வீட்டில் காலையில் ஒலித்த இப்பாடல் உறங்கியிருந்தவளின் செவியைத் தீண்டி உள்ளுணர்வை விழிப்படையச் செய்ய, உறக்கத்திலேயே அவளின் உதடுகள், “நாராயணா அரி நாராயணா” என்று முணுமுணுத்தன.
நாராயணா நாராயணா என்று தன்னை மறந்து உறக்கத்திலேயே பிதற்றிக் கொண்டிருந்தவளின் கண்களுக்குள் தோன்றிய காட்சியினில், “நான் தர மாட்டேன். எம் மாதவனை நான் யாருக்கும் தர மாட்டேன். என் உயிரே போனாலும் தர மாட்டேன்” பதைபதைப்புடன் உள்ளம் ஏகத்துக்கும் துடித்திட பெரும் குரலெடுத்துக் கத்தியவளாய் பதறி எழுந்தமர்ந்தாள் தாமரை.
நெஞ்சம் விம்ம பெருமூச்சு விட்டவளாய் கனவின் தாக்கத்தில் இருந்து வெளிவராது திகைத்திருந்தவள் மெல்ல மெல்ல தன்னிலைப் பெற்று, தண்ணீரை எடுத்துப் பருகினாள்.
‘ம்ப்ச் சின்ன வயசுலருந்து வரும் இந்தக் கனவுக்கு ஒரு எண்ட் கார்ட் இல்லையா கடவுளே’ என்று மனத்தோடு புலம்பியவளாய் எழுந்தவள்,
“ஏம்மா காலைலயே இந்தப் பாட்டைப் போட்டுக் கடுப்பேத்தாதனு எத்தனை தடவைச் சொல்லிருக்கேன்” என்று கத்தியவாறு சமையலறையில் இருக்கும் தாய் விமலாவிடம் சென்று நின்றாள் தாமரை.
ஆழ்ந்த உறக்கத்தில் ஏதேனும் நாராயணர் தொடர்புடைய பாடல்கள் அல்லது மந்திரங்கள் கேட்கும் சமயங்களில் தான் அவள் இவ்வாறு கனவு கண்டு விழிப்பது என்பதால் விடியற்காலையில் பெருமாள் பாடலைப் போடக் கூடாது என்று தாயிடம் உத்தரவிட்டிருந்தாள் தாமரை.
“நான் எங்கேடி போட்டேன். மத்த பாட்டு ஓடிட்டு இருக்கும் போது அதுவே தானா லூப்ல வந்துடுச்சு போல” என்ற விமலா, “ஆபிஸ்க்கு நேரமாகிடுச்சுல! பல் தேய்ச்சுட்டு வா! காபி கலக்குறேன்” என்றார்.
‘எனக்கு ஏன் எப்பவும் இப்படிக் கனவு வருது’ என்று சிந்தித்தவாறே பல் தேய்த்து குளித்து முடித்து கிளம்பியவளாய் உணவு மேஜை முன் வந்தமர்ந்தாள் தாமரை.
தட்டில் இட்லியை வைத்து சட்னியை ஊற்றியவராய் அவள் முன் வைக்க, “நீ சாப்பிட்டியாமா?” எனக் கேட்டவாறு உண்ணத் தொடங்கினாள்.
“ஹ்ம்ம் சாப்பிட்டேன்மா. நாளைக்கு அப்பாவோட திதிக்கு தர்பணம் கொடுக்கனும்னு சொல்லிருந்தேனே” என்று விமலா கூறவும், “அக்கவுண்ட்ல காசு இருக்குமா. கைல இல்லை. நான் வரும் போது ஏடிஎம்லருந்து எடுத்துட்டு வந்திடுறேன். நீ ஐயர்கிட்ட சொல்லிடு” என்றவளாய் உண்டு முடித்து கைக்கழுவச் சென்றாள்.
தாமரையின் தந்தை சடகோபன் மூன்று வருடங்களுக்கு முன்பு தான் இறைவனடி சேர்ந்திருந்தார்.
“அப்பா ஆசைப்படி நீ கல்யாணம் செஞ்சிக்கிட்டீனா அவர் ஆத்மா சாந்தி அடையும் தாமரை! நான் புரோக்கர்கிட்ட வரன் பார்க்கச் சொல்லவா?” எனக் கேட்டார் விமலா.
“நான் இப்ப சந்தோஷமா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையாமா? அவர் ஆசை ஆசைனு சொல்லி ஏற்கனவே நீங்க செஞ்சி வச்ச கல்யாணத்துல வாங்கின அடியே போதும்மா”
தாய் தந்தையரின் மேல் பொங்கிக் கொண்டு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தியவளாய் தட்டைக் கழுவி வைத்தாள் தாமரை.
“அது நடந்து எட்டு வருஷம் ஆகப் போகுது. அந்தப் பையன் கூட ஆறு மாசம் வாழ்ந்திருப்பியா? உனக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா தாமரை” என்று கேட்டார்.
“வேண்டாம்மா. கல்யாணம்னாலே பயமா இருக்கும்மா. நான் நிம்மதியா தானே இருக்கேன். இந்த நிம்மதியை கல்யாணம் பறிச்சிடுமோனு பயமா இருக்கு” என்றவளாய் பெருமூச்சு விட்டவள்,
“எனக்கு ஆபிஸூக்கு நேரமாகிடுச்சு. கிளம்புறேன்” தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தனது ஈருருளியை இயக்கியவாறு சென்றாள்.
“என் பொண்ணுக்கு நீ தான் ஒரு நல்ல வழி காட்டனும் நாராயணா” என்று கை எடுத்துக் கும்பிட்டவராய் அமர்ந்து விட்டார் விமலா.
சாலையில் ஈருருளியை ஓட்டிக் கொண்டிருந்தவளின் மனத்தில் தாயின் பேச்சினால் கிளர்ந்தெழுந்த எண்ண அலைகள் மூளைக்குள் சடுகுடு ஆடிக் கொண்டிருக்க, அன்றாடப் பழக்கமாய் செயல்பட்டிருந்த அவளின் புலன்கள் சாலையில் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தன.
‘டீனேஜ்ல கல்யாணத்தைப் பத்தி எவ்ளோ கனவு கண்டிருந்தேன். வாழ்நாள் முழுசுக்கும் என்னைக் கைல வச்சி தாங்குற கணவன் வேணும்னு எவ்ளோ ஆசைப்பட்டேன். எல்லாம் கானல் நீரா போய் இப்ப துணைக்குக் கூட ஆள் இல்லாத நிலைமைக்கு என்னைத் தள்ளி விட்டுட்டு இப்ப திரும்ப கல்யாணம் செஞ்சிக்கனுமாம். யாருக்கு வேணும் இந்தக் கல்யாணம்?’ நெஞ்சம் விம்மிக் கொண்டு வர, கண்களில் பொங்கிய கண்ணீர், வண்டியின் இயக்கத்தில் எதிர்வந்த காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
கண்களைத் துடைத்தவளாய் போக்குவரத்துச் சமிக்ஞைக்காக வண்டியை நிறுத்தியவளின் பார்வை, வளர்த்தியான திடக்காத்திரமான தேகத்துடன் கறுப்பான களையான தோற்றத்தில் அடர்ந்த மீசையுடன் தலைக்கு ஹெல்மெட்டும், கண்களில் கூலர்ஸ்ஸூம் அணிந்து புல்லட் வண்டியில் அமர்ந்திருந்தவனின் மீது பதிந்தது. முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க வகையில் இருந்தவனின் முகத்தையே வட்டமிட்டன அவளின் விழிகள். அவன் மீது ஒருவிதமான கோபத்தை உணர்ந்தாள் தாமரை.
‘சரியான காட்டான். மூஞ்சைப் பாரு! உர்ருனு கோவம் வந்த கருப்பசாமி மாதிரி’ மனம் தானாக அவனை வசைப்பாடியதில் அதிர்ந்தவளாய்,
‘அய்யோ அறிவுக்கெட்டவளே! யாருனே தெரியாதவரைப் போய் ஏன் இப்படித் திட்டிட்டு இருக்க’ தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.
‘இவரை நான் முன்னாடியே எங்கேயாவது பார்த்திருக்கேனா?’ இவளின் மூளை எழுப்பிய கேள்விக்கான விடையைச் சிந்தித்தவளாய் அவனைப் பார்த்திருந்தவளுக்கு, எங்கே என்று நினைவே வரவில்லை.
அதற்குள் போக்குவரத்து சமிக்ஞை விழுந்து விட, வண்டியை இயக்கியவாறு சென்றவனைப் பார்த்தவள், அவன் சென்ற பாதையின் எதிர்திசையில் பயணித்தாள்.
அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தவளாய் தனது இருக்கையில் அமர்ந்தவள், கணினியைத் தட்டியவாறு தனது வேலையைத் தொடங்கினாள்.
இந்து சமய அறநிலையத் துறையில் ஏஓ ஆபிசராக (Asset Officer – AO) சொத்து மேலாண்மை அலுவலராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள் தாமரை. முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின்பு தன்னை மடைமாற்றிக் கொள்ள எழுதிய அரசுத் தேர்வில் தேர்வாகியவளாய் இப்பணியில் அமர்த்தப்பட்டாள்.
அவளின் இருக்கையில் இருந்த அலைபேசி அலற, “ஒரு அர்ஜன்ட் மீட்டிங். என் ரூமுக்கு வர்றீங்களா தாமரை?” எனக் கேட்டிருந்தார் அவளின் மேலதிகாரி.
“இதோ வரேன் சார்” என்றவாறு அங்குச் சென்ற தாமரையை இருக்கையில் அமர பணித்தார்.
“வாழ்த்துகள் தாமரை! உங்களுக்கு புரொமோஷனோட டிரான்ஸ்ஃபர் கிடைச்சிருக்கு” என்று இன்முகத்துடன் உரைத்திருந்தார்.
மகிழ்ச்சியில் முகம் பொலிவுற சிரித்தவளாய், “தேங்க் யூ” என்றவள், “எந்த ஊரு சார்? நான் கேட்ட மாதிரி சென்னைலயே வந்திருக்கா?” ஆவலுடன் கேட்டாள்.
இந்தப் பணியில் வருடத்திற்கொரு முறை பணியிட மாற்றம் நடைபெறும். கடந்த ஆறு வருடங்களாகச் சென்னையைச் சுற்றியுள்ள இடத்திலேயே பணியிடம் கிடைக்கப்பெற்றுச் சுற்றி வந்தவளுக்கு, இப்பொழுதும் அவ்வாறே கிடைத்திருக்கும் என்று நம்பினாள்.
“இந்த முறை உங்களுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சிருக்க ஊரு ஆத்மநல்லூர்” என்று மேலதிகாரி உரைத்ததும்,
“ஆத்மநல்லூரா? அது எங்க இருக்கு?” எனக் கேட்டாள்.
“மேற்குத் தொடர்ச்சி மலைல சோலைவனம்னு ஹில் ஸ்டேஷன். அது டூரிஸ்ட் ஸ்பாட்டா இருக்கு. கேள்விப்பட்டிருக்கீங்களா தாமரை?” எனக் கேட்டார்.
“ஆமா சார். கேள்விப்பட்டிருக்கேன். அது ரிசர்வ்ட் ஃபாரஸ்ட் ஏரியா தானே? ஃபாரஸ்ட் ஆபிசர்ஸ் அனுமதி இல்லாம அங்கே போக முடியாதுனு கேள்விப்பட்டிருக்கேன். அந்தக் காட்டுக்குள்ளயா இந்த ஆத்மநல்லூர் இருக்கு?” அதிர்ச்சியுடன் அவள் கேட்க,
“இல்ல தாமரை. அந்த சோலைவனம் மலையடிவாரத்துல இருக்க சிற்றூர் தான் ஆத்மநல்லூர். அதனால இந்த சோலைவனத்துல இருந்து ஆத்மநல்லூர் வரைக்கும் இருக்க அரசுக் கோவில்கள் எல்லாம் உங்க லிமிட்க்குள்ள வரும். நீங்க மோஸ்ட்லி சோலைவனத்துல தான் தங்குற மாதிரி இருக்கும். அங்க தான் நம்ம கவர்மென்ட் ஆபிசர்ஸ் தங்குற வீடு இருக்கு” என்றார்.
“நான் சென்னை செங்கல்பட்டைத் தாண்டி எங்கேயுமே போனது இல்ல சார். திடீர்னு இப்படி காட்டுக்குள்ள இருக்க இடத்துக்குப் போக சொன்னா நான் என்ன செய்றது? என் அம்மா வேற இங்கே தனியா இருக்காங்களே சார்” பரிதவிப்புடன் உரைத்திருந்தாள்.
“அடுத்த வாரம் நீங்க அங்க ரிப்போர்ட் செய்யனும்” என்றார்.
சரியெனத் தலையசைத்தவளாய் அந்தப் பணியிட மாற்றல் ஆணையைக் கையில் வாங்கிக் கொண்டு வந்தவளுக்கு அடுத்து என்ன செய்வதெனப் புரியாத நிலை.
மாலையில் கவலைத் தோய்ந்த முகத்துடன் வீட்டிற்கு வந்த மகளை ஏறிட்ட விமலா, “என்னடி மூஞ்சைத் தூக்கி வச்சிட்டு வந்து நிக்கிற?” எனக் கேட்டார்.
“புரொமோஷன் கிடைச்சிருக்குமா” என்றவளாய் சோஃபாவில் பொத்தென அமர்ந்தவளை விநோதமாய் பார்த்த விமலா,
“இந்த புரொமோஷன் கிடைக்கத் தானே எக்ஸாம்லாம் எழுதின? இப்ப அது கிடைச்சதுக்குச் சந்தோஷப்படாம ஏன் மூஞ்சைத் தூக்கி வச்சிட்டு இருக்க?” என்று அவர் கேட்டிருந்த சமயம், வீட்டின் வாசலில் அழைப்பொலிக் கேட்டது.
திறந்திருந்த கதவின் வழியாக வெளியே பார்த்த விமலா, வாயிலில் இரும்புக் கதவினருகே நின்றிருந்தவனைப் பார்த்ததும் முகம் விகசிக்க, “வாங்க தம்பி! மேலே ரூம்லாம் க்ளீன் செஞ்சிட்டேன். நீங்க இன்னிக்கே வந்து தங்கிடலாம்” என்றவராய் வாயிலின் இரும்புக் கதவைத் திறந்து விட்டார்.
தாயின் மகிழ்வான இந்த அழைப்பில் யாரது என எட்டிப் பார்த்த தாமரையின் விழிகள் தாமரையாய் விரிந்தன.
‘இவரைத் தானே காலைல நான் சிக்னல்ல பார்த்தேன். இவர் இங்கே என்ன பண்றாரு?’ என்று யோசித்தவளாய் தாயினருகில் சென்று, “யாருமா இவரு?” காதினருகில் மெல்லமாய் கேட்டாள்.
“நம்ம மேல் வீட்டுக்கு புதுசா குடியிருக்க வந்திருக்கிறவருமா” என்று விமலா கூறியதும், ‘என்னது இங்கே தங்கப் போறாரா? ஒரு வேளை முன்னாடியே வீடு பார்க்க வந்திருப்பாரோ? அதனால தான் எனக்கு இவரை முன்னாடியே பார்த்த மாதிரி தோணுச்சோ?’ மனத்தோடு எண்ணிக் கொண்டவளாய் அவனைப் பார்த்தவள், “நீங்க முன்னாடியே இங்கே வீடு பார்க்க வந்திருக்கீங்களா சார்?” எனக் கேட்டாள்.
அவளின் கேள்வியில் சிரித்த முகமாய் இல்லையெனத் தலையசைத்தவனாய், “இல்லங்க. இங்கே பக்கத்துல இருக்க ஐடி கம்பெனிக்கு வேலை மாறுதலாகி வந்திருக்கேன். அதனால இன்னிக்கு காலைல தான் வந்து வீடு பார்த்தேன்” என்றான்.
‘என்னடா அதிசயமா இந்தக் கோவக்காரக் கருப்பசாமி சிரிச்ச முகமா பதில் சொல்றாரு’ மனத்திற்குள் அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே,
“நீங்க வாங்க தம்பி” என்றவராய் விமலா அவனை அழைத்துக் கொண்டு மாடியில் இருந்த தனியறையைத் திறந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.
‘என்னமோ இவரை ரொம்ப நாளா தெரிஞ்சவர் மாதிரி கோவக்காரக் கருப்பசாமினு கிண்டல் செஞ்சிக்கிட்டு இருக்கே இந்த விவஸ்தைக் கெட்ட மனசு’ தன்னைத் தானே திட்டிக் கொண்டவளாய் வீட்டிற்குள் சென்ற தாமரை, ‘வேற எங்கே இந்த ஆளைப் பார்த்தேன்னு தெரியலையே! ஆனா எனக்கு ரொம்ப பரிச்சயமான ஆளா தெரியுறாரே’ என்று புலம்பியவளாய் இருந்தாள்.
அந்தக் கோவக்காரக் கருப்பசாமியைப் பற்றிச் சிந்தித்தவளாய் வீட்டு வாசலைப் பார்த்தவாறு முகப்பறையில் அமர்ந்திருந்தவள், அவன் தனது ஈருருளியில் கொண்டு வந்திருந்த பெட்டிகளையும் பொருட்களையும் மேல் மாடி வீட்டிற்கு எடுத்துச் செல்வதைப் பார்த்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்த தாயிடம், “இவர் மட்டும் தான் வந்திருக்காரா? இவரோட பொண்டாட்டி பிள்ளைங்கலாம் யாரும் வரலையாமா?” எனக் கேட்டாள்.
“இல்ல தாமரை. பாவம் இந்தத் தம்பிக்கும் உன்னை மாதிரி விவாகரத்து ஆகிடுச்சாம்” என்றவர் சொன்னதும், நெஞ்சில் ஒருவிதமான வேதனையை உணர்ந்தாள் தாமரை.
சட்டெனச் சோர்ந்து போன மனத்தை நிலைப்படுத்தியவளாய், “இவருக்குச் சொந்த ஊரு எதுமா? இப்ப தான் மொத முறையா இந்த ஊருக்கு வந்திருக்காரா?” எனக் கேட்டாள். அவன் மீது அனுதாபம் உண்டாகியிருந்தது.
“இந்தத் தம்பிக்கும் சென்னை தானாம்டி. சென்னைலயே சொந்த வீடு இருக்குதாம். அப்பா அம்மா அங்கேயே இருக்காங்களாம். இந்த ஐடி ஆபிஸ் சென்னையைத் தாண்டி செங்கல்பட்டுல இருக்கனால தினமும் வந்துட்டுப் போக முடியாதுனு இங்கே தங்கிருந்து வேலைச் செய்யலாம்னு வீடு பார்க்கிறதா சொன்னாங்க. அதனால தனியா தான் இந்தத் தம்பி இங்கே இருக்கப் போகுது” என்று அன்னைக் கூறியதைக் கேட்டு விழிகளை விரித்தவளாய்,
“என்ன அதிசயம்? ஒரு பேச்சுலர் ஆளுக்கு நம்ம வீட்டை வாடகைக்கு விட்டிருக்கியா? குடும்பஸ்தர்கள் தவிர யாருக்கும் விட மாட்டேன்னு அடம்பிடிப்பியேமா! ரெண்டு பொம்பளைங்க இருக்க இடத்துல ஆம்பிளைங்க தனியாளா வந்து தங்கக் கூடாதுனு அத்தனை ரூல்ஸ் போடுவியே! என்ன இந்த திடீர் மாற்றம்?” என்று வியப்புடன் கேட்டாள் தாமரை.
“நம்ம ஊர்க்கோவிலோட தர்மகர்த்தாக்கு இந்தப் பையனோட அப்பா சிநேகிதராம். தர்மகர்த்தாவே காலைல என்கிட்ட வந்து பேசினாரு. நம்ம பக்கத்து வீட்டு லிங்குசாமி அண்ணாவுக்கும் இந்த பையனைத் தெரியுமாம். அவரும் சிபாரிசு செஞ்சாரு. நானும் பையன்கிட்ட பேசினேன். நல்ல பையனாத் தெரிஞ்சிது. அதனால ஒத்துக்கிட்டேன்” கூடுதல் விவரங்களை உரைத்தவராய் விமலா சமையலறைக்குள் நுழைய,
“ஓஹோ” என்றவளுக்கு எவ்வளவு யோசித்தும் இவனை முன்பு எங்கே பார்த்திருக்கிறோம் என்ற நினைவே வரவில்லை.
“ஆமா உன்னோட புரொமோஷன் பத்தி என்னமோ சொல்லிட்டு இருந்தியே” என்று விமலா கேட்கவும்,
“புரொமோஷன் மட்டுமில்லமா டிரான்ஸ்ஃபரும் கொடுத்திருக்காங்க” என்று சோகமாய் உரைத்தவளாய் சமையலறையில் இவளுக்காக தேநீரைத் தயாரித்துக் கொண்டிருந்த தாயிடம் சென்று நின்றாள் தாமரை.
“அதுக்குத் தான் மூஞ்சைத் தூக்கி வச்சிக்கிட்டு வந்தியா? முன்ன மாதிரி சென்னைக்குள்ளயே தூரமா கொடுத்துட்டாங்களா என்ன?” என்றவர் கேட்கவும்,
இல்லை எனத் தலையசைத்தவளாய், “ஆத்மநல்லூருக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்திருக்காங்கமா” என்றாள்.