நான் தயாரா இல்லை. அதுக்கு இந்த வேலைல சாவுறது கூட எனக்குச் சந்தோஷம் தான்” ஆங்காரத்துடன் அவள் உரைக்கவும், கோபத்துடன் அவள் தோளில் ஒரு அடி வைத்தவராய்,

“என்னை உசுரோட கொல்றதுக்குனே வந்து பொறந்திருக்கடி” என்று கண்ணீர் வடித்தார்.

எட்டு வருடங்களாக கேட்டுப் பழகிப் போன வசைச் சொற்களைத் தோளைக் குலுக்கி உதறியவளாய் தனது ஈருருளியின் சாவியினை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள் தாமரை‌.

“நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். கொஞ்சமும் மதிக்காம இப்படிப் போனா என்னடி அர்த்தம்” என்று அவர் வாசலில் நின்று கத்தியதெல்லாம் விர்ரென ஈருருளியில் பறந்து சென்றவளின் காதினில் விழவில்லை ஆயினும் அந்நேரம் தனது ஈருருளியில் வீட்டு வாசலில் வந்து நின்ற மாதவனின் செவியில் தெளிவாய் விழுந்தது.

‘சரியான திமிரு பிடிச்ச பொண்ணு தான் போல. யாரையும் மதிக்கிறது இல்ல’ என மனத்திற்குள் நினைத்தவனாய் வாசலில் ஈருருளியை நிறுத்தி விட்டு மேல் மாடியிலிருக்கும் தனது அறை நோக்கிச் சென்றான் மாதவன்.

ஈருருளியில் மனம் போன போக்கில் சுற்றியவள், ஒரு மணி நேரம் கழித்து ஈசன் மலையில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்றாள்.

மதிய வேளையில் கருவறை நடை சாத்தப்பட்டிருந்த போதும் சுற்றியிருந்த மரங்களின் இடையில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தாள்.

திருமணமாகும் வரை இறைவன் மீது ஓரளவிற்கு இருந்த நம்பிக்கையும் அதன் பிறகு காணாமல் போயிருந்தது தாமரைக்கு.

தனது வாழ்வில் ஏற்பட்ட துன்பத்திற்கு தனது கர்மா தான் காரணம் என்றறியாமல் இறைவன் மேல் பழிப்போட்டு ஒதுங்கி இருந்தாள் தாமரை.

இறை நம்பிக்கை இல்லை ஆயினும் கோவிலில் உணரப்படும் நேர்மறை அதிர்வலையின் மீது பெருத்த நம்பிக்கை உண்டு அவளுக்கு. திருமண முறிவிற்குப் பிறகு தன்னுடைய இயல்பு நிலைக்கு வருவதற்குத் தியானத்தைப் பயின்றாள் தாமரை. அதன் பிறகு மனம் நிலைக்கொள்ளாமல் தவிக்கும் வேளைகளில் எல்லாம் இந்த மண்டபத்தினில் வந்தமர்ந்து தியானம் செய்திடுவாள்‌.

இன்று அவ்வாறு தியானத்தில் அமர்ந்திருந்தவள் தன்னை மீறிய நிலையில் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தவாறு சுற்றம் மறந்து இருந்த போது, மூடிய விழிகளில் கண்ட காட்சியினில் விதிர்விதிர்த்து விழித்தாள்.

அவளின் உள்ளங்கை சில்லிட உள்ளம் வேகமாய்த் துடித்திருந்தது.

“உன்னை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன்! அடியேனுக்கு அந்தப் பாக்கியத்தை அருளுவாயா கோதை”

இன்னும் செவியில் அந்த வாக்கியங்கள் கேட்பது போன்ற பிரமை தோன்ற, சட்டென எழுந்து விட்டாள் தாமரை.

‘இந்த மாதவன் ஏன் என்னைப் பார்த்து இப்படிக் கேட்குறாரு! அதுவும் நான் கோவக்காரக் கருப்பசாமினு சொல்றதுக்கேத்த மாதிரி கருப்பசாமி சிலை மாதிரி தானே ஆளும் உடையும் இருந்துச்சு‌. ஒரு வேளை நேத்து நடந்த விஷயங்கள் எல்லாம் என் மூளைக்குள்ள சேவ் ஆகி இப்படிக் காட்சியா உருமாறி வருதோ!’ எனச் சிந்தித்தவளாய் வெளியே வந்தவள்,

‘அப்படித் தான் இருக்கனும்‌‌. எல்லாம் இந்த அம்மானால தான்’ மனத்திற்குள் புலம்பியவளாய் ஈருருளியில் தனது வீட்டை நோக்கிச் சென்றாள்.