வாய் சேனாவுடன் வம்பளந்து கொண்டிருந்தாலும், கைகள் அதன் வேலையை சரியாக செய்ததின் பலனாக இருவரும் வீடு வந்து சேர்ந்திருக்க, வீட்டிற்குள் வரவே மாட்டேன் என்று ஒரே பிடியாக நின்றுகொண்டாள் சேனா.

சேஷன் அவளிடம் எதுவும் பேசாமல் கலையரசியை அழைத்து வந்துவிட, “தேவாம்மா” என்று ஓடி வருபவரை என்ன முயன்றும் தவிர்க்க முடியவில்லை அவளால்.

“அத்தம்மா” என்று அவளும் கலையை அணைத்துக் கொள்ள,

“உள்ளே வாங்க ரெண்டு பேரும்” என்றபடி வீட்டிற்குள் நுழைந்தான் சேஷன்.

“இவனைப் பிடிக்கவே இல்ல எனக்கு.” என்று கலையிடமும் அவள் புகார் செய்ய,

“உள்ளே வா.” என்று அவள் கையைப் பிடித்து கலை அழைத்தபோதும், உள்ளே வர மறுத்து தான் நின்றாள் சேனா.

“என்னடா.” என்று கலை பதற,

“நான் வந்தது யாருக்கும் தெரியாது அத்தம்மா. நான் இங்கே ஸ்டே பண்ணா, தேவையில்லாத பிரச்சனைகள் வரும். மறுபடியும் இவனுங்க ரெண்டு பேரும் அடிச்சுப்பாங்க. வேண்டாம்.” என்றாள் சேனா.

“அதெல்லாம் ஒண்ணும் வராது. நீ வா. நான் சத்யாகிட்ட பேசறேன்” என்று அவள் கையைப் பிடித்து கலை இழுக்க, அப்போதும் உறுதியாக மறுத்துவிட்டாள்.

கலை முகம் வாடியவராக நிற்க, இதற்குள் சேஷன் மீண்டும் வெளியே வந்திருந்தான். வார்த்தைகளில்லாமல் அவன் சேனாவை முறைத்து நிற்க, அசரவே இல்லை சேனா.

“நீங்க உள்ளே போங்கம்மா. உங்கமேல கொஞ்சமும் அக்கறை இல்லாத இவளுக்காக நீங்க ஏன் அழனும். போங்க” என்றவன்,

“வா. உனக்கு எங்கே விருப்பமோ அங்கே இறக்கி விடறேன்” என்று காரை நோக்கி நடக்க, அவன் செயலில் தான்தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது சேனாவுக்கு.

கலை வேறு கண்கள் கலங்கியபடியே நிற்க, “ப்ளீஸ் அத்தம்மா” என்றாள் அவரிடமும்.

அவர் எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைக்க, அமைதியாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாலும், கலையின் கண்ணீர் நெஞ்சை சுட்டது.

அந்த கோபத்தில், “போதுமா… நீ நினைச்சது நடந்துடுச்சா.” என்று சேஷாவிடமே கத்திவிட்டாள்.

“நான் என்ன நினைச்சேன்? நீ கண்டுபிடிச்ச”

“எப்பவும்… எப்பவும் இதையே பண்ணிட்டு இருக்க. எல்லாம் உன் விருப்பத்துக்கு பண்ணிட்டு, கடைசியா நான் தப்பு பண்ண பீல் கொடுக்கற எனக்கு.”

“நான் அமைதியா என்னோட ரூமுக்கு போயிருப்பேன். நீ உன்னோட வீம்புக்கு என்னை கூட்டிட்டு வந்து, அத்தம்மாவை அழ வச்சு… இதெல்லாம் எதுக்காக சேஷா.”

“அத்தனையும் உனக்காக மட்டும்தான். நீ எங்கே ஒளிஞ்சாலும் நீ வந்த விஷயம் அவங்களுக்கு தெரியாம இருக்காது. அவங்களைப் பார்க்காம நீயும் நிம்மதியா இருக்கமாட்ட. அதுக்காகத் தான் கூட்டிட்டு போனேன். ஏன் அவங்க அழுறது அவ்ளோ கஷ்டமா இருந்தா, உன் அத்தம்மா கூடவே இருந்திருக்க வேண்டியது தானே.” என்று சேஷன் அமைதியாகவே கேட்டாலும், அதுவும் சேனாவை ஆக்ரோஷம் கொள்ளவே வைத்தது.

“எனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்ல. உன் அம்மாவை பத்தி நான் ஏன் கவலைப்படனும். முதல்ல உனக்கு ஏன் நான் விளக்கம் கொடுக்கணும்? நீ யாரு?” என்றுவிட்டாள் சேஷா.

அவள் கேள்விக்கு பதில் கூறாமல் மௌனம் சாதித்த ஆதிசேஷனின் கண்கள் விபரீதமாக மின்னியதை தேவசேனா கவனிக்கவில்லை.

அந்த நொடியே தனது அடுத்தடுத்த திட்டங்களை மின்னலென வகுத்துவிட்டான் ஆதிசேஷன். ஹோட்டல் அறையில் இறக்கிவிடும்படி அவள் கூறியிருக்க, ஆதிசேஷனோ அவளை மலர்விழியின் வீட்டு வாயிலில் இறக்கிவிட்டான்.

“இங்கே என்ன?” என்று சேனா எரிச்சலுடன் பார்க்க,

“ஹோட்டல் எல்லாம் வேண்டாம். இங்கே இரு. நாளைக்கு ரிசப்ஷன்க்கு நான் வந்து கூட்டிட்டுப் போறேன்.” என்றவன் அலைபேசியில் மலரை அழைக்க,

“நீ நினைக்கிறத எல்லாம் என்னால பண்ண முடியாது சேஷா. ஒழுங்கா என்னை இறக்கி விட்டுடு. நான் என்ன செய்யணும்னு நான் முடிவு பண்றேன்.” என்று சேனா கத்தியதை காதில் வாங்காமல், “வெளியே வா மலர்” என்று எதிர்முனைக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தான் சேஷன்.

தேவசேனா கண்களை இறுக மூடி தனது கோபத்தையும், ஆத்திரத்தையும் அடக்க முயன்று, அது முடியாமல் போகவும் சட்டென காரின் கதவை திறந்து வெளியே வர, சரியாக அதே நேரம் வீட்டின் வாசல் கதவை திறந்து வெளியே வந்தாள் மலர்விழி.

அவளது கண்களில் காருக்கு வெளியே நின்றிருந்த தேவா தான் முதலில் தெரிந்தாள். வெகுநாட்களுக்கு தோழியைக் கண்டதும் சட்டென மகிழ்ச்சியில் கண்கள் கூட கலங்கி விடும் போலானது மலருக்கு.

“தேவா” என்று சத்தம் கொடுத்தபடியே அவள் ஓடிவர, தேவாவுக்கும் அந்தநேரம் மலர்விழியின் அணைப்பு தேவைப்பட்டது தான்.

தன்னை நோக்கி ஓடி வந்த தோழியை அணைத்தபடி அவள் நிற்க, “எப்படி இருக்க?” என்று அவளை அணைத்தபடியே வினவினாள் தேவா.

“மம்ம்ம்” என்ற மலர்விழியின் குரலில் அழுகையின் சாரம் அழகாக தெரிய, மெல்ல சிரித்துக் கொண்டவளாக மலரின் முதுகில் தட்டிக் கொடுத்தாள் தேவா.

இதற்குள் ஆதிசேஷனும் காரை விட்டு இறங்கி இருந்தான். “மலர்” என்று அவன் குரல் கொடுக்க, அவன் குரல் கேட்கவும் தான் அவன் தன்னை அழைத்ததே நினைவு வந்தது மலருக்கு.

“சொல்லுங்க சார்” என்று தேவாவை விட்டு விலகிக் கொண்டு அவள் சேஷனின் முகம் பார்க்க, “உன் ஃப்ரெண்ட் உன்னோட தான் இருக்கப்போறா. உள்ளே கூட்டிட்டுப் போய் பேசு.” என்றான் சிரிப்புடன்.

மலரின் முகம் சிரிப்பில் மிளிர, “தேவா” என்று அவள் கையை ஆவலாக பிடித்துக் கொண்டாள். வெகு நாட்களுக்குப் பின் தோழியைக் கண்டதிலேயே அவள் குளிர்ந்து நிற்க, அவள் தன்னோடு தங்கப் போகிறாள் என்றதில் வேறு எதுவுமே நினைவில் இல்லை மலருக்கு.

ஆதிசேஷனை மறந்து போனவளாக, “வா” என்று தேவாவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். தேவா அவளை மறுக்க முடியாமல் உடன் நடக்க, “நாளைக்கு ஈவ்னிங் ரெடியா இரு” என்று முதுகுக்கு பின்னே கேட்டது ஆதிசேஷனின் குரல்.

தேவா ஒரு நொடி நின்று அவன்புறம் திரும்பி, “நீ வர வேண்டாம்” என்றாள் முடிவாக.

சேஷன் அலட்டிக்கொள்ளாமல் மீண்டும், “ரெடியா இரு” என்று தலையசைத்துச் சொல்ல,

“நான் கண்டிப்பா உன்னோட வர மாட்டேன்.”

“ஓகே. உன்னோட இஷ்டம்” என்று இதழ் பிரியாமல் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கொண்டான் சேஷன்.

தேவாவுக்கு அவனது புன்னகை எதையோ உணர்த்த முயன்றாலும் அருகில் நின்ற மலரின் அருகாமையில் எதையும் ஆழ்ந்து யோசிக்காமல் விட்டுவிட்டாள் அவள்.

அதன் பிறகான நேரம் தோழிகள் இருவரின் சலசலப்பில் நொடியாக கரைந்து போக, இருவருக்கும் இரவு உணவைத் தயாரித்துக் கொடுத்ததோடு ஒதுங்கிக் கொண்டார் மலர்விழியின் தாயார். தேவாவின் பழைய காயங்களை கிளற விரும்பவில்லை அவர்.

மலர்விழியும் பழைய விஷயங்களை பேசுவதைத் தவிர்த்துவிட தேவாவுக்கும் அது நிம்மதியாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் பேசுவதற்கு விஷயங்களா இல்லை.

நடு இரவு கழிந்த பின்னும் அவர்களது அரட்டை தொடர்ந்து கொண்டிருந்தது. அதன்பிறகும் மலரின் அம்மா இருவரையும் உறங்கச் சொல்லி அதட்டவும் தான் உறங்கச் சென்றனர் இருவரும்.

அடுத்தநாள் காலையில் வேலை என்று எதுவும் இல்லாததால் தேவா நேரம் கழித்தே எழ, மலர்விழி அலுவலகம் செல்லாமல் அமர்ந்திருந்தாள்.

தேவா கேள்வியாகப் பார்க்கவும், “எனக்கு லீவ் கொடுத்துட்டார் பாஸ். அவர் பொண்டாட்டியை பத்திரமா பார்த்துக்கணுமாம்.” என்றாள் சிரிப்புடன்.

“காலையில அவனைப் பத்தி அப்டேட்ஸ் கொடுத்து என்னை டென்ஷன் பண்ணாத மலர்” என்றாள் தேவா. அவள் முகம் அதீத அலுப்பைக் காண்பிக்க, “என்ன தேவா” என்று கேட்டாள் மலர்.

“நேத்துல இருந்து டென்ஷன் பண்றான் இடியட் ஃபெலோ” என்று வசைபாடினாள் மீண்டும்.

“சரி விடு. அதைப் பத்தி பேச வேண்டாம். இப்போ என்ன பிளான்.”

“ஒன்னும் கிடையாது. சாப்பிட்டு தூங்க போறேன். ஈவ்னிங் இளா ரிசப்ஷன். நாளைக்கு மேரேஜ். ரெண்டும் அட்டென்ட் பண்ணிட்டு ஃப்ளைட் ஏறப் போறேன்” என்று தெளிவாக கூறினாள் தேவா.

மலருக்கு ஆதிசேஷனின் மாற்றங்கள் அத்தனையும் தெரியும் தான். ஆனால், அவை தான் சொல்லி தேவா உணர வேண்டியவை அல்ல என்று தான் வாய் திறக்காமல் இருந்தாள் இதுவரை.

ஆனால், மலர் நாளை மீண்டும் கிளம்புவதாக சொல்ல, வாய் வரை வார்த்தைகள் வந்துவிட்டது. ஆனாலும், முதலில் சேஷனிடம் பேசிப் பார்ப்போம் என்று வெகுவாக முயன்று தன்னை அடக்கிக் கொண்டாள்.

அதேபோல் அன்று மதிய நேரத்தில், தேவா உறங்கிய நேரம் பார்த்து அவள் சேஷனை அழைக்க, “சொல்லு மலர்” என்று உற்சாகமாக கேட்டது சேஷனின் குரல்.

“தேவா நாளைக்கு ஊருக்குப் போறதா சொல்றா.” என்று நிறுத்தியவள் அவன் பதிலை எதிர்பார்க்க,

“அதுக்கு நான் என்ன பண்ணனும் மலர்” என்று அவன் சாதாரணமாக கேட்க,

“என்ன இவ்ளோ ஈஸியா சொல்றீங்க.” என்று மலர் கொதிக்க,

“நான் எப்படி சொன்னாலும் அவ கேட்கமாட்டா மலர். அவகிட்ட பேசறது எல்லாம் வேஸ்ட். நீ அவளை ரிசப்ஷனுக்கு கூட்டிட்டு வா. மத்ததை நான் பார்த்துக்கறேன்” என்றான் சேஷன்.

“என்ன பண்ண போறீங்க” என்று மலர் கேட்ட போதும்,

“உன் ஃப்ரெண்ட் ஊருக்கு போகாம இருக்க எதையாவது பண்றேன். போதுமா” என்றான் சேஷன்.

“அவளை ரொம்ப டென்ஷன் பண்ணாதீங்க”

“சரிங்க மேடம்” என்று சிரித்தபடி அழைப்பைத் துண்டித்தவன் அன்று மாலையே தேவாவை ஏகத்திற்கும் டென்ஷன் ஆக்கும் வேலையில் இறங்கிவிட்டான்.