மௌனங்கள் இசைக்கட்டுமே 09

விமானம் தரையிறங்க இன்னும் அரைமணி நேரம் மட்டுமே மீதமிருக்க, சொல்ல முடியாத ஏதோ ஓர் உணர்வு சேனாவை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது.

வந்திருப்பானா? என்று மனம் கேள்வி எழுப்ப, ‘நீ வருவதை அவனுக்கு சொன்னாயா?’ என்று அறிவு பதில் கேள்வி கேட்டது. ‘அவன் ஏன் வர வேண்டும்? எனக்கு அவன் தேவை இல்லை’ என்று மனதார தன்னை மறைத்துக் கொண்டவள் கண்களை மூடி மனதிற்குள் தன் பாட்டியிடம் மானசீகமாக உரையாட தொடங்கினாள்.

‘நான் என்ன செய்ய பாட்டி. எனக்கு உன் பேரனை பிடிக்கல. அவனோட வாழ வேண்டாம்னு தான் நினைக்கிறேன். ஆனா, மொத்தமா அவனை விடவும் முடியல என்னால. என்னை என்ன தான் செய்ய சொல்ற நீ’

‘இவன் திருந்திட்டேன்னு சொல்றத நம்பி நான் இவன் பின்னாடி போகனுமா’ என்று பிரபஞ்சத்தில் கலந்து விட்டிருந்த தன் பாட்டியிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவளை, விமானத்தின் அறிவிப்பு தான் கலைத்தது.

சென்னையில் தங்குவதற்காக ஏற்கனவே ஒரு ஹோட்டலில் அவள் முன்பதிவு செய்து வைத்திருக்க, விமான நிலையத்தில் இருந்து வெகு பக்கம் தான். எனவே எந்த வித அலைப்புறுதலும் இல்லாமல் வெகு இலகுவாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள் சேனா.

அடுத்த ஒருமணி நேரத்தில் விமான நிலைய முறைமைகளை முடித்துக் கொண்டு அவள் வெளியே வர, முகக்கவசம், தலையில் ஒரு தொப்பி என முகமூடி கொள்ளையன் போல் அவள் முன் பிரசன்னமானான் அவளது கணவன் ஆதிசேஷன்.

சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை தேவசேனா. சுற்றி இருக்கும் சூழல், சூழ்ந்து கொள்ள துடிக்கும் மக்கள் கூட்டம் என்று அத்தனையும் மறந்து, அவனைக் கண்ட நொடியிலேயே உறைந்து போய் நின்றுகொண்டாள் அவள்.

சேனா அப்படி அசந்து நிற்பதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம் என்பதால், அழகாக அவளை ரசித்தபடி நின்றிருந்தான் ஆதிசேஷன்.

அவன் முகத்தில் வெளியே தெரிந்தது அவனது கண்கள் மட்டும்தான். ஆனால், அந்த கண்களின் அசைவில் இருந்தே அவன் சிரிப்பையும், ரசிப்பையும் உணர்ந்து கொண்டவள் எப்போதும்போல் தன்னை மறைத்துக் கொள்ள, அதுவும் சேஷனின் பார்வையில் இருந்து தப்பவே இல்லை.

“போகலாமா” என்றபடி அவள் கையில் வைத்திருந்த சிறிய பையை வாங்குவதற்காக அவன் கையை நீட்ட, சட்டென கையை பின்னால் இழுத்துக் கொண்டாள் சேனா.

சேஷன் இதை எதிர்பார்க்கவில்லை. வெளியில் வைத்து அப்படி ஒன்றும் தன்னை விட்டுக் கொடுத்துவிட மாட்டாள் என்று அவன் நினைத்திருக்க, அதெல்லாம் பழைய கதை என்று நிரூபிப்பவள் போல அசராமல் நின்றாள் சேனா.

“தேவா” என்று சேஷன் அதட்ட,

“உன்னை நான் வர சொல்லலையே” என்றாள் எதிரில் நின்றவள்.

“நீ சொல்லித்தான் எல்லாத்தையும் செய்வேனா நான்?”

“அதுவும் சரிதான். நான் சொன்னது, நினைச்சது எதையுமே நீ செய்ததில்லையே”

“நம்ம பஞ்சாயத்தை வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா”

“யார் வீட்டுக்கு?”

“உன் பிரகா வீட்டுக்கு. உன்னோட வீட்டுக்கு” என்று அழுத்ததுடன் சேஷன்  உரைக்க,

“இப்போ உன் வீடு அது”

“அப்படியே இருந்தாலும் நீயும் நானும் வேற இல்ல வா”

“நல்லா இருக்கே. உன் மூவில வருதா இந்த டையலாக்”

“வீட்டுக்கு போவோம் சேனா.”

“நான் ஆல்ரெடி ரூம் புக் பண்ணிட்டேன். நீ வொர்ரி பண்ண வேண்டாம். ப்ளீஸ்” என்றவள் ஒரு அடி எடுத்து வைக்க முயல, அதற்குமேல் பொறுக்காமல் அவள் கையில் இருந்த பையை வலுவாக பிடித்திழுத்துக் கொண்டான் சேஷன்.

பையை மட்டும் இல்லாமல் அவள் கையையும் அழுத்தமாக பிடித்துக் கொண்டு அவன் முன்னேற, “சேஷா மரியாதையா கையை விட்டுடு. இல்ல, சத்தியமா உன் கையை உதறிட்டு போயிடுவேன்.” என்று சேனா மிரட்ட,

“இன்னைக்கு இருக்க இந்த மரியாதை எல்லாம் உன்னால வந்தது தான். அதை நீயே அழிக்கணும்னு முடிவெடுத்தா, எனக்கு ஒரு ஆட்சேபனையும் கிடையாது.” என்றவன் அவள் கையை விடாமல் அவளை நடத்தியபடியே தான் பேசிக் கொண்டிருந்தான்.

“உடம்பு முழுக்க திமிருடா உனக்கு. என்ன பழையபடி இவளை வளைக்கலாம்னு எண்ணமா உனக்கு?” என்று சன்னக்குரலில் கத்திக் கொண்டிருந்தாலும், சேனாவின் கால்களும் அவன் போக்கில் தான் நடந்து கொண்டிருந்தது.

இப்படியே சண்டையைத் தொடர்ந்து கொண்டே இருவரும் விமான நிலையத்தை விட்டு வெளியே வர, தயாராக இருந்த தனது காரில் அவளை ஏற்ற முயன்றான் சேஷன்.

அவனை திட்டிக்கொண்டே ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் அமரப் போனவள், அங்கு ஏற்கனவே இருந்த டிரைவரைக் கண்டதும், “கீழே இறங்குங்க” என்றாள் அதிகாரமாக.

அவரும் சட்டென காரை விட்டு இறங்கி நிற்க, சேஷன், “நீங்க அந்த வண்டில வந்திடுங்க அண்ணா” என்று அவரை அனுப்பிவிட்டு தான் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

சேனாவின் செயலால் விளைந்த புன்னகை இன்னும் அவன் முகத்தில் தங்கியிருக்க, “என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு உனக்கு” என்று அதற்கும் காய்ந்தாள் சேனா.

சேஷன் அப்போதும் பல்லைக் காட்டியபடியே இருக்க, “என்னால உன் வீட்ல தங்க முடியாது சேஷா. நான் இந்தியா வந்தது இன்னும் சத்யாக்கு கூட தெரியாது.”

“நீ அவன்கிட்ட சொல்லாம வந்ததுக்காக என் பொண்டாட்டி என் வீட்டுக்கு வரக்கூடாதா”

“நீ பேசறது ரொம்ப அபத்தமா இருக்கு சேஷா. பொண்டாட்டியாம். அதெல்லாம் சொல்லவே சொல்லாத. எனக்கு சத்தியமா உன்னோட குடும்பம் பண்ற ஐடியா இல்ல. கல்யாணம் முடிஞ்ச அடுத்தநாள் நான் கிளம்பிட்டே இருப்பேன். இனியொரு போராட்டதுக்கு எல்லாம் நான் தயாரா இல்ல”

“ஓகே. ஆஸ் யுவர் விஷ். போறதுன்னு தெளிவா இருக்க. இருக்கப்போற மூணு நான் என் வீட்ல இரேன்.”

“வாய்ப்பே இல்ல. நீ என்னை ஹோட்டல்ல விட்டுட்டு கிளம்பிட்டே இரு.”

“பைத்தியமாடி நீ. நான் இருக்கும்போது நீ ஏன் ஹோட்டலுக்கு போகணும்.”

“ஏன் நீ போகல. நான் இருக்கும்போது… அதுவும் இன்னொருத்திக்கூட போனியே. மறந்து போச்சா சேஷா…” என்று அமைதியாக சேனா கேட்டாலும், அந்த கேள்வியின் ஆக்ரோஷத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறித் தான் நின்றான் சேஷன்.

அவன் அமைதியில் இன்னும் வெறி கொண்டவளாக, “என்னோட நியாய அநியாயங்களுக்கு நீ எப்பவும் பதில் சொல்ல முடியாது சேஷா. எனக்குள்ள கொட்டிக் கிடக்கிற இந்த கேள்விகள் எப்பவும் நம்மை வாழ விடாது. என்னை என் வழியிலேயே விட்டுடு”

“உன்னை உன் வழியிலேயே விட்டுட்டு நான் என்ன செய்ய?”

“என்ன வேணா செய்யலாம். எப்பவும் நான் உன்னை கேள்வி கேட்டது இல்லையே. இனியும் கேட்கமாட்டேன். நீ உன் விருப்பம் போல வாழலாம்.”

“இப்பவும் என் விருப்பத்தை தான் உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன் சேனா. எப்பவும் இப்படியே கேட்டுட்டே இருப்பேனான்னு தெரியல”

“நீ கேட்கிறது என்னோட வாழ்க்கையை சேஷா. எப்பவும் உன்னை நம்பி என்னை நான் ஒப்படைக்கிறதா இல்ல”

“பைத்தியக்காரி” என்றவனை வேற்றுகிரகவாசியைப் போல அவள் பார்த்திருக்க,

“வேற என்ன சொல்றது. எப்பவும் தாய்ப்பறவையோட சிறகு போல உன்னோட கைகள் என்னை பாதுகாத்து இருக்கு சேனா. நீ என்னோட இல்லாத இந்த மூன்று மாசம் எனக்கு கிடைச்ச மிகப்பெரிய பாடம்.”

“இப்பவும் நான் உன்னை பார்த்துக்கறேன். உன்னை தாங்கிக்கறேன். இப்படியெல்லாம் எனக்கு பேசவே வரல. ஏன்னா, உன் அளவுக்கு என்னால முடியாது. ஆனா, என்னால உன்னை விட்டுடவும் முடியாது. எனக்கு உன்னோட ஷெல்டர் வேணும்.”

“நான் தப்பாகிப் போகாம தாங்கிக்க என சேனா எனக்கு வேணும். நான் உன்கிட்ட கேட்கிறது மொத்தமா சுயநலம் தான். எனக்கு தெரியும். ஆனாலும், எனக்கு சேனா வேணும்.”

“கடைசியா ஒத்துக்கிட்ட. ஆனா, சேனா கடையில விற்கிற பொம்மை இல்ல. நீ இஷ்டபட்டா வச்சுக்கறதுக்கும், வேண்டாம்ன்னா தூக்கிப் போடவும் சேனா ஆள் இல்ல. அவளுக்கும் மனசுன்னு ஒன்னு இருந்தது. இப்ப எதுவுமே இல்ல அவளுக்குள்ள. எல்லாம்… எல்லாம் செத்துப் போச்சு. மீதி இருக்கறது அவளோட உயிர் மட்டும்தான்.”

“தொலைச்ச இடத்துல தான் தேடணும் சேனா. நீ தொலைச்ச பொருளை பற்றிய பயத்துல கண்ணை மூடி ஓடிப்போக பார்க்கிற.”

“எனக்கு எதை நினைச்சும் பயமில்ல”

“அப்போ எப்போதும் போல எனக்கு முன்னாடி நில்லு. தப்பிச்சு அமெரிக்காக்கு ஓடிப்போக நினைக்காத.”

“நீ என்ன நினைக்கிற. உனக்கு பயந்து நான் அமெரிக்கா போனேனா? ஹாஹாஹா… பாவம் சேஷா நீ. ரொம்பவே பாவம்.”

“இருந்துட்டு போறேன். நீ அமெரிக்கா போனதுக்கு வேற என்ன காரணம் சொல்லு”

“எனக்கு உன்னைப் பார்க்க பிடிக்கல. இந்த மாதிரி வீணாப் போன விஷயங்களைப் பற்றி விவாதிக்க விருப்பமே இல்ல. அதனால தள்ளி இருக்க முடிவு பண்ணிட்டேன். தட்ஸ் ஆல்.”

“மற்றபடி நீ பெரிய ரோமியோ… உன்கிட்ட மயங்கிடுவேன்னு எல்லாம் பயந்து ஓடல. புரியுதா…” என்று தன் முன் விரல் நீட்டிப் பேசிக் கொண்டிருப்பவளைக் கண்டு அப்போதும் சிரிப்புதான் வந்தது சேஷனுக்கு.